நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென் No Country for old men 2007


ஒரு மனிதன் வாழும் காலமும் அவன் நம்பிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்படத் தொடங்கினால், அவனால் உலகத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? 

காலமாற்றம், மனித இயல்பு, விதி, அறநெறி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத்தகைய ஆழமான கேள்விகளை எழுப்பும் திரைப்படம் “நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்”. 

1980-ஆம் ஆண்டின் மேற்கு டெக்சாஸ் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படம், குற்றவியல் திகில் திரைப்படத்தின் வடிவத்தைப் பயன்படுத்தி மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், உலகில் நிலவும் வன்முறையின் தன்மையையும் ஆராய்கிறது. 

வழக்கமான பொழுதுபோக்குத் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, பார்வையாளரை கோடிட்ட இடங்களை நிரப்பி சிந்திக்க வைக்கும் அனுபவமாக இது உருவாகியுள்ளது.

ஜோயல் கோயன், ஈதன் கோயன் சகோதரர்களின் இயக்கம் இப்படத்தின் தனித்துவமான அம்சம். 

கோர்மக் மெக்கார்த்தியின் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட திரைக்கதை, இலக்கியப் படைப்பின் இருண்ட மனநிலையையும் தத்துவ ஆழத்தையும் திரைப்பட மொழிக்கு ஏற்ற வகையில் வெளிப்படுத்துகிறது.

 உரையாடல்களை மட்டுமே நம்பாமல், காட்சிகளின் அமைப்பு, கதாபாத்திரங்களின் உடல்மொழி, சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றின் வழியாகப் பல கருத்துகளை உணர்த்துகின்றனர்.

 தேவையற்ற விளக்கங்கள் இல்லாமல், பார்வையாளரே காட்சிகளின் பொருளை உணர்ந்து கொள்ளும் வகையில் கதைசொல்லல் அமைந்திருப்பது இயக்குநர்களின் கட்டுப்பாட்டையும் தெளிவான கலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது.

எட் டாம் பெல் (டாமி லீ ஜோன்ஸ்), ஆன்டன் சிகர் (ஜாவியர் பார்டெம்), லெவெலின் மாஸ் (ஜோஷ் ப்ரோலின்) ஆகிய கதாபாத்திரங்கள் படத்தின் மையமான மனித இயல்பு சார்ந்த பார்வையை வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன.

 அனுபவம், மன உறுதி, அச்சம், அறநெறி, மனிதனின் முடிவெடுக்கும் தன்மை ஆகியவை இவர்களின் பாத்திர உருவாக்கத்தில் நுட்பமாகப் பதிந்துள்ளன. 

டாமி லீ ஜோன்ஸ் தனது நிதானமான நடிப்பின் மூலம் வயது முதிர்ந்த மனிதனின் மனச்சோர்வையும் உலகைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். 

ஜாவியர் பார்டெமின் நடிப்பு படத்தின் அச்சமூட்டும் தன்மைக்கு வலுவூட்டுகிறது. முகபாவனைகள், குரல், உடல்மொழி ஆகியவற்றில் அவர் காட்டும் கட்டுப்பாடு, அவரது கதாபாத்திரத்தைத் தனித்துவமாக்குகிறது. 

ஜோஷ் ப்ரோலின் குறைந்த உரையாடல்களிலும் நம்பகத்தன்மை கொண்ட நடிப்பை வழங்குகிறார். துணைக் கதாபாத்திரங்களும் படத்தின் உலகத்தை இயல்பாக விரிவுபடுத்துகின்றன.

ரோஜர் டீக்கின்ஸின் ஒளிப்பதிவு படத்தின் கலைத்தன்மைக்கு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. 

மேற்கு டெக்சாஸின் வறண்ட நிலப்பரப்பு, வெறிச்சோடிய சாலைகள், பரந்த வெளிகள், தனிமையான கட்டடங்கள் ஆகியவை காட்சிகளுக்கான பின்னணியாக மட்டும் அமையாமல், படத்தின் மனநிலையை உருவாக்குகின்றன.

 இயற்கையான ஒளியைப் பயன்படுத்திய விதமும், நிலப்பரப்பின் வெறுமையைப் பதிவு செய்துள்ள முறையும் தனிமை மற்றும் பதற்றம் நிறைந்த உணர்வை உருவாக்குகின்றன.

 ஒவ்வொரு காட்சியிலும் தேவையான அளவுக்கு மட்டுமே காட்சி விவரங்களைப் பயன்படுத்தியிருப்பது படத்தின் யதார்த்தத் தன்மையை வலுப்படுத்துகிறது. 

கேமரா நகரும் விதம், காட்சிகளின் நீளம், ஒளி மற்றும் நிழலின் பயன்பாடு ஆகியவை இணைந்து ஒரு தனித்துவமான காட்சிமொழியை உருவாக்குகின்றன.

படத்தொகுப்பில் காணப்படும் நிதானமும் துல்லியமும் திரைப்படத்தின் பதற்றத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

வேகமான வெட்டுகளையும் தொடர்ச்சியான அதிரடி காட்சிகளையும் நம்பாமல், காட்சிகளுக்கிடையிலான இடைவெளியையும் அமைதியையும் பயன்படுத்தி எதிர்பார்ப்பை உருவாக்குகின்றனர். 

சில காட்சிகளில் மனிதர்களின் முகங்களைவிட அவர்கள் இருக்கும் இடம், சுற்றியுள்ள பொருட்கள், ஒளி, நிழல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. 

