ஹேராம் படத்தில் மறக்கமுடியாத கதாபாத்திரம் ஜெகன்நாத ஐயங்கார், சாகேத்ராமின் ஏழு வருடங்களாக பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் பெரியப்பா இவர்.
வையாபுரி வசந்தா அக்காவிடம் மாமா ஏன் வர்லை? நன்னாதானே இருந்தார் ? எனக்கேட்டு நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வாரே? அந்த கதாபாத்திரம் தான், இவருக்கு படத்தில் ஒரே ஒரு வசனம் அதுவும் தேச துரோகத் தவறு இழைக்கத் துணியும் சாகேத்ராமுக்கு மட்டும் கேட்கும் அசரிரீ போன்ற வசனம் " மகா பாபம்"
இந்தப் படத்தை இருபது வருடங்களுக்கு முன் பார்க்கையில் இந்த ஒற்றை வசனம் எனக்கு அப்படி மண்டையில் உறைத்தது, தன் குலக் கொழுந்து தவறிழைக்கிறான் என்று உணர்ந்த அந்த நொடியில் அவனைக் கடிந்துவிட்டு உயிர்விடும் கதாபாத்திரம், இது வரை சினிமாவில் யாருக்குமே வாய்த்ததில்லை,
இத்தனை உயரிய குருகாணிக்கை போன்ற கதாபாத்திரத்தை இயக்குனர் கமல்ஹாசன் ஏன் ஒரு முகம் தெரியாத நடிகருக்குத் தர வேண்டும் , இவர் யார்? எப்படி இத்தனை கச்சிதமாக இந்த படுத்த படுக்கையான பெரியவர் கதாபாத்திரத்தைச் செய்தார்? என யோசித்திருக்கிறேன்,அவர் எப்படி நடக்கப்போகும் தவறை உணர்கிறார் எனவும் யோசித்திருக்கிறேன்.
திருமணமான மகன் மாடியில் பட்டறையில் விடிய விடிய ஏதோ செய்கிறான், எதோ பெரிய பாவம் செய்ய விழைகிறான் என உள்ளுணர்வு சொல்லியிருக்கும் என யூகித்தேன், கை கால் விழுந்து படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு உள்ளுணர்வு நன்கு வேலை செய்யும் என சொல்வார்கள், அறிவியல் ரீதியான நிரூபனங்கள் இல்லை.
இவரை இப்படத்தில் நடிக்க வைக்க காரணம் உள்ளது, இவர் பழம் பெரும் நாடக நடிகர் பரமக்குடி P.S.நாகராஜ பாகவதர்,
கமல்ஹாசனுக்கு களத்தூர் கண்ணம்மா படத்தில் சிபாரிசு செய்தவராம், என்ன பாத்திரம் ஏற்றாலும் அந்த பாத்திரமாக உருமாறக்கூடிய நாடக நடிகராம்,இவர் கலைமாமணி விருதும் வாங்கியவர், இவர் இப்போது உயிருடன் இல்லை, இந்த அரிய தகவல் சூசன் சீசர் என்ற வெளிநாட்டுப் பெண்மணி நாடகம் மற்றும் நாடக நடிகர்களை ஆராய்ச்சி செய்து எழுதிய "புறக்கணிக்கப்பட்ட தமிழ் நாடக மேடை "புத்தகத்தில் உள்ளது.
படத்தில் மூன்று பேர் சாகேத்ராமின் கைகளில் உயிரை விடுவர், மனைவி அபர்ணா, பெரியப்பா ஜெகன்னாத அய்யங்கார், தோழனும் தம்பியுமான அம்ஜத், இந்த ஜெகந்நாத அய்யங்கார் கதாபாத்திரம் போலவே தன் எழுபதுகளில் ஏழு வருடங்கள் படுத்த படுக்கையாகிவிடுவார் சாகேத்ராம், இங்கே வசந்தா அக்கா கணவருக்கு பணிவிடை செய்வது போலவே மைதிலி சாகேத்ராமிற்கு பணிவிடைகள் செய்வார்.
#நாகராஜ_பாகவதர்,#கமல்ஹாசன்,#ஹேராம்,#kamalhaasan,#heyram,#jagannatha_iyengar