ஒரு புகைப்படம் ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முடியுமா?
அதே புகைப்படம் சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்தின் ஆயுதமாகவும் மாற முடியுமா?
புகைப்படக் கலைஞர் நான்கோல்டினின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கலைப்பயணத்தையும், சமூகச் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து இந்தக் கேள்விகளை ஆராய்கிறது லாரா பொய்ட்ராஸ் இயக்கிய ஆல் தி பியூட்டி அண்ட் தி பிளட்ஷெட் All the Beauty and the Bloodshed .
2022ஆம் ஆண்டு வெளியான இந்த 122 நிமிட அமெரிக்க ஆவணப்படம், ஒரு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதுடன், மருந்துத் தொழில்துறையின் அதிகாரத்திற்கும் கலை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பிற்கும் இடையிலான முரண்பாட்டையும் முன்வைக்கிறது.
நான்கோல்டினின் புகைப்படக் கலை அவரது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதது. எல்.ஜி.பி.டி. சமூகத்தினரின் வாழ்க்கை, எண்பதுகளில் அமெரிக்காவை உலுக்கிய எச்.ஐ.வி., எய்ட்ஸ் நெருக்கடி ஆகியவற்றை அவர் தனது புகைப்படங்கள் வழியாக ஆவணப்படுத்தினார்.
சமூகத்தின் விளிம்புகளில் வாழ்ந்த மனிதர்களின் உறவுகள், உணர்வுகள், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பதிவு செய்த அவரது படைப்புகள், தனிமனித அனுபவங்களை ஒரு காலகட்டத்தின் சமூக வரலாறாகவே மாற்றின.
அவரது புகழ்பெற்ற புகைப்படத் தொகுப்பான தி பாலட் ஆஃப் செக்சுவல் டிபெண்டன்சி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
தனித்தனி புகைப்படங்களை ஒரு தொடர்ச்சியான காட்சித் தொகுப்பாக அமைத்து, அவற்றின் வழியாக மனித உறவுகளின் சிக்கல்களை வெளிப்படுத்தும் அவரது கலைமுறை, இந்த ஆவணப்படத்தின் கதை சொல்லும் வடிவத்திற்கும் அடிப்படையாக அமைகிறது.
நான்கோல்டினின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அவரது கலைப்படைப்புகள் மட்டுமே போதுமானவை அல்ல.
அவரது சகோதரியின் தற்கொலை, போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த அனுபவங்கள் போன்ற தனிப்பட்ட வாழ்க்கையின் கடினமான பகுதிகளையும் இயக்குநர் அணுகுகிறார்.
இவை அவரது வாழ்க்கையில் இதுவரை பொதுவெளியில் அதிகம் பகிரப்படாத அம்சங்கள். தனிப்பட்ட அனுபவங்களையும் கலைப்பயணத்தையும் தனித்தனியாகப் பிரிக்காமல், அவற்றை ஒரே வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களாக இணைத்திருப்பது படத்தின் முக்கியமான அணுகுமுறையாகும்.
நான்கோல்டினின் வாழ்க்கையில் போதைப்பொருள் அடிமைத்தனம் ஒரு தீவிரமான பிரச்சினையாக உருவானது.
ஆக்ஸிகான்டின் மருந்துக்கு அடிமையான அவர், பின்னர் ஃபெண்டனில் காரணமாக உயிருக்கு ஆபத்தான அளவுக்கு அதிகப்படியான மருந்தை உட்கொண்டார்.
இந்த அனுபவம் அவரைத் தனிப்பட்ட பாதிப்பின் எல்லைக்குள் நிறுத்தவில்லை. அமெரிக்காவில் பெரும் சமூகப் பிரச்சினையாக வளர்ந்திருந்த ஓபியாய்டு மருந்து நெருக்கடியின் பின்னணியையும், அதற்குப் பொறுப்பான மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளையும் எதிர்கொள்ளத் தூண்டியது.
ஆக்ஸிகான்டினைத் தயாரித்த பர்ட்யூ ஃபார்மா நிறுவனம் சாக்லர் குடும்பத்திற்குச் சொந்தமானது.
அதே குடும்பம் பல்வேறு அருங்காட்சியகங்களுக்கும் கலை நிறுவனங்களுக்கும் நிதியுதவி செய்து வந்தது.
இந்த முரண்பாடுதான் நான்கோல்டினின் சமூகப் போராட்டத்திற்கு முக்கியமான அடிப்படையாக அமைந்தது.
