இந்த கொலைக்கருவி ஆய்வு கோப்பு படம் கொடூர சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய வரலாற்றில் மிகவும் முக்கியமானது,
2011 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று அன்றைய காவல் துறை ஆணையர் , சைலேந்திரபாபு அவர்கள் ஆயுதப்படை இளம் காவலர் M.சின்னசாமி (26) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்ய பயன்படுத்திய 7.62mm Bolt Action rifle துப்பாக்கியை கையில் வாங்கி ஆராய்கையில் எடுத்த படம் இது, இந்த படம் கோவை சிறைச்சாலையில் எடுக்கப்பட்டது.
காவலர் M.சின்னசாமி பற்றிய செய்திக்குறிப்பு 2011ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி முதலில் வாசித்தது முதல் நான் பல நாட்கள் தூக்கம் தொலைத்திருக்கிறேன், கடமையில் பிசகியதற்கு வருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட இளம் காவலர் M.சின்னசாமி .
குருவி தலையில் பனங்காய் போல 25 வயது இளம் காவலர்கள் இருவர் வசம் ஒப்படைக்கப்பட்டவன் necrophiliac சைக்கோ கொலைகாரன் M.ஜெய்சங்கர்,இவனை சைக்கோ சங்கர் என்றே அழைப்பர்.
necrophiliac என்றால் பிணங்களுடன் உறவு கொள்பவன் என்று பொருள், இவன் உறவு கொள்கையில் கழுத்தை அறுத்து விட்டு உயிர் பிரிகையிலும் உயிர் பிரிந்த பின் பல முறையும் உறவு கொள்ளும் ராட்சசன், சேலத்தில் ஜெயமணி என்ற பெண் காவலரை அப்படி கடத்தி வன்புணர்ந்து கொலைசெய்து நெடுநாள் காணாப்பிணமாக்கியவன், இத்தனை பயங்கரனை சின்னசாமி மற்றும் ராஜவேலு என்ற காவலர்கள் வசம் ஒப்படைத்தது கோவை சிறை நிர்வாகம்,
அந்த கொடூரனை பல ஊர்களில் பல நீதிமன்றங்களில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் இதே கோவை சிறையில் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்பது தரப்பட்ட பணி,இந்த கொடூரனை பேருந்தில் அழைத்துப் போகையில் அவன் மானம் போய்விடக்கூடுமாம் , அது மனித உரிமை மீறலாம்,இவன் தன்னை கைவிலங்கிடக்கூடாது என்ற சிறப்பு சலுகை பெற்றதால் இந்த பயணங்கள் எதிலும் கை விலங்கிடப்படவில்லை, இரு காவலரும் அவன் இடம் வலம் நின்று கையுடன் கை பிணைத்து அழைத்து போய் வர வேண்டும், அரசு பொது பேருந்து தான் சிக்கனமான செலவு குறைந்த போக்குவரத்து என்பதால் அதில் தான் அழைத்து போய் வந்துள்ளனர்.
நெக்ரோபீலியாக் சைக்கோ ஜெய்சங்கர் முதலில் நாமக்கல் நீதிமன்றத்தில் 2011 மார்ச் 16ஆம் தேதியும், இரவு திருச்சி மத்திய சிறையில் ராத்தங்கலுக்கும், மார்ச் 17 அன்று தர்மபுரி நீதிமன்றத்திலும் அவன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக அடுத்தடுத்து ஆஜர்படுத்தப்பட்டான்,
அவன் மீதான வழக்குகள் துரிதமாக நடக்கத்தொடங்கிய நிலையில் மறுநாள் 18 வெள்ளி இரவு 9.30 மணியளவில் கோவைக்கு நேரடி பேருந்து ஏறுவதற்கு வேண்டி இவர்கள் சேலம் மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளனர் , அங்கு கோவைக்கு சாதாரண இருக்கை கொண்ட பேருந்துகள் மட்டுமே அடுத்து கிளம்ப காத்திருக்க, சைக்கோ கொலைகாரன் ஜெய்சங்கர் தான் சாதாரண பேருந்தில் ஏறமாட்டேன், கோவைக்கு செல்லும் டீலக்ஸ் பேருந்தில் அழைத்துச் செல்லுமாறு அழிச்சாட்டியம் செய்துள்ளான்.
இளம் காவலர் ராஜவேலு டீலக்ஸ் பேருந்து நேர அட்டவணையை சரிபார்க்கச் செல்ல, சைக்கோ ஜெய்சங்கர் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காவலர் சின்னசாமியை கீழே தள்ளிவிட்டு தப்பியுள்ளான்,இரு காவலர்களுக்கும் கால்களின் அடியில் பூமி நழுவுவது போல அதிர்ச்சி, உயரதிகாரிகளின் சுடுசொற்கள், பணி ரீதியான அழுத்தம், தண்டனை நடவடிக்கை என கலங்கிப் போனவர்கள் , அங்கே சேலம் காவல்துறையினருடன் இணைந்து 1-00 மணி வரை தேடி அலைந்திருக்கின்றனர், இந்த கொடூரன் தப்பிய செய்தியை கோவை உயரதிகாரிகளிடம் சொல்லிவிட்டு நள்ளிரவு கோவை திரும்புவதற்கு பேருந்து ஏறியுள்ளனர், வழி நெடுக ஆற்றாமையில் காவலர் ராஜவேலுவிடம் புலம்பியபடியே வந்துள்ளார் காவலர் சின்னசாமி, கொடூரமான சைக்கோ பெண்போலீஸையே வன்புணர்ந்து கொன்றவனை தன் கையால் தப்ப விட்டோமே என்ற குற்ற உணர்வு அவரின் நெஞ்சை அழுத்தியிருக்கிறது.
