ஸ்ரீ கிருஷ்ண பருந்து மலையாள திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியானது , மலையாள எழுத்தாளர் P.V. தம்பி அவர்கள் எழுதிய மாய யதார்த்த கதை இது,மலையாள மண்ணில் யட்சிணி பற்றிய நாட்டார் கதைகளுக்கு பஞ்சமில்லை,மலையாள சினிமாவில் யட்சிணி பற்றி நிறைய படங்கள் வந்ததுண்டு, இப்படம் அதற்கெல்லாம் முன்னோடி. இக்கதையை தமிழ் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான A.வின்சென்ட் அவர்கள் ஒரு gothic horror thriller ஆக தரமாக இயக்கியிருக்கிறார் , படத்தின் ஆதாரசுருதியான மிரட்டி மனம் மயக்கும் இசையை k.ராகவன் மாஸ்டர் தந்திருக்கிறார்,
A.வின்சென்ட் மாஸ்டர் அவர்களின் மகன் அஜயன் வின்சென்ட் எளிமையின் அழகியலாக ஒளிப்பதிவு செய்துள்ளார்,
எனவே படைப்பு பிரம்மாண்டம் என்று களமிறங்கி எங்கும் பல்லிளிக்கவில்லை,
மூக்குடைபடவில்லை, அழகியலே பிரம்மாண்டம், நல்ல கதையே அதற்கு காட்சிகளை வரித்துக் கொள்ளும் என்று படம் உணர்த்துகிறது.
இரண்டரை மணி நேரம் படத்தை கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது.
இந்தப்படத்தில் மாயாஜாலம் நிரம்பியிருந்தாலும் கூட , நாயகனின் பாலியல் வேட்கை படத்தின் துவக்கம் முதல் கதையூடே இழையோடி முடிவு வரை நீளுவதால் இப்படம் வயது வந்தோருக்கு மட்டுமானது.
இப்படத்தில் தமிழ் நடிகர் G.சீனிவாசன் (புதிய வார்ப்புகள் வில்லன்) சூரக்காற்று பட்டாத்ரி என்ற அசகாய மந்திரவாதியாக தோன்றியுள்ளார், தமிழ் நடிகை காஞ்சனா நாயகனின் அம்மா குன்யிக்குட்டியாக தோன்றியுள்ளார்,
இப்படத்தின் கதை:-
மன்னர்கால கேரளத்தில் புத்தூர் இல்லம் ஒரு பாரம்பரிய தரவாட்டுக் குடும்பம், இது தாய்மாமனிடமிருந்து மருமகனுக்கு வழி வழியாக குடும்ப மாந்த்ரீக வித்தை பயிற்றுவிக்கப்பட்டு, ஊர் நலத்துக்கு வேண்டி மட்டுமே இக்குடும்பம் வாழ்கிறது, எந்த பாம்பு தீண்டினாலும் தெய்வ சங்கல்பத்தால் உடனே தாந்த்ரிக்கு ஞான திருஷ்டியில் தெரிகிறது, அவர் கடித்த பாம்புக்கேற்ற மருந்தை முறிவாக தந்து பாம்புக்கடி பட்டவரை பிழைக்க வைத்து விடுகிறார்.
இவர்களின் குலதெய்வம் கருட பகவானின் ஆசீர்வாதத்தின் கீழ், நேர்மறை தாந்த்ரீக மந்திரங்களை மட்டுமே இக்குடும்பம் முன்னெடுக்கிறது ,
இவ்வீட்டைக் காக்கும் இக்கழுகு ஸ்ரீ விஷ்ணுவின் வாகனமான கிருஷ்ணப் பருந்தாகும், இவ்வீட்டின் தாந்த்ரி கருடனை வழிபட்டு புனித நீரைப் பயன்படுத்தி விஷ பாம்பு கடித்ததால் உயிருக்கு போராடுபவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமைக்காக உள்ளூர் வெளியூர் என பேதமின்றி பரவலாக மதிக்கப்படுகிறார்.
