"ஆயிரம் முத்தங்கள்" 1982 ஆம் ஆண்டு வெளியான படம், பல முறை ராஜ் டிவியில் ஒளிபரப்பான திரைப்படம், தமிழ் சினிமாவில் கடைபிடிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டும் கற்பு,பதிவிரதம்,கன்னி கழியாத நாயகி கதாபாத்திர கட்டமைப்பை துணிந்து மாற்றி எழுதிய திரைப்படம், படம் தோல்வி, படம் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் சினிமாவின் போக்கு மாறியிருக்க கூடும்.
பணக்காரப் பெண் ராதா தன் ஏழைக் காதலன் சிவகுமாரை ஸ்திரிலோலன் என தவறாக நினைத்து , தந்தை சாருஹாசன் பார்த்த பணக்கார மாப்பிள்ளை எஸ்டேட் முதலாளி விஸ்வத்தை திருமணம் செய்து அனுதினம் இரவு ரத்தக்கண்ணீர் வடிப்பார், சிகரட்டால் உடல் முழுவதும் குரூர கணவனால் இரவில் சித்திரவதை செய்யப்படுவார், படம் பார்ப்பவர்களுக்கு எப்போது அந்த பசுந்தோல் போர்த்திய கணவன் விஸ்வம் சாவான் எனத் தோன்றும்.
இறுதியில் ராதா கணவன் நெஞ்சில் கண்ணாடித் துண்டை இறக்கிக் கொன்று, மூன்று வருடம் சிறை தண்டனை அடைந்து திரும்பி வருவார், வழக்கறிஞர் சிவகுமார் ராதாவை அவரின் விருப்பம் கேட்டபின் திருமணம் செய்வார் , வழமையாக அபலைக்கு வாழ்க்கை தருகிறேன் என தியாகம் செய்ய மாட்டார், இப்படத்தின் முற்போக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியவர் கதாசிரியர் ஷண்முகப்ரியன், இயக்கியவர் அன்னக்கிளி தேவராஜன், ஒளிப்பதிவு விஸ்வம் (பின்நாளில் நடிகர்),இசை சங்கர் கணேஷ்.
குரூர கணவன் விஸ்வமாக தத்ரூபமாக நடித்தவர் மலையாளம் நடிகர் ஜோஸ், இவர் சென்னை திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவர்,ரஜினிகாந்தின் ஜூனியர்,மலையாளம் நடிகர் சீனிவாசன் உடன் படித்த மாணவர், சிரஞ்சீவியின் சீனியர்,இந்த கொடூர sadist கதாபாத்திரத்தால் இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்த திரைப்படங்கள் கிடைக்காமலே போயிருக்கிறது. மலையாளத்தில் 80 களில் நூறு திரைப்படங்களில் நடித்துள்ளார், 2000 ஆம் ஆண்டில் மீள் அறிமுகமாகி நடித்து வருகிறார்,இவரது மகள் பிரணதி மலையாள நடிகை ஆவார்.
இணைப்பில் இப்படத்துக்கு கல்கி இதழ் 1982 ஆம் ஆண்டு எழுதிய விமர்சனம் பாருங்கள்.
நடிகர் சிவகுமார் தனது புராதான Fiat 1100 காரை இப்படத்தில் பயன்படுத்தி படத்தின் production cost குறைத்துள்ளார்,இன்றும் இந்த காரை mint condition ல் வைத்துள்ளார் , கடைசி காட்சியில் ராதாவின் சம்மதம் பெற்ற பின்னர் காரை நிறுத்தி பின் கதவை திறந்து முன் கதவை திறந்து மனைவி அந்தஸ்து தருவதை குறிப்பால் உணர்த்துவார்.