பாதமுத்ரா (காலடிச் சுவடு)திரைப்படம் R.சுகுமாரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியானது, இந்த அதிகம் கொண்டாடப்படாத படத்திற்கு பல சிறப்புகள் உண்டு,படத்தின் திரைக்கதை வசனம் தனிப் புத்தகமாகவும் வெளியானது. படத்தின் இசை வித்யாதரன், பின்னணி இசை ஜான்சன் மாஷ், ஒளிப்பதிவு சாலு ஜார்ஜ்.
படத்தில் லாலேட்டனுக்கு தந்தை மகன் என இரட்டை வேடம்.வழமையான எந்த மொழியின் இரட்டை வேட சினிமாவையும் விட உயர்வாக இதைச் செய்திருந்தார்.
அதில் ஒரு வேடம் அப்புப் பண்டாரம் என்ற தந்தை கதாபாத்திரம்.இப்பாத்திரம் இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமானது, நகைச்சுவையானது, மற்றொன்று கொச்சுப் பண்டாரம் என்ற மகன் கதாபாத்திரம்.இது நுட்பமான அகச்சிக்கல் கொண்ட மகனாக லாலேட்டன் ஏற்றுச் செய்த பாத்திரம்.
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பார்கள் , அப்படி தந்தை செய்த பாவத்தை அவருக்கு முறை தவறிய வழியில் பிறந்த பிள்ளை ஏற்று காலத்துக்கும் பழி என்ற முட்கிரீடத்தை சுமந்து அலையும் கதை தான் பாதமுத்ரா.
இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் மாறுபட்ட பரிணாமங்கள், அதை அத்தனை லாவகமாக தேறிய நடிப்பால் முன்னிறுத்துகிறார் லாலேட்டன்.
முதற்பாதி முழுக்க தந்தை அப்புப் பண்டாரமாய் மாறி படத்தைத் தாங்கியவர் மறுபாதி முழுக்க கொச்சு பண்டாரம் என்ற மகன் கதாபாத்திரத்தில் படத்தைத் தாங்குகிறார்.
கேரளத்தில் ஓச்சிரா என்ற பழமையான சிவஸ்தலம் அங்கே அறுபதுகளில் படம் துவங்குகிறது, ஊருக்குள் நேர்ச்சைக் காளையைக் கொண்டு வந்து யாசகம் கேட்க வருகிறார் அப்புப் பண்டாரம், அவருக்கு பூர்வீகம் பழனி, தமிழர் ,அவரின் நயமான சாதுர்யப் பேச்சால் எந்தப் பெண்ணையும் வீழ்த்துபவர்,அவரின் பெண்பித்து ஊரில் மிகப் பிரசித்தம்,
இவ்வூருக்குள் வந்தவுடன் முதல் வேளையாக தன் பண்டார சாதிப் பெண்ணை தேனொழுகப் பேசி மயக்கி மணமுடிக்கிறார். தன் நேர்ச்சைக் காளையை விற்றுவிட்டு தன் மனைவியின் குடும்பத்தின் பப்படம் செய்யும் தொழிலில் முழுநேரம் ஐக்கியமாகிறார்.
வாய் நிறைய வெற்றிலை, மல்துணி ஜிப்பா, முறுக்கிய மீசை, வளையல்கார எம்ஜியார் போல முகத்தில் மரு, கூடையில் பப்படங்களை அடுக்கி அதை கிராமத்தில் ஒவ்வொரு வீடுகளாகக் கொண்டு போய் விற்கிறார், பதிலுக்கு பணமாகவோ , நெல்லாகவோ, சீனியாகவோ வாங்கிக் கொள்கிறார். இவரின் இனிமையான பேச்சாலும் பொலிகாளை போன்ற உடம்பாலும் ஊர்பெண்களை வீழ்த்திய படி இருக்கிறார்.
