இந்தியத் திரையுலகில் சில நடிகர்கள் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர் கதாபாத்திரங்களுக்குள் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால், ஒரு கதாபாத்திரம் திரையில் தோன்றும் அந்தக் கணத்திலேயே அதற்கென ஒரு தனி உலகத்தை உருவாக்கும் நடிகர்கள் மிகச் சிலரே.
அந்த வரிசையில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் நானா படேகர். அவரது இயற்பெயர் விஷ்வநாத் படேகர். மராத்திய நாடகத்தின் ஆழத்திலிருந்து இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களின் பரந்த வெளிக்குள் வந்த அவர், நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் நீண்ட கலைப்பயணத்தில் வன்மம், வலி, கோபம், நகைச்சுவை, அதிகாரம், தோல்வி, மனிதநேயம், சமூக அநீதி, மனப்போராட்டம் என எண்ணற்ற உணர்வுகளுக்கு முகம் கொடுத்தார்.
அவரது குரல், முகபாவனை, உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவை இணைந்தபோது, திரையில் அவர் தோன்றுவது வெறும் நடிப்பாக இல்லாமல் ஒரு நிகழ்வாக மாறியது.
1951 ஜனவரி 1 அன்று அன்றைய பம்பாய் மாநிலத்தின் முருட்-ஜஞ்சிரா பகுதியில் மராத்தியக் குடும்பத்தில் பிறந்த விஷ்வநாத் படேகர், பின்னாளில் இந்திய சினிமா முழுவதும் “நானா படேகர்” என்ற பெயரால் மட்டும் அறியப்பட்டார்.
இன்று ராய்கட் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் அந்த நிலப்பரப்பிலிருந்து இந்தியத் திரையுலகின் முக்கியமான கலைஞர்களில் ஒருவராக அவர் உயர்ந்தது ஒரு நீண்ட உழைப்பின் கதை.
மும்பையில் உள்ள சர் ஜே.ஜே. கலைக் கல்லூரியில் வணிகவியல் பட்டயக்கல்வி கற்றார்.
சிறுவயதிலேயே நாடகத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாடகங்களை நேசித்த அவரது தந்தை அவரை நாடகங்களைப் பார்க்க அழைத்துச் சென்றார். அந்த அனுபவங்களே மேடை மற்றும் நடிப்பு மீதான அவரது ஆர்வத்தை ஆழப்படுத்தின.
விஜயா மேத்தாவின் வழிகாட்டுதலுடன் நாடக உலகில் அவர் பெற்ற ஆரம்ப அனுபவங்கள், பின்னாளில் அவரது திரைப்பட நடிப்பின் அடித்தளமாக அமைந்தன.
மேடை அவருக்கு வசனத்தைப் பேசுவது மட்டுமல்லாமல், மௌனத்தையும் பேசக் கற்றுக் கொடுத்தது.
ஒரு கதாபாத்திரத்தின் உளவியலை உடலின் சிறிய அசைவுகளாலும் கண்களின் பார்வையாலும் வெளிப்படுத்தும் திறன் அவரிடம் வளர்ந்தது.
அதனால் தான் நானா படேகரின் நடிப்பில் பெரும்பாலும் வசனத்தை விட வசனத்திற்கு முன்பும் பின்பும் நிலவும் அமைதியே அதிகமாகப் பேசும்.
1978ஆம் ஆண்டு ‘கமன்’ திரைப்படத்தின் மூலம் அவரது திரைப்படப் பயணம் தொடங்கியது.
ஆரம்ப ஆண்டுகளில் சிறிய மற்றும் துணை வேடங்களில் நடித்த அவர், மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் படிப்படியாக தனது இடத்தை உருவாக்கினார்.
1980களின் நடுப்பகுதியில் ‘ஆஜ் கி ஆவாஸ்’, ‘அங்குஷ்’, ‘பிரதிகாத்’, ‘அந்தா யுத்’, ‘மோஹ்ரே’, ‘திரிசாக்னி’, ‘ஆவாம்’, ‘சாகர் சங்கம்’ போன்ற படங்கள் அவரது நடிப்புத் திறனை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சென்றன.
‘அந்தா யுத்’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரை கிடைத்தது.
அந்தக் காலகட்டத்திலேயே பிரிட்டிஷ் தொலைக்காட்சித் தொடரான ‘லார்ட் மவுண்ட்பேட்டன்: தி லாஸ்ட் வைஸ்ராய்’யில் நாதுராம் கோட்சேவாக நடித்தார்.
