தி பவர் ஆப் தி டாக் 2021 ஆம் ஆண்டு வெளியான மேற்கத்திய பின்னணியில் அமைந்த உளவியல் திரைப்படம்.
புகழ்பெற்ற இயக்குனர் ஜேன் கேம்பியன் இயக்கியுள்ள இத்திரைப்படம் தாமஸ் சாவேஜ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தி பவர் ஆப் தி டாக் என்ற திரைப்படத்தின் தலைப்பிற்கு அடிப்படையாக அமைந்த விவிலியத்தின் திருப்பாடல்கள் 22 20 வசனம் இது .
"Deliver my soul from the sword my darling from the power of the dog".
இந்த வசனத்தில் வரும் மை டார்லிங் என்ற சொல் ஒருவரின் மிக நெருக்கமான உயிர் அல்லது ஆன்மாவைக் குறிக்கிறது.
படத்தில் பீட்டர் கதாபாத்திரம் இந்த வசனத்தைப் படிக்கும்போது நாய் என்பது தனது தாயின் வாழ்வைச் சிதைக்க முயன்ற பில்லின் ஆதிக்கத்தைக் குறிப்பதாக அமைகிறது.
வன்முறை மற்றும் அதிகாரத்திடம் இருந்து தனது அன்பிற்குரியவர்களைக் காக்க வேண்டும் என்ற வேண்டுதலாகவே இந்த வரிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திரைப்படத்தின் அடிநாதம் அடக்கப்பட்ட உணர்வுகள் மற்றும் ஆணாதிக்கத்தின் போலித்தன்மை ஆகும். வெளியே முரட்டுத்தனமாகவும் எதற்கும் அஞ்சாதவன் போலவும் தன்னைக் காட்டிக்கொள்ளும் பில் பர்பேங்க் (பெனடிக்ட் கம்பர் பேட்ச்) உண்மையில் தனக்குள்ளே இருக்கும் மென்மையான உணர்வுகளையும் தனது பாலியல் தேடல்களையும் சமூகத்திற்குப் பயந்து மூடி மறைக்கிறான்.
இந்த அடக்கப்பட்ட ஏக்கம் அவனுக்குள் ஒரு கசப்பை உருவாக்கி அது மற்றவர்களைத் துன்புறுத்தும் வன்முறையாக மாறுகிறது. ஒரு மனிதன் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வாழ முற்படும்போது அது அவனுக்கும் அவனைச் சுற்றியுள்ளவர்களுக்கும் விஷமாக மாறுகிறது என்பதே இப்படத்தின் மையக்கருத்து.
மற்றொரு புறம் இக்கதை வலிமை குறித்த ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது. உடல் ரீதியான பலம் மற்றும் சத்தம் போட்டு அதட்டுவது மட்டுமே ஒருவனை வீரனாகக் காட்டாது என்பதைப் பீட்டர் (கோடி ஸ்மித்-மெக்ஃபீ) கதாபாத்திரம் நிரூபிக்கிறது.
மென்மையான சுபாவம் கொண்ட ஒருவன் அமைதியாகத் திட்டமிட்டு ஒரு பேரழிவை எப்படி நிகழ்த்த முடியும் என்பதை இப்படம் காட்டுகிறது.
அதிகாரமும் மமதையும் கொண்ட ஒருவனை அவனது பலவீனத்தைக் கொண்டே வீழ்த்துவது தான் இப்படத்தின் அடிநாதமாக இருக்கும் பழிவாங்கல் தந்திரம்.
பாசம் மற்றும் பாதுகாப்பு என்ற உணர்வும் இப்படத்தின் ஆணிவேராக இருக்கிறது. ஒரு மகன் தனது தாயின் கண்ணீரைத் துடைக்கவும் அவளைத் துன்புறுத்தும் ஆதிக்கத்திலிருந்து அவளைக் காக்கவும் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
விவிலிய வசனத்தில் சொல்லப்பட்டது போல ஒரு வேட்டையாடும் நாயின் பிடியிலிருந்து தனது அன்புக்குரியவர்களை விடுவிக்கப் பீட்டர் எடுக்கும் முடிவே படத்தின் ஆன்மாவாக அமைகிறது.