இந்த அணுகுமுறை பார்வையாளரின் கவனத்தைச் சிறிய விவரங்களுக்குக் கொண்டுசெல்கிறது. காட்சிகளின் அமைப்பில் காணப்படும் துல்லியம், படத்தின் ஒட்டுமொத்த இறுக்கமான உணர்வுக்கு வலுவான ஆதாரமாக அமைகிறது.

கார்ட்டர் பர்வெல் அமைத்த இசையின் பயன்பாடு இப்படத்தின் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பத் தேர்வாகும். திரைப்படத்தின் பெரும்பாலான பகுதிகளில் பின்னணி இசை மிகக் குறைவாகவே இடம்பெறுகிறது. 

வழக்கமான திரைப்படங்களில் உணர்ச்சியையும் பதற்றத்தையும் வலியுறுத்த இசை பயன்படுத்தப்படும் நிலையில், இங்கு அமைதிக்கும் இயற்கையான சுற்றுப்புற ஒலிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

காற்றின் ஓசை, காலடிச் சத்தம், வாகனங்களின் ஒலி போன்றவை காட்சிகளின் உணர்வை உருவாக்குகின்றன.

 சில நேரங்களில் சிறிய ஒலிகள்கூட பார்வையாளரிடம் தீவிரமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. இசையை அளவோடு பயன்படுத்துவதன் மூலம், காட்சிகளின் இயல்பான தன்மையையும் பதற்றத்தையும் இயக்குநர்கள் காப்பாற்றியுள்ளனர்.

வன்முறையை அணுகும் முறையும் படத்தின் முக்கியமான கலைத்தேர்வுகளில் ஒன்று. வன்முறையை வெறும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளின் தொகுப்பாகக் கையாளாமல், மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மை மற்றும் அறநெறி சார்ந்த கேள்விகளுடன் இணைக்கின்றனர். 

அதன் கொடூரத்தை உணர்த்துவதற்கு ஒவ்வொரு தருணத்தையும் விரிவாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்பதைப் படத்தின் காட்சியமைப்பு உணர்த்துகிறது.

 சில இடங்களில் நேரடியாகக் காட்டப்படும் காட்சிகளைக் காட்டிலும், அவற்றின் தாக்கத்தை உணர்த்தும் காட்சிகளே அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 

இதனால் வன்முறை படத்தின் வெளிப்புற அம்சமாகத் தங்கிவிடாமல், அதன் அடிப்படையான உலகப் பார்வையின் ஒரு பகுதியாக மாறுகிறது.

மேற்கத்தியத் திரைப்படங்களின் நிலப்பரப்பு மற்றும் தனிமை சார்ந்த காட்சிமொழியையும், குற்றவியல் திகில் படங்களின் இறுக்கமான சூழலையும் இணைத்திருப்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பு. 

பழைய மேற்கத்தியத் திரைப்படங்களில் காணப்படும் சட்டம், நீதி, வீர உணர்வு போன்ற கருத்துகள் நவீன உலகின் சிக்கலான குற்றச்சூழலுடன் இங்கு தொடர்புபடுத்தப்படுகின்றன.

 இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூகச் சூழலை மட்டும் சித்தரிக்காமல், காலம் மாறும்போது மனிதர்களின் மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் எவ்வாறு சவால்களை எதிர்கொள்கின்றன என்பதையும் படம் ஆராய்கிறது.

விதி, தற்செயல், தனிமனிதத் தேர்வு, பொறுப்பு ஆகியவை திரைப்படத்தின் ஆழமான கருப்பொருள்களாக அமைகின்றன.

 மனிதன் தனது வாழ்க்கையைத் தானே கட்டுப்படுத்துகிறானா அல்லது அவனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழல்கள் அவனது வாழ்வைத் தீர்மானிக்கின்றனவா என்ற கேள்வி படத்தின் பல அடுக்குகளில் வெளிப்படுகிறது.

 மனிதர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதுடன், அறநெறி சார்ந்த நம்பிக்கைகள் கடுமையான சூழல்களில் எந்த அளவுக்கு நிலைத்திருக்க முடியும் என்பதையும் சிந்திக்க வைக்கிறது. 

நல்லது, தீமை என்ற எளிய பிரிவுகளுக்குள் மனித இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்வியும் பார்வையாளரிடம் எழுகிறது.

திரைப்படத்தின் தலைப்பு வில்லியம் பட்லர் யீட்ஸ் எழுதிய கவிதையின் தொடக்க வரியிலிருந்து பெறப்பட்டுள்ளது.

 இளைய தலைமுறையின் உலகில் முதியவர்களின் அனுபவத்துக்கும் ஞானத்துக்கும் கிடைக்கும் இடம், மாறிவரும் சமூகத்தில் பழைய மதிப்பீடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றுடன் தலைப்பு தொடர்புபடுகிறது. 

இதனால் வயது முதிர்வைப் பற்றிய ஒரு தனிப்பட்ட கருத்தாகத் தொடங்கும் தலைப்பு, காலமாற்றத்தின் முன்னால் மனித சமூகம் எதிர்கொள்ளும் மனநிலையைப் பற்றிய விரிவான சிந்தனையாக மாறுகிறது.

உலகளாவிய அளவில் இப்படம் மிகுந்த விமர்சன வரவேற்பைப் பெற்றது. ராட்டன் டொமேட்டோஸ் தளத்தில் 288 விமர்சனங்களின் அடிப்படையில் 93 சதவீத ஆதரவையும், மெட்டாகிரிட்டிக்கில் 39 விமர்சனங்களின் அடிப்படையில் 100-க்கு 92 மதிப்பெண்ணையும் பெற்றது. 

