ஒரு நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட அதிகாரம், அதே நாட்டின் சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறத் தொடங்கினால் என்ன நடக்கும்?
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கைதுசெய்யப்பட்ட மனிதர்கள் விசாரணை என்ற போர்வையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அந்தச் செயல்களுக்கு அரசின் கொள்கைகளும் ராணுவ அமைப்புகளும் எவ்வாறு வழிவகுத்தன என்பதை ஒரு தனிமனிதனின் மரணத்தின் வழியாக ஆராய்கிறது அலெக்ஸ் கிப்னியின் டாக்ஸி டு தி டார்க் ஸைட் Taxi to the Dark Side (2007).
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் டாக்ஸி ஓட்டுநர் திலாவரின் மரணம் இந்த ஆவணப்படத்தின் மையமாக இருந்தாலும், அதன் பார்வை ஒரு சிறைச்சாலையையோ சில ராணுவ வீரர்களையோ மட்டும் குறிவைக்கவில்லை.
2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் விசாரணைக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும், சித்திரவதை எவ்வாறு அதிகாரபூர்வமான நடைமுறையாக வளர்ந்தது என்பதையும் விரிவாக ஆராய்கிறது.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள யாகுபி என்ற ஊரில் வாழ்ந்த திலாவர், முதலில் வேர்க்கடலை விவசாயியாக இருந்தவர்.
குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக விவசாயத்தை விட்டுவிட்டு, குடும்பப் பணத்தை முதலீடு செய்து புதிய டாக்ஸி ஒன்றை வாங்குகிறார்.
பெரிய நகரத்திற்குச் சென்று வாடகை வாகனம் ஓட்டுவதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
2002 இலையுதிர்காலத்தில் சொந்த ஊரைவிட்டுப் புறப்பட்ட அவர், டிசம்பர் 1ஆம் தேதி தனது பயணத்தில் எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறார்.
அவருடன் பயணித்த மூன்று பேருடன் சேர்த்து, உள்ளூர் ஆப்கானியப் போர்ப்பிரபு ஒருவரால் அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
அவர்கள் சலெர்னோ ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த ஒப்படைப்பின் பின்னணியில் பணம் முக்கியப் பங்கு வகித்தது. ஒவ்வொரு கைதிக்கும் தலா 1,000 டாலர் அமெரிக்கத் தரப்பிடமிருந்து பெற்றுக்கொண்டு, பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை ஒப்படைத்து வந்த அந்தப் மாஃபியா தலைவன், பின்னர் அதே தாக்குதலில் தானே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
இதனால், திலாவர் உள்ளிட்டவர்களின் கைது எவ்வளவு நம்பகமான தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றது என்ற கேள்வி எழுகிறது.
உள்ளூர் ஆயுதக் குழுக்களிடமிருந்து கைதிகளைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வெகுமதி வழங்கிய நடைமுறை, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதைவிட அதிகமானவர்களைக் கைது செய்வதற்கான சூழலை உருவாக்கியது.
திலாவர் பக்ராம் விமானப்படைத் தளத்தில் அமைந்திருந்த தடுப்புக் காவல் மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு BT421 என்ற கைதி எண் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் எதிர்கொண்ட விசாரணை முறைகள் மனித உடலை எவ்வாறு சிதைக்கும் என்பதை இந்த ஆவணப்படம் விரிவாக வெளிப்படுத்துகிறது.
விசாரணையின்போது அவர் மேலிருந்து சங்கிலியால் கட்டித் தொங்கவிடப்பட்டார். அவரது தொடைகளில் மீண்டும் மீண்டும் பலமாகத் தாக்கப்பட்டது.
கைதிகளிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முறை, அப்போதைய ராணுவ நடைமுறைகளில் உயிருக்கு ஆபத்தற்றதும் அனுமதிக்கப்பட்டதுமான செயலாகக் கருதப்பட்டது.
ஆனால், தொடர்ச்சியான கடுமையான தாக்குதலால் அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கியது. அதன் விளைவாக உருவான ரத்த உறைவு அவரது மரணத்திற்குக் காரணமானது.
