இந்த கட்டுரையில் சர்.வில்லியம் லாம்ப்டன் சமாதியின் முன் கட்டுரையாளர் எடுத்துக் கொண்ட செல்பி படம் உள்ளது ,நாக்பூரில் zero mile stone படம் உள்ளது
வரலாற்றுக் கட்டுரை எழுதும் கட்டுரையாளர்கள் அதில் உங்கள் புகைப்படங்களை தவிருங்கள்,நீங்கள் சரித்திரத்தை நிகழ்காலத்துக்கு கடத்தும் ஒரு தபால் காரர் மட்டுமே,
//அடிலாபாத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் தொடங்குகிறது. ஒரு மணிநேரப் பயணத்துக்குப் பிறகு சாலையோரம் இருந்த ஒரு நல்ல விடுதியில் இரவு தங்கி, காலை புறப்பட்டோம். 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பரங்கிமலை என்று நாம் அழைக்கும் செயின்ட் தாமஸ் மலையிலிருந்து அருகில் இருக்கும் ஒரு குன்று வரை ஒரு நேர்கோட்டை வரைந்தார் கேப்டன் வில்லியம் லாம்டன். இந்தியா முழுவதையும் அளந்த முதல் சர்வேயின் முதல் கோடு அதுதான். அதன் கடைசிக்கோடு முடிந்த இடம் இமயத்தின் பாதம்.
இந்த நில அளவைப் பயணம் ``அறிவியல் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களிலேயே மிகப்பிரமாண்டமான, பிரமிப்பான பயணம்" எனப் புவியியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்டது. நான்காம் கர்நாடகப் போரில் திப்புசுல்தானை வீழ்த்திய படையில் பெரும்பங்காற்றியவர் லாம்டன். திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஏறக்குறைய இந்தியா முழுமையும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இனி பெரிய போர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இந்தக் காலகட்டத்தில் இந்திய நாடு முழுமையையும் அளவிட வேண்டும் என லாம்டன் திட்டமிட்டார். இதற்கான அனுமதியை சென்னை ராஜதானியின் கவர்னரிடம் பெற்று, பணியைத் தொடங்கினார்
இரண்டு மாட்டு வண்டிகள். ஒரு வண்டியில் 20 அடி நீளம் இருந்து தியோடர்லைட் என்ற அளக்கும் கருவி. இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட கருவி அது. அந்தக் கருவி வந்த கப்பல் பிரான்ஸ் நாட்டினரால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது. (லாம்டன் பயன்படுத்திய அந்தக் கருவி இப்பொழுது டேராடூனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கிறது). 1802 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி 40 ஆண்டுகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பேர் ஈடுபட்டு, நூற்றுக் கணக்கானோர் உயிர்களைத் தியாகம் செய்து, எண்ணற்ற இடையூறுகளைச் சந்தித்து முடிக்கப்பட்ட பணி இது.
