சீரியஸ்மேன் (2020 )
NIFR ல் காரியதரிசியாக பணிபுரியும் அய்யன் மணி மகாராஷ்டிராவின் உள்ளடங்கிய korti என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்,
இவரது மேலதிகாரி வானசாஸ்திர விஞ்ஞானி அரவிந்த் ஆச்சர்யா, அவர் இப்போது வேற்றுகிரகவாசிகள் பற்றி விரிவான ஆராய்ச்சியை செய்கிறார், அவருக்கு அழகிய பெண் இளம் விஞ்ஞானியிடம் சபலம் உள்ளது, ஆச்சர்யாவை கிட்டத்தட்ட வேவு பார்க்கிறார் அய்யன்மணி, அவரின் dictations மற்றும் attitude ஐ அப்படியே பிரதியெடுத்து தன் மகன் ஆதியை ஒரு child prodigy போன்ற பிம்பத்தை கட்டமைத்து மும்பை தாராவியின் 90 வருட பழமையான chawl ஒன்றில் வாடகைக்கு இருந்தபடி வளர்க்கிறார்,
10 வயது சிறுவன் மீது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்ட அளவு கடந்த அறிவு பாரம் ,அது சிறுவன் ஆதிக்கும் அய்யன் மணிக்கும் அவர் மனைவிக்கும் எப்படி எதிர்வினையாற்றுகிறது ? என்பதை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இயக்குனர் சுதிர் மிஸ்ரா இந்திய சினிமாவின் முக்கியமான படைப்பாளி, இவரின் முந்தைய படங்களான Hazaaron Khwaishein Aisi , Inkaar முக்கியமான படைப்புகள் அந்த வரிசையில் இந்த படத்தையும் வைக்கலாம்.
நவாஸுதீன் சித்திக்கி அய்யன் மணி என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து போராடி மேலே வரத் துடிக்கும் முதல் தலைமுறை கல்வியறிவு பெற்ற குடும்பத் தலைவனாக அற்புதமாக நடித்துள்ளார்,
நம் நாசர் National Institute of Fundamental Research அரசு நிறுவனத்தின் வானசாஸ்திர விஞ்ஞானியாக அட்டகாசமாக பொருந்துகிறார், சிறிய பெண் சபலம் கொண்ட mediocre விஞ்ஞானி கதாபாத்திரம், இதை அழகாகச் செய்துள்ளார்.
இவர் அய்யன் மணியை நுணுக்கமான ஆங்கில கெட்ட வார்த்தைகளால் திட்டுகையில் அவற்றை அப்படியே பிரதி எடுத்து word building செய்து தன் மகனை கொம்பு சீவி விட்டு தயார்செய்து கண்காட்சிகள் நடத்துகிறார் அய்யன் மணி, தனக்கும் தன் மகனுக்கும் ஆன இந்த ரகசிய கல்வி பரிமாற்றங்களை தன் பிரிய மனைவிக்கு கூட சொல்வதில்லை அய்யன்மணி, அத்தனையையும் அந்த 200 சதுர அடி chawl ல் இருந்தபடி நடத்துகிறார், தன் மகனின் அறிவை ஊதிப் பெருக்க தன் அரசு சம்பளம் மொத்தத்தையும் செலவு செய்கிறார்.
தன் தாழ்வு மனப்பான்மையை துடைத்தெரிய அய்யன்மணி அரவிந்த் ஆச்சர்யாவின் proxy போலவே நடந்து கொள்ளும் இடங்கள் எல்லாம் அற்புதமானவை.
கலவிக்காட்சிகள் உள்ளதால் இந்தப்படம் வயது வந்தோருக்கு மட்டுமானது,
அய்யன் மணி தன் ஒடுக்கப்பட்ட குடும்பத்திற்கு கல்வியும் உரிமையும் எத்தனை முக்கியமானது? என விஞ்ஞானி அரவிந்த் ஆச்சார்யாவிடம் விளக்கும் இடம் அற்புதமானது,
"She is too healthy for a farmer girl"
அது ஒரு சர்வதேச விருது பெற்ற கருப்புவெள்ளைப் புகைப்படம், அந்த படத்திற்கு வலுவான ஒரு பின்கதை உள்ளது, அந்த படத்தில் உள்ளது கர்ப்பிணித் தாயார்,மற்றும் அவரது பத்து வயது மகன் ,
அந்த மகன் தான் அய்யன் மணி, அவன் அம்மாவிற்கு இந்த புகைப்படமாவது இந்த உலகப்புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ராபர்ட் அடிங்டனுக்கு திருப்தி அளிக்க வேண்டும், தன் கணவனுக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டும் என்ற பதட்டம் ,
கடந்த இரு வாரமாக புகைப்படத்துக்கு வேண்டிய வறிய தோற்றத்துக்காக ஒட்ட ஒட்ட பட்டினி இருந்து ஐந்து கிலோ எடை குறைத்து இப்படி புகைப்படத்திற்கு முன் நிற்கிறார்,
அவர் வேண்டியது போலவே புகைப்படத்துக்கு கோபன்ஹாகன் புகைப்பட திருவிழாவில் முதல் பரிசு கிடைத்து இரண்டு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை கிடைக்கவே இவர் அப்பாவுக்கு ராபர்ட் இருபதாயிரம் ரூபாய் தருகிறார், ஆனால் இவர் அம்மா ஊட்டச்சத்து குறைபாட்டால் பிரசவத்தில் மரிக்கிறார்,
பிறந்த ஆண் மகவும் எட்டு மணி நேரத்தில் இறந்து விடுகிறது,
அந்த இருபதாயிரம் ரூபாய் பணம் கண்ணை விற்று சித்திரம் வாங்கியது போல ஆகிவிட்டது, இந்த தகிப்பு எல்லாம் சேர்ந்து அய்யன் மணியை இப்படி தன் இலக்கை அடைய எதையும் செய்யும் நிலைக்கு தள்ளியது என்பதை அறிகிறோம்,உறைகிறோம்.
#சீரியஸ்_மேன்,#நவாஸுதீன்_சித்திக்கி,#நாசர்