மருந்து நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், அந்த மருந்து நிறுவனத்துடன் தொடர்புடைய குடும்பத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் கலை நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
இதற்காக 2017ஆம் ஆண்டு பி.ஏ.ஐ.என். என்ற சமூகச் செயல்பாட்டுக் குழுவைத் தொடங்கினார்.
மருந்து அடிமைத்தனத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் அதற்குப் பொறுப்பான நிறுவனங்களையும் பொதுவெளியில் விவாதத்திற்கு கொண்டுவருவதே அதன் நோக்கம்.
குறிப்பாக, சாக்லர் குடும்பத்தின் நிதியுதவியைப் பெற்ற கலை நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தப்பட்டது.
2018ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தின் டெம்பிள் ஆஃப் டெண்டர் பகுதியில் நடைபெற்ற முதல் போராட்டம் இந்தச் செயல்பாட்டின் முக்கியமான தொடக்கமாக அமைந்தது.
பின்னர் லூவர் மற்றும் கக்கன்ஹைம் அருங்காட்சியகங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நடவடிக்கைகளின் விளைவாக இலக்காகக் கொள்ளப்பட்ட பெரும்பாலான அருங்காட்சியகங்கள் சாக்லர் குடும்பத்துடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டன.
2021ஆம் ஆண்டு பர்ட்யூ ஃபார்மா திவால் நடவடிக்கைக்காக விண்ணப்பித்தது.
இந்தச் சமூகப் போராட்டங்களின் பதிவுகளிலிருந்துதான் ஆவணப்படத்தின் உருவாக்கப் பயணம் தொடங்கியது.
நான்கோல்டினும் அவருடன் செயல்பட்ட இரண்டு சமூகச் செயல்பாட்டாளர்களும் இரண்டு ஆண்டுகளாகப் போராட்டங்களைப் படம்பிடித்து வந்தனர்.
ஆரம்பத்தில் இந்தப் பதிவுகளைப் பயன்படுத்தி பி.ஏ.ஐ.என். குழுவைப் பற்றிய ஆவணப்படம் உருவாக்குவதே நோக்கமாக இருந்தது.
பின்னர் நான்கோல்டின் தயாரிப்பு நிறுவனத்தை அணுகியபோது, லாரா பொய்ட்ராஸ் இயக்குநராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
விட்னி அருங்காட்சியகத்திற்காக அவர் உருவாக்கிய ஆஸ்ட்ரோ நாய்ஸ் படைப்பு இதற்கான காரணமாக அமைந்தது.
அரசியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கியிருந்த பொய்ட்ராஸிடம் தனது வாழ்க்கை ஆர்வத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் நான்கோல்டினுக்கு ஆரம்பத்தில் இருந்தது.
ஆனால் இயக்குநர் போராட்டப் பதிவுகளை மட்டும் மையமாகக் கொள்ளாமல், அவரது முழுமையான வாழ்க்கையையும் கலைப் பயணத்தையும் உள்ளடக்கிய படைப்பாகத் திட்டத்தை விரிவுபடுத்தினார்.
இந்த முடிவு திரைப்படத்தின் கட்டமைப்பையே மாற்றியது. ஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியும் நான்கோல்டினின் வாழ்க்கையின் குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்த புகைப்படத் தொகுப்பு அல்லது பழைய காட்சிப் பதிவுடன் தொடங்குகிறது.
பின்னர் அவை சமகாலப் போராட்டக் காட்சிகளுடன் இணைகின்றன. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மாறிமாறி முன்வைக்கும் இந்த அமைப்பு, அவரது கலைப்பயணத்தையும் சமூகச் செயல்பாட்டையும் ஒரே தொடர்ச்சியில் புரிந்துகொள்ள உதவுகிறது.
புகைப்படங்கள் வெறும் பின்னணிக் காட்சிகளாகப் பயன்படுத்தப்படாமல், அவரது வாழ்க்கையின் நினைவுகளையும் சமூகச் சூழலையும் வெளிப்படுத்தும் முக்கியமான கதை சொல்லும் கருவியாகின்றன.
நான்கோல்டினின் புகைப்படங்கள் மற்றும் ஸ்லைடு காட்சிகள் படத்தின் காட்சிமொழியில் முக்கிய இடம் பெறுகின்றன.
ஒளிப்பதிவுப் பணியில் அவரும் பங்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கிளேர் கார்ட்டர், ராபர்ட் கொலோட்னி, அலெக்சாண்டர் டபிள்யூ. லூயிஸ், லாரா பொய்ட்ராஸ் உள்ளிட்ட ஒளிப்பதிவாளர்களின் பங்களிப்புடன் உருவான காட்சிகள், வெவ்வேறு காலகட்டங்களின் பதிவுகளை ஒருங்கிணைக்கின்றன.