பல நாட்கள் நீடித்த தாக்குதல்களுக்குப் பிறகு திலாவர் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவம் அவரது குடும்பத்தினரிடம் உடலுடன் ஒப்படைத்த அதிகாரபூர்வ மரணச் சான்றிதழில் மரணத்திற்கான காரணம் 'கொலை' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
மருத்துவப் பரிசோதனையில் அவரது கால்கள் முற்றிலும் நசுக்கப்பட்டிருந்தது உறுதியானது. அவர் உயிருடன் இருந்திருந்தாலும், இரண்டு கால்களையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்பதே மருத்துவ முடிவாக இருந்தது.
ஒரு சாதாரண டாக்ஸி ஓட்டுநராகப் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய மனிதர், விசாரணைக் கைதியாக மாறி, இறுதியில் தனது உடலையே தாங்க முடியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டு உயிரிழந்தது ஆவணப்படத்தின் மிகக் கொடூரமான மனிதநேயப் பதிவாக அமைகிறது.
இந்த மரணத்தைத் தனிப்பட்ட ராணுவ வீரர்களின் தவறாக மட்டும் பார்க்காமல், அதற்குப் பின்னால் இருந்த அரசியல் மற்றும் நிர்வாகக் கொள்கைகளை நோக்கித் தனது விசாரணையை விரிவுபடுத்துகிறார் இயக்குநர் அலெக்ஸ் கிப்னி.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர், கைதிகளை விசாரிக்கும் முறைகளிலும் சர்வதேச சட்டங்களை அணுகும் விதத்திலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
போர்க்கைதிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஜெனீவா ஒப்பந்தத்தின் விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டு, கடுமையான விசாரணை முறைகளுக்கு அரசியல் மற்றும் நிர்வாக மட்டங்களில் ஆதரவு உருவான பின்னணியைப் படம் ஆராய்கிறது.
குறிப்பாக, சிஐஏ பயன்படுத்திய சித்திரவதை முறைகள், உணர்வுப் புலன்களைத் தற்காலிகமாக முடக்கும் அணுகுமுறைகள், கைதிகளின் மனநிலையையும் உடலையும் கட்டுப்படுத்தும் உத்திகள் ஆகியவை எவ்வாறு விசாரணைக் கொள்கைகளின் ஒரு பகுதியாகின என்பதை விளக்குகிறது.
இதற்கிடையில், சித்திரவதையை எதிர்த்த அரசியல் மற்றும் ராணுவத் தரப்பினரின் கருத்துகளுக்கும், அத்தகைய முறைகளைப் பாதுகாத்தவர்களின் வாதங்களுக்கும் படம் இடமளிக்கிறது.
ஜெனீவா ஒப்பந்தத்தின் பாதுகாப்பு விதிகளை நிலைநிறுத்த அமெரிக்கக் காங்கிரஸில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதில் இடம்பெறுகின்றன.
தொலைக்காட்சித் தொடர்களில் சித்திரவதையைப் பயனுள்ள விசாரணை முறையாகச் சித்தரித்த விதமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, 24 போன்ற தொடர்கள் இத்தகைய அணுகுமுறைகளைப் பொதுமக்களிடம் இயல்பானவையாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவும் மாற்றிய கலாசாரச் சூழலைப் படம் சுட்டிக்காட்டுகிறது.
பத்திரிகையாளர் டிம் கோல்டன் இந்த வழக்கை சர்வதேச கவனத்திற்குக் கொண்டுவந்த முக்கியமான நபராக நேர்காணலில் இடம்பெறுகிறார்.
அதே காலகட்டத்தில் பக்ராமில் சிறைவைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் குடிமகன் மொஅஸ்ஸம் பெக், அங்கு நடைபெற்ற சம்பவங்களுக்குச் சாட்சியாகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
திலாவரிடம் விசாரணை நடத்திய முக்கிய அதிகாரியான டேமியன் கோர்செட்டி மற்றும் சார்ஜென்ட் அந்தோனி மோர்டன் ஆகிய ராணுவத்தினரும் நேர்காணல் செய்யப்படுகின்றனர்.
