ஹேராம் படத்தில் ஜோஸ்யர் சாரி மாமா (வி.எஸ்.ராகவன் ) அந்த மன்னார்குடி உப்பிலி ஐயங்கார் குடும்பத்தையும் சென்னையில் இருக்கும் பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தையும் அப்படி ஆட்டி வைப்பார்.
இவர் சாகேத்ராமின் அப்பா ஷேஷாத்ரி ஐயங்கார் உயிருடன் இருக்கையில் அவரை நச்சரித்து கொண்டு வந்த பணக்கார சம்மந்தம் தான் உப்பிலி ஐயங்காரின் மகள் மைதிலி , அப்போது குடும்பத்தார் அறியாமல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாக இருக்கும் அபர்ணாவைத் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழத் துவங்கியிருப்பார் சாகேத்ராம், அப்பா ஷேஷாத்ரி ஐயங்கார் கவலைக்கிடம் திருமணம் செய்து பார்க்க ஆசை என்று வந்த தந்தியையும் கிழித்துப் போட்டு விடுவார்.
இப்போது அபர்ணாவைத் முழுதாக தொலைத்து விட்டு சென்னை திரும்பிப் போனதும் ஷேஷாத்ரி ஐயங்கார் உடல்நலககுறைவால் இறந்து விட, இருவருக்கும் தலை திவசம் ஆவதற்குள் பாஷ்யம் ஐயங்காரையும் வசந்தா அக்காவையும் நச்சரித்து பயமுருத்தி இந்த மைதிலி வரனை மீண்டும் கொண்டு வருகிறார் சாரி மாமா, ஷேஷாத்ரி ஐயங்காரே சாகேத்ராமிற்கு மகனாக வந்து பிறப்பார் என்கிறார்.
நீண்ட நாள் இழுத்த சம்மந்தம், மாப்பிள்ளைக்கு 37 வயது ஆனால் என்ன? ,மெட்ராஸ் க்ரிஸ்டியன் காலேஜில் பிஏ வரலாறு படித்த மாப்பிள்ளை,அரசாங்க வேலையை விட்டுவிட்டாலும் கூட , சென்னையில் சொந்த வீடு, ஆஸ்திகள் ,Citroen என்ற ஃப்ரெஞ்சுக் கார்,ஜாகுவார் கார் , stunning personality ,super smart மாப்பிள்ளை வரன், அபர்ணாவும் கட்டிய சில மாதங்களிலேயே இறந்து விட்டதால் மாப்பிள்ளைக்கு இருந்த இருதார தோஷமும் கழிந்து விட்டது, மைதிலிக்கும் இதுபோல தோஷ ஜாதகத்தைத் தான் சேர்க்க வேண்டும் என உப்பிலி ஐயங்கார் குடும்பத்தையும் பேசி சம்மதிக்க வைத்து விட்டார் சாரி மாமா.
சாகேத்ராம் மைதிலியை தட்டிக் கழித்துவிடலாம் என்று ஒப்புக்குப் பெண் பார்க்கப் போகிறார்,
முதலில் உப்பிலி ஐயங்கார் (க்ரிஷ் கர்னாட் ) மற்றும் அம்புஜம் மாமி (ஹேமமாலினி ) அவர்களின் மூத்த மாப்பிள்ளை, மைதிலியின் கர்ப்பிணி அக்கா, வயதான நார்மடி உடுத்திய அத்தைப்பாட்டி ( சௌகார் ஜானகி) இவர்கள் காட்டும் பணிவிலும் அன்பிலும் கட்டுண்டு போகிறார்.
பின்னர் அங்கே மைதிலியின் குணப் பிரகாசத்தில் கட்டுண்டு போகிறார், திருமணமும் விமரிசையாக நடந்தேறுகிறது.
இப்போது முதல் ராத்திரியில் சாகேத்ராம் அபர்ணா மற்றும் கலவரக்காரர்கள் கொலைகாரர்கள், இவர் கையால் சுட்டுக் கொன்றவர்கள் என கண் முன் தோன்ற அவருக்கு மனநிலை தடுமாறி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் விடுகிறார் சாகேத்ராம்.
