மூடுபனி படம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது, இசைஞானியும் பாலு மகேந்திராவும் முதன் முதலாக இயக்குனர் இசையமைப்பாளராக இணைந்த படம்,
இசைஞானிக்கு 100வது படம்,படத்தில் மூலக்கதைக்கு ராஜேந்திரகுமார் எழுதிய `இதுவும் ஒரு விடுதலைதான்` நாவலை தழுவியது என டைட்டில் கார்டில் நன்றி போட்டிருந்தார் பாலு மகேந்திரா,
ஆனால் தன் ப்ளாக்கில் அது ஹாலிவுட் திகில் சினிமாவின் பிரம்மாவான ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்குக்கு செய்த மரியாதை என சொல்லியிருந்தார். படத்தின் சிறப்பம்சம் ஒளிப்பதிவு தான் ,
பெங்களூரு நகரம்,ஊட்டியின் பகலின்,இரவின் அழகை அப்படி அள்ளி வந்திருந்தார். 1980களுக்கு மிகச்சிறப்பான ஒளிப்பதிவு உத்திகள் அவை.
படம் நடிக்கையில் இவருக்கு மனைவியாகியிருந்த ஷோபாவுக்கு இது கடைசிப் படம்,டைட்டில் போடுகையிலேயே அம்முவாகிய ஊர்வசி- ஷோபா மகேந்திராவுக்கு அஞ்சலிகள் என போட்ட இடம் நான் கலங்கி விட்டேன்,
ஷோபா இறக்கையில் அவருக்கு வெறும் 17 வயது தான் எனப் படிக்கையில் யாருமே கலங்கிவிடுவார்கள். அப்போது பசி படத்துக்காக அவருக்கு ஊர்வசி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது,
அவர் குழந்தைப் நட்சத்திரமாக தன் நடிப்பு வாழ்க்கையை துவக்கியவர் தன் 17 வயது வரை மலையாளம் தமிழ் என ஓய்வு ஒழிச்சலின்றி நடித்திருக்கிறார். அது அசுர உழைப்பு என்று சொன்னால் மிகையில்லை. அவரின் ஃபில்மோக்ராபியை அவசியம் பார்க்கவும்.
அவர் மலையாள சினிமாவிலும் கன்னட சினிமாவிலும் இன்றும் கொண்டாடப்படும் ஒரு நடிகை. ஷோபா ஒரு சாதாரண நடிகை அல்ல,எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும் ஷோபாவின் இடத்தை பிடிக்கவோ, அவர் செய்த கதாபாத்திரங்களின் அருகில் செல்லவோ யாரும் இன்னும் பிறக்கவில்லை,
இதில் ஒரு படித்த நகரத்துப் பெண்ணாக அருமையாக நடித்திருந்தார். இதில் கல்கத்தா என்.விஸ்வநாதன் [மூன்று முடிச்சு ஸ்ரீதேவியின் கணவர்] இவரின் எதிர்கால மாமனாராக,போலீஸ் கமிஷனராக நடித்திருந்தார்,
அவரின் வசனங்களை அவரே எழுதிக்கொண்டார் போல, பேராசிரியர் என்பதால் முக்கால் வீசம் ஆங்கிலம் தான், வழக்கம் போல அவரது பைப் பிடிக்கும் ஸ்டைல் இதிலும் உண்டு,
பானுச்சந்தர் ஷோபாவின் காதலனாக,முக்கிய சைக்கோ வேடத்தில் பிரதாப் போத்தன், அவருக்கு குரல் பாலு மகேந்திரா எனப் படித்தேன்,
இதில் நடிகர் மோகன் சிறு போட்டோக்ராப்பர் வேடத்தில் அறிமுகம்,1978ல் பாலு மகேந்திராவின் கோகிலா-கன்னடத்தில் அறிமுகமாகியிருந்தார்,
இவருக்கு எஸ்வீ சேகரின் இரவல் குரல், வெண்ணிற ஆடை மூர்த்தி மகேந்திரன் படத்தில் பிஸியாக இருந்ததால் அவர் நடிக்க வேண்டிய அப்பட்டமான படுக்கையறை காட்சி இவருக்கு வாய்த்தது போல காட்சிகள் அமைந்திருந்தது.
இது தான் இவரின் அதிகாரபூர்வமான தமிழ் சினிமா பிரவேசம், காந்திமதி ஒரு விலைமங்கைத் தரகர். இந்தப்படம் கிராமத்து கொட்டகைகளில் ஓடியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு,
படத்தின் கதா பாத்திரங்கள் மெட்ரோ நகரத்தின் மேல்தட்டு மாந்தர்கள் என்பதால் மிகவும் சோஃபிஸ்டிக்கான ஸ்லாங்குடன் ஆங்கிலம் பேசுகின்றனர்,அதே போலவே பாசாங்கில்லாத கன்னடமும், சப் டைட்டில்கள் எங்குமே கிடையாது,
படத்தின் ஜீவன் அதன் பின்ணனி இசை,மற்றும் என் இனிய பொன்னிலாவே பாடல்,
படத்தின் குறைகள் என்றால் சவசவவென்ற நீளம் 2மணி-20 நிமிடங்கள் , மிக மெதுவான திரைக்கதை,இந்த ஆமை வேகம் வேண்டுமென்றே திணித்தாற் போல இருந்தது அது உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற அழகியல் படங்களுக்கு இருக்க வேண்டிய மித வேகம், இதற்குப் பொருந்தவில்லை.
