சாகேத்ராம் வைணவ பிராமணர், அவர் சைவ உணவாளராக இருந்தாலும் வேட்டையில் விருப்பமுள்ளவர் என்பதை மகாராஜாவிடம் பேசுகையில் நாம் அறிவோம், வீட்டிலும் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பார், எனவே அவருக்கு எப்படி துப்பாக்கி சுடத் தெரியும்? என்ற கேள்வி நமக்கு எழாது.
கொலைத்திட்டம் தீட்டிய பின் தன் ஆயுதத்தை தேர்வு செய்தவர் மனதுக்குள் தான் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்கிறார்,ஆயுதத்தை தலைகீழாக பிரித்துப் போட்டு மேம்படுத்துகிறார்.
அவர் கரடு முரடானவர் என்பதை நமக்கு மனதில் பதிய வைக்க மிகுந்த உடலுழைப்பைக் கோரும் ஹாக்கி விளையாட்டு மட்டையைக் கொண்டு, ஓரினச்சேர்க்கையாளனை அடித்துத் துவைத்து பால்கனி வெளியே தள்ளுவது போல படத்தின் துவக்கத்திலேயே காட்சி வைத்திருப்பார் இயக்குனர்.
மேலும் இரவு உணவு வாங்க கடை தேடி அலையும் போது தன் macho வகை மேட்ச்லெஸ் மோட்டார் சைக்கிள் கொண்டு சீக்கியப் பெண்ணைத் துரத்தும் ஒரு சல்லியை பின்னால் மோதி தூக்கி எறிவார்.
அவர் உடலும் உள்ளமும் உறுதியானவரா? என்பதை சோதிக்க வேண்டி மகாராஜா கோலாப்பூர் அரண்மனை மைதானத்தில் போலோ விளையாட அழைப்பார்,அதில் இவர் வெற்றி பெறும் நிலையில் அப்யங்கருக்கு குதிரையில் இருந்து விழுந்து விபத்து நேரும், முந்தைய காட்சியில் ஹாக்கி மட்டையைக் காட்டி விட்டதால் வீர தீர சாகச விளையாட்டான போலோவை இவர் எப்படி விளையாட முடியும்? என்ற ஐயம் யாருக்குமே எழாது,சாகேத்ராம் பிம்பம் நம் மனதில் அசகாயசூரராகவே பதிந்துவிடும்
#ஹேராம், #கமல்ஹாசன்,#ஹாக்கி,#போலோ,#heyram, #kamalhaasan