பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்படம், ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான பிணைப்பை ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லராக மட்டும் சொல்லாமல், சமகால அமெரிக்க அரசியலின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு கலைப்படைப்பாகத் திகழ்கிறது.
இந்தப் படம் ஒரு சாதாரண விமர்சனத்தைத் தாண்டி, அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகச் சாதாரண மனிதர்கள் நடத்தும் போராக விரிகிறது. குறிப்பாக, லியோனார்டோ டிகாப்ரியோ (பாப்) தனது சிதைந்துபோன கடந்த காலத்தையும், தனது மகளின் எதிர்காலத்தையும் காப்பாற்றப் போராடும் விதம், ஒரு தந்தைக்கான தவிப்பைத் திரையில் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
தாமஸ் பிஞ்சனின் நாவலைத் மையமாக தழுவி , இயக்குனர் ஆண்டர்சன் அதை இன்றைய காலகட்டத்தின் புலம்பெயர்ந்தோர் சிக்கல்கள் மற்றும் இனவெறி அரசியலோடு மிகத் துல்லியமாக இணைத்திருக்கிறார்.
திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் அரசியல் கசப்புணர்வு. அமெரிக்க அரசாங்கத்தின் 'ICE' போன்ற அமைப்புகள் அகதிகள் மீது நடத்தும் சோதனைகளையும், அவர்களைத் தடுத்து வைத்திருக்கும் முகாம்களின் கொடூரத்தையும் இந்தப் படம் எந்த ஒளிவுமறைவுமின்றிச் சித்தரிக்கிறது.
கர்னல் லாக்ஜா (சீன் பென்) என்ற கதாபாத்திரத்தின் மூலம், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் கௌரவத்தையும், ரகசியங்களையும் காப்பாற்றிக் கொள்ள ஒரு குழந்தையைக் கூடக் கொல்லத் துணியும் குரூரத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
'கிறிஸ்துமஸ் அட்வென்ச்சர்ஸ் கிளப்' போன்ற ரகசியக் குழுக்கள், அமெரிக்காவின் உயர் மட்டங்களில் ஊடுருவியிருக்கும் வெள்ளையின மேலாதிக்க மனநிலையை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகின்றன.
அதிகாரம் என்பது எளியவர்களை வேட்டையாடும் கருவியாக மாறும்போது, அந்தச் சமுதாயம் எவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதற்கான எச்சரிக்கையாக இந்தப் படம் அமைகிறது.
தொழில்நுட்ப ரீதியாக 'விஸ்டா விஷன்' முறையில் படமாக்கப்பட்டிருக்கும் விதம், காட்சிகளுக்கு ஒரு பிரம்மாண்டத்தையும், அதேசமயம் எழுபதுகளின் ஹாலிவுட் படங்களுக்குரிய அந்த எதார்த்தமான 'ரஃப்' தன்மையையும் வழங்குகிறது. ஜானி கிரீன்வுட்டின் இசை, படத்தில் நிலவும் ஒருவித பதற்றத்தையும், குழப்பத்தையும் ரசிகர்களின் நரம்புகளில் ஏற்றுகிறது.
படத்தின் கிளைமாக்ஸில் வரும் கார் துரத்தல் காட்சிகள் வெறும் வேகத்திற்காக மட்டுமல்லாமல், தந்தை-மகள் இருவரின் பிழைப்புக்கான போராட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன. இறுதியில், பழைய தலைமுறை செய்த தவறுகளைத் திருத்தி, புதிய தலைமுறை (வில்லா) போராட்டக் களத்திற்குச் செல்வது, அநீதி இருக்கும் வரை புரட்சி ஓயாது என்ற செய்தியை உரக்கச் சொல்கிறது.
ஒட்டுமொத்தமாக, இந்தப் படம் ஒரு மாபெரும் கலை அனுபவத்தைத் தருவதோடு, சமகால அரசியலின் போலித்தனத்தைச் சாடும் ஒரு வலிமையான விமர்சனமாகவும் நிலைத்து நிற்கிறது.
படத்தின் கதை:-
இந்தப் படத்தின் கதை, அமெரிக்க அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் 'பிரெஞ்ச் 75' என்ற புரட்சிக் குழுவைச் சுற்றித் தொடங்குகிறது. இந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர்களான பாட் (லியோனார்டோ டிகாப்ரியோ) மற்றும் பெர்ஃபிடியா (தேயானா டெய்லர்) இருவரும் காதலர்கள். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே பெர்ஃபிடியாவின் துணிச்சல் வெளிப்படுகிறது.
அகதிகள் முகாமைக் காக்கும் கொடூரமான ராணுவ அதிகாரி லாக்ஜாவை (சீன் பென்) பிடித்து, எலக்ட்ரிக்கல் வேலைகளுக்குப் பயன்படுத்தும் ஒரு சாதாரண நைலான் டேகைக் கொண்டு அவரது கைகளைக் கட்டி, அவரது ராணுவக் கம்பீரத்தைச் சிதைத்துத் தெருவில் துரத்துகிறார்.
ஒரு பெண்ணால், அதுவும் ஒரு புரட்சியாளரால் தனது சொந்த வீரர்களுக்கு முன்னால் இப்படி அவமானப்படுத்தப்பட்டது லாக்ஜாவின் மனதில் ஆறாத வன்மத்தை விதைக்கிறது.
பாட் மற்றும் பெர்ஃபிடியாவுக்கு வில்லா என்ற மகள் பிறக்கிறாள். பாட் தனது மனைவி பெர்ஃபிடியாவை ஆபத்தான போராட்டங்களை விட்டுவிட்டு அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு வருமாறு அழைக்கிறார். ஆனால், லட்சிய வெறி கொண்ட பெர்ஃபிடியா, குடும்பத்தை விடப் போராட்டமே முக்கியம் என்று கணவனையும் பச்சிளம் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டுத் தலைமறைவாகிறார்.
ஒரு வங்கிக் கொள்ளையின் போது காவலரை கொன்ற பெர்ஃபிடியா கைது செய்யப்பட, லாக்ஜா அவளைத் தனது வக்கிரமான ஆசைக்கும், தனது குழுவினரை ஒவ்வொருவராக வேட்டையாடவும் பயன்படுத்திக் கொள்கிறார்.
தனது மகளைக் காப்பாற்ற விரும்பிய பாட், தனது பெயரை 'பாப்' என்றும் மகளின் பெயரை 'வில்லா' என்றும் மாற்றிக்கொண்டு, பல ஆண்டுகளாகத் தலைமறைவாக வாழ்கிறார்.
16 ஆண்டுகள் கழித்து, பாப் ஒரு போதைக்கு அடிமையான, பயந்த சுபாவம் கொண்ட மனிதராகக் காட்சியளிக்கிறார்.
ஆனால்,மகள் வில்லா (சேஸ் இன்ஃபினிட்டி) தனது தாய் ஒரு மாபெரும் வீராங்கனை என்று பாப் சொன்ன பொய்யை நம்பி, மிகவும் தைரியமான பெண்ணாக வளர்கிறாள்.
மறுபுறம், அந்த வில்லன் அதிகாரி லாக்ஜா இப்போது ஒரு சக்திவாய்ந்த கர்னலாக வளர்ந்துள்ளார். அவர் 'கிறிஸ்துமஸ் அட்வென்ச்சர்ஸ் கிளப்' என்ற ஒரு ரகசியப் பணக்கார நிறவெறி கும்பலில் சேரத் துடிக்கிறார். அந்தக் கும்பல் வெள்ளையின மேலாதிக்கம் கொண்டது என்பதால், தான் ஒரு கறுப்பினப் பெண்ணுடன் (பெர்ஃபிடியா) தொடர்பு வைத்திருந்ததும், அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதும் தெரிந்தால் தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று லாக்ஜா அஞ்சுகிறார்.
தனது கடந்த கால அடையாளமான வில்லாவையும் பாப்பையும் தேடிப் பிடித்துக் கொன்றுவிட்டால், தனது ரகசியத்தை மறைத்துவிடலாம் என்று அவர் கணக்குப் போடுகிறார். இதற்காக ஒரு நகரையே முடக்கித் தேடுதல் வேட்டையைத் தொடங்குகிறார்.
இந்தப் போராட்டத்தில் வில்லாவின் கராத்தே குருவான செர்ஜியோ (பெனிசியோ டெல் டோரோ) பாப்பிற்கு உதவி செய்கிறார்.
இந்தச் சூழலில் வில்லாவுக்குத் தனது தாய் ஒரு புரட்சியாளர் மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் தன் குழுவினரைக் காட்டிக்கொடுத்த டபுள் ஏஜண்ட் துரோகியும் கூட என்ற கசப்பான உண்மை தெரியவருகிறது.
கதையின் உச்சகட்டத்தில், லாக்ஜா வில்லாவைப் பிணைக்கைதியாகப் பிடித்து, டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவள் தனது மகள் தான் என்பதை உறுதி செய்கிறார். ஆனால், தனது கௌரவத்திற்காக அவளைக் கொல்ல உத்தரவிடுகிறார்.
லாக்ஜாவைக் கொல்ல அதே பணக்கார ரகசியக் குழுவைச் சேர்ந்த ஒருவன் வர, நடக்கும் கார் விபத்தில் லாக்ஜா இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கிறார்கள்.
அங்கிருந்து ஒரு துப்பாக்கியுடன் தப்பிக்கும் வில்லா, தன்னைத் துரத்தி வரும் எதிரியைத் தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறாள்.
இறுதியில் பாப்பும் வில்லாவும் மீண்டும் இணைகிறார்கள். விபத்தில் தப்பிய லாக்ஜாவை அவனது ரகசியக் குழுவே கொடூரமாகக் கொன்று எரிக்கிறது.
படம் முடியும் போது, பாப் தனது மகளிடம் அவளது தாய் எழுதிய மன்னிப்புக் கடிதத்தைக் கொடுக்கிறார். பாப் தனது மகளின் போராட்ட குணத்தை உணர்ந்து, அவளை ஒரு மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆசீர்வாதம் செய்தும் அனுப்பி வைக்கிறார்.
அதிகாரம் என்பது எளியவர்களை வேட்டையாடுவதற்கல்ல என்பதையும், அநீதி இருக்கும் வரை புதிய தலைமுறை போராடிக்கொண்டே இருக்கும் என்பதையும் இந்தப் படம் அமெரிக்க அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பதிவு செய்கிறது.