1988ஆம் ஆண்டு மீரா நாயர் இயக்கிய ‘சலாம் பாம்பே!’ திரைப்படத்தில் செய்த முரட்டு விபசார தரகன் கதாபாத்திரம் அவரது கலைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்தது.
அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு வெளியான ‘பரிந்தா’ அவரது நடிப்புத் திறனை இந்திய அளவில் உறுதியாக நிலைநிறுத்தியது.
குற்ற உலகின் இருண்ட மனிதராக அவர் உருவாக்கிய பாத்திரம், வில்லத்தனத்தை வெறும் வெளிப்புற அச்சுறுத்தலாக இல்லாமல் மனநிலையாகக் காட்டியது.
இந்த நடிப்புக்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த துணை நடிகர் விருதையும் பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
கதாபாத்திரத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தும் போதும், அதற்குள் மறைந்திருக்கும் மனித மனத்தின் சிக்கலை உணர்த்திய விதம் அவரது நடிப்பின் தனிச்சிறப்பாக அமைந்தது.
1991ஆம் ஆண்டு ‘ப்ரஹார்: தி ஃபைனல் அட்டாக்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
படத்தை இயக்கியதோடு அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.
இராணுவப் பின்னணியைக் கொண்ட அந்தப் படத்திற்காக இந்திய இராணுவப் பயிற்சியைப் பெற்றார். பின்னாளில் அவரது வாழ்க்கையிலும் இராணுவத்துடனான தொடர்பு முக்கியமான இடத்தைப் பெற்றது.
1980களின் இறுதியில் பிராந்திய இராணுவத்தில் அதிகாரியாக இணைந்த அவர், பயிற்சி பெற்றார்; கார்கில் போரின் காலகட்டத்தில் மராத்தா லைட் இன்ஃபன்ட்ரியுடன் பணியாற்றினார்.
பின்னர் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கலைஞராக மட்டுமல்லாமல் நாட்டின் இராணுவ வாழ்க்கையையும் நேரடியாக அனுபவித்தவர் என்ற தனிச்சிறப்பு அவருடைய வாழ்க்கையில் இருந்தது.
1992ஆம் ஆண்டு ‘அங்கார்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய எதிர்மறை கதாபாத்திரம் அவருக்கு பிலிம்பேர் சிறந்த வில்லன் விருதைத் தேடித்தந்தது.
அதே காலகட்டத்தில் ‘ராஜு பன் கயா ஜென்டில்மேன்’, ‘திரங்கா’ போன்ற திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
1994ஆம் ஆண்டு வெளியான ‘கிராந்திவீர்’ அவரது நடிப்புப் பயணத்தின் மிகப்பெரிய உச்சங்களில் ஒன்றாக அமைந்தது.
சமூகத்தின் விளிம்பில் வாழும், வாழ்க்கையின் மீது நம்பிக்கையிழந்த ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மாற்றத்தை அவர் உடலிலும் குரலிலும் மனநிலையிலும் வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களை ஆழமாகத் தாக்கியது.
இந்த நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது, பிலிம்பேர் விருது மற்றும் திரை விருதைப் பெற்றார்.
அவரது நடிப்பின் பரப்பு ஒரே வகை கதாபாத்திரங்களுக்குள் அடங்காதது. ‘அபய்’ திரைப்படத்தில் பேயாக நடித்த அவர், ‘அக்னி சாட்சி’யில் மனநோய்க்கும் வன்முறைக்கும் இடையில் சிக்கிய கொடூரமான கணவனாக நடித்தார்.
அந்த நடிப்புக்காக மீண்டும் தேசிய திரைப்பட விருதில் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றார்.
‘காமோஷி: தி மியூசிக்கல்’ திரைப்படத்தில் கேட்கவும் பேசவும் முடியாத தந்தையாக நடித்தபோது, வசனமின்றி உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறனை நிரூபித்தார்.
‘குலாம்-இ-முஸ்தபா’வில் குற்ற உலகைச் சேர்ந்த மனிதராகவும், ‘யஷ்வந்த்’ திரைப்படத்தில் நேர்மையும் கோபமும் கலந்த காவல் அதிகாரியாகவும், ‘வஜூத்’ படத்தில் சிக்கலான மனநிலையுடைய மனிதராகவும் அவர் தோன்றினார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்த உடல் மொழியையும் குரல் வடிவத்தையும் உருவாக்கியிருந்தார்.