எட்டு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த துணை நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய நான்கு விருதுகளை வென்றது.

 அதன் இயக்கம், நடிப்பு, திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத் தரத்துக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், திரைப்படத்தின் கலைத்தன்மையை உலகளவில் உறுதிப்படுத்தியது.

“நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்” திரைப்படத்தின் உண்மையான தனித்துவம், குற்றவியல் திகில் வகைமையின் வழியாக மனித வாழ்க்கை குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புவதில்தான் இருக்கிறது. 

கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பு, துல்லியமான ஒளிப்பதிவு, அமைதியைப் பயன்படுத்தும் ஒலியமைப்பு, நிதானமான படத்தொகுப்பு ஆகியவை ஒன்றிணைந்து மறக்க முடியாத திரைப்பட அனுபவத்தை உருவாக்குகின்றன. 

படம் பார்வையாளருக்கு எல்லா கேள்விகளுக்கும் எளிய பதில்களை வழங்க முயற்சிப்பதில்லை; மாறாக, விதி, அறநெறி, மனித இயல்பு, காலமாற்றம் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுகிறது.

 காட்சிகளின் அழுத்தத்தையும் அமைதியின் வலிமையையும் உணர்ந்து ரசிக்கும் பார்வையாளர்களுக்கு, இது ஒரு சிறந்த திரைப்படமாக மட்டுமின்றி, நீண்ட நேரம் மனதில் தங்கும் ஆழமான கலை அனுபவமாகவும் அமையும்.

===============================
படத்தின் கதை:-

1980-ஆம் ஆண்டு டெக்சாஸ் மாநிலத்தில் கதை தொடங்குகிறது. ஆன்டன் சிகர் (ஜாவியர் பார்டெம்) என்ற சோசியோபாத் தனியனான கூலிப்படைக் கொலையாளி ஒற்றை காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் சிறை வைக்கப்படுகிறான்,அவனிடம் கசாப்பு மாடுகளை நெற்றிப்பொட்டில் துளைத்து வெளியேறி கொல்லும் கேட்டில் கன் உள்ளது. 

அவனைக் கண்காணிக்கும் துணைக் காவல் அதிகாரியை, தன் கைகளில் பூட்டப்பட்டிருக்கும் விலங்குச் சங்கிலியால் லாவகமாக தரையில் வீழத்தி கழுத்தை நெரித்துக் கொன்று போலீஸ் சைரன் ஒலிக்கும் காரில் தப்பிக்கிறான். 

பின்னர் சாலையில் செல்லும் முதியவர் ஒருவரின் காரை நிறுத்தி, தன்னிடம் இருக்கும் காற்றழுத்தத் துப்பாக்கியால் அந்த ஓட்டுநரைக் கொன்று அவரின் காரைக் கைப்பற்றுகிறான்.

 இவ்வாறு காவல்துறையின் பிடியிலிருந்து தப்பிய சிகர், வழியில் ஒரு சிறிய எரிபொருள் நிலையத்தை அடைகிறான். அங்குள்ள உதிரி பாகக்கடை உரிமையாளருடன் பேசும்போது,அவர் இவனை போலீஸ் தேடி வரும் போது,துப்பு தந்து காட்டித் தருவாரோ என்ற ஐயம் வருகிறது,  நாணயத்தைச் சுண்டிவிட்டு அது பூவா தலையா என்று கணிக்கச் சொல்கிறான்.

 சரியாகக் கணித்தால் உயிர் பிழைக்கலாம் என்ற நிபந்தனையுடன் அவன் நடத்தும் இந்தச் சோதனையில், கடை உரிமையாளர் சரியான விடையைக் கூறுகிறார். அதனால் சிகர் அவரைக் கொல்லாமல் அங்கிருந்து செல்கிறான்.

இதற்கிடையில், லெவெலின் மாஸ் (ஜோஷ் ப்ரோலின்) என்ற வேட்டைக்காரர் டெக்சாஸ் பாலைவனப் பகுதியில்  கொம்புமான் வேட்டைக்குச் செல்கிறான். 

அங்கு துப்பாக்கிச் சூடு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மோதல் நடந்து முடிந்ததற்கான கொடூரமான காட்சியைக் காண்கிறான். 

பலர் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார்கள். சில நாய்களும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றன. அங்குள்ள ஒரு வாகனத்தில் போதைப்பொருள் இருக்கிறது. அருகில் காயமடைந்த மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒருவர் தண்ணீர் கேட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். 

அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்த மாஸ், அங்கு இரண்டு மில்லியன் டாலர் பணம் நிரம்பிய ஒரு கைப்பெட்டியையும் மரத்தடியில் கண்டுபிடிக்கிறான். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்குத் திரும்புகிறான்.

மாஸ் வீட்டில் இருந்தபோது, தான் எடுத்த பெரும் பணத்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை உணர்கிறான். 

காயமடைந்த அந்த மெக்சிகோ நபருக்கு உதவாமல் பணத்துடன் திரும்பிவிட்ட குற்றவுணர்வு வேறு அவனை வாட்டுகிறது.

 அதனால் அன்றிரவு மீண்டும் அந்த இடத்துக்குச் சென்று அவனுக்குத் தண்ணீர் கொடுக்க முடிவு செய்கிறான். 

