ஹேராம் படத்தில் சாகேத்ராம் ஆனந்த விகடன் படிக்கும் காட்சி பிரமாதமான ஒன்று,அதில் god father அறையின் ஒளியமைப்பு கொண்டுவர அறைக்குள் இருக்கும் 1pendant light,1table lamp,1 wall light இந்த மூன்றைக் கொண்டே அப்படி மெனக்கெட்டிருப்பார்கள்,
ஒளியமைப்பிற்கு மட்டும் தனியாக பார்க்க வேண்டிய படம் ஹேராம் , சாகேத்ராம் படிக்கும் விகடனில் தேதி பாருங்கள் 11ஜனவரி 1947 என்று இருக்கும்,
அவர் வீட்டில் இரு வேலைக்காரர்கள் உண்டு ஒருவர் ரங்கப்பா (மாஸ்டர் பாலாஜி ), மற்றொருவர் ஆறுமுகம், ரங்கப்பாவுக்கு காட்சி உண்டு, ஆறுமுகத்திற்கு ஒரு முறை பெயர் மட்டும் கூப்பிடப்படும், ஆறுமுகம் சம்மந்தமான காட்சிகள் வெட்டப்பட்டிருக்கலாம்,
காலையில் மைதிலியின் பெற்றோர் மன்னார்குடியில் இருந்து ஆஸ்டின் காரில் வந்திறங்குகையில்,பாஷ்யம் ஐயங்கார் விஸ்தரித்து வரவேற்பார், என்ன சுவாமின் செய்தி? எனக் கேட்பார், உப்பிலி மைதிலி .. என இழுப்பார்,வசந்தாக்கா தீர்க்கமாக தெரிந்த பின் சொல்லலாம் என்றிருந்தவர் சம்மந்தியையும் , தம்பியையும் வாயமர்த்தி நான் தான் இவர்களை வரச் சொன்றேன் என்பார்,
( தம்பி பாஷ்யத்துக்கு ரகசியம் காக்க வராது ), அப்போது வெளியே சென்ற சாகேத்ராம் காரில் இறங்கி உள்ளே வருவார், அவர் என்ன திடீரென்று ? எப்போ வந்தேள் ? என்று கேட்பார், அப்போது எஜமானன் முகம் மாறும் போக்கிற்கேற்ப ரங்கப்பாவின் முகமும் மாறுவதை உன்னிப்பாக கவனியுங்கள், அத்தனையும் நன்றி விசுவாசத்தின் வெளிப்பாடு.
ரங்கப்பா ஆண்டான் , அடிமை மனோபாவத்தில் நன்கு ஊறியவர், அடிமைத்தளையை எதிர்த்துப் போராடாத கடைசி தலைமுறை,
சாகேத் ராம் ஐயங்கார், அவர் மருமகன் பாஷ்யம் ஐயங்கார் இருவரையும்
ரங்கப்பா ஆண்டை என்றே கூப்பிடுவார்,
பகலில், வரவேற்பறையில் சாகேத்ராம் புத்தகம் படிக்கையில், தந்தியை தர ஆண்டை என அழைக்கிறார் ரங்கப்பா,
சாகேத்ராம் பாஷ்யம் மாமா தான் வீட்டில் இல்லையே , உள்ள வாயேன் , என்றாலும் வர யோசித்து இரண்டு பக்கமும் பார்த்து விட்டே வருகிறார்,தந்தியைத் தருகிறார்,
நல்ல வேளை ஓட்டை வாய் பாஷ்யம் மாமா வாங்க வேண்டிய தந்தி , கையெழுத்து போட்டு வாங்க சுணங்கிய சாகேத்ராமிடமே கிடைத்தது பாக்கியம்,
ஐனவரி இரண்டாம் வாரத்தில் கோலாப்பூர் மகாராஜாவிடம் இருந்து வந்த அனாமதேய தந்தியின் உட்பொருள்,
நேற்று அப்யங்கர் வலியின்றி இறந்து விட்டார்
(குதிரையை கருணைக் கொலை செய்தது போலவே இறந்திருக்க வேண்டும் ) காந்தி இந்த மாதம் முழுவதும் தில்லியில் தங்கியிருந்து சாகும் வரை உண்ணாவிரதம்
இருக்கப்போகிறார், அங்கே சென்று அவருக்கு உதவவும் ,வந்தே மாதரம் என முடிகிறது
வாசலில் கார் சத்தம் கேட்க , தந்தியை அவசரமாக மடித்து ஆனந்த விகடனிற்குள் வைக்கிறார் சாகேத்ராம், இங்கே நண்பன் இறந்த செய்தி தந்தி வடிவில் வருகிறது, டாக்டரிடம் பரிசோதனைக்குச் சென்று திரும்பிய குடும்பத்தார் மைதிலி கர்ப்பமான நல்ல செய்தியைக் கொண்டு வருகின்றனர், சாகேத்ராமுக்கோ எந்த செய்தியும் ரசிக்கவில்லை, கையறு நிலை, என்ன ஒரு காட்சி அது? ,அன்று சாகேத்ராமிற்கு மிக நீண்ட தினமாகக் கழிகிறது.