திலாவரின் மரணம் தொடர்பாகப் பொறுப்புக்கூற வேண்டிய நிலை உருவானபோது, கடமையைச் சரிவர நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட்ட ஒரே நபர் கேப்டன் கிறிஸ்டோபர் பெயரிங்.
அவரது விளக்கமும் இடம்பெறுவதன் மூலம், இந்த வழக்கில் தனிநபர்களின் பொறுப்பு, ராணுவக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மேல்மட்டக் கொள்கை ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை ஆராய்வதற்கான வாய்ப்பை இயக்குநர் உருவாக்குகிறார்.
2007ஆம் ஆண்டு வரையிலான அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் தடுப்புக் காவல் நடவடிக்கைகளில் 83,000-க்கும் அதிகமானோர் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் 93 சதவீதம் பேர் உள்ளூர் ஆயுதக் குழுக்களால் பிடிக்கப்பட்டு, அமெரிக்கா வழங்கிய வெகுமதிப் பணத்திற்கு ஈடாக ஒப்படைக்கப்பட்டவர்கள் என்ற புள்ளிவிவரத்தை ஆவணப்படம் முன்வைக்கிறது.
அதே காலப்பகுதியில் தடுப்புக் காவலில் இருந்த 105 பேர் உயிரிழந்திருந்தனர்; அவர்களில் 37 பேரின் மரணங்கள் அதிகாரபூர்வமாகக் கொலை என வகைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த எண்ணிக்கைகள் திலாவரின் மரணத்தைத் தனித்த சம்பவமாகப் பார்க்க முடியாத அளவுக்கு விசாரணை அமைப்பின் பரந்த பிரச்சினையை வெளிப்படுத்துகின்றன.
பக்ராமில் பயன்படுத்தப்பட்ட விசாரணை முறைகள் அங்கேயே முடிந்துவிடவில்லை. அதே அணுகுமுறைகள் குவாண்டனாமோ வளைகுடா சிறைச்சாலையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் படம் தொடர்ந்து ஆராய்கிறது.
பின்னர் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அபு கிரைப் சிறைச்சாலை கைதிகள் மீதான கொடுமைகளையும் இந்த விசாரணையின் வரலாற்றுப் பின்னணியுடன் இணைக்கிறது.
இதன் மூலம் ஒரு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறை, மற்றொரு இடத்தில் மீண்டும் நிகழ்வதற்கான நிர்வாக மற்றும் கொள்கைரீதியான சூழல் எவ்வாறு உருவானது என்பதைப் படம் ஆராய்கிறது.
அலெக்ஸ் கிப்னியின் இயக்கத்தில், நேர்காணல்கள், ஆவணக் காட்சிகள், வரலாற்றுத் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்லோன் க்ளெவின் படத்தொகுப்பு, திலாவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து தொடங்கி அமெரிக்காவின் விசாரணைக் கொள்கைகள் வரையிலான விரிவான விசாரணையை ஒரே தொடர்ச்சியான அனுபவமாக மாற்றுகிறது.
ஐவர் கெஸ்ட் மற்றும் ராபர்ட் லோகனின் இசை, மனித உயிரிழப்பின் தீவிரத்தையும் அரசியல் விசாரணையின் கனத்தையும் வலுப்படுத்துகிறது.
நேர்காணல்களில் இடம்பெறும் ராணுவத்தினரின் விளக்கங்களையும் கைதிகளின் அனுபவங்களையும் ஒன்றோடொன்று எதிர்கொள்ளச் செய்வதன் மூலம், பார்வையாளர்கள் ஒரு தரப்பின் வாதத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்க்கிறது.
அதே நேரத்தில், திலாவரின் மரணத்தை மையமாக வைத்திருப்பதால், விரிவான அரசியல் விவாதம் ஒரு மனிதனின் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.
2007 அக்டோபர் 8 முதல் 18 வரை உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட Why Democracy? ஆவணப்படத் தொடரின் ஒரு பகுதியாகவும் இப்படம் இடம்பெற்றது.
பிபிசியின் Storyville தொடரிலும் ஒளிபரப்பானது. ஏப்ரல் 28, 2007 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற டிரைபெகா திரைப்பட விழாவில் முதன்முதலாகத் திரையிடப்பட்டது.