ஆனால் அங்கு சென்றபோது அந்த நபர் இறந்து கிடப்பதைக் காண்கிறான். அப்போது அருகிலுள்ள மேட்டுப் பகுதியில் இரண்டு ஆயுதம் ஏந்திய ஆட்கள் தன்னை நோக்கி ஜீப்பில் வந்து கொண்டு இருப்பதைப் பார்க்கிறான். 

அவர்கள் ஜீப்பில் அவனைத் துரத்தத் தொடங்குகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க மாஸ் ஆற்றுக்குள் குதிக்கிறான்.

அவர்கள் ஏவி விட்ட பிட்புல் நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று , துரத்துபவர்களின் பிடியிலிருந்து தப்பி மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறான். 

பணத்தைக் கைப்பற்றியதால் தன்னைத் தேடி கடும் ஆபத்தானவர்கள் வரக்கூடும் என்பதை உணர்ந்த மாஸ், தனது மனைவி கார்லா ஜீனை (கெல்லி மெக்டொனால்ட்) அவளுடைய தாயுடன் தங்குவதற்காக அனுப்பிவைக்கிறான்.

இதற்கிடையில், காணாமல் போன இரண்டு மில்லியன் டாலர் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்காக சிகர் பணியமர்த்தப்படுகிறான். 

அதே போதைப்பொருள் பரிமாற்றம் தோல்வியடைந்த இடத்தில் நடந்த கொலைகளை டெரெல் கவுண்டி காவல் துறைத் தலைவர் எட் டாம் பெல் (டாமி லீ ஜோன்ஸ்) விசாரிக்கத் தொடங்குகிறார். 

அவருக்கு வெண்டெல் (காரெட் டில்லாஹன்ட்) என்ற துணைக் காவல் அதிகாரி உதவியாக இருக்கிறார். 

குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்கள், காணாமல் போன பணம், அங்கு நடந்த கொலைகள் ஆகியவற்றை இணைத்துப் பார்த்து விசாரணையை முன்னெடுக்கிறார் பெல்.

மாஸ் வசிக்கும் வீட்டைத் தேடி வரும் சிகர், அங்குள்ள கதவின் பூட்டைத் தனது காற்றழுத்தத் துப்பாக்கியால் சுட்டுத் திறந்து உள்ளே செல்கிறான். 

ஆனால் மாஸ் அங்கு இல்லை. ஆபத்து நெருங்கிவிட்டதை உணர்ந்த மாஸ், ஒரு வாடகைக் காரில் டெல் ரியோ நகரத்துக்குச் செல்கிறான். 

அங்குள்ள விடுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, பணம் இருக்கும் கைப்பெட்டியை அந்த அறையின் குளிர்சாதன காற்றோட்டக் குழாய்க்குள் மறைத்து வைக்கிறான். 

இதற்கிடையில், அந்தப் பணத்தைத் தேடிச் செல்லும் சிகரிடம் ஒரு சிறிய கண்காணிப்புக் கருவி இருக்கிறது. 

அது கைப்பெட்டிக்குள் பணத்துக்குள் பதுக்கி மறைத்த வேரொரு ரீசீவரை  பின்தொடர்ந்து ஒலி எழுப்புவதால், பணம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க அவனால் முடிகிறது.

ஒருநாள் மாஸ் புதிய காலணிகள், வேட்டைதுப்பாக்கி,  இவற்றை வாங்கிவிட்டு விடுதிக்குத் திரும்புகிறான். அறைக்குள் நுழைந்ததும், தான் வெளியே சென்றபோது இருந்த திரைச்சீலைகளின் நிலை மாறியிருப்பதைக் கவனிக்கிறான். 
யாரோ தனது அறைக்குள் வந்து தேடியிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்கிறான்.

 தன்னைத் தேடுபவர்கள் பணம் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்திருக்கலாம் என்று எண்ணுகிறான். 

சிகர் கண்காணிப்புக் கருவியின் உதவியுடன் அந்த விடுதியை அடைகிறான். அங்கு மாஸைத் தாக்குவதற்காக மூன்று மெக்சிகோ கும்பலைச் சேர்ந்தவர்கள் அவனது அறையில் காத்திருக்கிறார்கள். அவர்கள் அறையில் ஒளிந்திருந்தவர்களை சிகர் சுட்டுக் கொன்றுவிடுகிறான்.

ஆனால் மாஸ் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்கிறான். தனது முதல் அறைக்கு அருகிலேயே இன்னொரு அறையையும் வாடகைக்கு எடுத்திருந்தான்.

 அந்த இரண்டாவது அறையிலிருந்தும் பணத்தை மறைத்திருந்த குளிர்சாதன காற்றோட்டக் குழாயை அணுக முடியும். 

சிகர் முதல் அறையில் உள்ள குளிர்சாதன குழாயைத் திறந்து பணத்தை எடுப்பதற்கு முன்பே, மாஸ் அடுத்த அறையின் வழியாக கம்பியை நுழைத்து குழாயை அடைந்து கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறான்.

மாஸ் பின்னர் அமெரிக்கா–மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள ஈகிள் பாஸ் நகரத்தில் இருக்கும் மற்றொரு விடுதிக்குச் செல்கிறான். 

அங்கு கைப்பெட்டியைச் சோதித்தபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியைக் கண்டுபிடிக்கிறான். 

தன்னைத் தொடர்ந்து வருவதற்கு அந்தக் கருவியே காரணம் என்பதைப் புரிந்துகொண்டு அதை அகற்றுகிறான். 