1925 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மொன்டானா மாநிலப் பின்னணியில் நடைபெறும் இக்கதை, மனித உணர்வுகளின் சிக்கல்களையும், ஆணாதிக்க மனப்பான்மைக்கு பின்னால் இருக்கும் பலவீனங்களையும் மிகவும் நுணுக்கமாகப் பேசுகிறது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படம் நவீன சினிமாவின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
உலக சினிமா வரலாற்றில் இத்திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது.
21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக விமர்சகர்களால் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம், வழக்கமான அதிரடி மேற்கத்தியப் படங்களுக்கு மாற்றாக, மெதுவாக நகரும் திரக்கதை மூலமாகப் பார்வையாளர்களை ஒருவிதமான பதற்றத்துடனேயே வைத்திருக்கும் கலைத்தன்மை கொண்டது.
எண்பத்தி ஒன்பதாவது அகாடமி விருதுகளில் அதிகபட்சமாக 12 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்று உலகத் திரையுலகின் கவனத்தை ஈர்த்தது.
ஆண்மை மற்றும் முரட்டுத்தனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அடக்கப்பட்ட பாலியல் உணர்வுகள் மற்றும் ஏமாற்றங்களை இது ஆழமாகத் தோண்டி எடுக்கிறது.
ஒரு முக்கோணக் காதல் கதையைப் போலத் தொடங்கி, பின்னர் ஒரு நுட்பமான பழிவாங்கல் கதையாக உருவெடுக்கும் விதம் வியப்பிற்குரியது.
வெறும் வசனங்கள் மூலமாக மட்டும் கதையைச் சொல்லாமல், கதாபாத்திரங்களின் மௌனம் மற்றும் பார்வைகளின் வழியாகவே பல ரகசியங்களை இப்படம் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
இயக்குனர் ஜேன் கேம்பியன் இந்தப் படத்தின் மூலம் தனது அபாரமான இயக்கத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு நாவலைத் திரைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்த விதத்திலும், நடிகர்களிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த விதத்திலும் அவர் வென்றார்.
வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளிச் சிங்கம் விருதை வென்ற அவர், ஆஸ்கார் விருதையும் தட்டிச் சென்றார்.
இதன் மூலம் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஒளிப்பதிவாளர் அரி வேக்னர் மொன்டானாவின் பரந்த நிலப்பரப்புகளை மிகவும் அழகாகவும் அதே சமயம் மிரட்டலாகவும் காட்டியுள்ளார்.
படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூசிலாந்தின் கிராமப்புறங்களில் படமாக்கப்பட்டிருந்தாலும், அவை 1920களின் அமெரிக்காவை அப்படியே பிரதிபலிக்கின்றன.
பழங்காலப் புகைப்படக் கலைஞர் எவலின் கேமரூனின் பாணியைப் பின்பற்றி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலை இயக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அந்தப் பெரிய பண்ணை வீடும், அதன் உட்புற அமைப்புகளும் கதாபாத்திரங்களின் தனிமையையும் வெறுமையையும் பறைசாற்றுகின்றன.
இத்திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெனிஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டது.
பின்னர் டொராண்டோ மற்றும் லண்டன் போன்ற முக்கியத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நவம்பர் மாதம் சில திரையரங்குகளில் மட்டும் வெளியான நிலையில், டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகெங்கும் உள்ள மக்களுக்காகப் பகிரப்பட்டது.
உலக நாடுகளின் விமர்சகர்கள் இந்தப் படத்தை அந்த ஆண்டின் மிகச்சிறந்த பத்து படங்களின் பட்டியலில் முதலிடத்தில் வைத்தனர்.
