ஹாலிவுட் இயக்குனர் Martin Scorsese அவர்கள் இந்திய கலைசினிமாவின் மாபெரும் ரசிகர், சத்யஜித் ரே அவர்களின் படைப்புகளை அரும்பாடுபட்டு தன் பொருள், நேரம் ஒதுக்கி Restoration செய்தவர்,
இப்போது இந்தியாவின் பெருமைமிகு கலைசினிமா இயக்குனர் G.அரவிந்தன் அவர்களின் ஓப்பற்ற மாய யதார்த்த (magical realism) படைப்பான கும்மாட்டி | Kummatti (1979) திரைப்படத்தை கடந்த ஒரு வருடமாக இத்தாலி bologna நகரில் உள்ள L’Immagine Ritrovata lab ல் வைத்து ஒவ்வொரு சட்டகத்தையும் நிறுத்தி நிறுத்தி செப்பனிட்டுள்ளார், அவருக்கு என் வந்தனங்கள்.
இயக்குனர் G.அரவிந்தன் அவர்கள் இயக்கிய எந்த திரைப்படத்தையும் இந்தியாவில் எந்த வினியோகஸ்தரும் வாங்கி திரையிட்டதில்லை, அவரே தன் 18 திரைப்படங்களையும் திரைப்பட திருவிழாவில் மட்டும் திரையிட்டார்,தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் மட்டும் DD ல் ஒளிபரப்பாகி வெகுஜன கவனத்துக்கு வந்தன, ஆனால் அவருக்கான மதிப்பு உலக அரங்கில் மிக உச்சத்தில் உள்ளது என்றால் மிகையில்லை.
கும்மாட்டி திரைப்படத்துக்கு கேரள அரசின் 1979 ஆம் ஆண்டின் சிறந்த சிறுவர் சினிமாவுக்கான விருது கிடைத்தது,
பெருமைமிகு ஒளிப்பதிவாளர் மற்றும் உலகசினிமா இயக்குனரான ஷாஜி.என்.கருண் அவர்களின் ஒளிப்பதிவில் இப்படத்தின் ஒவ்வொரு பிரதிகளும் பளிங்கு போன்றவை, இயற்கை அழகு கொஞ்சுபவை, அந்த ஒளி அமைப்பு, அபாரமான வண்ணங்கள் ஓவியம் போன்றவை அவற்றை ரசித்து செப்பனிட்டு பெருமை சேர்த்திருக்கிறார் 80 வயதாகும் இயக்குனர் Martin Scorsese அவர்கள், அவரே ஒரு ராஜரிஷி, எந்த வித்யா கர்வமும் இல்லாமல் நிஜ கலைஞர்களை ,அவர்களின் படைப்புகளை உலக அரங்கில் கௌரவிப்பது மிகப்பெரிய பண்பு.
இப்படத்தை நான் யூட்யூப்பில் potato eaters channel ல் சென்ற வருடம் பார்த்தேன், இதைப் பற்றி பெரிய கட்டுரை மொபைலில் எழுதி வைத்திருந்தது அழிந்து போயுள்ளது, எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.
இயக்குனர் அரவிந்தனின் எஸ்தப்பன் போலவே இப்படமும் மாய யதார்த்த திரைப்படம், ஒரு ஊருக்குள் வரும் கும்மாட்டி என்ற மாய மனிதனையும் அவ்வூரின் சிறுவர்களையும் இணைக்கும் படைப்பு இது,
கும்மாட்டி அவ்வருடமும் வசந்தத்தில் அந்த கேரளத்தின் சிற்றூருக்குள் சிறுவர்கள் பின்னால் மொய்த்த படி வருகிறான்,
சிறாருக்கு அவன் மீது ஒரு பயம் கலந்த ஈர்ப்பு உள்ளது,நெருப்பை போல கிட்ட அணுகாமலும் அகலாமலும் அவன் அருகாமையில் குளிர்காய்கின்றனர்,கும்மாட்டி தன் கைகளால் தயாரித்த விதவிதமான அழகிய முகமூடிகளை தோளில் சுமந்து வந்து விற்கிறான்.
