நாவிதர் கவுண்டமணி : நான் ஹம்சத்வனி ராகம் பாடினா கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிச்ச உடனே ஆடு மாடுக எல்லாம் பின்னால வர்ர மாதிரி இந்த ஊரு ஜனங்க எல்லாம் என் பின்னால வருவாங்க,எனக்கு அப்படி ஒரு ஞானம்.
பண்ணை ரெட்டியார் G.சீனிவாசன் : பிச்சக்காரப்பயலே,இதெல்லாம் ஏன்டா உங்களுக்கு? அவன் அவன் அப்பன் தொழில செய்ய வேண்டியது தானே?
நாவிதர் கவுண்டமணி: ஆமாம் எங்கப்பன் தொழில் பெரிய தொழிலு, அவன் க்ராப் வெட்டுனான்னா டீகடைக்கு முன்னால போட்ட கூரை மாதிரி ஒரு பக்கம் ஏறியும் எறங்கியும் இருக்கும், நான் சங்கீதுத்துல முன்னுக்கு வரப்போறேன்.
பண்ணை ரெட்டியார் G.சீனிவாசன் :ம்,சங்கீதம்,சங்கீதம்னு சோத்துக்கு தாளம் போட போறடா
நாவிதர் கவுண்டமணி: தோ பாருங்க தாளம் போட்டுத் தான் ரொம்ப பேரு சாப்புடுறாங்க,
இயக்குனர் மணிரத்னம் தமிழில் இயக்கி வெளியான இரண்டாம் திரைப்படம் இதயகோயில், முதல் திரைப்படம் பகல்நிலவு , அப்போது தமிழ் சினிமாவில் சாதிவெறி எப்படி தலைவிரித்து ஆடியுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்களில் அறியலாம்,
கதாசிரியர் R.செல்வராஜின் பேனா பண்ணையார் ரெட்டியார் (G.சீனிவாசன்) கதாபாத்திரத்துக்கு வேண்டி எழுதிய அருவருக்கத்தக்க சாதி வெறுப்பு உமிழும் வசனங்களுக்கு சிறு உதாரணம் சிகைதிருத்துகையில் வரும் இந்த வசனங்கள்,
படத்தில் நொண்டி என்ற சொல் சாதாரணமாக கதை மாந்தர்கள் பேசுகையில் வந்து விழுகிறது, மாற்று திறனாளி என்ற கண்ணியமான வார்த்தையை நம் அரசு முன் மொழிந்து தீவிர செயல்வடிவம் தராமல் போயிருந்தால் இந்த வார்த்தையை இன்னும் எத்தனை பேர் சாதாரணமாக பயன்படுத்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருப்பர்?
இத்திரைப்படத்தில் சென்னைக்கு, முறைமாமன் மோகனைத் தேடி வரும் அம்பிகாவை ரவுடிகள் நால்வர் ஜாவா பைக்கில் துரத்துகின்றனர், (யார் வீட்டு ரோஜா என்ற முதல் பாடல் பதிவின் போது)
அம்பிகா தஞ்சம் வேண்டி ஆளில்லாத சிவன் கோயிலில் உள்ளே புகுந்து பிரம்மாண்ட வாயில் கதவை பூட்டிக் கொண்டு உதவிக்கு மணியடிக்கிறார்,
ஜனங்கள் மற்றும் மோகன் வெளியே ஒன்று திரண்டு கதவை தள்ளி உடைக்க, மணிச்சத்தம் மட்டும் நிற்கவில்லை, அம்பிகா அந்த கோயில் மணியில் தாவணியை மாட்டி தூங்கிட்டு தொங்கிவிட, மணி மட்டும் ஒலித்தபடியே இருக்கும், அந்தரத்தில் ஆடும் கால்களுக்கு மட்டும் க்ளோஸப் வைத்திருப்பர், சென்னைப்பட்டணம் மீது கதாசிரியருக்கு தான் எத்தனை கோபம் பாருங்கள் .
இப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் தன் உடன் இணைந்து பணிபுரிய விரும்பி பரிந்துரைத்த ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் தயாரிப்பாளர் கோவைத்தம்பியால் அங்கீகரிக்கப்படவில்லை,
அவர் காட்சியாக்கத்தில் புகுத்த விரும்பும் பரீட்சார்த்தங்களை நிகழ்த்த தயாரிப்பாளர் விரும்பவேயில்லை, கச்சா பிலிம் கணக்கு,கெடுபிடி என தொடர் முட்டுக்கட்டை இட்டார்,
படத்தில் மிஞ்சிப் போனால் இயக்குனர் மணிரத்னம் படைப்புகளில் வழமையாக சித்தரிக்கும் காதல் பாடல்களில் இரவுப்பின்னணியில் பிரம்மாண்ட நிலப்பரப்பில் நாயகன் நாயகி நெருப்பு மூட்டி குளிர்காய பத்து இருபது நடனக்கலைஞர்கள் பின்னணியில் ஆடுவார்களே ,
அது போல காட்சிகளை 80களின் புகழ்பெற்ற வணிக சினிமா ஒளிப்பதிவாளர் ராஜராஜனை வைத்து சிற்சில காட்சிகள் படமாக்கியிருந்தார்,
தன் படைப்புவாழ்க்கையில் குறிப்பிட விரும்பாத படமாக இதயகோயில் அமைந்து விட்டது உண்மை.
பகல்நிலவு திரைப்படத்திலாவது அவர் நடிகர் சத்யராஜை வைத்து பெரியவர் வரதராஜன் கதாபாத்திரத்திற்கு தான் பின்னாளில் இயக்கிய நாயகன் திரைப்படத்தின் வேலுநாயகர் கதாபாத்திரத்துக்கு mockup செய்து பார்த்தார், இதில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இயக்குனரால் பரீட்சார்த்தங்கள் நிகழ்த்த முடியவில்லை.