குடும்பத்தின் தற்போதைய தாந்த்ரீக மந்திரவாதியான பப்பு (ஜகந்நாத வர்மா), அவரது மரணத்தை முன்கூட்டியே கணித்தவர், அவருடைய எல்லா தாந்ரீக அறிவையும் அவரது மருமகன் குமாரன் தம்பிக்கு (மோகன்லால்) மாற்ற முடிவு செய்கிறார்.
இந்த தாந்த்ரீக வித்தைக்காரர் தீவிர பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்து விரதம் இருக்க வேண்டும் என்பதால், மது , மாது , கஞ்சா போதையில் மட்டும் சதா நேரம் செலவிடும் குமாரன் தம்பி , இந்த தாந்த்ரீகன் என்ற மிகப்பெரிய பொறுப்பை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறார்.
பப்பு தன் தாந்த்ரீக அறிவு முழுவதையும் குமரனுக்கு மாற்றிவிட்டு இறந்து விடுகிறார்.
இதன் மூலம் பெயரெடுத்த பெண்கோந்தனான குமாரன் பாம்புக் கடியை குணப்படுத்துவதற்கும் தீய சக்திகளை அண்டாமல் விரட்டுவதற்கும் பிரபலமான உள்ளூர் மந்திரவாதியாக விரைவில் மாறுகிறான்.
தாய்மாமனின் கட்டளைப்படி அவன் இறந்த 41 ஆம் நாள் இரவு குமரன் பாரம்பரிய மந்திரம் பற்றிய கையெழுத்து ஓலைச்சுவடிப் பிரதிகளை படிப்பதற்கு எடுத்து வர தன் மூதாதையரின் பாழடைந்த அரண்மனைக்குச் செல்கிறான்.
ஓலைச்சுவடிகளை எடுத்துக்கொண்டு திரும்பி வரும்போது, குமாரனைக் கவர முயலும் லட்சுமிக்குட்டி யட்சிணியை எதிர்கொள்கிறான் குமாரன்.
சில வருடங்களுக்கு முன் குமாரனுடன் தரவாட்டு வீட்டில் பரணில் வைத்து உடலுறவில் ஈடுபட்டு வெளியேறுகையில், பணிப்பெண் லட்சுமிக்குட்டி அவ்வீட்டின் தாந்த்ரியுடைய பிரம்மச்சர்யத்தை காக்கும் ஐந்து தலை பாம்பு கடித்து உயிரிழந்திருக்கிறாள்.
அவளுக்கு குமாரன் மீதான அளவு கடந்த ஆசையால் அவள் குமாரனை விட்டுப் பிரியாமல் அவன் போகிற இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து யட்சிணியாக சென்று சல்லியம் செய்கிறாள்.
குமாரன் தனது புதிய மந்திர சக்தியை பிரயோகித்து லட்சுமிகுட்டி யட்சிணியை கட்டுக்குள் வைத்து ஒரு தனி அறைக்குள் பூட்டி பந்தனம் செய்து விடுகிறான்,
லட்சுமிக்குட்டி யட்சிணி குமாரனிடம் தீவிர பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கும் வரை அவனைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து அந்த அறைக்குள் தானே சென்று அடைந்து கொள்கிறாள்.
பக்கத்து ஊரின் காளி உபாசகன் , அதர்வன மந்திரவாதியான சூரக்காட்டு பட்டாத்திரி துர்மந்திரவாதி ,
அவன் குமாரனின் மந்திர சக்திகளை அழித்து அவன் புகழை அழித்து தானே மிகப்பெரியவன் என்று தன் ஆதிக்கத்தை அவ்ஊரில் நிறுவ விரும்புகிறான்,
அவன் தூமா என்ற அரக்கனுடன் ஆலமரத்தில் வசிக்கும் வட-யக்ஷியை வணங்குபவன்.
