அஹம் (1992) போன்ற படங்கள் தமிழில் வருவதற்கான சூழல் இங்கே சுத்தமாக இல்லை,மனித மனம் மிகவும் விந்தையானது, விசித்திரமானது.அதை எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும் முழுக்க விளங்கிக் கொள்வது கடினம்.
இது கமல்ஹாசனின் குணா படம் போன்றே விசித்திரமான குணாதிசயம் கொண்ட நாயகனின் ஆழ்மன உணர்வுகளையும் அதன் வெளிப்பாடுகளையும் பார்வையாளருக்கு கடத்தும் படம்.
இதில் மோகன்லால் தினத்தந்தி குற்றச்செய்திகள் பாணியில் பஞ்சமா பாதகங்களை தன்னிச்சையுடன் செய்கிறார், மம்முட்டியின் முன்னறியிப்பு பார்வையாளர்களுக்குத் தந்த எதிர்பாரா அதிர்ச்சிகளை 25 வருடங்களுக்கு முன்பே லாலேட்டன் துணிந்து முயன்றுள்ளது எனக்கு வியப்பளிக்கிறது.
படத்தின் கதை.
ஆச்சாரமும் கண்டிப்பும் நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளரும் மோகன்லால் வங்கியில் மேளாளராக பணியில் இருக்கிறார், இளம் பிராயத்தில் இருந்தே அன்புக்கு ஏங்கித் தவித்த அவருக்கு obsessive compulsive disorder பாதிப்பு நிரம்ப இருக்கிறது.இப்போது பெற்றோரும் கிடையாது, ஆனால் அவர்களின் நன்நெறியை மட்டும் கட்டி அழும் அம்பி இவர்.
இவரின் தீவிர ஒழுக்கத்தைப் பார்த்து வலிய வந்து தங்கள் மகளை மணமுடித்து தருகின்றனர் ஊர்வசியின் பெற்றோர்.
காணாததைக் கண்ட இவர்
மனைவி ஊர்வசி தன்னைத் தவிர யாருடனும் பேசுவதையும் விரும்புவதில்லை.தன் விருப்பு வெறுப்புகளையும் அவர்மீது திணிக்கிறார்.இருந்தும் ஊர்வசி இவரை உள்ளது உள்ள படியே நேசிக்கிறார்.
இருந்தும் இவரின் OCD அதீத பொஸஸிவநெஸ்ஸாக உருவெடுக்கிறது, அது பொறாமையையும் சந்தேகத்தையும் ஏகமாக வளர்க்கிறது,
இந்நிலையில் ஊர்வசியின் குடும்ப நண்பர் ஆஜானுபாகுவான கர்னல் சுரேஷ் கோபி இவர்களை சந்திக்க வீட்டுக்கு வர, இவர் மனைவியின் நடத்தையின் மீதான சந்தேகம் மேலும் வலுக்கிறது.
மனைவி தன் பிறந்தநாளுக்கு பரிசளித்த விலை உயர்ந்த சிகப்பு ஸில்க் டை வாங்க அத்தனை காசு ஏது? என கேள்வி எழுப்பியவர், மனைவிக்கு விபச்சாரி பட்டமும் கட்டுகிறார்.ஊர்வசி அங்கே பொங்கியவர் நியாயம் கேட்க விழைகையில்,அவரை ஆவேசமாகப் பிடித்துத் தள்ள, மாடிப் படிகளில் விழுந்து அடிபட்டு நாள்பட்ட கோமாவில் மூழ்குகிறார் ஊர்வசி.
அவர் படுத்த நிலையில் பிணம், இவர் நடைபிணம், இவரின் மனநிலை பாதிப்பு மேலும் கூடுகிறது, ஊர்வசியின் பெற்றோர் சிங்கப்பூரில் இருந்து மகள் பற்றி போனில் கேட்க , இவர் ஊர்வசி டெல்லியில் ப்யூட்டீஷியன் படிப்பு படிக்க போயிருப்பதாக அப்பட்டமான பொய்யைச் சொல்கிறார்.
கோமாவில் இருப்பவருடன் மிகுந்த ஆத்மார்த்தமாக உரையாடுகிறார்,உணவூட்டுகிறார், அவர் காலடியில் கட்டாந்தரையில் படுத்துத் தூங்குகிறார்.
இந்நிலையில் தன் கல்லூரித் தோழி வைஷ்ணவியை தன் வங்கியில் அவர் நகை அடகு வைக்க வருகையில் சந்திக்கிறார். அவர் சமீபத்தில் கணவனை பறிகொடுத்ததை அறிகிறார், பின்னாளில் அவர் வீட்டுக்குச் சென்றவர், ஒரு கட்டத்தில் வைஷ்ணவியை தன் மனைவி ஊர்வசியாகவே அங்கே உருவகப்படுத்திக் கொள்கிறார்,
அவர் சமையலறையில் இருக்கையில் பின்னிருந்து அணைத்துத் தேற்றி ஆசையை தூண்டி சுகித்தவர், வைஷ்ணவிக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை இவரையும் அறியாமல் அளிக்கிறார்,ஆயினும் எதுவுமே சுயநினைவில் செய்வதில்லை, ஆழ்மன உந்துதலில் அதன் கட்டளையின் படியே நடந்து கொள்கிறார்.
இந்நிலையில் இப்போது கோமாவில் இருக்கும் ஊர்வசி இவரின் மனப்பார்வையில் இவருடன் நன்கு உரையாடுகிறார்,அனு தினம் உடல் நலம் தேறுகிறார், ஆனால் உண்மையில் அவர் உயிருள்ள சவம் தான்,இதை டாக்டர்கள் சொன்னாலும் இவர் நம்பாதபடிக்கு இவரின் மன நோய் முற்றியிருக்கிறது.
