ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976) திரைப்படத்தில் வரும் ஆண்டவன் இல்லா உலகமிது பாடல் அற்புதமான பாடல், இலங்கை மற்றும் சென்னை வானொலியில் அன்றாடம் ஒலிபரப்பப்பட்ட பாடல், தமிழ் சினிமாவில் பாடல்களை அழகாக படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் s.p.முத்துராமன் அவர்கள், இந்த பாடலை அத்தனை அழகாக எளிமையின் அழகியலாக படமாக்கியிருப்பார், இளம் காதலர்களான கமல்ஹாசன் மற்றும் சுஜாதா வார இறுதியில் பிக்னிக் சென்று நீர்நிலையில் படகில் இருந்து தீவுக்கரையில் இறங்குகையில் வரும் பாடல் இது.
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள், V.தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் இசை,வாணி ஜெயராம் , TMS அவர்கள் பாடியது.
புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட சுண்ணாம்பாற்று காயல் மிகவும் அழகிய சுற்றுலாத் தளம், இன்றும் நன்றாக பராமரிக்கப்படுகிறது என்பதை படங்களில் காணவே அத்தனை மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த பாடலில் வரும் பழைய அலங்கார வளைவு செங்கற் கட்டுமான பாலம் 1864 ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சு காலனி அரசால் கட்டப்பட்டது,இன்று அதன் அருகில் புதிய காங்க்ரீட் பாலம் கட்டி அதில் வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது .
கைகொடுத்த தெய்வம் படத்தில் சுந்தர தெலுங்கினில் பாடலில் மனசுகிநீகோசம் வரிகள் வரும் காயல் காட்சி இங்கே படமாக்கப்பட்டது, தூரத்து இடிமுழக்கம் படத்தில் துவக்கத்தில் வரும் படகு போட்டி இங்கே படமாக்கப்பட்டது, நம் சென்னையில் பிரம்மாண்டமான அடையாற்று காயல் உண்டு, நாம் அதை கடந்த நாற்பது வருடங்களில் நிரம்ப பாழடித்து விட்டோம், இன்று டெட்டனஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தான் இந்த அடையாற்றில் ஒருவர் படகு சவாரி செல்ல முடியும் என்ற நிலை உள்ளது, அடையாற்றின் நீர் அத்தனை திடமாகி விட்டது,இந்த நீரில் துடுப்பிடுவதும் மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது,இதனால் உலகில் உள்ள அனைத்து boat club rowing போட்டிகளில் துடுப்பிடுவதற்கு மிகவும் சவால் மிகுந்த நீர்நிலையாக அடையார் மாறிவிட்டது.