அப்படி நெடுமுடிவேணு - சீமா தம்பதியரின் வாழ்க்கையில் பண்டாரம் மெல்ல நுழைகிறார்,நெடுமுடிவேணு ஏற்ற மாலேயன் கதாபாத்திரமும் இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமான ஒன்று.இவர் மாடுகள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்கிறார்,இவரது அழகிய மனைவி கோஜம்மா ( சீமா) குழந்தை இல்லாத குறை உண்டு,
கணவன் மாலேயனோ குடி மற்றும் கஞ்சா பீடி அடிமை, சீமாவின் அழகில் மயங்கிய பண்டாரம், இக்குறையை தனக்கு சாதகமாக்கி சாராயத்தில் கஞ்சாவையும் புகையிலையையும் விகிதமாகக் கலந்து சீஷாவில் ஏற்றி நெடுமுடி வேணுவுடன் புகைக்கின்றார்.போதை ஏறியவர் அப்படியே திண்ணையில் மட்டையாக,அவரின் உடம்பைத் தாண்டிப் போய் கதவைத் தட்டப் போன பண்டாரத்திற்கு தாழிடப்படாத கதவு விரிந்து திறந்து கொடுக்கிறது,சித்திரை விஷுப் பரிசாக கோஜம்மாவை பண்டாரம் அவ்விரவில் பெண்டாளுகிறார்.
அந்த இரவின் பின்னர் பண்டாரத்தை கோஜம்மா ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, தன் வேலிப் படலுக்குள் சேர்ப்பதில்லை, பண்டாரத்தின் பீஜத்தால் கோஜம்மாவுக்கு மகன் பிறக்கிறான், பிள்ளை வரம் தந்த பண்டாரம் அச்சு அசலாக தன் பிரதியாகவே தன் கன்னப்பகுதியின் மச்சம் உட்பட கோஜம்மாவிடம் விதைத்திருக்கிறார், அப்பிள்ளை குட்டப்பன் வளர வளர ஊரார் கைகொட்டி சிரிக்கின்றனர்.இப்போது கணவன் மாலேயன் மூலம் ஒரு பெண் குழந்தையையும் பெறுகிறாள் கோஜம்மா.
ஊராருக்கு குட்டப்பன் என்ற பெயர் மறந்து கொச்சுப் பண்டாரம் அல்லது சோப்புப் பண்டாரம் என்றே அழைக்கப்படுகிறான். இதனால் பலவாறு தன் பாலபருவத்தில் மனரீதியாக துன்பப்படுகிறான் குட்டப்பன்,
தன் உயிரியல் தந்தை ஆண்டிப் பண்டாரம் எனத் தெரியும், ஆனால் எந்த சொந்தமும் கொண்டாட முடியாது, அவரின் மகள் தனக்குத் தங்கை எனத் தெரியும், ஆனால் அவளுடன் அண்ணன் பாசம் காட்ட முடியாது.
பக்கத்து வீடு தான் பண்டாரத்தினுடையது, பண்டாரத்திற்கு தன் மகன் குட்டப்பன் மீது அதீத பாசம் இருந்தாலும் மாலேயன் மற்றும் ஊராரின் வாய்க்கு அஞ்சி அதைக் காட்ட முடியாது, குழந்தை வரம் தரப்போய் மாலேயனை பண்டாரம் பகைத்துக் கொண்டது தான் மிச்சம்.