நடிகர் பெனடிக்ட் கம்பர் பேட்ச் பில் பர்பேங்க் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். முரட்டுத்தனமும் அறிவுத்திறனும் கொண்ட அந்தப் பாத்திரத்தின் வலியை அவர் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவருக்கு இணையாக கிர்ஸ்டன் டன்ஸ்ட் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் வேதனையைத் தனது கண்களிலேயே காட்டியுள்ளார்.
ஜெஸ்ஸி பிளெமன்ஸ் மற்றும் கோடி ஸ்மித் மெக்ஃபீ ஆகியோரின் நடிப்பும் படத்தின் கனத்தைக் கூட்டுகின்றன. படத்தில் நடித்த நான்கு முக்கிய நடிகர்களுமே ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசை மற்றொரு பெரிய பலமாகும். ஜானி கிரீன்வுட் அமைத்துள்ள பின்னணி இசை மேற்கத்தியப் படங்களின் வழக்கமான இசையிலிருந்து மாறுபட்டு, ஒருவிதமான அந்நியமான மற்றும் பயமுறுத்தும் உணர்வைத் தருகிறது.
செலோ என்ற கருவியை ஒரு பாஞ்சோ வாசிப்பது போலப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ள ஒலிகள் படத்தின் த்ரில்லர் தன்மையை அதிகரிக்கின்றன.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் தனிமையில் இருந்தே இந்த இசையை அவர் மிகச் சிறப்பாகக் கோர்த்துள்ளார்.
விருதுகளில் இப்படம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகளை வென்றது.
பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளிலும் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளைப் பெற்றது.
ஆஸ்கார் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றதுடன், 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமானத் திரைப்படங்களில் ஒன்றாகத் தடம் பதித்துள்ளது.
இப்படத்தின் உருவாக்கத்திற்காக இயக்குநர் ஜேன் கேம்பியன் 2017 ஆம் ஆண்டிலேயே நாவலின் உரிமையைப் பெற்றுத் தனது திரைக்கதை வேலையைத் தொடங்கினார்.
இதற்காக அவர் நாவலாசிரியர் தாமஸ் சாவேஜின் குடும்பத்தினரையும் மாண்டனாவில் உள்ள அவரது பண்ணையையும் நேரில் சந்தித்துத் தகவல்களைத் திரட்டினார்.
பால் நியூமன் போன்ற பெரிய கலைஞர்கள் கூட இந்த நாவலைப் படமாக்க முயற்சி செய்து அது கைவிடப்பட்ட நிலையில் ஜேன் கேம்பியன் அதனை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தினார்.
நடிகர் பெனடிக்ட் கம்பர் பேட்ச் பில் கதாபாத்திரத்திற்காகத் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். அவர் மூன்று வாரங்கள் மாண்டனா பண்ணையில் தங்கி குதிரை ஓட்டுவது மற்றும் கயிறு வீசுவது போன்ற வேலைகளைக் கற்றுக் கொண்டார்.
குறிப்பாகப் படத்தில் வரும் கால்நடைகளுக்கு விதை நீக்கம் செய்யும் காட்சிக்காக அவர் நேரடிப் பயிற்சியும் பெற்றார்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் பில் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்ததால் மற்ற நடிகர்களுடன் அதிகம் பேசாமல் ஒருவிதமான தனிமையைக் கடைப்பிடித்தார்.
ஒளிப்பதிவாளர் அரி வேக்னர் இந்தப் படத்திற்காக ஒரு வருடம் முன்பே திட்டமிடல்களைத் தொடங்கினார். அவர் அரி அலெக்சா எல் எஃப் போன்ற நவீன கேமராக்களைப் பயன்படுத்திப் படத்தின் காட்சிகளைப் படமாக்கினார்.
அந்தப் பண்ணை வீட்டின் உட்புறத் தோற்றங்கள் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் இல்லத்தை மாதிரியாகக் கொண்டு நியூசிலாந்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டன.
பெருந்தொற்று காலத்தில் இசைக்கலைஞர்களை ஒன்று திரட்ட முடியாத சூழலில் இசை அமைப்பாளரே பல கருவிகளை வாசித்துப் பதிவேற்றம் செய்து அந்த இசையை மெருகேற்றினார்.