அவ்வூர் அம்பலத்தின் வெளிச்சபாட்டைப் போல சலங்கைகள் சிணுங்கும் பள்ளிவாளை வைத்து காற்றில் ஓசை வர வீசி நாட்டார் பாடல்கள் பாடியபடியே அவ்வூரில் வலம் வருகிறான். வழக்கமான தன் பெரிய மரத்தடியில் தோள்சுமையை இறக்கி ஜாகை கொள்கிறான் கும்மாட்டி,
கும்மாட்டியை தைரியம் வரவழைத்துக் கொண்டு மெல்ல அணுகி மந்திர வித்தையைக் காட்ட சொல்லும் ஊர் சிறுவர்களின் ஆசைக்கிணங்க சடுதியில் அவர்களை விலங்குகளாக மாற்றுகிறான் கும்மாட்டி,
மீண்டும் அவர்களை சிறார்களாக மாற்றியும் விடுகிறான், ஆனால் அந்த சிறார் கூட்டத்தில் இருந்த ஒருசிறுவனை நாயாக மாற்றிய கும்மாட்டி, அந்த நாய் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடிவிட , அந்த நாயை மட்டும் மீண்டும் சிறுவனாக மாற்ற முடியாமல் போகிறது,
கும்மாட்டியோ ஊர் ஊராகப் போகும் நாடோடி,அச்சிறுவன் நாயாகவே கும்மாட்டியின் வருகைக்காக ஒரு வருடம் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறான்,
அந்த வெள்ளையும் பழுப்பு புள்ளிகளும் கொண்ட நாய் அவன் பெற்றோரிடமே சென்று அடைக்கலம் பெறுகிறது,சிறுவனுக்கு பிடித்த மத்தி மீன் குழம்பு சோறை ஆசையாகத் தின்கிறது.,மகன் படுக்கையிலேயே படுக்கிறது
மகனைக் காணாமல் தவிக்கும் பெற்றோருக்கு மகனாகவே ஆகிறது அந்த நாய் .
ஊரில் சிறார்களுடனே விளையாட சேர்ந்து சுற்றுகிறது,ஊரார் யாருக்கும் இந்த கூடுபாய்ந்த சங்கதி தெரிவதில்லை ,
ஆனால் இந்த காத்திருத்தல் அர்த்தமுள்ளதாகிறது, அடுத்த வருடம் வசந்தம் பிறக்கவும், கும்மாட்டி மீண்டும் ஊருக்குள் வர எல்லாம் நல்லபடியாக முடிந்து நாய் மீண்டும் சிறுவன் ஆகிறான், மீண்டும் கும்மாட்டி இயற்கையுடன் ஒன்றி கரைந்து போகிற தருணத்தில் படம் நிறைகிறது.
இப்படம் ஐயமில்லாமல் காஞ்சனசீதா, எஸ்தப்பன் போல மினிமலிச கவிதை, இத்தனை அற்புதமாக ஒரு சிறிய நாட்டார் கதையின் திரியை படமாக்கி உலக அரங்கில் நிருபிக்க முடியும் என காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் இசை அமைக்க, 11 அபாரமான நாட்டார் பாடல்களின் வரிகளை கவளம் நாராயண பணிக்கர் எழுதியுள்ளார், படத்தில் வசனங்கள் சொற்பம் என்பதால் பின்னணியில் இயற்கை ஓசைகளும் நாட்டார் பாடல்கள் மட்டுமே காட்சியுடன் இழையோடி கதையை நகர்த்துகிறது.
கும்மாட்டி திரைப்படத்தின் அற்புதமான பிரதி இங்கே
கும்மாட்டி restoration பற்றி ஹாலிவுட் இயக்குனர் Martin Scorsese அவர்களின் instagram அறிமுகம்
இயக்குனர் G.அரவிந்தனின் காஞ்சனசீதா பற்றி
இயக்குனர் G.அரவிந்தனின் எஸ்தப்பன் பற்றி