குமாரனை அழிப்பதற்கு பேய்கள் முதல் பெண்கள் வரை தீவிரமாக ஏவி விட்டு பிரயோகிக்கிறான்,
குமாரனின் பிரம்மச்சர்யத்தை கலைத்து விரதம் நிலைகுலைக்க எல்லாவற்றையும் முயற்சிக்கிறான், ஆனால் குமாரன் தனது குடும்ப தெய்வங்கள் கருடன், ஹனுமன் துணையால் லாவகமாக அதிலிருந்து தப்பிக்கிறான்.
இதற்கிடையில், குமாரனிடம் பேய் ஓட்டுவதற்கு அழகிய இளம்பெண் பானுமதி (பவித்ரா) அழைத்து வரப்படுகிறாள். முதல் பார்வையிலேயே குமாரன் பானுமதியால் ஈர்க்கப்படுகிறான் ,பேய் விரட்டும் போது பானுமதி மேல் ஆடைக்கு போர்த்தியிருந்த மேல் முண்டை வெறியுடன் அவிழ்த்து எறிய, அவளின் திமிரிய அங்கங்களை கண்டு விக்கித்து கடைவாயில் எச்சில் வழிய உறைந்து போகிறான் குமாரன், அவள் தரையில் மயங்கிச் சரிய, பானுமதியின் அம்மா அவள் மார்பகங்களை துண்டை வைத்துப் போர்த்துகிறாள்.
அதுமுதல் குமாரனது கனவில் தோன்றி அவனை தொந்தரவு செய்யத் தொடங்குகிறாள் பானுமதி.
விரைவில் குமரன் தனது உணர்ச்சிகளின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விடுகிறான்,
லட்சுமிக்குட்டி யட்சிணியின் அழகிய தங்கையான நாணிக்குட்டியை (அருணா) பல முறை சுகித்த தைரியத்தில் நடுநிசியில் அவள் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டி அவள் கையைப் பிடித்து உறவுக்கு அழைக்கிறான் குமாரன், அவள் ஐந்து தலை நாகத்துக்கு பயந்தவள்,தன் அக்காவின் சாவுக்கு குமாரன் காரணம் என அறிந்தவள் ஆதலால், ஊரரிய எனக்கு ஒரு புடவை கொடு, ஊரறிய எனக்கு தாலி கொடு, நீ சொன்ன படி கேட்கிறேன் என கறாராக சொல்லி கதவை சாத்துகிறாள்.
வேறு வழியின்றி உள்ளூர் விபச்சாரியான மீனாட்சியை (பிரமீளா) தேடிப்போன குமாரன், அவள் எத்தனை பயந்து மறுத்தும் விடவில்லை, தனக்கு மூன்றாம் நாள் என்று சொல்லியும் கேட்காமல் முரட்டு வல்லுறவு கொள்வதன் மூலம் தனது பிரம்மச்சரியத்தை முறித்துக் கொள்கிறான்.
உறவு முடிந்தவுடன் கருடனை கைகூப்பி என்னை மன்னித்துவிடு என்கிறான், மீனாட்சி என் முதுகை உடைத்துவிட்டு கருடனிடம் மன்னிப்பு கேட்கிறாயா? என அலுத்துக் கொள்கிறாள்.
குமாரனின் மாயாஜால சக்திகளின் சிதைவு இங்கே தொடங்குகிறது.
குமரன் தனது பிரம்மச்சரியத்தை மீறியதால், லக்ஷ்மிக்குட்டி யட்சிணி அவன் வீட்டிற்குள் சுதந்திரமாக சுற்றி அலையத் துவங்குகிறது.
அம்படக் கள்ளனான குமாரன் மீண்டும் தனது மாயாஜால சக்தியைப் பிரயோகித்து, அவளை சமாதானப்படுத்தி தேற்றி, தனது வீட்டின் மர அறைக்குள் அடைத்து பூட்டி பந்தனங்கள் செய்து வைக்கிறான்.