‘கோஹ்ராம்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து இராணுவ உளவுத்துறை அதிகாரியாக நடித்தார்.
‘யுகபுருஷ்’, ‘ஹு து து’ போன்ற படங்களிலும் முக்கியமான வேடங்களை ஏற்றார்.
2000ஆம் ஆண்டு ‘தர்கீப்’ திரைப்படத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்தார்.
2002ஆம் ஆண்டு ‘சக்தி: தி பவர்’ திரைப்படத்தில் குடும்ப வன்முறையின் இருண்ட முகத்தை வெளிப்படுத்தும் தந்தையாக நடித்தார்.
அந்த நடிப்பு அவருக்கு மீண்டும் பிலிம்பேர் சிறந்த வில்லன் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத் தந்தது.
2004ஆம் ஆண்டு ‘அப் தக் சப்பன்’ திரைப்படத்தில் காவல் துறையின் மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரியாக அவர் நடித்தது அவரது வாழ்க்கையின் மற்றொரு முக்கியமான பாத்திரமாக அமைந்தது.
அதிகாரம், சட்டம், தனிப்பட்ட நெறி ஆகியவற்றுக்கிடையே சிக்கிக்கொள்ளும் மனிதனின் மனநிலையை அந்த நடிப்பில் வெளிப்படுத்தினார்.
2005ஆம் ஆண்டு ‘அபஹரண்’ திரைப்படத்தில் அரசியல் மற்றும் குற்ற உலகின் பின்னணியில் இயங்கும் வில்லத்தனமான பாத்திரத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் மற்றும் திரை விருதுகளைப் பெற்றார்.
2006ஆம் ஆண்டு ‘டாக்ஸி நம்பர் 9211’ திரைப்படத்தில் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து நடித்தார்.
இருவருக்கும் இடையிலான மோதலும் உரையாடல்களும் படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தன.
ஆனால் 2007ஆம் ஆண்டு ‘வெல்கம்’ திரைப்படத்தில் உதய் ஷெட்டி என்ற கதாபாத்திரமாக தோன்றியபோது, நானா படேகரின் நடிப்பின் இன்னொரு முகம் கோடிக்கணக்கான பார்வையாளர்களிடம் சென்றடைந்தது.
குற்ற உலகின் அதிகாரம் கொண்ட மனிதராக இருந்தாலும் நடிகராக வேண்டும் என்ற ஆசை கொண்ட உதய் ஷெட்டியின் நகைச்சுவை கலந்த முரண்பாடுகளை அவர் அபாரமாக வெளிப்படுத்தினார்.
அனில் கபூருடன் இணைந்த அவரது காட்சிகள், அவரது தீவிரமான நடிப்புக்குள் மறைந்திருந்த நகைச்சுவை உணர்வை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன.
2009ஆம் ஆண்டு ‘ஏக்: தி பவர் ஆஃப் ஒன்’, 2010ஆம் ஆண்டு ‘பாத்ஷாலா’, ‘ராஜ்நீதி’, 2011ஆம் ஆண்டு ‘ஷாகிர்த்’, மராத்திய திரைப்படமான ‘தேவூல்’ என அவரது பயணம் தொடர்ந்து விரிந்தது.
‘பாத்ஷாலா’ திரைப்படத்தில் பள்ளித் தலைமையாசிரியராக நடித்ததுடன், அந்தப் படத்திற்காகப் பெற்ற ஊதியத்தை ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார்.
‘ராஜ்நீதி’யில் அரசியல் அதிகாரப் போராட்டத்தின் பின்னணியில் முக்கியமான துணை வேடத்தை ஏற்றார்.
2013ஆம் ஆண்டு ‘தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11’ திரைப்படத்தில் மும்பை காவல்துறையின் இணை ஆணையர் ராகேஷ் மரியாவை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார்.
உண்மை மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரங்களிலும் நானா படேகர் தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்.
2014ஆம் ஆண்டு ‘டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்டே – தி ரியல் ஹீரோ’ திரைப்படத்தில் சமூக மருத்துவர் பிரகாஷ் ஆம்டேவாக நடித்தார்.
அந்த நடிப்புக்காக மராத்தி திரைப்படத்திற்கான பிலிம்பேர் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார்.