அச்சு அசலாக சோப்பு பண்டாரம் முகசாயல் கொண்ட மகனை பார்த்து நடக்கையில் துக்கித்து மனம் நொந்து நடக்கும் மாலேயன் கதாபாத்திரம் , அவனை ஊரார் பரிகசிக்கையில் அவனை விட்டுத்தரவும் முடியாமல், மனைவியின் தவறுக்கு அவளை மன்னிக்கவும் முடியாமல் கைகழுவவும் முடியாமல் ஆணிகள் அடித்த பாதரட்சை அணிந்து நடப்பவன் போல அவஸ்தையைக் காட்டிய உணர்ச்சி கொந்தளிப்பான தந்தை கதாபாத்திரம்
குட்டப்பன் பாடு வேதனையானது, தன் உலகியல் தந்தை மாலேயன் எனத் தெரியும் அவரிடம் அசல் தந்தைக்கான பாசத்தை எதிர்பார்க்க முடியாது, தனக்கு அதற்கான தகுதியும் கிடையாது என்ற குற்ற உணர்வும் உண்டு,
தன் தங்கையைப் போல இத்தம்பதிகளின் நேர் வாரிசு தான் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் உண்டு, இதற்குக் காரணமான தன் அம்மாவின் மீது. அளவு கடந்த வெறுப்பு குட்டப்பனுக்கு இயல்பாய் வருகிறது.அம்மாவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
இந்நிலையில் தன் பாவங்களைக் கழுவ முடிவெடுத்த பண்டாரம் பழனி முருகனுக்கு பாதயாத்திரை போக மழைவில் காவடி எடுக்கிறார், ஊரில் 108 வீடுகளில் யாசகம் செய்து திருநீரு பூசிவிட்டு வந்தவர், மாலேயன் வீட்டிற்கு வருகிறார்.அங்கே மாலேயன் வாசலில் நின்றபடி இவரை அவமானப் படுத்துகிறார்.தன் மனைவியை பிச்சையிட விடுவதில்லை, தன் மகனை அழைத்து சில்லரையைத் தந்து விடுகிறார்.மகன் குட்டப்பனோ மிகுந்த வெறுப்பில் அக்காசை தட்டில் வீசி எறிகிறான்.விபூதி பூச வந்த பண்டாரத்திடம் யாரும் விபூதி பூசவுமில்லை, அவமானத்துடன் விலகும் பண்டாரம் இரவு முழுக்க காவடி தூக்கி ஆடுகிறார்.நெஞ்சு வெடித்து சாகிறார்.
மறுநாள் மாலேயன் மனைவி கோஜம்மாவுக்கு பக்கத்து வீட்டின் அழுகுரல் கேட்க எட்டிப் பார்க்கிறாள்.அங்கே சவ அடக்கம் நடந்து கொண்டிருக்க, அம்மா தடுத்ததையும் மீறி குட்டப்பன் தன் உயிரியல் தந்தையின் சவ அடக்கத்தை ஒளிந்து பார்க்கிறான், பண்டாரத்தை அமர்ந்த நிலையில் தொட்டில் போல கட்டி குழிக்குள் இறக்குகின்றனர், அப்போது கூட விஷமத்தனமுள்ள ஊரார் சிலர். சிரிக்கின்றனர்.
இந்த காட்சி சிறுவன் குட்டப்பன் மனதில் ஆறாத வடுவாக மாறுகிறது, மெல்லிய மன பிழற்வுக்கு ஆட்படுகிறான், பல வருடங்கள் உருண்டோட இளைஞனாக வளர்த்து நிற்கிறான் குட்டப்பன் என்ற கொச்சுப் பண்டாரம்.
தன் மன வலியை வலிமையாக மாற்றி ஊரின் மலைக்குவாரியில் பெரிய பெரிய பாறையை கடங்பாறை கொண்டு உடைப்பதில் காட்டுகிறார்.ஊரார் புறம் பேசுகையில் இவருக்கு ஆத்திரம் முற்றி கைகலப்பில் முடிகிறது.ஒவ்வொரு பிரச்சனையின் போதும் ஊரார் சிலர் தங்கள் கைக்காசைப் போட்டு டாக்ஸி அமர்த்தி டவுன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ஷாக் வைத்து அழைத்து வருகின்றனர்.
கல்குவாரியில் பணிசெய்யும் ரோகினியை மிகவும் விரும்புகிறார் குட்டப்பன்.தன் பாடுபட்டு கிடைத்த பணத்தில் தன் தந்தை அப்புப் பண்டாரத்தின் மனைவி மகளுக்கு ( ஊர்வசி) மளிகை பொருட்கள் நாள் தவறாமல் வாங்கித் தந்து தாங்குகிறார்.இது குட்டப்பனின் தந்தை தாய் தமக்கை (சித்தாரா )என யாருக்கும் பிடிப்பதில்லை.