சுட்டெரிக்கும் வெயில், கடும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், கோபக்கார பழங்குடியினர், தங்கள் நிலங்களை அபகரிக்க வந்த எதிரிகளாகப் பார்த்த விவசாயிகள், தொற்று நோய்கள், ஆபத்தான விலங்குகள், விஷ ஜந்துக்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு லாம்டன் இந்தப் பணியை நடத்தினார். தஞ்சை பெரிய கோயிலின் ஒரு பகுதியில் நின்று நில அளவை செய்யும்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுகிறது. இதனால் நில அளவைப் பணிக்குக் கடும் எதிர்ப்பு வருகிறது. பதேபூர் சிக்ரியில் நில அளவை செய்யும்போது அக்பர் சமாதியின் ஒரு தூபி மறைக்கின்றது என்று மேல் பகுதியைக் கொஞ்சம் இடித்து விடுகிறார்கள். உடனடியாக நிஜாமின் ஆட்கள் இவர்களைச் சிறைப்பிடித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
21 ஆண்டுகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த லாம்டனுக்குப் பிறகு இந்தியாவின் புதிய சர்வே ஜெனரலாக ஜார்ஜ் எவரெஸ்ட் பொறுப்பேற்கிறார். ஜார்ஜ் எவரெஸ்ட்க்குப் பிறகு ஆன்ட்ரூ ஸ்காட் வாக் இறுதிக்கட்ட பணியைத் தொடர்கிறார். 1856 ஆம் ஆண்டு இமயமலையில் நில அளவை செய்துகொண்டிருந்த ஸ்காட் வாக் ஒரு சிகரத்தின் உயரம் உலகில் உள்ள எல்லா சிகரங்களையும் விட உயரமாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். 1856 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி கல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்பு அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு, ஸ்காட் வாக்கின் பரிந்துரைப்படி அந்தச் சிகரத்துக்கு 'எவரெஸ்ட்' எனப் பெயரிடப்பட்டது. தன் பெயரை அந்தச் சிகரத்துக்கு வைக்க வேண்டாம் என்று எவரெஸ்ட் மன்றாடினார்! வில்லியம் லாம்டன் ஒரு தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. கடமை தவறாத, நாட்டுப்பற்று மிக்க அதிகாரியான வில்லியம் லாம்டன் 1823 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் நாக்பூருக்கு 47 கிலோ மீட்டர் தெற்கே இருக்கும் ஹங்கன்காட் என்ற ஊரில் இறந்து போனார்.
அடிலாபாத்திலிருந்து நாக்பூருக்குப் போகும் வழியில் இருக்கும் ஹங்கன்காட்டுக்குச் சென்று 'கிரேட் ட்ரிக்னாமெட்ரி ஆஃப் இந்தியாவின் தந்தை' என்றழைக்கப்பட வேண்டிய லாம்டனின் கல்லறையைத் தேடினோம். புன்னகையோடு வழிகாட்டிய ஒருவர், 'இந்தப் பகுதியில் இருக்கலாம்' என்று ஒரு முஸ்லிம்கள் குடியிருப்பைக் காட்டினார். ஏழ்மையின் அடையாளங்களோடு இருந்த நெருக்கமான வீடுகளுக்கு இடையே நடந்து சென்றபோது கவனிப்பாரற்ற அந்தக் கல்லறை இருந்தது. அங்கே இருந்தவர்களுக்கு 'இது யாரோ வெள்ளைக்கார அதிகாரியின் கல்லறை' என்பதைத் தாண்டி எதுவும் தெரியவில்லை. வேதம் புதிது என்ற படத்தில் "ஒவ்வொரு சமூக மாற்றத்தின் வேரிலும் ஒரு புரட்சியாளனின் இரத்தம் இருக்கிறது" என்ற வசனம் இடம் பெற்றிருக்கும்.
மனித சமூகத்தின் நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கட்டும் தன்னலம் கருதாத தியாகச்சீலர்களால் கட்டப்பட்டது. அத்தகைய மனிதர்களில் ஒருவரான வில்லியம் லாம்டனுக்கு எங்கள் வணக்கத்தைச் செலுத்தி விட்டு நாக்பூர் நோக்கிச் சென்றோம். நாக்பூரின் மையப்பகுதியில் 'ஜீரோ மைல் ஸ்டோன்' என்ற கல் இருக்கிறது. இந்தக் கல்லை இந்தியாவின் மையப் புள்ளியாகப் பல பேர் நினைக்கிறார்கள். அது தவறு. இந்தத் தூணின் அருகில் கிரேட் ட்ரிக்னாமெட்ரிக் சர்வேவுக்காக அமைக்கப்பட்ட கல் மேடை இருக்கிறது. இந்தக் கல்தூண் நில அளவையின் வரலாற்றை நினைவுகூரும் தூண் மட்டுமே. அதன் அருகில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, மீண்டும் எங்கள் பயணத்தை வடக்கு நோக்கித் தொடர்ந்தோம்.
- மருத்துவர் இரா.செந்தில்