பின்னர் 2023ஆம் ஆண்டு ‘தி வாக்சின் வார்’ திரைப்படத்தில் தடுப்பூசி உருவாக்கும் அறிவியல் முயற்சியின் பின்னணியில் செயல்படும் விஞ்ஞானியாக நடித்தார்.
வரலாற்று அல்லது உண்மை மனிதர்களை திரையில் பிரதிபலிக்கும் போது, அந்த மனிதரின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பின்பற்றாமல் அவரது மனநிலையைப் புரிந்துகொண்டு நடிப்பது நானா படேகரின் முக்கியமான கலைப்பண்பாக இருந்தது.
2015ஆம் ஆண்டு ‘அப் தக் சப்பன் 2’, ‘வெல்கம் பேக்’ போன்ற படங்களில் நடித்தார். 2016ஆம் ஆண்டு மராத்தி திரைப்படமான ‘நட்ஸம்ராட்’ அவரது கலைவாழ்வின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அமைந்தது.
ஓய்வு பெற்ற மேடை நடிகர் கணபத்ராவ் “தாதா” பெல்வல்கர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.
வாழ்நாள் முழுவதும் மேடையில் வாழ்ந்த ஒரு கலைஞன், வயது முதிர்ந்தபின் தனது குடும்பத்துடனும் நினைவுகளுடனும் எதிர்கொள்ளும் வாழ்க்கையை அவர் ஆழமான உணர்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.
மேடைக் கலைஞனாகத் தொடங்கி திரைப்பட நடிகராக உயர்ந்த நானா படேகருக்கு, ஒரு வயதான நாடக நடிகரின் வாழ்க்கையைச் சித்தரித்த இந்தப் படம் கலைரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.
இந்த நடிப்புக்காக மராத்தி பிலிம்பேர் விருதும் பின்னர் ஜீ சினி மராத்தி சிறந்த நடிகர் விருதும் பெற்றார்.
2016ஆம் ஆண்டு வெளியான ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் இந்தி பதிப்பில் ஷேர் கானுக்கு குரல் கொடுத்தார். குரல் நடிப்பிலும் அவரது தனித்துவமான குரல் அமைப்பு மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது.
திரையில் தோன்றாமல் ஒரு கதாபாத்திரத்தின் ஆளுமையை குரல் மூலமாக உருவாக்கும் திறனும் அவரிடம் இருந்தது.
தமிழ்த் திரையுலகுடனான அவரது தொடர்பும் குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தின் இயக்குனர் ராணா என்ற சிக்கலான கதாபாத்திரம் மூலம் 2008ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார்.
பின்னர் 2018ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தில் முக்கியமான ஹரிதேவ் அப்யங்கர் என்ற ஹரிதாதா கதாபாத்திரத்தில் எதிர்மறை நாயகனாக நடித்தார்.
தமிழ்த் திரைப்படத்தில் அவரது பங்களிப்பு எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவரது நடிப்பின் தனித்துவத்தை தமிழ் பார்வையாளர்களும் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை அந்தப் படங்கள் உருவாக்கின.
‘காலா’ திரைப்படத்தில் அவரது அதிகாரமிக்க எதிர்மறை கதாபாத்திரம், ரஜினிகாந்தின் கதாபாத்திரத்துடன் உருவாக்கிய மோதலின் மூலம் படத்தின் முக்கியமான நாடகத் தளமாக அமைந்தது.
நானா படேகர் வெறும் நடிகராக மட்டும் தன்னை வரையறுத்துக்கொள்ளவில்லை. ‘யஷ்வந்த்’, ‘வஜூத்’, ‘ஆஞ்ச்’ போன்ற படங்களில் பின்னணிப் பாடகராகவும் குரல் வழங்கினார்.
வசனம் பேசும் குரலிலும் பாடும் குரலிலும் அவருக்கிருந்த தனித்துவம் அவரது கலைத்திறனின் இன்னொரு பரிமாணமாக அமைந்தது.
இயக்குநராக ‘ப்ரஹார்’ மூலம் தனது பார்வையை வெளிப்படுத்திய அவர், கதை, நடிப்பு, இயக்கம் ஆகிய மூன்றுக்கும் இடையிலான உறவைப் புரிந்த கலைஞராக இருந்தார்.
திரைப்பட விருதுகளைப் பொறுத்தவரை நானா படேகரின் சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கது.
‘பரிந்தா’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது, ‘கிராந்திவீர்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது, ‘அக்னி சாட்சி’ திரைப்படத்திற்காக மீண்டும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றார்.
பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகர், சிறந்த வில்லன், சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றார். ‘பரிந்தா’, ‘அங்கார்’, ‘கிராந்திவீர்’, ‘அபஹரண்’ ஆகிய படங்கள் அவரது பிலிம்பேர் வெற்றிகளின் முக்கியமான பகுதிகள்.
திரை விருதுகள், ஐஐஎஃப்ஏ விருது, வங்காள திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதுகள், மகாராஷ்டிர மாநில திரைப்பட விருதுகள், மராத்தி பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல அங்கீகாரங்களும் அவரது கலைப்பயணத்தைச் சிறப்பித்தன.
2013ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. மகாராஷ்டிர அரசின் ராஜ் கபூர் சிறப்பு பங்களிப்பு விருதும் அவரது கலைச்சேவையை அங்கீகரித்தது.
இவ்விருதுகள் அவரது புகழை மட்டும் அளவிடுபவை அல்ல; இந்தியத் திரைப்படக் கலையில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் பிரதிபலிப்பவை.
நடிப்புக்கு அப்பால் சமூக அக்கறையும் அவரது வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக இருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகார் கிராமங்களுக்கு நிதியுதவி வழங்கினார். விவசாயிகளின் தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி செய்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது விருதுத் தொகையையும் வழங்கினார்.
2015ஆம் ஆண்டு விதர்பா பகுதியைச் சேர்ந்த 62 குடும்பங்களுக்கும் லாத்தூர் மற்றும் உஸ்மானாபாத் பகுதிகளைச் சேர்ந்த 113 குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கினார்.
அதே ஆண்டில் நடிகர் மகரந்த் அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம் NAAM ’ அறக்கட்டளையைத் தொடங்கி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் உதவும் பணியில் ஈடுபட்டார்.
சமூகப் பொறுப்பு என்பது வெறும் கருத்தாக இல்லாமல் நேரடி செயலாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறை அவரது பொது வாழ்க்கையில் வெளிப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் பல்வேறு இழப்புகளையும் அனுபவித்தார். 1978ஆம் ஆண்டு நீலகாந்தி படேகரை திருமணம் செய்தார்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அவர்களில் துர்வாசா என்ற மகன் இரண்டு வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மற்றொரு மகன் மல்ஹார்.
நானா படேகரின் தந்தை அவர் 28 வயதாக இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது தாயார் நிர்மலா படேகர் 2019 ஜனவரி 29 அன்று தனது 99ஆவது வயதில் மறைந்தார்.
இந்த தனிப்பட்ட இழப்புகளும் அவரது வாழ்க்கையின் அமைதியான பகுதிகளாக இருந்தன.
புகைபிடிக்கும் பழக்கத்தை 56 வயதில் அவர் கைவிட்டார். மும்பையின் அந்தேரியில் எளிமையான ஒரு படுக்கையறை வீட்டில் தாயுடன் வாழ்ந்தார்,தனிப்பட்ட பயணங்களுக்கு மும்பை ஷேர் டாக்ஸியில் பயணித்து சக பயணியரை ஆச்சர்யப்படுத்தி, வலிய பயண வேளை நட்பு ஏற்படுத்திக் கொண்டு அந்த நட்பை கடைசிவரை கடைபிடித்தவர் . புகழும் நட்சத்திர அந்தஸ்தும் உயர்ந்தபோதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கதர் உடுத்தி எளிமையைப் பேணியவர் கார் வாங்க சேமித்து வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாயை விவசாயி மரணங்களுக்கு அறக்கட்டளை துவங்கி தானம் செய்தவர்,என்ற மகத்தான அடையாளம் அவரிடம் நிலைத்திருந்தது.
பொதுவாழ்வில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையான மனிதராகத் தன்னை வைத்துக்கொள்ள முயன்றார்.
அவரது வாழ்க்கையில் சர்ச்சைகளும் இடம்பெற்றன. ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக 2008ஆம் ஆண்டு சின்டா அமைப்பில் புகார் அளிக்கப்பட்டது; 2018ஆம் ஆண்டு மீண்டும் அது பொது விவாதத்துக்கு வந்தது. 2018 அக்டோபரில் மும்பை காவல்துறையால் நானா படேகர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சின்டா அமைப்பு 2008ஆம் ஆண்டு புகார் முறையாகக் கையாளப்படாததற்கு வருத்தம் தெரிவித்தது.