திருமண வயதில் இருக்கும் தன் தங்கையை நல்ல தரவாட்டில் திருமணம் செய்து தர வேண்டும்.அதே போல அப்புப் பண்டாரத்தின் மகளான தன் மற்றொரு தங்கையையும் கரை சேர்க்க வேண்டும் எப்படி என வழியறியாது தவிக்கிறார் குட்டப்பன்.
இவர் ஒன்று நினைக்க தெய்வம் நினைப்பது வேறாக இருக்கிறது, சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது, தன் வீட்டாரிடம் தனக்கு பழனிக்கு காவடி எடுத்து போய் வர மன உந்துதல் ஏற்பட்டதைச் சொல்கிறார்.
திரண்ட ஊரார் முன்னிலையில் மழைவில் காவடி எடுத்து ஆடுகிறார் குட்டப்பன், வாழ்க்கை புரியாத புதிர் தந்தையின் பாவங்களை தனதானதாய் எண்ணி சுமந்து சுழன்று ஆடியபடி கனத்த மனதுடன் பழனிக்குச் செல்கிறார் குட்டப்பன்.
படத்தில் நெடுமுடி வேணுவின் மாலேயன் கதாபாத்திரம் முக்கியமானது, தன் துரோகமிழைத்த மனைவியை உதறவும் முடியாமல் அவளுக்கு கணவனாக வாழவும் இயலாத கணவன்,முகம் முழுக்க அவமானத்தை தேக்கி ஊருக்குள் நடக்கிறார்.
தன் மகன் குட்டப்பனை உதறவும் முடியாது, அவனை தன் மகன் என்று பெருமையுடன் உரைக்கவும் முடியாது,மனைவி கோஜம்மாவை சந்தர்ப்பம் வாய்க்கையில் எல்லாம் குத்து வாக்கால் ரணப்படுத்துவர்,
கோஜம்மா என்ற சீமா செய்த கதாபாத்திரமும் அபாரமானது,ஒருகணம் மனசாட்சியின் பிழற்வால் கணவனுக்கு துரோகம் இழைத்தாலும் அதை உணர்ந்து திருந்தியும் பலனின்றி எஞ்சிய வாழ்வு முழுக்க நரகவேதனையை அனுபவிக்கும் கதாபாத்திரம்.
ஆண்டிப் பண்டாரத்தின் பப்படம் தயார் செய்யும் அழகிய மனைவி கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஷ்யாமா நடித்திருந்தார், இவருக்கு பார்வதி ஜெயராமின் சாயல் இருந்தது, தேடிப்படித்ததில் இவர் அவரின் உறவினராம் ,இவர் ஒரு கேஸ் சிலிண்டர் விபத்தில் அகால மரணமடைந்தாராம்.
இதில் மாலேயன் மகள்,குட்டப்பன் தங்கையாக சிதாரா கதாபாத்திரம் முக்கியமானது, தன் அண்ணன் தனக்கு மட்டும் அண்ணன் என்ற பிடிவாசி கொண்ட பெண்,அவனால் ஊருக்குள் என்ன அவமானம் வந்தாலும் அவனை இவள் விட்டுத்தருவதில்லை.தன் திருமணப் பேச்சுவார்த்தைகள் அண்ணனின் மனப்பிழற்வு நோயைக் காரணம் காட்டி நின்று போனாலும் அவள் அண்ணன் பாசத்தை விடுவதில்லை.
