ஹேராம் படத்தில் அம்ஜத்தின் தாயார் ஹஜ்ரா பேகமாக நடித்தவர் மோகினி மாத்தூர், அவர் பிர்லா ஹவுஸில் ஜனவரி 30 1948 அன்று காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்படுகையில் அதை நேரில் பார்த்தவர்,அப்போது அவருக்கு வயது 13, அவர் ஊட்டியில் நடந்த பிர்லாஹவுஸ் படப்பிடிப்பில் காந்தி சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதற்கு நிறைய தகவல்களைத் தந்து உதவினாராம்,
படத்தில் உண்ணாவிரதமிருந்து தளர்ந்திருந்த காந்தியை எளிய திறந்தவெளி நாற்காலி பல்லக்கில் நால்வர் தூக்கி வருவர், காந்தி எத்தனையோ பேர்களின் வசையை முகத்துக்கு நேரே வாங்கிக் கொண்டவர், காந்தி அவர்களைத் தடுத்ததேயில்லை,
படத்திலும் , தன் வீட்டை,கடையை, குடும்பத்தை இழந்த வயோதிகர் ஒருவர் வெறுப்பின் உச்சத்தில் காந்தியை எங்கேயாவது கண்காணாமல் ஒழிந்து போகச் சொல்வார், அது போல பல தருணங்கள் நிஜத்தில் பிர்லா ஹவுஸில் நடந்தவை, மோகினி மாத்தூர் போன்ற சம்மந்தப்பட்டவர்களால் இக்காட்சிகள் சரிபார்க்கப்பட்டவை.
காந்தி மற்றும் அவரது சுற்றம், ஆசிரமத்தினர் பற்றிய தகவல்கள் மிகவும் தத்ரூபமாக வந்ததற்கு மோகினி மாத்தூர் ஒரு முக்கிய காரணம், காந்தி சுடப்படுகையில் அவர் ஹேராம் உச்சரிக்கவில்லை, அவர் சுடப்பட்டு பத்து நிமிடங்கள் முதலுதவிக்கு வேண்டி குற்றுயிராய் கிடந்த நிலையில் பலநூறு முறை ராம் என்று உச்சரித்ததையும் இவர் உறுதி செய்தாராம்,
கடைசிக் காட்சியில், அம்ஜத் இறந்த நிலையில் அம்ஜத்தின் அம்மா ஹஜ்ராவையும் , மனைவி நஃபீசாவையும் காந்தியிடம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுபாஷ் கோயல் ( ஓம் புரி) மூலம் அறிமுகம் செய்து வைப்பார் சாகேத்ராம், அப்போது காந்தி இவரது தலையில் இரு கைகளால் தொட்டுத் தேற்றுவார்,
கராச்சியில் பிரிவினையின் போது கணவரை கலவரத்தில் இழந்தவர் , பிரிவினைக்குப் பின் தில்லியில் வைத்து மகனையும் இழந்த சோகத்தை காந்தியின் தேற்றுதல் மட்டுமே ஆற்றுதல் படுத்த முடியும் ,
உடனிருக்கும் அம்ஜத் மனைவி நஃபீசா ஆம்பூரை பூர்வீகமாகக் கொண்ட உருது முஸ்லிம்,தன் மாமனாரை இழந்தவர், இவர் முந்தைய தினம் ஆசாத் சோடா ஃபேக்டரி துப்பாக்கிச் சண்டையில் தன் தந்தையை , அண்ணனை ,பின்னர் கணவனை இழந்தவர், சாகேத்ராம் துப்பாக்கி தேடிப்போனதால் எத்தனை இழப்புகள் பாருங்கள் ஆசாத் சோடா ஃபேக்டரியில்.
இப்போது சாகேத்ராம் மனம் முழுக்க குற்ற உணர்வால் நிரம்பியிருக்கும், அப்படி ஒரு உணர்வுபூர்வமான காட்சி அது, காந்தியவாதியாக வந்த ஹஜ்ரா பேகம், நஃபீசா, காந்தியாக தோன்றிய நஸ்ருதீன்ஷா மூவருவருமே அந்தக் காட்சிக்கு நீதி செய்திருப்பார்கள்.
படத்தில் சாகேத்ராமின் வளர்ப்புத் தாய் வசந்தாஅக்கா ஒரு காந்தியவாதி, அவர் உயிர் விடுகையில் ஹேராம் என்று சொல்லியபடி உயிர் துறப்பார்.
#ஹேராம்,#மோகினி_மாத்தூர்,#கமல்ஹாசன்,#