ஹேராம் படம் முழுக்க தாய் அம்புஜம் மற்றும் மகள் மைதிலியின் அந்யோன்யம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும், அதில் முக்கியமான காட்சி இது, வசந்தாஅக்கா மன்னார்குடிக்கு போன் செய்து மைதிலி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி சென்னைக்கு வரச் சொல்லியிருப்பார், காலையில் கார் வரும் சப்தம் கேட்டு மாடியில் இருந்து படிகளில் குதித்து ஓடி வருவார் மைதிலி,
அதற்குள் உப்பிலி மற்றும் அம்புஜம் படியேறி வருவர், பாத்து, பாத்துடி அசடு என அம்புஜம் மகளை செல்லமாக கடிந்து கொள்வார், தந்தை உப்பிலி பெருமையுடன் பக்கவாட்டில் பார்த்தபடி எப்பட்ரி இருக்க? என்பார் ,அப்பாவுக்கு சிரித்தபடியே இருக்கேன் என புன்முறுவலிப்பார், இந்த ஒற்றைவரி துடுக் பதிலுக்கு அம்புஜம் மகள் கன்னத்தில் செல்லமாக தட்டுவார்.
மாப்பிள்ளைட்ட சொன்னியா? என்பார், இல்லை ,மகாராஷ்ட்ரால நன்னா பேசிண்டு நன்னா தான் இருந்தார்,இங்க திரும்பி வந்ததும் மகரிஷி மாதிரி தாடி வச்சுண்டு எல்லாத்துக்கும் ஒத்தை வார்த்தை பதில் தான் சொல்றார்,
நீ சண்ட புடிச்சயா? கோவமோ என்னவோ?
கோவம்லாம் இல்லேம்மா பிரியமாதான் பேசறார் ஆனா கொஞ்சமா பேசறார்.
PS: நடிகை ஹேமாமாலினி தமிழில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரு படம் தான் செய்தார், ஆனால் அது நூறு படத்துக்கு சமமான கதாபாத்திரமாக இதைச் செய்தார் , எத்தனை பாந்தமான,இரு கல்யாணமான பெண்களின் இளமையான அம்மாவாக இதில் வளம் வந்தார், கணவர் உப்பிலியை இவர் கண்ணசைவிலேயே ஆட்டுவிப்பார்,
மைதிலியின் அக்கா திருமணமானவர்,
நிறைமாத கர்ப்பமாக இருப்பார், அம்மா அம்புஜத்தைப் போலவே கணவனைக் கைக்குள் போட்டிருப்பார்,மைதிலியைப் பெண் பார்க்க வருகையில் மூத்த மாப்பிள்ளை தான் "மாமா மைதிலி செய்த Sweet Dreams எம்ப்ராய்டரி, விட்டு விட்டீர்களே" என எடுத்துக் கொடுப்பார்,
மைதிலிக்கு அக்காவைப் போலவே நிறைந்த கணவனாக சாகேத்ராமை மாற்ற வேண்டும் ,அக்காவைப் போலவே தானும் வயிறு தள்ளி நடக்க வேண்டும் என கொள்ளை ஆசை,அவற்றை கண்களில் தேக்கி நடப்பார்.
அம்புஜம் மாமிக்கு மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என மொத்தம் ஐந்து குழந்தைகள், மைதிலிக்கு அடுத்ததாக கௌஷி என்று எட்டு வயதில் பெண் உண்டு, அடுத்து ஆறு வயது துரு துரு சிறுவன் ரங்கப்பா அவனுக்கு வயலின் வாசிக்கத் தெரியும் , யோகாசனங்கள் தெரியும்,
பெரியவர்கள் பேசுகையில் அப்படி வாய் பார்ப்பான், அடுத்து இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு, பெண் பார்க்க சாகேத்ராம் வருகையில் அவன் வழியில் மலஜலம் போய் விட ,தந்தை உப்பிலி மிதிக்கப் போனவர், கௌஷி அதை துடை என்று வாசலுக்கு வரவேற்க விரைவார்.
சம்பந்தி வசந்தா அக்கா மீது அத்தனை பிரியமாக இருப்பார்,அவருடன் நடக்கையில் அவரை இயல்பாக பிடித்தபடியே தான் வருவார்.
இவரும் கணவரைப்போலவே காந்தியவாதி, காந்தியை கேலி பேசும் சாகேத்ராமின் நண்பர் டாக்டர் நக ஞக்யத்தைப் பார்த்து சொல்வார்
" நானும் நீங்களும் பட்டினி கெடந்த மாமி மாதிரி மயக்கம் தான் வரும்,மஹத்மா பட்டினி கெடந்தா சுதந்திரம் வரும்"
அம்புஜம் மாமிக்கும் அவர் மாமியார் நார்மடி கட்டிய சௌகார் ஜானகிக்கும் வீட்டுக்குள் ஒரு பனிப்போரே நடக்கும், அழகிய மருமகள் அம்புஜம் எது சொன்னாலும் சௌகார் ஜானகி counter தருவார்,உன்னிப்பாக பார்க்க வேண்டும்.
ஒரு காட்சியில் அம்புஜம் கணவர் உப்பிலி நீரழிவு நோயாளி என்பதால் அண்ணா நீங்க ஸ்வீட் சாப்ட ப்டாதுன்னு டாக்டர் சொல்லிர்கார் என்பார் அம்புஜம்,
சௌகார் ஜானகி இன்னைக்கு ஒன்னும் நிஷிதமில்லை (கட்டாயமில்லை ) என்பார்.
#ஹேமாமாலினி, #அம்புஜம், #மைதிலி, #சாகேத்ராம் , #கமல்ஹாசன்,#ஹேராம்