ஆமி ஃபூட், ஜோ பினி, பிரையன் ஏ. கேட்ஸ் ஆகியோர் மேற்கொண்ட படத்தொகுப்பு, புகைப்படங்கள், நேர்காணல்கள், காப்பகக் காட்சிகள், போராட்டப் பதிவுகள் ஆகியவற்றுக்கு இடையே இயல்பான தொடர்பை உருவாக்குகிறது.
சவுண்ட்வாக் கலெக்டிவ் மற்றும் டான் சட்டர் மேடல் ஆகியோரின் இசையும் இந்தக் காட்சித் தொடருக்கு துணையாக அமைகிறது.
நான்கோல்டினே படத்தின் முதன்மையான விவரிப்பாளராக இருப்பதால் அவரது வாழ்க்கை அவருடைய குரலிலேயே வெளிப்படுகிறது.
பத்திரிகையாளர் பேட்ரிக் ராடன் கீஃப், பி.ஏ.ஐ.என். உறுப்பினர் மேகன் காப்லர் உள்ளிட்டவர்களின் நேர்காணல்கள் கூடுதல் பார்வைகளை வழங்குகின்றன.
ஜான் வாட்டர்ஸ், குக்கி முல்லர், டேவிட் வோஜ்னரோவிச் ஆகியோரின் காப்பகக் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. இவற்றின் மூலம் தனிப்பட்ட நினைவுகளும் சமூக வரலாறும் ஒன்றோடொன்று இணைகின்றன.
தனது வாழ்க்கையைப் படமாக்குவதில் ஆரம்பத்தில் நான்கோல்டினுக்கு இருந்த தயக்கம், இயக்குநரின் படைப்புச் சுதந்திரத்திற்கும் படத்தின் மைய ஆளுமையின் விருப்பத்திற்கும் இடையிலான நுட்பமான உறவை வெளிப்படுத்துகிறது.
தனது குரலில் கதை சொல்லப்பட்டாலும், அது தான் சொல்லியிருக்கும் அதே வடிவத்தில் அமையவில்லை என்று நான்கோல்டின் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், படத்தில் பயன்படுத்தப்படும் விஷயங்கள் குறித்த தனது கருத்துகளையும் பங்களிப்பையும் வழங்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனால் அவரது தனிப்பட்ட அனுபவங்களுக்கும் இயக்குநரின் விரிவான கலைப்பார்வைக்கும் இடையே ஒரு கூட்டுப் படைப்பு உருவாகியுள்ளது.
2022 செப்டம்பர் 3ஆம் தேதி 79வது வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படம், அங்கு உயரிய கோல்டன் லயன் விருதைப் பெற்றது.
வெனிஸ் விழாவில் அந்த விருதைப் பெற்ற இரண்டாவது ஆவணப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
அதே ஆண்டு டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. நவம்பர் 23ஆம் தேதி அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியானது.
95வது அகாடமி விருதுகளில் சிறந்த ஆவணப்படத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டதுடன், 2024ஆம் ஆண்டு பீபாடி விருதையும் வென்றது.
ராட்டன் டொமாட்டோஸ் தளத்தில் 145 விமர்சனங்களின் அடிப்படையில் 95 சதவீத ஆதரவும், மெட்டாகிரிட்டிக்கில் 34 விமர்சனங்களின் அடிப்படையில் 100க்கு 91 மதிப்பெண்ணும் பெற்றது.
ஆல் தி பியூட்டி அண்ட் தி பிளட்ஷெட் திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், ஒரு கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவரது சமூகச் செயல்பாடுகளுக்கான வெறும் பின்னணியாகப் பயன்படுத்தாமல், இரண்டையும் சமமான முக்கியத்துவத்துடன் அணுகுவதுதான்.
நான்கோல்டினின் புகைப்படங்களும் அவரது நினைவுகளும் சமூகப் போராட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்து ஒரு முழுமையான மனித அனுபவத்தை உருவாக்குகின்றன.
அழகை உருவாக்கும் கலைக்கும் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் சமூகச் செயல்பாட்டிற்கும் இடையே எல்லை இல்லை என்பதை இந்த ஆவணப்படம் தனது தனித்துவமான காட்சிமொழியால் வெளிப்படுத்துகிறது.
ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாற்றைத் தாண்டி, கலை நிறுவனங்களின் பொறுப்பு, சமூக அக்கறை, தனிப்பட்ட அனுபவங்களின் அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆழமாக ஆராயும் ஆவணப்படமாக இது நினைவில் நிற்கிறது.
#கீதப்ப்ரியன்கோலடன்லயன்