1973ஆம் ஆண்டு வெளியான மலையாள கருப்பு வெள்ளை திரைப்படம் சுழி, மகா நடிகை , நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ஒரே மலையாளத் திரைப்படம் இது .
1950கள் 1960களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ஆண்ட நடிகையர் திலகம் இழப்பதற்கு எதுவுமில்லை எதனிடத்தும் பயமில்லை என்ற கட்டத்தை மது அடிமையினால் எட்டுகையில் நடித்த திரைப்படம் இது,
சோதனைச்சாலை எலி போல இறந்த பின் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்வது போல நினைத்து உயிர் இருக்கையிலேயே தன்னை நடிகை சாவித்திரி ஒப்பு தந்து நடித்த திரைப்படம் இது என்றால் மிகையில்லை, காரணம் அவர் அதுவரை அப்படி நடித்ததில்லை என்னும்படியாக இந்த எல்ஸி என்ற தேயிலை எஸ்டேட் விதவை முதலாளி கதாபாத்திரம் அமைந்திருந்தது, இதில் sleeve less lingerie அணிந்து நடித்துள்ளார், அவர் குடியின் கோரப்பிடியில் இருந்த நாட்களில் கதையை சரியாக கேட்காமல் ஒப்புக் கொண்டாரோ என்ற கலக்கமும் நமக்கு எழாமல் இல்லை, ஆனால் படத்தின் டைட்டில் கார்ட் இது குடியால் அழிந்தவர்களைப் பற்றிய கதை என முதலில் கட்டியம் கூறியதால் சமாதானம் அடைகிறோம் .
‘நவதாரா’ என்ற புதிய பேனரில் ஹுசைன் மற்றும் சலாம் இணைந்து தயாரித்த இப்படத்தை த்ரிப்பிரயார் சுகுமாரன் இயக்கியுள்ளார்.
இதில் பேபி என்ற குடிகேடி இளைஞன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான சலாமே நடித்தும் இருந்தார்.
சென்னையில் நியூட்டன் மற்றும் சியாமளா ஸ்டுடியோவில் உட்புற காட்சிகளும் , வெளிப்புற காட்சிகள் வயநாட்டில் உள்ள கல்பற்றா தேயிலை தோட்டங்களிலும் படமாக்கப்பட்டது.
எஸ்.ஜி.பாஸ்கர் எழுதிய கதையின் அடிப்படையில் என்.பி.முகமது உருவாக்கிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு சலாம் காரச்சேரி இதற்கு வசனம் எழுதினார், மூர்த்தியின் ஒளிப்பதிவு மற்றும் ரவியின் படத்தொகுப்புடன், இது தென்னிந்திய மொழிகளில் திரைப்பட தணிக்கை வாரியத்தால் 'A' சான்றிதழ் (பெரியவர்களுக்கு மட்டுமே அனுமதி) வழங்கப்பட்ட ஆரம்ப கால திரைபடங்களில் முன்னோடி என்ற பெயரையும் தக்க வைத்துள்ளது.
நடிகை சாவித்திரி தவிர, சுஜாதா, கொட்டாரக்கார ஸ்ரீதரன் நாயர், கோவிந்தன்குட்டி, பஹத், நிலம்பூர் பாலன் மற்றும் பலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இசை எம்.எஸ்.பாபுராஜ்.
‘குடிப்பழக்கத்தால் சிதைந்த குடும்பத்தின் கதை’ என்ற வரிகளுடன் படம் துவங்குகிறது. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற பைபிள் வரிகளுடன் படம் நிறைகிறது, இந்த இரண்டு புள்ளிகளை இணைத்து கதை நகர்கிறது.
படத்தின் கதை :
பிரம்மாண்டமான தேயிலை தோட்ட முதலாளி வர்கீஸ், அவருக்கு சொந்தமான பங்களாவில் தனது மனைவி எலிசபெத் (சாவித்திரி) மற்றும் மகள் பீனாவுடன் (சுஜாதா) வசித்து வருகிறார். அவரது மகனின் அகால மரணத்தைத் தொடர்ந்து, வர்கீஸ் தனது மன அழுத்தத்தில் குடிக்கத் தொடங்குகிறார், தேயிலை தோட்ட நிர்வாகம் நசியத்துவங்குகிறது,
கேட்பாரில்லாததால் இவர்களின் தேயிலை தோட்டத்தை சமூக விரோதிகள் அத்துமீறி பிரவேசித்து ஆக்கிரமிக்கின்றனர்.
முதலாளி வர்கீஸ் குடித்து நசிந்தது போதாமல் அவரது மனைவி எலிஸியையும் குடிக்கு பழக்கி உள்ளிழுக்கிறார்,நாளடைவில் எலிஸி கணவரை விடவும் மதுவுக்கு அதீத அடிமையாகிறார், கணவர் போதும் என்றாலும் அவர் விடுவதில்லை, ஊற்றித் தந்த படியும் ஊற்றி பருகியபடியும் இருக்கிறார், எலிஸிக்கு மதுமோகத்தால் உடற்பசி எடுக்க ஆங்கில softporn இதழ்கள் வாங்கி வாசிக்கிறார், கணவரிடம் இவருக்கு வடிகால் கிடைக்காமல் போக அதற்கும் சேர்த்து நிறைய குடிக்கிறார், பெரிய ஜம்போ ப்ரிட்ஜ் நிறைய மதுபுட்டிகள் நிரப்பி அதற்கு அருகே இருக்கையை இட்டு அமர்ந்து கொள்கிறார், யார் நல்ல புத்திமதி சொன்னாலும் காதில் ஏறுவதில்லை.