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிடவில்லை என்றாலும் சுமார் 50 மில்லியன் டாலர் வரை இந்தப் படத்தின் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டது.
சுமார் 48 மில்லியன் மணிநேரங்கள் இந்தப் படம் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தப் படத்தைத் தனது விருப்பமான படங்களின் பட்டியலில் சேர்த்தது இதன் சிறப்பிற்கு மற்றொரு சான்றாகும்.
இத்திரைப்படம் 1920களின் பின்னணியில் ஒரு அழுத்தமான உளவியல் போராட்டத்தைச் சித்திரிக்கிறது.
இப்படத்திற்காக இயக்குனர் மாண்டனா பண்ணைகளுக்கே நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, நாவலாசிரியரின் குடும்பத்தாரிடமும் பல தகவல்களைப் பெற்றார்.
நியூசிலாந்தின் ஒடாகோ பகுதியில் மலைகளும் வறண்ட நிலப்பரப்பும் 1920களின் அமெரிக்காவை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன.
பெனடிக்ட் கம்பர் பேட்ச் தனது கதாபாத்திரத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். அவர் ஒரு பண்ணை தொழிலாளியைப் போலவே வாழப் பழகினார். மூன்று வாரங்கள் மாண்டனாவில் தங்கி குதிரை ஓட்டுவது, கயிறு வீசுவது மற்றும் மாடுகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற வேலைகளை தன்னிச்சையாக கைவருமாறு கற்றுக்கொண்டார்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒருபோதும் தனது இயல்பான சுபாவத்திற்குத் திரும்பவேயில்லையாம். மற்ற நடிகர்களுடன் பேசாமல் தனிமையிலேயே இருந்தார். குறிப்பாகக் கிர்ஸ்டன் டன்ஸ்ட் மற்றும் அவர் இருவரும் படப்பிடிப்பு முடியும் வரை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லையாம்.
இந்த நிஜமான இடைவெளி திரையில் அவர்களின் கதாபாத்திரங்களுக்கு இடையே இருந்த கசப்புணர்வை மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்த உதவியது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் அரி வேக்னர் ஒரு பெண் ஒளிப்பதிவாளராக இந்தப் படத்தில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
அவர் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ஓவியத்தைப் போலச் செதுக்கியுள்ளார்.
பண்ணை வீட்டின் ஜன்னல் வழியாகத் தெரியும் வெளிச்சம், மாடுகளின் தோலில் படும் நிழல் என ஒவ்வொன்றையும் மிகத் துல்லியமாகப் படமாக்கியுள்ளார்.
இதற்குப் போட்டியாக ஜானி கிரீன்வுட் வழங்கிய இசை, ஒருவிதமான மர்மமான சூழலை உருவாக்குகிறது.
பார்வையாளர்கள் அனைவரும் இதன் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அந்த நுட்பமான பழிவாங்கலைக் கண்டு வியந்தனர்.
ஆஸ்கார் விருதுகளில் 12 பரிந்துரைகளைப் பெற்று, சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றதன் மூலம் இப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தையும் பிடித்துள்ளது.
படத்தின் கதை:-
1925 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் கதை துவங்குகிறது. இரண்டு அண்ணன் தம்பிகள் சொந்தமாக பெரிய பண்ணை நிர்வகித்துக்கொண்டு வசதியாக வாழ்கிறார்கள்.
மூத்தவன் பில் பர்பேங்க் (பெனடிக்ட் கம்பர் பேட்ச்),
இளையவன் ஜார்ஜ் பர்பேங்க் (ஜெஸ்ஸி பிளெமன்ஸ்).
பில் மிகவும் முரட்டுத்தனமானவன், யாரிடமும் அன்பாகப் பேசத் தெரியாதவன்.
ஆனால் ஜார்ஜ் மிகவும் அமைதியானவர், மென்மையான குணம் கொண்டவர்.
