இன்று சென்னை திரைப்படத் திருவிழாவில் நான்காவதாக பார்த்த மலையாள திரைப்படம் திமிரம் (கண் புரை,விழித்திரைப்படலம் ),ஆரம்பம் முதல் முடிவு வரை தொய்வின்றி நகர்ந்த படம், ஆனால் வெகுஜனப் படம் சற்று போல் பிரசார நெடியுடன் இருந்தது,இதில் பிரதான நடிகர் மற்றும் தயாரிப்பாளர் K.K.சுதாகரன், முப்பது வருட கல்ஃப்வாசத்திற்குப் பின் நடித்து தயாரித்த படம் இது,திருஷ்யம் ஜார்ஜ் குட்டி போல சுயம் சினிமா கற்று இப்படைப்பை இயக்குனர் ஷிவ்ராம் மோனியுடன் இணைந்து திமிரத்தை உருவாக்கியுள்ளார்.
இது அறுபதுகளில் உள்ள ஒரு குடும்பத்தலைவரின் கதை,பிரதி ஒரு பூவான் கோழியும் கூட, தூணுக்கு புடவை கட்டினாலும் வெறிப்பவர், இவருக்கு சர்க்கரை நோய் உச்சத்தில், இரு வருடங்களாகவே கண்பார்வை மங்கியிருப்பதால் விழித்திரை அறுவை சிகிச்சைக்கு அல்லாடுகிறார்,
பெண்கள் என்றால் இவருக்கு சதைப்பிண்டம் மட்டும் தான், விரும்பும் பெண்ணுக்கு கண்ணால் தூது விட்டு, கையால் தடவ சற்றும் தயங்காத feudal தெம்மாடியின் எச்சம், இவரின் perversion , ஆணாதிக்கம் அனைத்தையும் சகித்துக் கொண்டு இவரை மரியாதையுடன் நடத்தும் மனைவி மகன் ,மருமகள்,இவர் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாலும், வீட்டை முதல்தளம் கடன் வாங்கி கட்டி விட்டதாலும் இவர் கையிருப்பு கரைந்து போயுள்ளது, இருந்தும் சிக்கனம் என்றாலே என்ன என தெரியாதவர், வரதட்சணை பாக்கி வைத்த மருமகளை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி விட்டிருப்பவர்,
ஒரு சமயம் கண் மருத்துவத்துக்கு நாலாயிரம் கடன் வாங்கி வந்தவர், சபல மிகுதியால் சாலையோரம் நின்ற விலை மாதுவை அணுகி அவள் கேட்ட 600₹ யில் பேரம் பேசி 500₹ க்கு படியவைத்து,அவள் வீடு போனவர் அவளால் மொத்த பணமும் திருடப்பட்டு, இவரின் கையாலாகாத்தனத்திற்கும் அவளிடம் ஏளனப்பேச்சு கேட்டு வருகிறார்.
எதிர் வீட்டில் மளிகை கடை நடத்தும் அழகிய விதவைப் பெண்மணியிடம் மாவு பாக்கெட் அடிக்கடி வாங்கப் போகையில் அப்பெண்மணிக்கு பாலியல் சைகைகள்,சீண்டல் செய்து ஒரு கட்டத்தில் முதுகில் முத்தம் வைக்கிறார், அவர் இவரின் இச்சைக்கு இணங்காததற்கு மிரட்டி தொல்லை தருகிறார், அவர் மகன் போலிசில் புகார் தர அங்கு நாடகமாடி கதை எடுபடாமல் தலைகுனிகிறார்,
இவரின் மகன் சினிமாவில் வேலை செய்கிறான்,தான் எழுதும் கதையில் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலையான சாக்யார் கூத்தை theme ஆக வைக்க எண்ணுகிறான், தகப்பன் கண் சிகிச்சைக்கு 75 ஆயிரம் ரூபாய் பணத்துக்கு வேண்டி uncredited ஆக எழுதித்தரும் கதையின் bounded script ஐ இரண்டு fraud சினிமா தயாரிப்பாளர்கள் கதை விவாதத்தின் முடிவில் திருடிச் செல்கின்றனர், ஓட்டல் விடுதி அறையில் காத்திருக்க வைத்து அறையை காலி செய்து ஓடியவர்கள் போனை எடுப்பதேயில்லை.
எப்படியோ மருமகள் துக்கித்திருக்கும் கணவன் மீது இரக்கப்பட்டு தந்தையின் கண் புரை நீக்க மருத்துவ சிகிச்சைக்கு தன் தங்க வளையலை கழற்றித் தர சிகிச்சை நடந்தேறுகிறது, சிகிச்சை முடிந்து தந்தைக்கு வண்ணங்கள் தெளிவாய் தெரிகிறது எனக் கேட்டு புளங்காகிதம் அடைந்து மகிழ்ந்திருக்கும் கணவனை ஆரத்தழுவி முயங்குகிறாள் மனைவி, அச்சமயம் கதவின் அடுத்து நின்று முனகல் ஓசைகளை கேட்டு அசிங்கம் செய்து,தோள் துண்டையும் அங்கேயே விட்டு வருகிறார்.
வீட்டில்அடங்காதது ஊரில்அடங்கும், ஊரில் அடங்காதது வீட்டில் அடங்கும் என்பார்கள், இவர் வீடு,ஊர் என எங்கும் அடங்காதவர்.
இது போல மனிதரை எப்படி திருத்த முடியும்? சற்று சினிமாத்தனமாக என்றாலும் இவரைத் திருத்தி படத்தை முடித்து வைக்கின்றனர், படம் தொய்வின்றி நகர்கிறது, வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள்.
படத்தில் கடைசி காட்சியில் சோகத்தில் மது அருந்தும் மகனைச் சுற்றி கதாபாத்திரங்கள் அனைவரும் சாக்யார் கூத்து மேக்கப் இட்டு வசனம் பேசி குடைச்சல் தருவது போல ஒரு காட்சி நன்றாக இருந்தது, குடும்பத்தலைவர் கண் புரை நீக்க சிகிச்சை செய்யும் வரை அவர் பார்க்கும் காட்சிகள் blur ஆகவே எடுக்கப்பட்டிருந்தது.
#திமிரம்,#சென்னை_திரைப்பட_விழா