குசேலன் கிருஷ்ணனைக் கண்டதும் அவனை அதுவரைப் பீடித்திருந்த தாரித்ரியம் விலகி ராஜமரியாதை கிடைத்தது போன்ற காட்சி இது,
வேட்டை முடிந்து வரும் வழியில் நெடுநாள் நண்பர்களான சாகேத்ராமும் லால்வானியும் ஆரத்தழுவி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்கின்றனர்,
இரு நண்பர்களுக்கும் மகாராஜா காருக்கும் மாறி மாறி முழு ஃபோகஸ் , ஹாரன் சப்தம்,தட தட சத்தம் பின்னணியில், ரயில் கடக்கையில் ஒளிச் சிதறல் மட்டும் மகாராஜா கார் கண்ணாடியில் விழும்.
பின்னணியில் பாரம்பர்ய இசையின் ராஜாங்கம் மெல்ல ஒலிக்கிறது.
(உயிர்வதை பாவம், வேட்டை பிடிக்காது, வேட்டைக்கு வரமாட்டேன் என்று விமான நிலையத்திலே மைதிலி மறுத்துவிட்டதால் அவர் இந்த காட்சியில் இல்லை.)
இரவு கசிந்து விட்டது, அரண்மனையில், சமையல் கூடாரத்தில் சுடச்சுட கிளறி உருண்டை பிடிக்கும் பூந்தி லட்டை புதிய வெள்ளைச் சட்டை அணிந்த லால்வானி எடுத்து ஆனந்தமாக சுவைக்கிறார், சட்டைப் பையில் ராஜா தந்த பணக்கட்டு அப்படியே,
பருகிய சோமபானம் மிகுதியாகி விட்டதால் அப்படியே துள்ளி தாளவட்டம் சுற்றியவர் , தலைப்பாகை அணிந்த அரண்மனை சிப்பந்தி மேல் இடித்து விடுவார்,வேறு யாராவதாக இருந்தால் சிப்பந்தி அடித்திருப்பார், இவர் ராஜாவின் சிறப்பு விருந்தினர் என்பதால் கையெடுத்துக் கும்பிடுகிறார்,
கூடாரத்தின் வெளியே வந்து நண்பனை அழைக்கிறார், நன்றி பாராட்டுகிறார், மைதிலி என்னவென்று தெரியாமல் அப்பாவியாக லட்டுகளுடன் ,பாங் உருண்டைகளும் தட்டில் கொண்டு வர , அண்ணி என்றவர், அதில் இரண்டு பாங் உருண்டைகளை மட்டும் அள்ளுவார், சாகேத்ராம் நண்பனுக்கு போதை அதிகமாகியதால் அந்த உருண்டைகளைப் பிடுங்கி தூக்கி எறிவார்.
இப்போது வெள்ளி லோட்டாவில் சோம பானம் கொண்டு வருவார் அப்யங்கர், சின்ன மீனை துண்டிலில் மாட்டி நீரில் போட்டாயிற்று, பெரிய மீன் வந்தால் தூண்டிலைத் தூக்கிவிடலாம் என்பது போன்ற தருணம்.
குசேலன் இன்னும் குசேலன் அல்ல, இது போல ஒரு நொடியில் கடக்கும் ஒரு கவிதை போன்ற காட்சியை எப்படி யோசித்திருக்கிறார் இயக்குனர் கமல்ஹாசன்.
PS: இந்த ப்ரிட்டிஷார் காலத்து ரயில்வே கேட் சுதந்திரத்திறகுப் பின் மகாராஷ்ட்ராவில் ஒரு குக்கிராமத்தில் மட்டுமே எஞ்சியிருந்துள்ளது, ரயிலடிக் காட்சி எடுப்பதற்கு முழு குழுவும் மகாராஷ்ட்ரா செல்வது புத்திசாலித்தனமல்ல என உணர்ந்த இயக்குனர் , கலை இயக்குனர் சாபு சிரிலிடம் இதை உருவாக்கிவிடலாமா? எனக் கேட்க , பின்னி மில்லில் அந்த மகாராஷ்ட்ரா சமஸ்தான காலத்தைய ரயில்வே கேட் போலவே அமைத்து தந்தும் விட்டார்,ஆனால் அந்த மார்க்கத்தில் ரயிலை வரவழைப்பது ஆகாத செயல் என்பதால் இசைஞானியும் ஒளிப்பதிவாளரும் இணைந்து minimalism ஆக ரயிலைக் காட்டாமல் ஒரு ரயில் கடக்கும் காட்சி வைத்துள்ளனர்.
அதிலும் அந்த கேட்கள் பல வருட உபயோகத்தால் ஒன்றைவிட மற்றொன்று தாழ்ந்திருக்கும் (sag ), அதைக் கூட உன்னிப்பாக கொண்டு வந்திருப்பார்கள், ராஜாவின் கார் வந்தவுடன் முன்னால் காத்திருந்த கார், குதிரை வண்டி மரியாதை கலந்த பயத்தால் மரத்தடியில் ஒதுங்கி ஓரம் கட்டுவார்கள், ராஜாவின் காரின் பின்னால் வரும் ஜீப் ஒன்றில் இருந்து அரண்மனைக் காவலர்கள் ஆயுதங்களுடன் இறங்கி கேட் கீப்பரிடம் போய் மராத்தியில் திறக்கச் சொல்வர், அவரோ,இனி ராஜாவுக்கு கதவு திறந்தால் என் வேலை போய்விடும் என திறக்க மாட்டார்.
அப்யங்கர் நான் போய் திறக்க சொல்லவா மகாராஜா ? எனக் கேட்க ,கையமர்த்தி மறுப்பார்,சர்தார் படேல் ராஜில் மகாராஜாக்களுக்கு எல்லா கதவுகளும் அடைபட்டுவிட்டன,இந்தக் கதவை மட்டும் திறந்து என்ன லாபம்? ,காத்திருக்கலாம் என்பார்.
#ஹேராம், #லால்வானி,#சாகேத்ராம், #கமல்ஹாசன்,#kamalhaasan,#சாபுசிரில்,#சௌரப்_ஷுக்லா, #கல்லு_ஜான்,