2020ஆம் ஆண்டின் ‘இட்ஸ் மை லைஃப்’, 2022ஆம் ஆண்டின் ‘தட்கா’, 2023ஆம் ஆண்டின் ‘தி வாக்சின் வார்’, 2025ஆம் ஆண்டின் ‘ஹவுஸ்ஃபுல் 5’ போன்ற படங்களிலும் தொடர்ந்து நடித்தார்.
வயது அதிகரித்த பின்னரும் நடிப்பிலிருந்து விலகவில்லை. 2025ஆம் ஆண்டின் ‘ஹவுஸ்ஃபுல் 5’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த வரவேற்பு கலவையாக இருந்தபோதிலும், நானா படேகரின் நகைச்சுவை நடிப்பு படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்டது.
தீவிரமான கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் சமமான நம்பிக்கையுடன் இயங்கிய அவரது திறமை, பல தலைமுறை பார்வையாளர்களுடனான அவரது உறவை நீடிக்கச் செய்தது.
இறுதிக்காலத்திலும் அவர் நடிப்புப் பணியில் இருந்தார். குற்றப் பின்னணியைக் கொண்ட ‘தி கன்ஃபெஷன் ஆஃப் மேரி’ திரைப்படத்தில் பணியாற்றினார்.
அவரது மறைவுக்கு முன்பாக அந்தப் படத்திற்கான ஒலிப்பதிவு பணியில் இன்னும் ஒரு வரி மட்டுமே மீதமிருந்தது. அதனை முடிக்க மும்பைக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்த நிலையில் அவரது வாழ்க்கைப் பயணம் திடீரென முடிவுக்கு வந்தது.
2026 அக்டோபர் 8ஆம் தேதி அதிகாலை கோவாவின் டோனா பவுலாவில் உள்ள இல்லத்தில் நானா படேகர் மயக்க நிலையில் காணப்பட்டார். அவர் மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் உயிர்ப்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவரை மீட்க முடியவில்லை.
அதிகாலை சுமார் 5.20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனைத் தகவல்கள் உறுதிப்படுத்தின. மரணத்திற்கான காரணமாக மாரடைப்பால் ஏற்பட்ட இதயநிறுத்தம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பும் அவர் பொதுவாழ்வில் செயல்பட்டிருந்தார். டோனா பவுலாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்று நாடகம், வாழ்க்கை, மரணம் ஆகியவற்றைப் பற்றி பேசினார்.
வாழ்க்கையின் முடிவு தவிர்க்க முடியாதது என்பதையும், தமக்குள் இருக்கும் விருப்பங்களை உண்மையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமா என்பதே முக்கியமான கேள்வி என்பதையும் அவர் அப்போது சிந்தித்திருந்தார்.
ஒரு கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அவரது அந்த அணுகுமுறை, அவரது முழு பயணத்தையும் நினைவுபடுத்துகிறது.
நானா படேகரின் கலைப்பயணத்தை ஒரு குறிப்பிட்ட வகை நடிப்பால் மட்டுமே வரையறுக்க முடியாது. அவர் வில்லனாக நடித்தார்; காவல் அதிகாரியாக நடித்தார்; இராணுவ அதிகாரியாக நடித்தார்; அரசியல்வாதியாக நடித்தார்; தந்தையாக நடித்தார்; மனநிலை பாதிக்கப்பட்ட மனிதராக நடித்தார்; மேடை நடிகராக நடித்தார்; நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிரிக்க வைத்தார்; உண்மை மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்களில் அவர்களின் வாழ்க்கையைத் திரையில் மீட்டெடுத்தார். ஒவ்வொரு பாத்திரத்திலும் அவரது குரல் மட்டும் மாறவில்லை; அந்த மனிதரின் உள்ளார்ந்த வேகம் மாறியது.
அவரது வசன உச்சரிப்பு இந்தியத் திரைப்பட நடிப்பில் தனி அடையாளமாகவே அமைந்தது. கோபத்தை வெளிப்படுத்தும்போது குரலை உயர்த்துவது மட்டுமல்லாமல், ஒரு சொல்லை எவ்வளவு அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
அமைதியான காட்சியிலும் அவரது கண்கள் கதையைத் தொடர்ந்தன. அதனால் தான் அவரது பல வசனங்கள் திரைப்படத்தைத் தாண்டி மக்கள் நினைவில் நிலைத்தன. ‘கிராந்திவீர்’, ‘யஷ்வந்த்’, ‘திரங்கா’, ‘அப் தக் சப்பன்’, ‘வெல்கம்’ போன்ற படங்களின் வசனங்கள் அவரது குரலுடன் இணைந்தே நினைவுகூரப்படுகின்றன.