இப்போது, வைஷ்ணவி இவரை சந்திக்க நேரில் வந்தவர், தான் இவரால் கருவுற்றதைச் சொல்கிறார், தன்னை சீக்கிரம் திருமணம் செய்ய ஆவண செய்யுமாறும் சொல்கிறார்.
இவரின் மனநோயோ வைஷ்ணவி தரப்பின் நியாயத்தை ஏற்கவில்லை, கருவைக் கலைக்கச் சொல்லி தன் காரில் இருந்து வைஷ்ணவியை வலுக்கட்டாயமாக இறங்கச் சொல்கிறது.
இந்த இக்கட்டான நிலையை கோமாவில் இருந்து கண்விழித்து விட்டதாய் இவர் நம்பும் மனைவி ஊர்வசியிடம் பயந்தபடி சொல்கிறார், அவரோ இதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தன் சக்களத்தியை தான் வாங்கித் தந்த சிகப்பு டையைக் கொண்டு கழுத்தை நெரித்து கொல்லுமாறு யோசனை தருகிறார், அதை ஒரு நன்நாளில் அவ்வண்ணமே செய்து முடித்துவிட்டு, மனைவியிடம் அதைச் சொல்ல ஓடி வருகிறார் மோகன்லால்.
இங்கே மனைவி ஊர்வசிக்கு கோமா நிலையிலேயே உயிர் பிரிந்திருக்கிறது, அந்த முகம் மூடிய உடலிடம் தான் அவளின் சக்களத்தியை பிக்னிக் அழைத்துப் போய், கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்றதை இன்பமாய் விவரிக்கிறார்,அங்கே டாக்டர்கள் அவரை கொத்தாக அமுக்கி போலீசிடம் ஒப்படைக்க இப்போது அவர் சில வருடங்களாக மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுகிறார், இப்போதும் இவர் மனைவி இறந்ததை இவர் நம்பவில்லை, மனநல காப்பகத்தில் காவி உடுத்தி, சதா பூஜை புனஸ்காரம் தத்துவார்த்த பிரசங்கங்கள் என ஸ்வாமிப் பிள்ளை என்ற முற்றிலும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.கீதை,பைபிள், குரான் என மூன்றையும் கலந்து மேற்கோள்கள் காட்டுகிறார்,பூஜிக்கிறார்
இங்கே மனநல காப்பகத்தில் விசித்திரமான சப்ஜக்டான தன்னை வலிய ஆராய வரும் டாக்டர் ரம்யா கிருஷ்ணனை தன் மனைவியாக இந்நாளில் உருவகம் செய்து கொள்கிறார்,
ஊர்வசியின் மீது கொண்ட அதே அதீத அன்பை இவரிடமும் கொட்டுகிறார், ஆனால் ரம்யா கிருஷ்ணன் இவரை ஆராய வந்த மருத்துவ மாணவி என அறிந்தவர் தன்னை கினியா பன்றியாக்கி விட்டனரே என மிகுந்த அதிர்ச்சி அடைகிறார், இருந்தும் இவரின் மற்றொரு மனம், அவரை இன்னும் தன் மனைவியாகவே எண்ணுகிறது,
இனி என்ன ஆகும்?!!!
படம் பாருங்கள், எத்தனை அகச் சிக்கல்கள் நிறைந்த ஒருவனின் கதையை துணிந்து இயக்குனர் ராஜிவ்நாத் படமாக்கியது புரியும்.
மிக அற்புதமான இசை ரவீந்திரன் மாஷே,படத்தில் அத்தனை பாடல்களையும் தாஸேட்டாவே பாடியுள்ளார், அதில் நிறங்களே, பாடு. மிக அற்புதமான பாடல்,ஏகாந்தமான ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்,குணா படம் வந்து ஒரு வருடம் கழித்தே இப்படம் வந்துள்ளது, இருந்தும் குணாவில் ஒளிப்பதிவாளர் வேணு ஏற்படுத்திய தாக்கத்தை சந்தோஷ் சிவன் ஏற்படுத்தவில்லை.இது சந்தோஷ் சிவனின் மற்றொரு படம்.அவ்வளவே
இயக்குனர் ராஜீவ்நாத், இவர் பின்னாளில் மோகன்லால் மற்றும் சிவாஜியை வைத்து ஸ்வர்ணசாமரம் என்ற படம் பாதி இயக்கிய நிலையில் படம் கைவிடப்பட்டது, அதன் பின்னர் 2008ல் லாலேட்டனை வைத்து பகல் நக்ஷத்திரங்கள் என்னும் முக்கியமான படத்தை இயக்கினார், மேலும் 2015ல் வெளியான ரஸம் என்ற படத்தில் மோகன்லாலை நடிகராகவே சிறப்புத் தோற்றத்தில் தோன்ற வைத்திருந்தார்.
https://youtu.be/YUYV0ZUl0Bk
உலக சினிமா, சைக்காலஜிக்கல் த்ரில்லர் விரும்பிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.லாலேட்டன் ரசிகர்கள் இன்றும், என்றும் மனதில் வைத்துக் கொண்டாடும் கல்ட் படம் இது
#அஹம்,#மோகன்லால், #லாலேட்டன்,#ஊர்வசி,#வைஷ்ணவி,#சுரேஷ்கோபி,#நெடுமுடி_வேணு,#ரம்யா_கிருஷ்ணன்