PS: தில்லியில் பிர்லா ஹவுஸில் ஜனவரி 20 ஆம் தேதி, சாகேத்ராம் காந்தியை சுட்டுக்கொல்ல அந்த இடத்தை முழுக்க பார்வையால் அளந்து வேவு பார்ப்பார், அங்கே நாதுராம் கோட்சேவும் அவன் தம்பி கோபால் கோட்சேவும் கலந்து ஆலோசிப்பார்கள்,
அப்போது கோபால் கோட்சே சொல்வார் ,"படகயா திடீரென முடியாது என்று சொல்லிவிட்டான்", இதைக் கேட்ட நாதுராம் அதிர்ச்சியில் தலையில் கை வைப்பார், ஏன் என்றால் படகயா என்ற கொலையாளி பின்வாங்கினால் நாதுராம் தான் இந்த படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்பது ஏற்பாடு, இவர்கள் வழியில் நெருங்கி நின்று பேச , சாகேத்ராம் அவர்களுக்கு நடுவே புகுந்து போவார்.
அப்போது உண்ணாவிரதம் இருந்து தளர்ந்த காந்தியை நால்வர் திறந்த வெளி பல்லக்கில் தூக்கியபடி வருவர்,கூட்டம் இருபுறமும்
கூடியிருக்கும், இதை எட்ட நின்று பார்க்கும் சாகேத் ராமின் தோளில் கைவைப்பார் உப்பிலி ஐயங்கார், சாகேத்ராமிற்கு தூக்கிப்போடும், உடன் இருப்பார் அவரின் நெருங்கிய நண்பர் புனே தொழிலதிபர் கோயல் (ஓம்புரி )
ரங்கப்பா உங்களுக்கு வந்த தந்தியைக் காட்டிய பின் தான் நீங்க காந்திக்கு சேவை செய்ய இங்கு வந்தது தெரியும் என்பார் உப்பிலி,காந்திக்கு சேவை செய்ய என்ன கேவலம்?
நீங்கள் போன அன்றே பெரியப்பா ஜெகந்தாத ஐயங்கார் போய்விட்டார் என்றதும் , சாகேத் ராம் உணர்ச்சி காட்ட மாட்டார், மறுநாள் உங்கள் கடிதம் கிடைத்த அன்றே வசந்தா அக்காவும் போய்ட்டார் என்றதும் அது எதிர்பாராத மரணம் அது, அதைக் கேட்டதும் துக்கிப்பார் சாகேத்ராம்,
பாஷ்யம் மாமா படுத்த படுக்கையாகிவிட்டார், மேலும் மைதிலி நாங்க எல்லாம் நடைபிணமாக, இருக்கோம் என்பார் உப்பிலி, திருடனுக்கு தேள் கொட்டியதைப் போன்ற ஒரு காட்சி இது.
இந்த தந்தியை ஆனந்த விகடனிற்குள் ஒளித்து வைப்பதை விகடன் விமர்சனத்தில் ஒரு வார்த்தை எழுதி ஷொட்டு வைத்திருக்கலாம்.
#ஹேராம், #சாகேத்ராம், #ஆனந்த_விகடன்,#உப்பிலி, #பிர்லா_ஹவுஸ், #கமல்ஹாசன்,#காந்தி,#தந்தி,#ரங்கப்பா