மராத்திய நாடகத்தின் ஒழுக்கம், இந்திய இணைத் திரைப்படங்களின் யதார்த்தம், வணிகத் திரைப்படங்களின் பரந்த பார்வையாளர் உலகம், சமூகப் பிரச்சினைகளைப் பேசும் கதைகளின் தீவிரம், நகைச்சுவையின் இயல்பான வெளிப்பாடு என பல்வேறு கலை உலகங்களுக்கு இடையில் பாலமாக இருந்தார் நானா படேகர்.
அவரது நடிப்பில் செயற்கைத்தன்மை குறைவாகவும் மனிதத் தன்மை அதிகமாகவும் இருந்தது. அதனால்தான் ஒரு கதாபாத்திரம் தீயவனாக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும், தோல்வியடைந்த மனிதராக இருந்தாலும், பார்வையாளர்கள் அந்த மனிதனின் உள்ளே இருக்கும் முரண்பாட்டை உணர முடிந்தது.
நானா படேகர் மறைந்திருப்பது ஒரு நடிகரின் மறைவு மட்டுமல்ல. மேடையிலிருந்து திரைப்படத்திற்கும், மராத்தியிலிருந்து இந்திய அளவிலான திரைப்பரப்பிற்கும், தீவிரமான கதாபாத்திரங்களிலிருந்து நகைச்சுவை வரை, நடிப்பிலிருந்து இயக்கம் வரை, கலைத்துறையிலிருந்து சமூகப் பணிவரை பல தளங்களில் பயணித்த ஒரு கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தின் நிறைவு.
அவர் விட்டுச் சென்ற படைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நினைவுகள் மட்டுமல்ல; இந்திய நடிப்பின் பல்வேறு சாத்தியங்களைப் பதிவு செய்த கலை ஆவணங்களாகவும் நிலைத்திருக்கும்.
ஒரு நடிகரின் பெருமை அவர் எத்தனை திரைப்படங்களில் நடித்தார் என்பதில் மட்டும் இல்லை. அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தை மீண்டும் வேறு யாராவது நடித்தால், அது அதே கதாபாத்திரமாகத் தோன்றுமா என்பதில்தான் இருக்கிறது.
நானா படேகர் நடித்த பல கதாபாத்திரங்களுக்கு அவரது குரலும் முகமும் உடல்மொழியும் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுவிட்டன. அதுவே ஒரு நடிகன் தனது காலத்தைத் தாண்டி வாழ்வதற்கான அடையாளம்.
திரை இருண்டாலும், ஒரு சிறந்த நடிகன் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தொடர்ந்து வெளிச்சத்தில் நிற்கும். நானா படேகர் உருவாக்கிய உதய் ஷெட்டி, கணபத்ராவ் பெல்வல்கர், ‘அப் தக் சப்பன்’ காவல் அதிகாரி, ‘பரிந்தா’வின் குற்ற உலக மனிதன் என எண்ணற்ற முகங்கள் இனி அவருடைய உடல் இருப்பின்றியும் பேசிக்கொண்டே இருக்கும்.
இந்தியத் திரையுலகின் பல மொழிகளையும் பல தலைமுறைகளையும் இணைத்த அவரது குரல் இனி நினைவாக மாறினாலும், அந்தக் குரல் உருவாக்கிய கதாபாத்திரங்கள் அழியாது.
நானா படேகர் அவர்களுக்கு இதய அஞ்சலி. மேடையில் தொடங்கிய ஒரு கலைப்பயணம், இந்தியத் திரையின் பல்வேறு முகங்களைத் தொட்டு, மனிதநேயத்தின் பக்கம் திரும்பிய ஒரு வாழ்க்கையாக நிறைவடைந்துள்ளது.
அவரது கலைக்கு உரிய மிகச் சிறந்த அஞ்சலி, அவர் நடித்த திரைப்படங்களை மீண்டும் பார்ப்பதும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் மனிதச் சிக்கல்களை மீண்டும் உணர்வதும், கலை என்பது வெறும் புகழுக்கான கருவி அல்ல என்பதை அவரது வாழ்க்கையிலிருந்து புரிந்துகொள்வதும்தான்.