குமாரன் தனது பிரம்மச்சரியத்தை மீறியதால், அவனால் இனி கருடனை அழைக்க முடியாத நிலை, அவனது மந்திர சக்திகளை இழந்து விடுகிறான், எந்த பாம்புக்கடிக்கும் அவன் மருந்து பலிப்பதில்லை, எந்த பேயையும் அவனால் ஓட்ட முடிவமில்லை.
பேரழகி பானுமதியை மணம் முடிக்கலாம் என்று அவள் தந்தையிடம் சென்று பெண் கேட்க, அவர் இனி நீ மாந்த்ரீகத்துக்கு பெரும் பணம் பொருள் வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்,அது குடும்பத்தார் கொள்கைக்கு எதிரானது என்றாலும் சம்மதிக்கிறான் குமாரன்.
இழந்த புகழை மீட்கவும் பணம் நிறைய சம்பாதிப்பதற்காகவும் தன் குடும்பத்தார் படிக்கவே கூடாது என தடை செய்யப்பட்ட அதர்வன வேதங்களை தாய் மாமனின் ஓலைச் சுவடிகளை படித்து கற்றறிந்து வாராஹியை வேண்டி சூனியம் பலவும் செய்யத் தொடங்குகிறான் குமாரன், இது புகழ் பணத்துடன் தன்வினையையும் உடன் கொண்டு வருகிறது.
குமாரன் பானுமதி திருமணத்திற்கு முந்தைய நாளில், குமாரன் லட்சுமிக்குட்டியின் ஆவி உருமாறிய யட்சிணி போன்ற தோற்றத்தால் ஒரு ஷணம் கவரப்பட்டு அவளுடன் உடலுறவில் ஈடுபட்டுவிடுகிறான், முடிவில் தனக்கும் பானுமதிக்கும் திருமணம் நடக்கப்போவதை பகிர்ந்து இனி என்னை சல்லியம் செய்யாமல் விலகிவிடு , நான் உன்னை இப்போதே விடுதலை செய்து விடுகிறேன் எனக் கெஞ்சுகிறான் குமாரன், லட்சுமிக்குட்டி யட்சிணியோ மிகுந்த அசூயை கொண்டவள் குமாரனை வேறு எந்தப் பெண்களுடனும் உறவாட ஆண்மையற்றுப் போவாய் என்று சபிக்கிறாள்.
இதனால் மனமுடைந்த குமாரன் தாயிடம் சென்று திருமணத்தை நிறுத்த கேட்கிறான், அவள் முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு? ஏன் இப்போது விசனம் எனத் தேற்றுகிறாள்.
இப்போது குமாரனின் தாய், சகோதரி (சுகுமாரி ) சகோதரியின் சிறு வயது மகன்,சிறு வயது மகள் என அனைவரையும் கொல்ல சூரக்காட்டு பட்டாத்திரி வட யக்ஷி மற்றும் தூமா அரக்கனை ஏவிவிடுகிறான்.
குமாரனின் குலதெய்வபக்தி மிக்க தாயை வாத யக்ஷியிடம் இருந்து கருடன் காப்பாற்றி விடுகிறது,
குமரனின் சிறு வயது மருமகளை தூமா அரக்கன் துரத்தி எரித்தும் விடுகிறான்.
சிறுவயது மருமகன் இடுப்பில் மந்திர தாயத்து அணிந்திருந்ததால் காப்பாற்றப்படுகிறான்.
குமாரன் பானுமதியை திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வரும் போதே அக்கா மகள் இறந்த துக்க செய்தியை எதிர் கொள்கிறான் குமாரன்,
குழந்தையின் மரணம் குமாரனின் தாயை தரவாட்டு வீட்டை விட்டே வெளியேற வைக்கிறது.
லட்சுமிக்குட்டியின் சாபம் காரணமாக, குமாரன் பானுமதியுடன் உடலுறவைத் தவிர்க்க முயற்சிக்கிறான்,
இது பானுமதிக்கு குமாரன் மீது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.குமாரனுக்கும் லட்சுமிக்குட்டி யட்சிணிக்கும் உள்ள உறவை அவள் நேராக காண நேர்கிறது.