அப்போது சாரி மாமா மாப்பிள்ளை சீக்கிரம் திரும்பி வந்துவிடுவார் என ஜோஸ்யம் சொல்கிறார்.
இப்போது ஒருவாரம் கழித்து கல்கத்தாவில் இருந்து சாகேத்ராம் வந்தும் விடுகிறார்,இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பி மனைவி மைதிலியை அணைத்து முத்தமிட நெருங்கும் வேளையில் , பாஷ்யம் மாமா நந்தி போல குறுக்கிட்டு கனைத்தவர், கீழே மன்னார்குடியில் இருந்து ஜோஸ்யர் சாரி மற்றும் உப்பிலி ஜயங்கார் , அம்புஜம் மாமி,அத்தைப்பாட்டி (சௌகார் ஜானகி) எல்லோரும் இவருக்கு காத்திருப்பதாக மிரட்டுகிறார்.
கீழே இறங்கி வந்தவரிடம் , யாரும் ஒன்றும் சொல்லாமல் மௌனமாயிருக்க, அத்தைப்பாட்டி சாரி மாமாவை நோக்கி ,சித்த , எங்களிடம் சொன்னதை மாப்பிள்ளையிடமும் சொல்லுங்கோ என்பார்.
இந்த பரிகார ஜோஸ்யர் தன் ஜாதகத்தை ஆராய்வதைக் கண்டதும் சாகேத்ராம் சீறி விடுவார்,
இவர் , நீ வேலை நிமித்தமாக பல்லாயிரமாண்டு சவக்குழிகளில் இறங்கித் தோண்டி மண்டை ஓடுகளை உருட்டி சேகரித்த தோஷம் தான் இப்படி பேயாக ஆட்டிப் படைக்கிறது ,அதற்கு பரிகாரம் செய்தே தீரவேண்டும் என பூச்சாண்டி காட்டுவார்.
சாகேத்ராமுக்கு கோபம் தலைக்கேற என்னை எனக்குப் பிடிச்ச பேய் பேச வைக்கிறது என்கிறேள், உங்களை எங்க மாமா தரப்போற காசு பேச வைக்கிறதுங்கறேன் என்றவர் வேலைக்காரன் ஆறுமுகத்தை சத்தமாகக் கூப்பிட்டு சாரி மாமாவுக்கு வாசலைக் காட்டச் சொல்வார்,
அவர் வேண்டாம்பா, புரிஞ்சது,நானே போறேன், என அவமானத்துடன் நடையைக் கட்டுவார், அத்தனை அழகாக இந்த ஜோஸ்யர் சாரி கதாபாத்திரத்தைச் செய்திருப்பார் நடிகர் வி.எஸ்.ராகவன் அவர்கள்,
இதில் ஒரு வரலாற்றுத் தொடர்பும் உள்ளது, ஜோதிடத்தில் காழியூர் சாரியார் ஜோதிடர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்,இவர்கள் பூர்வீகம் என்று பார்த்தால் மன்னார்குடிதான்,மகா பஞ்சம் காலத்தில் மன்னார்குடியில் இருந்து வந்து செய்யாரை அடுத்த காழியூரில் குடியேறினர் எனச் சொலவார்கள், எப்படி ஒரு கதாபாத்திரத்தை இயக்குனர் கமல்ஹாசன் நம்பகத் தன்மையுடன் உருவாக்குகிறார் பாருங்கள்.
இந்த ஜோஸ்யர் சாரி எல்லார் விஷயத்திலும் உரிமை எடுத்துக் கொள்பவர் என உணர்த்த ஒரு வசனம் மைதிலி சாகேத்ராம் திருமண ஊர்வலத்தில் வரும், எனனப்பா சீவாலிய சப்பிண்டே இருக்கே ,வாசி என நாதஸ்வரக்காரரிடம் அலுத்துக் கொள்வார் சாரி மாமா.
பெண் பார்க்க சாகேத்ராம் காரில் அக்ரஹாரத்துக்குள் வருகையில் வாசலில் காத்திருந்தவர்களிடம் இவர் அதிகாரமாக சொல்வார் ,"வந்துட்டா, வந்துட்டா தும்மி வைக்காதேயும் "
#சாரி,#விஎஸ்ராகவன்,#கமல்ஹாசன், #ஹேராம், #kamalhaasan,