ஆனால் அதற்குள் சிகர் அவனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்டான். இருவருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்குகிறது. 

அந்தச் சண்டை விடுதியைத் தாண்டி தெருவுக்கும் பரவுகிறது. இருவரும் கடுமையாக குண்டு துளைத்து காயமடைகிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒரு வாகன ஓட்டுநரும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்படுகிறார்.

காயமடைந்த மாஸ், சிகரிடமிருந்து தப்பித்து மெக்சிகோவுக்குச் செல்கிறான். தன்னிடம் இருக்கும் பணப்பெட்டியை ரியோ கிராண்டே ஆற்றின் கரையோரத்தில் மறைத்து வைக்கிறான்.

 மறுபுறம், காயமடைந்த சிகர் மருந்தகத்தில் திருடிய மருத்துவப் பொருட்களைப் பயன்படுத்தி தனது காயங்களைத் தானே சுத்தம் செய்து தையல் போட்டுக்கொள்கிறான். 

மாஸ் மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அங்கு கார்சன் வெல்ஸ் (வுடி ஹாரெல்சன்) என்ற பணத்துக்காக ஆட்களைத் தேடும் நபர் அவனைச் சந்திக்கிறார். 

சிகரிடமிருந்து மாஸைப் பாதுகாப்பதாகவும், அதற்குப் பதிலாக காணாமல் போன பணத்தைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வெல்ஸ் கூறுகிறார். ஆனால் மாஸ் அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறான்.

வெல்ஸ் பின்னர் ரியோ கிராண்டே ஆற்றங்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியைக் கண்டுபிடிக்கிறார். 

ஆனால் அதை எடுத்துச் செல்லாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். தனது விடுதிக்குத் திரும்பிய அவரைச் சிகர் எதிர்பாராத விதமாகத் தாக்குகிறான். 

இருவருக்கும் இடையே உயிர் பிழைப்பதற்கான பேரம் நடைபெறுகிறது. அப்போது தொலைபேசி ஒலிக்கிறது. மாஸ்தான் அழைக்கிறான் என்பதை உணர்ந்த சிகர், வெல்ஸைச் சுட்டுக் கொன்றுவிட்டு தொலைபேசியை எடுக்கிறான். 

மாஸிடம் பேசும்போது, பணத்தை ஒப்படைக்காவிட்டால் அவனுடைய மனைவி கார்லா ஜீனைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான். இதன் மூலம் மாஸை நேரடியாகத் தாக்குவதுடன், அவனுடைய குடும்பத்தையும் ஆபத்தில் சிக்கவைக்கிறான்.

சிகரின் மிரட்டலைக் கேட்ட மாஸ், ஆற்றங்கரையில் மறைத்து வைத்திருந்த பணப்பெட்டியை மீண்டும் எடுத்துக்கொண்டு அமெரிக்காவுக்குத் திரும்புகிறான். 

தனது மனைவியைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். அதற்காக எல் பாசோ நகரத்தில் உள்ள ஒரு விடுதியில் கார்லா ஜீனைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறான். 

பணத்தை அவளிடம் கொடுத்து, அவளை ஆபத்திலிருந்து விலக்குவதே அவனது திட்டம்.
ஆனால் கார்லா ஜீனின் தாய், தங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் மெக்சிகோ கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதை அறியாமல், மாஸ் இருக்கும் இடத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்திவிடுகிறாள்.

 இதனால் மாஸ் தங்கியிருக்கும் விடுதியின் இருப்பிடம் அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. இதற்கிடையில், பெல் எல் பாசோவில் உள்ள அந்த விடுதியை அடைகிறார். 

ஆனால் அவர் அங்கு செல்வதற்கு முன்பே, மெக்சிகோ கும்பலைச் சேர்ந்தவர்கள் மாஸைக் கொன்றுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 

பெல் அங்கு வந்து மாஸின் உடலைப் பார்க்கிறார். பின்னர் கார்லா ஜீன் அங்கு வருகிறாள். மாஸ் கொல்லப்பட்டிருப்பதை அறிந்த அவள் கதறி அழுகிறாள்.

 பெல் தனது தொப்பியைக் கழற்றி, நடந்த துயரத்தை அமைதியாக அவளுக்குத் தெரிவிக்கிறார்.

அன்றிரவு பெல் மீண்டும் அந்தக் கொலை நடந்த விடுதிக்குச் செல்கிறார். அங்கு கதவின் பூட்டு துப்பாக்கியால் சுட்டுத் திறக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கிறார். 

சிகர் இதே முறையைப் பயன்படுத்துவதை அவர் அறிந்திருப்பதால், அவன் அறைக்குள் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறார். 

கதவுக்கு மறுபுறம் துப்பாக்கியுடன் சிகர் நிற்பது போல அவருக்குத் தோன்றுகிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் பெல் அறைக்குள் நுழைகிறார்.

 ஆனால் அங்கு யாரும் இல்லை. பணம் மறைக்கப்பட்டிருந்த குளிர்சாதன காற்றோட்டக் குழாய் திறக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். இதன் மூலம் பணத்தைத் தேடி வந்தவர்கள் அந்த அறையை ஏற்கெனவே சோதித்திருப்பதை உணர்கிறார்.

கணவன் மாஸை இழந்த சோகத்தில் உள்ள கார்லா ஜீனுக்கு அதிர்ச்சியாக அவள் தாயும் புற்றுநோயால்  இறக்கிறாள், இறுதிச்சடங்கு முடிந்து அவள் வீட்டுக்குத் திரும்புகிறாள். 