வசனங்களோ மிகவும் குறைவு ,ஆனால் ஏனையவை அழுத்தமற்றவை, எல்லோருமே நல்ல நடிகர்கள் ஆனால் அனைவருமே வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என பேசாமல் மிக மெதுவாக மென்று துப்பும் ஸ்டைலில் தான் வசனத்தை உச்சரிக்கின்றனர்.
பாடல்கள் வைக்க எத்தனையோ சிச்சுவேஷன்கள் இருந்தும் வெறும் ரெண்டரை பாடல்கள் தான்,
Sing Swing என்ற அற்புதமான டான்ஸ் நம்பர் மூடுபனி படத்தில் இருந்து, இப்பாடலை எழுதியவர் இசைஞானியின் ஆஸ்தான பியானிஸ்டான விஜிமானுவல் அவர்கள்,
பாடியவர் கல்யாண், முழுக்க ஆங்கிலத்தில் வரும் பாடல், அன்றைய பப்களில் பாடப்பட்ட டிஸ்கோ நம்பர் ட்ரெண்டை தமிழில் பாசாங்கின்றி பிரதிபலித்தது,
வரிகளை உற்று கவனியுங்கள், கல்யாண் காளி மற்றும் தர்மயுத்தம் உள்ளிட்ட படங்களில் வரும் டிஸ்கோ போர்ஷன்கள் பாடியவர், இதில் முழுப் பாடல் பாடியுள்ளார்,
இது இசைஞானியின் நூறாவது படம்,இசைஞானி இயக்குனர் பாலுமகேந்திராவுடன் இணைந்த முதல் படம்,அதன் பின்னர் பிரிவே இல்லை,
இதில் 13 வயதில் ஏ.ஆர். ரஹ்மானை விஜிமானுவல் அவர்கள் இசைஞானியிடம் கீபோர்டு வாசிக்க அழைத்து வந்தார், அதன் பின்னர் சுமார் 250 படங்களுக்கு அவர் இசைஞானியிடம் கீபோர்ட் வாசித்துள்ளார் ,
சிகப்பு ரோஜாக்களைத் தொடர்ந்து மூடுபனி தமிழ் சினிமாவில் சைக்காலஜிக்கல் த்ரில்லருக்கான இலக்கணத்தை வரையரை செய்தது, இதில் பாலுமகேந்திராவின் ஷாட் கம்போசிஷன்கள் தமிழ் சினிமா திரையாக்கத்தில் அதுவரை கொண்டிருந்த வழமையான போக்கை மாற்றி அமைத்தது,
ஃப்ரெஞ்ச் நியூவேவை சரியாக உள்வாங்கி உருவான படம் இது.பக்கம் பக்கமாக வசனங்கள் சொல்லாததை காட்சிகளால் சொன்ன படம், தமிழ் சினிமாவில் பின்னணி இசையில் pause களை அழுத்தமாக கறாராக பின்பற்றிய படம்.
படம் வந்த போது வெண்திரையில் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்,காரணம் ட்ரெண்ட் செட்டிங் visuals . நடிகை ஷோபாவின் கடைசிப் படம்.நடிகர் பிரதாப் போத்தனுக்கு பாலுமகேந்திராவுடன் அழியாத கோலங்களுக்கு அடுத்து அமைந்த இரண்டாம் படம், ஜாக்பாட் போன்ற கதாபாத்திரம் அவருக்கு ,மூடுபனி கொண்ட பெங்களூர் மெட்ரோபாலிட்டன் முற்பாதிக்கும், ஊட்டி பிற்பாதிக்கும் கதைக்களம் இதில்.
இதில் என் இனிய பொன்நிலாவே பாடலை தாஸேட்டா பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார், பருவ காலங்களின் கனவு, நெஞ்சில் பளிங்கு போன்ற உந்தன் நினைவு பாடலை மலேசியா வாசுதேவன் பாடி பிரமாதப்படுத்தியிருப்பார், இரண்டும் கங்கை அமரன் எழுதியது.
படத்தின் பெயர் போடுகையில் வரும் பாடலில் பெங்களூரு வீதிகளில் பைக்கில் செல்லும் பானுச்சந்தர் , ஷோபா ஜோடியை போட்டி போட்டுக்கொண்டு உடன் சென்று படம் பிடித்திருப்பார்,நீண்ட காட்சி அது,அந்த வேகம் கடைசி வரை இருந்திருந்தால் இப்படம் உண்மையிலேயே பாலுமகேந்திராவின் ஃபில்மோக்ராபியில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கும்
படம் எனக்குப் பிடித்திருந்தது,ஆனால் இதை சிலர் ஹிட்ச்காக்கின் சைக்கோவுடன் ஒப்பிட்டதை தான் பொறுக்க முடியவில்லை.சைக்கோ படத்தின் ஷவர் காட்சி போன்றோ?க்ளைமேக்ஸ் காட்சி போன்றோ ஒரு காட்சியையும் இதில் குறிப்பிடமுடியவில்லை
இதில் கடைசிக் காட்சியில் பிரதாப்பின் அம்மாவின் எலும்புக்கூடு கூட அப்பட்டமாக லேபில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் எலும்புக்கூடு ரேஞ்சுக்கு இருந்ததை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
#மூடுபனி,#பாலு_மகேந்திரா