முதல் படத்தில் உள்ளவர் பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் முதல் தலைமை நீதிபதி Sir Thomas Andrew Lumisden Strange ஆவார்.
இவர் 1801ஆம் ஆண்டு முதல் 1816 ஆம் ஆண்டு வரை தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்றைய சட்ட மன்றத்தின் வெளிப்புற வாட்டர்கலர் ஓவியம் பாருங்கள், "HOLY MEN OUTSIDE THE HOUSE OF SIR THOMAS STRANGE." என்பது ஓவியத்தின் தலைப்பு, இது தான் அன்றைய முதல் சட்ட மன்றம்,இங்கே 1817 ஆம் ஆண்டு வரை சட்டமன்றம் இயங்கியது, 1862 ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதி மன்றம் துவங்கும் முன் இடிக்கப்பட்ட Bentinck's கட்டிடத்தில் (இன்றைய சிங்காரவேலர் மாளிகை) மெட்ராஸ் உயர்நீதி மன்றம் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
தலைமை நீதிபதி சர் தாமஸ் ஸ்ரேஞ்ச் இந்து திருமண சட்டத்தை முறையாக ஆராய்ந்து படித்து சட்டபுத்தகத்தில் திருத்தம் செய்தவர்.
இவருக்குப் பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தைச் சேர்ந்த 18 தலைமை நீதிபதிகள் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுதந்திரம் பெற்ற 14 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு நடுநிசிக்கு முன்பாக இறையாண்மை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு பிரிட்டீஷ் இந்தியா முழுவதும் பணியாற்றிய அத்தனை தலைமை நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பு நகல்களின் முன் வரைவை, இந்திய தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தனர்,
தவிர எந்த விருப்பு வெறுப்புமின்றி, மதமாசார்யமின்றி தங்கள் Union Jack கொடி கம்பத்தில் இருந்து இறக்கப்படுவதையும் , இந்திய மூவர்ணக்கொடி கம்பத்தில் ஏறுவதையும் பார்த்து இந்திய நீதிபதிகளை மனமார வாழ்த்திப் பிரியா விடை பெற்று பிரிந்துள்ளனர்.
சில பொறுப்புகள் கைமாற வேண்டி அதிகபட்சமாக ஒரு வருடம் வரை புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்கும் வரை அந்த பதவியில் இருந்தது வரலாறு.
சுமார் 222 ஆண்டுகள் my lord என்று இந்தியர்கள் அழைப்பதைக் கேட்டுவிட்டு சடுதியில் அனைத்து பிரபுத்துவ மரியாதைகளும் முடிவுக்கு வந்து , வேண்டா விருந்தாளிகள் போல வெளியேறி இங்கிலாந்திற்கு திரும்பச் சென்றது பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.
Sir Alfred Henry Lionel Leach 1937–1947 , மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 18 ஆவது தலைமை நீதிபதி ஆவார் , இவர் தான் இந்து நேசன் என்ற மஞ்சள் பத்திரிக்கையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் நடிகர்கள் தியாகராஜபாகவதர் மற்றும் கலைவாணர் N.S.கிருஷ்ணன் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதியவர்.
1947 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆங்கிலேயர்
Sir Fredrick William Gentle ஆவார்,இவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் 19ஆம் தலைமை நீதிபதி .
இவர் தனது தலைமை நீதிபதி பொறுப்பை இந்திய தலைமை நீதிபதி P.V.ராஜமன்னார் அவர்களிடம் 22 April 1948 ஆண்டில் பூரணமாக ஒப்படைத்தார், இவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் 20ஆம் தலைமை நீதிபதி.
இணைப்பில் அனைவரின் படங்களையும் பாருங்கள்.
இந்த ஆங்கிலேய நீதிபதிகளின் தனித்தன்மை என்றால் அவர்களின் பட்டாடை மேலங்கியும், பொய்ச்சிகையும் எனலாம்,இது இங்கிலாந்து பாரிஸ்டர் சம்மேளனம் நீதிபதிகளுக்கு அவர்களின் மாட்சிமையை காக்க விதித்த சீருடை விதி (dress code) எனலாம் .
ஒரு நீதிபதி தனது நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்.
ஒரு நீதிபதியின் பொய்ச்சிகை (wig) அவருக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்குகிறது மற்றும் சார்பு இல்லாத ஒரு அடையாளத்தை உருவாக்கும் பொருட்டு அவரை மூன்றாவது நபராகவே நீதிமன்றத்தில் முன்வைக்கிறது.
இதுவே நீதிமன்றத்தில் பொய்ச்சிகை அறிமுகப்படுத்தப்பட்டதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று,
விக் அணிவதற்கான மற்றொரு காரணம் நடைமுறையில் அநாமதேயத்தை பராமரிப்பதாகும். நீதிபதிகளின் தோற்றம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளால் பாதிக்கப்படக்கூடாது,அச்சுருத்தல் நேரக் கூடாது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும்போது நீதிபதிகள் தங்கள் பெயர் தெரியாமல் செயல்பட வேண்டும் என்பதால் my lord என்கின்றனர், வக்கீல்கள் மற்றும் வழக்குகளின் உண்மைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, விக் அணிவது வாடிக்கையாளர்களுடன் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் அநாமதேய நடத்தையை முன்னெடுக்கிறது,
பொய்ச்சிகை உதவியால் நீதிபதியின் தனிப்பட்ட வாழ்க்கை வழக்கின் தீர்ப்பை பாதிக்காது. எனவே, பொய்சிகைகள் ஒரு நடுநிலையான, நியாயமான நபராக செயல்பட வைக்கும், பகுத்தறிவு முடிவை எடுக்க வைக்கும் , மூன்றாவது நபராக ஒரு நீதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.