அப்போது அவளுடைய படுக்கையறையில் சிகர் காத்திருக்கிறான். மாஸிடம் கூறிய மிரட்டலை இங்கு நிறைவேற்ற வேண்டியிருப்பதாக அவளிடம் சொல்கிறான். 

இருப்பினும், அவளுடைய உயிரைப் பற்றிய முடிவை ஒரு நாணயச் சுண்டலில் தீர்மானிக்கலாம் என்று முன்வைக்கிறான். 

நாணயம் பூவா தலையா என்று கணிக்கச் சொல்கிறான். ஆனால் கார்லா ஜீன் அதற்கு மறுக்கிறாள்.

 நாணயத்தின் முடிவைச் சுட்டிக்காட்டி தனது செயலுக்கான பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்றும், அவளுடைய விதியைத் தீர்மானிப்பவன் சிகர்தான் என்றும் அவள் கூறுகிறாள். 

சிகர் அங்கிருந்து வெளியேறும்போது தனது காலணிகளின் அடிப்பகுதியைச் சரிபார்த்துக்கொள்கிறான்.

வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் செல்லும் சிகர், குடியிருப்புப் பகுதியில் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகிறான்.

 இந்த விபத்தில் அவனுடைய கை முறிகிறது. அப்போது அந்த வழியாகச் செல்லும் இரண்டு சிறுவர்களை அழைத்து, ஒருவனுடைய சட்டையைப் பணம் கொடுத்து வாங்குகிறான்.

 அந்தச் சட்டையைத் தனது காயமடைந்த கைக்குக் கட்டி, தற்காலிகக் கட்டாகப் பயன்படுத்துகிறான். பின்னர் காயத்துடன் நடந்து அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறான்.

இதற்கிடையில், பெல் தனது உறவினரும் முன்னாள் சட்ட அதிகாரியுமான எல்லிஸை (பாரி கார்பின்) சந்திக்கிறார்.

 அண்மைக்காலமாகத் தனது பகுதியில் அதிகரித்துவரும் வன்முறையையும் குற்றங்களையும் எதிர்கொள்ளத் தன்னால் இயலவில்லை என்றும், காவல் துறைப் பணியிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்திருப்பதாகவும் எல்லிஸிடம் கூறுகிறார். 

தனது நீண்டகால அனுபவமும் காவல் துறை அதிகாரமும் இருந்தும், இத்தகைய கொடூரமான குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாத நிலை அவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

பெல்லின் முடிவைக் கேட்ட எல்லிஸ், மனிதன் விதியிலிருந்து தப்பித்துவிட முடியாது என்று கூறுகிறார்.

 விதியைத் தன்னால் தவிர்க்க முடியும் என்று ஒருவர் நினைப்பதே அவரது தற்பெருமையைக் காட்டுகிறது என்றும் அறிவுறுத்துகிறார். 
இந்த உரையாடலுக்குப் பிறகு பெல் காவல் துறைப் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

ஒருநாள் காலையில் தனது மனைவி லொரெட்டா பெல்லிடம் (டெஸ் ஹார்ப்பர்) தான் கண்ட இரண்டு கனவுகளைப் பற்றிச் சொல்கிறார். 

முதல் கனவில், தனது தந்தை கொடுத்திருந்த பணத்தைத் தொலைத்துவிட்டதாகக் காண்கிறார். 

இரண்டாவது கனவில், பனியால் மூடப்பட்ட மலைப்பாதையில் குதிரையில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். அப்போது அவரது தந்தை அவரைக் கடந்து முன்னால் செல்கிறார். தந்தையின் கையில் ஒரு கொம்புக்குள் நெருப்பு எடுத்துச் செல்லப்படுகிறது.

 தனது தந்தை முன்னால் சென்று இருவருக்காகவும் ஓரிடத்தில் நெருப்பு மூட்டி முகாம் அமைக்கப் போகிறார் என்பதை பெல் கனவிலேயே உணர்கிறார். அந்தக் கனவுகளை மனைவியிடம் விவரிப்பதுடன் இத்திரைப்படம் நிறைவடைகிறது.

நாவல் பற்றியும்:-

 நாவலில் இடம்பெற்று, திரைப்படத்தில் இடம்பெறாத அல்லது சுருக்கப்பட்ட பல முக்கியமான விவரங்கள் ஏராளம் உள்ளன. குறிப்பாக, ஷெரிப் எட் டாம் பெல்லின் வாழ்க்கைப் பின்னணி, அவரது மனப்போராட்டங்கள், லெவெலின் மோஸின் இறுதிப் பயணம், ஆன்டன் சிகுரின் தனிப்பட்ட சிந்தனைகள் ஆகியவை நாவலில் விரிவாக விவரிக்கப்படுகின்றன.

நாவல் முழுவதும் ஷெரிப் பெல்லின் பார்வையும் உள்ளுணர்வுப் பதிவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

 ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அவர் தனது அனுபவங்கள், குற்றங்கள், வன்முறை, மாறிவரும் சமூகச் சூழல், மனிதர்களின் மனநிலை ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்கிறார். 

திரைப்படத்தில் தொடக்கத்தில் இடம்பெறும் அவரது குரல்வழி அறிமுகத்திற்குப் பிறகு, இந்த நீண்ட சிந்தனைப் பதிவுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளன.

 நாவலில் பெல்லின் மனநிலையும் அவர் எதிர்கொள்ளும் அறநெறிக் குழப்பங்களும் வாசகருக்கு விரிவாக வெளிப்படுகின்றன.