இரவு, லட்சுமிக்குட்டியை சாதாரணப் பெண் என்று தவறாக நினைத்துக்கொண்டு, மாயாஜால பந்தன தடைகள் செய்த பூட்டை தகர்த்து வெளிக்கொட்டாரத்திற்குள் நுழைகிறாள் பானுமதி.
அந்த நொடிக்கு காத்திருந்த லட்சுமிக்குட்டி யட்சிணி பானுமதியின் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து விடுகிறது.
அது முதல் குமாரனை தொந்தரவு செய்யத் தொடங்குகிறது, யட்சிணியை அழிக்க குமாரன் செய்த மந்திர முயற்சியால் பானுமதி கிணற்றில் விருந்து தற்கொலை செய்து இறக்கிறாள்.
விரக்தியடைந்த குமாரன் கருடன் மற்றும் குலதெய்வத்தை வணங்குவதை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்கிறான், தாய்மாமனின் ஓலைச்சுவடிகளை சிகப்புத் துணியில் சுற்றி பாழடைந்த அரண்மனையில் கொண்டு போய் வீசியும் விடுகிறான் , தனது தூரத்து உறவினரான துர்மந்திரவாதி குஞ்சாம்புவின் (பாலன் கே. நாயர்) சீடராகிறான்,
குமாரன் அது முதல் பன்றியின் தலை கொண்ட வாராஹி தேவியின் எதிர்மறையான ஆவி வார்தாலியை வணங்கத் தொடங்குகிறான்.
குஞ்சாம்பு தன் மரணத்தை ஞான திருஷ்டியில் கணித்தவன் தனது வித்தைகள் மொத்தத்தையும் குமாரனுக்கு தத்தம் செய்து தந்துவிட்டு உயிர் விடுகிறான், அவனை எரியூட்டுகிறான் குமாரன்.
அடுத்தடுத்து சூனிய சக்திகளின் உதவியுடன், குமாரன் தனது எதிரிகளை அழிப்பதில் வெற்றி பெறுகிறான், லட்சுமிக்குட்டி யட்சிணியை கல்லாக சமைத்து மரத்தடியில் பிரதிஷ்டை செய்கிறான், அதே போல் சூரக்காற்று பட்டாத்திரியை வாராஹியை வரவழைத்து ஏவி விட, வாராஹி அவனைக் கொல்ல எத்தனிக்கையில், அவனை கொல்லாதே தாயே,பைத்தியம் ஆக்கு போதும் என்கிறான் குமாரன், அது முதல் சூரக்காற்று பட்டாத்ரி ஊரறிந்த பைத்தியமாக வலம் வருகிறான்.
குமாரன் தனது மூதாதையரின் அரண்மனையில் தான் எறிந்து விட்டு வத்த கையெழுத்துப் ஓலைச்சுவடிப் பிரதிகளை கைப்பற்றி பாதுகாக்க அவனது பங்காளி சேகரன் தம்பி (எம்ஜி சோமன்) மற்றும் தன் தாய் உள்ளிட்ட உறவுகள் திட்டமிட்டுள்ளதை அறிகிறான்.
இது நடக்கக் கூடாது, குல வித்தை தன்னோடு போகட்டும் என பேராசை கொண்ட குமாரன்,
தனக்கு படிப்பித்த துர்மந்திரவாதி குஞ்யாம்பு இறக்கும் முன் தந்த எச்சரிக்கையை மறந்து அரண்மனைக்கு விரைகிறான்,
குமாரன் இப்போது வர்த்தாலியின் உபாசகனாக இருப்பதால் , கருடன் , அனுமன் ,வாராஹி உட்பட மற்ற அனைத்து தெய்வங்களையும் வணங்கும் உரிமையையும் அவர்களின் பூரண அனுக்கிரஹத்தையும் இழந்து விடுகிறான்.
குமாரன் அந்த பாழடைந்த அரண்மனைக்குள் நுழைந்தது தான் தாமதம்,சினம் மிகுந்த கிருஷ்ண பருந்து அந்தரத்தில் தோன்றி குமாரனைத் கண்களில் கொத்தி தாக்கி குருடாக்குகிறது.
குமாரன் அந்த கையெழுத்துப் ஓலைச்சுவடிப் பிரதிகளை எடுக்க முயற்சிக்கும்போது, காக்கும் தேவி அவன் முன்பாக தோன்றி தடுக்கிறாள். அவளை வர்தாலியின் உதவியுடன் எதிர்க்க முயற்சிக்கிறான் குமாரன், ஆனால் அனைத்து சக்திவாய்ந்த காக்கும் தெய்வத்தின் முன், வார்தாலி புறமுதுகிட்டு மறைந்து விடுகிறாள்.
காக்கும் தேவி குமாரனை சபித்தவள், அரண்மனைக்குத் தீ வைக்கிறாள்.
அங்கே கிருஷ்ணப்பருந்தின் கடுமையான கண்கொத்தி தாக்குதலால் கண்களிழந்து தீக்காயங்களால் உடல் வெந்து கீழே விழுந்த குமாரனை வீட்டார் மன்னித்து விடுகின்றனர்,தீ யாரையும் நெருங்க விடுவதில்லை, குமாரனின் சகோதரி மகன் பனிரெண்டு வயதுச் சிறுவன் தீக்குள் இறங்கி துணிந்து தாய்மாமனை தூக்கி எழுப்பி தோள் தந்து வெளியே இழுத்து வந்து மரணப்படுக்கையில் கிடத்துகிறான்.
மனம் திருந்தி லேசான குமாரன் குலமரபுப்படி தனது தாந்த்ரீக அறிவை மருமகனுக்கு மடைமாற்றித் தர மந்திரங்கள் கற்றுத் தர , ஆர்வமிகு மருமகன் சொன்ன வண்ணமே செய்ய ,குமாரன் ஓங்கி இறுதி மூச்சு விடுவதற்கும் மேலே அந்தரத்தில் மருமகன் மந்திரப் பிரயோகத்திற்கு ஸ்ரீ கிருஷ்ண பருந்து வருகையில் படம் நிறைகிறது.
நம் நடிகர் கமல்ஹாசன் போலவே மோகன்லால் எல்லா பரீட்சார்த்தங்களையும் இளம் வயதிலேயே நிகழ்த்திவிட்டவர்,தன் 24 வயதில் இந்த ஸ்த்ரீலோல துர்மந்திரவாதி கதாபாத்திரத்தை தத்ரூபமாக மிக அற்புதமாக செய்திருந்தார், ராஸலீலா (கன்னிவேட்டை) திரைப்படத்தில் கமல்ஹாசன் செய்தது ஒரு 100 வயது துர் மந்திரவாதி கதாபாத்திரம், அதே போன்ற பரீட்சார்த்த முயற்சியில் தோன்றி பிரமிக்க வைத்து விட்டார் மோகன்லால், எந்த நடிப்புப் பள்ளியும் செல்லாமல் கைகூடிய இத்தனை வகைதொகையான நடிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தி கட்டிப்போடுகிறது.
கவிஞர் பி.பாஸ்கரனின் வரிகளில் கே.ராகவன் மாஸ்டர் இசையமைத்த மூன்று அபாரமான பாடல்கள் மறக்க முடியாதவை.
"நிலாவிண்டே பூங்காவில்" என்ற அற்புதமான திகில் கலந்த மெல்லிசை பாடலை பாடகி லத்திகா பாடியுள்ளார்.
"மோதிரக்கை விரலுகள்" என்ற அற்புதமான பாடலை ஜானகியம்மா பாடியுள்ளார்.
"தாரகங்கள் கேள்குண்ணு " என்ற அற்புதமான பாடலை வாணியம்மா பாடியுள்ளார்.
இப்படத்தின் சப்டைட்டில் இல்லாத நல்ல பிரதி யூட்யூபில் காணக்கிடைக்கிறது.