முதலாளி வர்கீஸ் நெஞ்சு வலியிலும் கல்லீரல் பழுதாகியும் இறந்துவிடுகிறார், எலிசபெத் தனது விசுவாசமான வேலைக்காரன் ஆண்டனியின் மகனான முன்கோபி, முரடன் , சந்தர்ப்பவாதின பேபியை தேயிலை தோட்டத்தின் மேலாளராக மிகவும் நம்பி நியமிக்கிறார்.
பேபியும் பீனாவும் (சுஜாதா) வகுப்புத் தோழர்கள். பேபி இயல்பிலேயே தறிகெட்டுப்போனவன், ஆனால் அவனைப் போய் காதலிக்கிறாள் பீனா, அவனை நல்லவனாக மாற்றி நல்வழிப்படுத்துவதில் பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கிறாள் அவள், குள்ளநரிக்கு திராட்சை தோட்டம் கிட்டியது போல தன்னையே அவனுக்கு தந்து அவன் தகுதிக்கு மீறி காதல் மழை பொழிகிறாள்.
புதிய மேலாளர் பேபி தினம் தினம் புதிய உயர்தர ஸ்காட்ச் வகைகளை முதலாளி எலிஸிக்கு வாங்கி வந்து அறிமுகப்படுத்துகிறான்.
எலிசபெத் குடியால் மேலும் மோசமடைகிறார்,உடன் பேபியும் அமர்ந்து குடிக்கிறான், பிணம் போலவே படுக்கையில் விழுந்து கிடக்கும் எலிஸி படிக்கும் tit bits புத்தகங்களில் மதுமயக்கத்தில் நிர்வாணப் படங்களைப் பார்த்த பேபி உடலுறவு கொண்டு விடுகிறான், இதனால் முதலாளி அம்மா எலிஸி கருத்தரிக்கிறார்.
பீனா தாய் கருத்தரித்ததை பணிப்பெண் மூலம் அறிகிறாள்,அவமானம் அடைகிறாள், எலிஸிக்கு மகளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை, பேபி எலிஸியை ஒரு வாரம் தன்னுடன் வெளியூர் வந்து கருக்கலைப்பு செய்து கொள்ள அழைக்கிறான்,ஆனால் எலிஸி நம்பிக்கை துரோகம் செய்த அவனை வெறுக்கிறார், தன் இழி நிலைக்காக வேதனைபடுகிறார், பேபியின் வீட்டாரும் கூட அவனை வெறுத்து ஒதுக்குகின்றனர்.
தன்னையும் சுகித்து ஏமாற்றி தாயையும் சுகித்து கர்ப்பமாக்கிய பேபியை பீனாவும் வெறுக்கிறாள் , அவமானம் மற்றும் மன அழுத்தத்தால் எலிஸி ஐம்பதுக்கும் மேற்பட்ட தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலை செய்து இறந்து போகிறார்.
பீனா பேபியை தன் அப்பாவின் ரிவால்வரை எடுத்துப் போய் சுட எத்தனிக்கிறாள், ஆனால் அவள் சுடுவதற்கு முன்பே பேபி தற்கொலை செய்து இறந்து போகிறான்.
பீனா ஏற்கனவே பணம் சொத்து எஸ்டேட் தொழிற்சாலை இவற்றை வெறுத்தவள், இப்போது கன்னியாஸ்திரியாவதுடன் படம் நிறைகிறது.
இப்படத்தில் நடித்த சில மாதங்களில் நடிகை சாவித்ரி அவர்களுக்கு மஞ்சள் காமாலை வந்து உடல் துரும்பாக இளைத்துப் போயுள்ளார்,
அடி மேல் அடியாக அவருக்கு flu ஜுரமும் வர, அவரின் கம்பீரமான பூசிய தேகம் திரும்பவேயில்லை, அப்படியும் குடியை அவரால் விட்டொழிக்க முடியவேயில்லை, 1975 ஆம் ஆண்டு அந்தரங்கம் திரைப்படத்தில் நடிக்கையில் அடையாளம் தெரியாத அளவு உருமாறியிருந்தார்,கணவன் மேஜர் சுந்தர்ராஜனால் புரிந்து கொள்ளப்படாமல் அனுதினம் அமில வார்த்தைகளை செவியுற்று வார்த்தை சாட்டைகளை தாங்கும் மனைவி கதாபாத்திரத்தில் அப்படி அற்புதமாக நடித்தார்,உண்ணி மேரி (தீபா) அதில் அவரின் மகள் கதாபாத்திரம் செய்தார் அறிமுகம் கூட.
அந்தரங்கம் திரைப்படம் வெற்றி பெற்றாலும் அவசரநிலை பிரகடன காலத்தில் வெளியானதால் அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை,
மனைவி அமைவதெல்லாம் என்ற மேடை நாடகத்தில் நடிக்க போகும் அளவுக்கு வறுமை, கடன் பிரச்சனைகள் அவரை துரத்தி வாட்டியபடி இருந்து மரணப்படுக்கையில் தள்ளியுள்ளன.
இப்படத்தில் வெகுளி பணக்கார வீட்டுப் பெண் பீனாவாக நடித்த நடிகை சுஜாதா 1974 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் மூலம் புகழின் உச்சிக்குப் போய் விட்டார்,இலங்கையில் பிறந்த மலையாள வம்சாவழிப் பெண் இவர் , அவள் ஒரு தொடர்கதை வெளியாகும் முன்னர் மளையாளத்தில் 36 திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நாயகி முக்கியத்துவ கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் கோலோச்சுவோம் என்று சுழி நடிக்கையில் நினைத்து பார்த்திருக்க மாட்டார் நடிகை சுஜாதா.