பெல் தனது இளமைக்காலப் போர்க்கால அனுபவத்தால் நீண்டகாலமாக மனவேதனை அடைகிறார். 
போரின்போது தனது படையினரைக் கைவிட்டு உயிர் பிழைத்த சம்பவம் அவரைத் தொடர்ந்து துரத்துகிறது. 

அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் அவருக்கு வெண்கல நட்சத்திரப் பதக்கம் வழங்கப்பட்டிருப்பது அவரது மனக்குழப்பத்தை மேலும் ஆழப்படுத்துகிறது. தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தச் சம்பவத்திற்கான மனக்குறையைச் சரிசெய்யும் முயற்சியில் கழித்ததாக அவர் உணர்கிறார். 

இந்தப் பின்னணி நாவலில் விரிவாக விவரிக்கப்படுகிறது; திரைப்படத்தில் அதன் பெரும்பகுதி இடம்பெறவில்லை.

பெல்லின் குடும்ப வாழ்க்கையும் நாவலில் கூடுதல் இடம் பெறுகிறது. அவரது மனைவி லொரெட்டாவுடன் அவர் வழக்கைப் பற்றியும் உலகில் அதிகரிக்கும் வன்முறையைப் பற்றியும் பேசுகிறார். 

அவர்களது மகள் டெபோராவின் இழப்பும் பெல்லின் மனதில் நீங்காத நினைவாகத் தொடர்கிறது. 

திரைப்படத்தில் இந்தக் குடும்பப் பின்னணி மிகவும் சுருக்கப்பட்டுள்ளது. நாவலில் குடும்ப நினைவுகள், வயது முதிர்வு, வாழ்க்கையின் இறுதிக்கட்டம் குறித்த அவரது சிந்தனைகள் ஆகியவை கதையின் உணர்வுப்பூர்வமான பகுதிகளாக அமைகின்றன.

லெவெலின் மோஸின் இறுதிப் பயணத்தில் திரைப்படத்தில் இடம்பெறாத ஒரு முக்கியமான நிகழ்வு நாவலில் உள்ளது.

 மோஸ் தனது பயணத்தின் ஒரு கட்டத்தில் வழியில் செல்லும் ஓர் இளம்பெண்ணைச் சந்திக்கிறார். அவளைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு எல் பாசோ நோக்கிப் பயணிக்கிறார்.

 அவர்களுக்கிடையே வாழ்க்கை, பணம், எதிர்காலம் போன்றவற்றைப் பற்றிய உரையாடல்கள் நிகழ்கின்றன. அவளுக்குப் பணமும் கொடுக்கிறார். 

இந்தச் சந்திப்பு மோஸின் இறுதிக்கட்டப் பயணத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. 

திரைப்படத்தில் இந்த இளம்பெண்ணுடனான நீண்ட பயணமும் உரையாடல்களும் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, மோஸ் தங்கியிருக்கும் விடுதியில் ஒரு பெண்ணைச் சந்திக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

நாவலில் வரும் இளம்பெண்ணின் பாத்திரமும் திரைப்படத்தில் காட்டப்படும் பெண்ணின் பாத்திரமும் ஒரே நிகழ்வைக் கொண்டவை அல்ல.

மோஸின் மரணம் நிகழும் விதத்திலும் நாவலுக்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. 

நாவலில் மோஸ் அந்த இளம்பெண்ணுடன் பயணித்துக்கொண்டிருக்கும்போது மெக்சிகோவைச் சேர்ந்த ஆயுதக்குழுவினர் அவர்களை எதிர்கொள்கிறார்கள். 

மோஸை ஆயுதத்தைக் கீழே வைக்கும்படி மிரட்டுகிறார்கள். அந்தப் பெண்ணின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. 

மோஸ் தனது துப்பாக்கியைக் கீழே வைக்கிறார். இருந்தாலும் ஆயுதக்குழுவினர் அவரைக் கொன்றுவிடுகிறார்கள். இளம்பெண்ணும் அந்த மோதலின் விளைவுகளால் பாதிக்கப்படுகிறாள்.

 திரைப்படத்தில் மோஸின் மரணம் நேரடியாகக் காட்டப்படாமல், அவர் தங்கியிருக்கும் விடுதியில் துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர் அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளது. 

நாவலில் மோஸின் கடைசிப் பயணமும் அந்த இளம்பெண்ணுடனான உரையாடலும் அவரது மரணத்திற்கான சூழலும் விரிவாக விவரிக்கப்படுகின்றன.

ஆன்டன் சிகுரின் குணநலன்களை வெளிப்படுத்தும் சில முக்கியமான தகவல்களும் நாவலில் இடம்பெறுகின்றன.

 சிகுர் தன்னை ஒருமுறை கைது செய்ய அனுமதித்ததாகவும், பின்னர் தனது மனவலிமையைப் பயன்படுத்தி அந்தச் சூழலிலிருந்து எப்படித் தப்பிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள விரும்பியதாகவும் கார்சன் வெல்ஸிடம் தெரிவிக்கிறார்.

 சிகுரின் தன்னம்பிக்கை, மனநிலை, தனது செயல்களைப் பற்றிய தனித்துவமான அணுகுமுறை ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்த விவரம் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

மோஸிடமிருந்து கைப்பற்ற வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொடுத்தவர்களிடம் சிகுர் திரும்பிச் செல்லும் அலுவலகச் சந்திப்பும் நாவலில் விரிவாக இடம்பெறுகிறது.