பின்னர் 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான சில விமர்சகர்களின் பட்டியல்களிலும் இடம்பிடித்தது.
Premiere இதழ் 2008ஆம் ஆண்டின் ஐந்தாவது சிறந்த திரைப்படமாகவும், Seattle Post-Intelligencer பத்திரிகையின் பில் வைட் ஏழாவது சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுத்தனர்.
ராட்டன் டொமேட்டோஸ் தளத்தில் 93 விமர்சனங்களின் அடிப்படையில் 100 சதவீத விமர்சகர் ஆதரவைப் பெற்றதுடன், சராசரியாக 10-க்கு 8.34 மதிப்பெண்ணையும் பெற்றது. மெட்டாகிரிட்டிக்கில் 25 விமர்சனங்களின் அடிப்படையில் 100-க்கு 82 மதிப்பெண் பெற்றது.
2007 நவம்பரில் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற 15 படங்களில் இதுவும் ஒன்று.
2008 பிப்ரவரி 24 அன்று சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. விருதைப் பெற்றுக்கொண்டபோது, திலாவருக்கும் தனது தந்தைக்கும் அந்த விருதை அர்ப்பணித்தார் கிப்னி.
அமெரிக்கக் கடற்படையில் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய அவரது தந்தை, சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டு கடும் கோபமடைந்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கத் தூண்டியிருந்தார்.
2007ஆம் ஆண்டுக்கான பீபாடி விருதும் படத்திற்கு வழங்கப்பட்டது. பரவலாக அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாகவே திலாவரின் மரணம் நிகழ்ந்தது என்ற அதன் துல்லியமான வாதத்தைப் பீபாடி விருது பாராட்டியது.
மேலும், 60வது அமெரிக்க எழுத்தாளர் சங்க விருது விழாவில் சிறந்த ஆவணப்படத் திரைக்கதைக்கான விருதையும் கிப்னி பெற்றார்.
இப்படத்தின் ஒளிபரப்பு தொடர்பாகவும் சர்ச்சை உருவானது. 2007 ஜூனில் டிஸ்கவரி சேனல் படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது.
ஆனால், 2008 பிப்ரவரியில் அதன் சர்ச்சைக்குரிய தன்மையைக் காரணமாகக் காட்டி ஒளிபரப்பும் நோக்கம் இல்லை என்று அறிவித்தது.
இதனால் தணிக்கை குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் எச்பிஓ ஒளிபரப்பு உரிமையை வாங்கி 2008 செப்டம்பரில் படத்தை ஒளிபரப்பியது.
அதன் பிறகு 2009ஆம் ஆண்டில் தானும் இப்படத்தை ஒளிபரப்பப்போவதாக டிஸ்கவரி சேனல் அறிவித்தது. இதற்கிடையில், ஆஸ்கர் விருதுக்குப் பிறகும் படம் முறையாக விநியோகிக்கப்படவில்லை, போதிய விளம்பரம் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி, 2008 ஜூனில் கிப்னியின் தயாரிப்பு நிறுவனம் THINKFilm நிறுவனத்திற்கு எதிராக நடுவர் தீர்ப்பாய நடவடிக்கையைத் தொடங்கியது.
இப்படைப்பு ஒரு மனிதனின் மரணத்தைப் பதிவு செய்வதோடு நிற்காமல், அந்த மரணத்தைச் சாத்தியமாக்கிய அதிகார அமைப்பின் செயல்பாடுகளையும் அதன் அரசியல் பின்னணியையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது.
ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்ட மனிதனுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட வன்முறை, சட்டத்தின் பாதுகாப்பு யாருக்காகவும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது.
திலாவரின் வாழ்க்கை ஒரு சில நிமிடங்களில் மறக்கப்படும் புள்ளிவிவரமாக மாறிவிடாமல், அதன் பின்னால் இருந்த பொறுப்புகளையும் கொள்கைகளையும் தொடர்ந்து நினைவூட்டும் ஆவணமாக இந்தப் படம் நிலைத்திருக்கிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு