தனது ஒரு கண் பழுது பட்ட சோதனையையும் சாதனையாக்கி அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்கள் பணியாற்றினார், ஒரு கண்ணில் மட்டும பார்வை என்பது மிகவும் கடினமானது, கலைஞரைப் பிடிக்காதவரும் படிக்க வேண்டிய ஒன்று.
ஆயுர்வேதத்தில், லீச் சிகிச்சை (Hirudotherapy) என்பது கண் நோய்களை நிர்வகிப்பதற்கான குறைந்தபட்ச ஊடுருவும், இயற்கையான, பாராசர்ஜிக்கல் செயல்முறை. இது வீங்கிய கண்ணில் உள்ள இரத்தக்கட்டை ,வீக்கத்தை அகற்றும் செயல்முறையாகும். Conjunctivitis, Schleritis, Keratitis, Glaucoma, periorbital hematoma போன்ற கண்ணின் அனைத்து வகையான அழற்சி நோய்களுக்கும் இந்த சிகிச்சையானது பாதுகாப்பான, செலவு குறைந்த, கிட்டத்தட்ட வலியற்ற முறையாகும்.
கலைஞருக்கு ஏற்பட்ட பிரச்சினை Secondary glaucoma. அடிபட்டதால் கண்ணில் உள்ள திரவ அழுத்தம் மிக அதிகமாக அதிகரித்து தாங்க முடியாத வலி ஏற்படும். அன்றைய காலகட்டத்தில் கண் அழுத்தத்தை குறைக்க இப்பொதுள்ள நவீன சிகிச்சை முறைகள் இல்லை. கருப்பு அட்டைகளை எடுத்து கண்ணின் மேலே புருவத்தை ஒட்டினாற்போல விடுவார்கள். அந்த அட்டை ரத்தத்தை உறிஞ்ச உறிஞ்ச நோயாளிக்கு வலி குறையும். இன்றும் எழும்பூர் அரசு கண்மருத்துவமனையில் அட்டைகள் வளர்க்கப்பயன்பட்ட கருப்பு அட்டைக்குளம் என்ற ஒன்று இருப்பதை காணலாம். கலைஞரும் இந்த பிரச்சினைக்காக அட்டைகளுக்கு தனது ரத்தத்தை உறிஞ்ச கொடுத்தவர் தான்.
கிளாக்கோமாவினால் ஏற்படும் வலியை வார்த்தையால் விவரிக்க முடியாது. "ஐயோ எனக்கு பார்வை இல்லாட்டியும் பரவால்ல, என் கண்ணை எடுத்துடுங்க " என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்லுமளவிற்கு படுத்தி எடுத்துவிடும். கலைஞருக்கும் அதனால் தான் கண்ணின் ஒரு பகுதி நீக்கம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஐம்பதாண்டு காலமாக கலைஞர் ஒரு கண் பார்வையை வைத்துக்கொண்டே இத்தனையையும் சாதித்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
ஒரு கண்ணை மட்டும் கையால் மூடிக்கொண்டு மாடிப்படிக்கட்டு இறங்கிப்பாருங்கள் தெரியும். இரண்டு கண்ணின் பார்வைகளும் ஒன்றிணைந்த Binocular single vision என்ற இயற்கையின் கொடையை நம்மால் அப்போது புரிந்துகொள்ள முடியும். ஒரு கண்ணில் பார்க்கும்போது முப்பரிமாண பார்வை கிடைக்காது. மிக வேகமாக நம்மால் இயங்கமுடியாது. இந்த விஷயத்தில் அவருக்கே உரிய பாணியில் சொல்லவேண்டுமென்றால் கலைஞர் சோதனையின் கொம்புடைத்து சாதனை படைத்திருக்கிறார். ஒரு மிகப்பெரிய இழப்பிலிருந்தும் எப்படி மீண்டு எழுச்சி பெறுவது என்பதை இளைஞர்கள், எழுபது வருடங்களுக்கும் மேலாக எழுதி வந்த கலைஞரிடம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும்.
கலைஞருக்கு விபத்து நடந்த சம்பவம் பற்றி கலைஞரே எழுதியது.
1953ஆம் ஆண்டு நான் சந்தித்த கார் விபத்து பற்றியும், அதனால் என்னுடைய ஒரு கண் பாதிக்கப்பட்டது பற்றியும், அந்தப் பாதிப்பு இன்று வரையில் என்னைத் தொல்லைப்படுத்தி வருவதைப் பற்றியும் விவரிக்க விரும்புகிறேன்.
1953ஆம் ஆண்டு முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழாப் பொதுக் கூட்டம். அதில் கலந்து கொள்ள சென்னையில் மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டேன். குறித்த நேரத்தில் பரமக்குடி போய்ச் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகில் சென்று கொண்டிருந்த போது, கொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால், கார் பழுதாகி, வேறொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டேன். என்னுடன் காரில் அன்பில் தர்மலிங்கம், திருச்சி பராங்குசம், திருவாரூர் தென்னன் ஆகியோர் வந்தார்கள். மேடைக்குச் செல்லும் வரை மதுரை முத்து கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். நான் போனதும் பேசத் தொடங்கி, இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம். திரும்பும் போது அசதியின் காரணமாக நானும், நண்பர்களும் கண்ணயர்ந்து விட்டோம். வாடகைக் காரை ஓட்டிய தோழரும் சற்றுக் கண்ணயர்ந்து விட்டார். அதனால் திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில் மோதி, மைல் கல்லும் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக் கொண்டு நின்றது. இதற்கிடையே காருக்குள் இருந்த நாங்கள் உருண்டோம். நண்பர்களுக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் என் மூக்குக்குள்ளேயிருந்து ரத்தம் "குபு குபு" எனக் கொட்டியது. முதல் சிகிச்சை செய்து கொண்டு திருச்சி வந்து சேர்ந்தோம். மறுநாள் காலையில் முகமே வீங்கி, என்னுடைய இடது கண்ணில் வலி தொடங்கியது.
வலியோடு திருச்சி நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சென்னை திரும்பி, நண்பர் முல்லை சத்தி பிடிவாதமாக என்னை வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் மருத்துவர் கண்ணிற்குள் ஒரு சிறு நரம்பில் கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது எழுதவோ, கூட்டங்களில் பேசவோ, படிக்கவோ கூடாது என்று கூறினார். பொது வாழ்வில் ஈடுபட்ட எனக்கு அதையெல்லாம் கடைப்பிடிக்க முடியுமா என்ன?
அரசியலிலும், கலை உலகிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., நடிகமணி டி.வி.நாராயணசாமி ஆகியோரின் விருப்பத்தை நிறைவேற்ற, சென்னையில் ஓட்டல் ஒன்றில் "மணிமகுடம்" நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று என் இடது கண்ணில் ஒரு ஈட்டி பாய்ந்தது போன்ற வேதனை! கையில் இருந்த பேனாவையும், தாளையும் வீசி எறிந்து விட்டு, "அய்யோ" என்று அலறினேன்.
எப்படியோ வீடு வந்தேன். வீட்டார் என்னைப் பார்த்துக் கதறினார்கள். இடது கண் பெரிதாக வீங்கி விட்டது. குத்தல் வலி உயிரைப் பிளந்தது. தாங்க முடியாத வேதனை. சென்னையில் மிகச் சிறந்த மருத்துவர் முத்தையா வந்து பார்த்து விட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றார். கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பன்னிரண்டு முறை அறுவைச் சிகிச்சை நடத்தினார்.
1953-54ஆம் ஆண்டிலிருந்து அந்தக் கண் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வேதனைகளைத் தாங்கிக் கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தேன். 1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஏற்பட்ட பயங்கரக் கார் விபத்து ஒன்றில் நான் சிக்கி, கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று. அவ்வப்போது மருத்துவர்கள் முத்தையா, ஆப்ரகாம், இராமலிங்கம், மதுரை வெங்கடசாமி போன்றவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதிலும், கண்ணில் ஊசியால் குத்துவது போன்ற வேதனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஏன், அந்த வலி இன்றும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.
#DMK2016 #Kalaignar #Karunanidhi