குட்டப்பனின் மற்றொரு தங்கை ஊர்வசி கதாபாத்திரம்,அப்புப் பண்டாரத்தின் மகள்.தந்தை இறப்புக்குப் பின் காட்டுச் செடியாக வளர்ந்தவள், அண்ணன் குட்டப்பன் மீது மிகுந்த அன்பானவள், ஆனால் வெளிப்படையாக சொந்தம் கொண்டாட முடியாதவள்.இவளுக்கு அழகிருந்தாலும், திருமண வயது நடந்தாலும் திருமணத்தை எடுத்து நடத்த ஆணில்லாத வீடு, இவள் அம்மாவோ வீட்டோடு முடங்கி விட்டவள், பரம ஏழ்மை,
ஊர்வசி ஒரு இரவில் புத்தி தடுமாறி அந்நிய ஆடவனை வீட்டுக்குள் வருத்தி சுகிப்பதை கையும் களவுமாகப் பிடித்த குட்டப்பனிடம் இவள் "நீ வாங்கித் தரும் நாலு அரி நாலு மிளகில் என் பசி அடங்கிடுமென்று நினைத்தாயா?!!!"எனக் கேட்பாள் எத்தனை வீர்யமுள்ள வரிகள் அவை.
மனம்பிழற்ந்த குட்டப்பனை விரும்பும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணாக ரோகினி செய்த கதாபாத்திரம் அபூர்வமானது, இவள் மாதாந்திர வயிற்று வலியில் துன்பப் படுகையில் குட்டப்பன் வெற்றிலையில் மிளகு முடிந்து திருஷ்டி கழிக்கும் காட்சி ரசமானது, குட்டப்பன் கல் உடைக்கும் கல்குவாரியில் கூலி இவள்,
கல்குவாரி குளத்தில் இவள் தினம் குளிப்பதைப் பார்த்து மனக்கிளர்ச்சியும் விரகவெறியும் கொள்ளும் ஒரு கல் உடைக்கும் முடவன் ரோகினியை மூர்க்கமாக வன்புணர்ந்து அவளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்று விட்டுத் தப்பியும் விடுவான்.
அந்தகல்குவாரி குளத்தில் மூழ்கி குட்டப்பன் பிணத்தை கண்ணியமாகப் போர்த்தி வெளியே தூக்கி வரும் காட்சியை மலையைச் சுற்றி நின்று ஊரார் வேடிக்கைப் பார்க்கின்றனர், குட்டப்பன் மனம் பிழற்ந்திருந்தாலும் அவன் உயர்சாதியாம், அவன் கீழ்சாதிப் பெண்ணின் பிணத்தை தூக்கி வந்ததை குட்டப்பனின் அம்மாவிடம் முறையிட்டு கண்டிக்கின்றனர் ஊரார். ரோஹினியின் அகால மரணம் குட்டப்பனை மேலும் விரக்தியில் தள்ளுகிறது.
படத்தில் ரோஹினியின் அகால மரணத்துக்கு நீதி எதுவும் சொல்லவில்லை இயக்குனர்.
இயக்குனர் R.சுகுமாரன் இதுவரை மூன்று படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அவை மூன்றும் முத்துக்கள்.அதில் ராஜசில்பி 1992 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியானது , மற்றொரு படம் யுகபுருஷன் 2010 ல் தலைவாசல் விஜய் நடிப்பில் வெளியானது,
இது கேரளத்தின் தலைசிறந்த சாதி எதிர்ப்புப் போராளி,அமைதிக்காவலர் யோகி நாராயணகுருவின் சுயசரிதை,இதில் நாராயணகுருவாக தலைவாசல் விஜய் நடித்திருந்தார் , இவர் படங்கள் நல்ல இலக்கிய தரத்துடன் அமைந்த படைப்புகளாக மலையாள சினிமாவில் கொண்டாடப்படுகின்றன.
இந்த முக்கியமான படத்தைப் பாருங்கள். படத்தின் சுமாரான பிரதி யூட்யூபில் உள்ளது ஆனால் சப்டைட்டில் இல்லை,
https://youtu.be/amffvaVCCAs
பழைய பதிவில் இப்படம் தொடர்பாக வந்த பின்னூட்டங்களுக்கு இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10157363557401340&id=750161339
#மோகன்லால், #லாலேட்டன், #ஊர்வசி,#அப்பு_பண்டாரம்,#சீமா,#நெடுமுடி_வேணு,#பாதமுத்ரா