கோவை காந்திபுரம் பஸ் டெர்மினலில் இறங்கி பஸ்சில் பாப்பநாயக்கன்பாளையத்திற்கு பேருந்து ஏறியுள்ளனர், அங்கு தான் ஆயுதப்படை போலீஸ் மைதானம் அருகே இரு காவலர்களும் அறை எடுத்து தங்கியிருக்கின்றனர், 19 மார்ச் 2011 அன்று பாப்பநாயக்கன்பாளையத்தில் அதிகாலை 2-25 மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கிய சின்னசாமி சடுதியில் துப்பாக்கியை பூட்டு விடுவித்து இயக்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டார், காவலர் சின்னசாமியின் தாடையை துளைத்து மேலேறிய தோட்டா கபாலத்தை பிளந்து வெளியேறியுள்ளது,இளம் காவலர் சின்னசாமியின் கோப்பு புகைப்படம் கூட பதிவிட கிடைக்கவில்லை என்பது சோகம்.
சைக்கோ கொலைகாரன் மகா கிராதகன் M.ஜெய்சங்கர் பகீரத பிரயத்தனங்களுக்குப் பின் பிடிபட்டான், செல்லும் வழியெங்கும் கொலைகள் ,வல்லுறவுகள் நிகழ்த்தியிருந்தான் ரத்த காட்டேரி, இவன் எடப்பாடி போர்ட் ஹை ஸ்கூல் முன்னாள் மாணவன் ,+2 வரை கல்வி,ட்ரக் டிரைவர்,நல்ல வருமானம்,இவனுடைய வல்லுறவு வெறி தணிய உறவில் 15 வயதுப் பெண்ணை மணமுடித்து வைத்தாள் இவன் தாய், மூன்று மகள்களும் உண்டு,
முதல் வல்லுறவு மற்றும் கொலை குற்றத்துக்கு ,தன் 32 ஆம் வயதில் தான் சிக்கி உள்ளான் சைக்கோ சங்கர், அது வரை எத்தனை பேரை ஊரில் குளத்தில் மூழ்கடித்தும், தலையில் கல்லை போட்டும் கொன்றிருப்பானோ தெரியாது, இவன் தந்தை மாரிசாமி எடப்பாடி பகுதியில் பெரிய ரவுடி,கள்ள சாராய கடத்தல் லாரி ஓட்டியவன், இதே போல வல்லுறவு கொலை வழக்குகளுக்காக 32 வருடம் ஆயுள் தண்டனை பெற்றவன் மாரிமுத்து , அவனும் பெங்களூரு சிறையில் தான் இறந்து போனான் , ஸ்பைடர் பட சைக்கோ எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்துக்கு சைக்கோ சங்கர் தான் நேரடி reference,
அவன் 27 பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு அதிகாலை 2-30 மணிக்கு, ஊழல்களுக்கு மிகவும் பெயர் போன பெங்களூரு பரப்பன அக்ரஹாரா தனிமைச்சிறையில் கழுத்தை துண்டு பிளேடு கொண்டு அறுத்துக் கொண்டு ரத்தவெள்ளத்தில் இறந்து போனது வரலாறு, 30க்கும் மேற்பட்ட வன்புணர்வு வழக்குகள், 19 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என பேனாக்கத்தியால் துடிக்க துடிக்க கழுத்தறுத்து கொலை செய்தவன், அக்கொடிய மிருகம் போய் இப்படி சாதாரணமாக ஆசுவாசமாக மரணமடைந்தது மிகவும் ஏமாற்றமானது,
நம் நாட்டில் இது போல கொடூரர்களுக்கு கூட உடனடியாக மரணதண்டனை வழங்காதது நம் போன்ற கீழ்படிதலுள்ள குடிமக்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டமானது .
பொதுமக்களாகிய நாம் வீட்டில் நிம்மதியாக உறங்குவதன் காரணகர்த்தா காவல்துறை தான், நாடெங்கிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபடும் காவலர்களின் உழைப்பு மிகவும் போற்றத்தக்கது, மார்ச் 18 ஆம் தேதி காவலர் சின்னசாமியின் 12 ஆம் நினைவு தினம்,அவர் யார் பெற்ற பிள்ளையோ தெரியாது, எத்தனையோ கனவுகளுடன் காவல்துறையில் இணைந்தவர் அவருக்கு அஞ்சலி, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.