 அங்கு அவர் பணத்தை ஒப்படைத்து, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையின் நிபந்தனைகளையும் தனது செயல்பாட்டையும் விளக்குகிறார். 

இந்தச் சந்திப்பு சிகுர் வெறும் பணத்திற்காகச் செயல்படும் கொலைகாரர் மட்டுமல்ல; தனக்கென ஒரு கொள்கையையும் செயல்முறையையும் உருவாக்கிக்கொண்டிருக்கும் மனிதன் என்பதைக் காட்டுகிறது. இந்த அலுவலகக் காட்சி திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

கார்லா ஜீனுக்கும் சிகுருக்கும் இடையிலான இறுதிச் சந்திப்பிலும் நாவலுக்கும் திரைப்படத்திற்கும் வேறுபாடு உள்ளது. 

நாவலில் சிகுர் நாணயத்தைச் சுண்டிப் போட்டு அவளது உயிரைப் பற்றிய முடிவைத் தீர்மானிக்க முன்வைக்கிறான். ஆரம்பத்தில் அவள் தயங்கினாலும், இறுதியில் நாணயத்தைத் தேர்ந்தெடுக்கிறாள். 

அவள் தலை என்று கூறுகிறாள்; ஆனால் நாணயம் அவள் தேர்ந்தெடுத்த பக்கத்தில் விழுவதில்லை. அதன் முடிவாக சிகுர் அவளைக் கொல்கிறான்.

 நாணயத்திற்கு உண்மையில் எந்த அதிகாரமும் கிடையாது; முடிவெடுப்பது சிகுர்தான் என்ற கருத்தை அவள் வெளிப்படுத்துகிறாள்.

 திரைப்படத்தில் கார்லா ஜீன் நாணயத்தைத் தேர்ந்தெடுக்க மறுக்கிறாள். நாணயத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது; அவளது உயிரைப் பற்றிய முடிவை எடுப்பது சிகுர்தான் என்று நேரடியாகச் சுட்டிக்காட்டுகிறாள், சிகுர் கொல்வதோ துப்பாக்கி சத்தமோ கேட்காது, மாறாக ஷூ அடிப்பகுதி ரத்தத்தால் நனைந்துள்ளதா என அவன் காலைத் தூக்கி சோதிப்பதை நாம் பார்க்கிறோம். 

இதனால் இந்த இறுதிச் சந்திப்பின் உரையாடலும் அதன் தத்துவார்த்தமான பொருளும் இரு படைப்புகளிலும் வேறுபடுகின்றன.

சிகுர் கார் விபத்தில் காயமடைந்த பின்னரும் நாவலில் பெல் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்.

 விபத்தை நேரில் பார்த்த இளைஞர்களிடம் அவர் விசாரிக்கிறார். சிகுரின் தடத்தைப் பின்தொடர முயல்கிறார். 

திரைப்படத்தில் சிகுர் விபத்துக்குப் பிறகு இரண்டு இளைஞர்களிடம் சட்டையைப் விலை தந்து பெற்று அங்கிருந்து நடந்து செல்வதுடன் அந்தப் பகுதி முடிவடைகிறது. 

அதன் பிறகு பெல் ஓய்வுபெறும் காட்சிக்கு கதை நகர்கிறது. நாவலில் விபத்துக்குப் பிறகும் பெல் மேற்கொள்ளும் விசாரணை கூடுதல் விவரங்களுடன் இடம்பெறுகிறது.

பெல்லின் இறுதிக்கட்ட மனப்போராட்டமும் நாவலில் விரிவாக வெளிப்படுகிறது. தனது தந்தையைப் பற்றிய நினைவுகள், இழந்த காலம், வயது முதிர்வின் உணர்வு, உலகின் மாறிவரும் தன்மை ஆகியவை அவரது சிந்தனைகளில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. 

திரைப்படத்தின் இறுதியில் பெல் தனது இரண்டு கனவுகளைப் பற்றி மனைவியிடம் கூறுகிறார். நாவலிலும் இந்தக் கனவுகள் இடம்பெறுகின்றன. 

முதல் கனவில், இறந்துபோன தனது தந்தையைச் சந்திக்கிறார். தந்தை அவரிடம் பணம் கொடுக்கிறார்; ஆனால் அந்தப் பணத்தை அவர் தொலைத்துவிடுகிறார்.

 இரண்டாவது கனவில், குளிரான குளிர்கால இரவில் மலைப்பாதை வழியாகக் குதிரையில் பயணிக்கிறார். அப்போது அவரது தந்தை ஒரு கொம்பில் நெருப்பை ஏந்திக்கொண்டு அவரைக் கடந்து செல்கிறார். 

தந்தை தனக்காக நெருப்பை மூட்டி, தான் வந்து சேரும் வரை காத்திருப்பார் என்ற உணர்வு பெல்லுக்கு ஏற்படுகிறது. பின்னர் அவர் விழித்துக்கொள்கிறார்.
 திரைப்படம் இந்தக் கனவுகளைச் சுருக்கமாகக் காட்சிப்படுத்துகிறது; நாவல் அவற்றை பெல்லின் வாழ்க்கை அனுபவங்களுடனும் மனநிலையுடனும் இணைத்து விரிவாக வெளிப்படுத்துகிறது.

#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு
#கீதப்ப்ரியன்கோலடன்க்ளோப் 
#கீதப்ப்ரியன்பாஃப்டா
#கீதப்ப்ரியன்bafta
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (247) ஆஸ்கர் (194) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)