ஒருமுறை இவர்கள் மாடுகளை ஓட்டிச் செல்லும்போது, ஒரு விடுதியில் ரோஸ் கார்டன் (கிர்ஸ்டன் டன்ஸ்ட்) என்ற விதவைப் பெண்ணைச் சந்திக்கிறார்கள்.
அவளுக்கு பீட்டர் (கோடி ஸ்மித்-மெக்ஃபீ) என்ற ஒரு மகன் இருக்கிறான். அவன் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக, மென்மையாக, ஒரு பெண் போன்ற சுபாவத்தோடு இருக்கிறான்.
இதைப் பார்த்த பில், அந்தப் பையனை எல்லார் முன்னிலையிலும் கேலி செய்து அசிங்கப்படுத்துகிறான்.
ஆனால் ஜார்ஜுக்கு ரோஸ் மீது அன்பு ஏற்பட்டு, அவர் அவளைத் திருமணம் செய்துகொள்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு ரோஸ் அந்தப் பண்ணை வீட்டிற்கு குடிவருகிறாள். ஆனால் பில் அவளைத் தன் தம்பியின் சொத்துக்காக மணம் செய்து வந்தவள் என்று நினைத்து அத்தனை வெறுக்கிறான்.
அவளை மனரீதியாகப் பயமுறுத்தி, ரகசியமாகத் துன்புறுத்துகிறான். அவனது மிரட்டலால் ரோஸ் பயந்துபோய், யாருக்கும் தெரியாமல் மது குடிக்க ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறாள்.
இதற்கிடையில் மருத்துவப் படிப்பு படிக்கும் அவளது மகன் பீட்டர், விடுமுறைக்காகப் பண்ணைக்கு வருகிறான்.
தன் தாய் பில்லினால் சித்திரவதைப்படுவதையும், குடிப்பழக்கத்திற்கு ஆளானதையும் கண்டு அவன் உள்ளுக்குள் துடிக்கிறான்.
பில்லுக்கு ஒரு ரகசியம் இருக்கிறது. அவன் வெளியே முரட்டுத்தனமாகத் தெரிந்தாலும், அவனுக்குள் ஒரு மாற்றுப் பாலின ஈர்ப்பு இருக்கிறது.
அவனது ஆசிரியரான பிராங்கோ ஹென்றி என்பவரை அவன் காதலித்திருக்கிறான்.
அவன் மறைத்து வைத்திருந்த சில ரகசியப் புத்தகங்கள் மற்றும் துணிகளைப் பீட்டர் கண்டுபிடித்துவிடுகிறான்.
பில்லின் பலவீனம் இப்போது பீட்டருக்குத் தெரிந்துவிடுகிறது.
திடீரென்று ஒரு நாள், இதுவரை பீட்டரை வெறுத்த பில், அவனிடம் அன்பாகப் பழக ஆரம்பிக்கிறான். அவனுக்குக் குதிரை ஓட்டக் கற்றுக்கொடுக்கிறான்.
பீட்டருக்காக ஒரு அழகான குதிரை அடக்கும் தோலினாலான கயிற்றைத் தன் கையாலேயே பின்னித் தருவதாகச் சொல்கிறான்.
பீட்டரும் அவனுடன் மிக நெருக்கமாகப் பழகுகிறான். ஆனால் பீட்டர் மிகவும் புத்திசாலி.
அவன் மருத்துவ மாணவன் இறந்த பசுவின் உடலிலிருந்து தோலைத் தனியாக வெட்டி எடுத்து வைத்திருக்கிறான்.
அந்தப் பசு ஆந்த்ராக்ஸ் எனும் கொடிய நோயால் இறந்தது என்பது அவனுக்குத் தெரியும்.
கிருமிகள் எப்படிப் பரவும் என்பதும் அவனுக்குத் தெரியும்.
ஒருநாள் காட்டில் வேலை செய்யும்போது பில்லின் கையில் ஒரு வெட்டுக் காயம் ஏற்படுகிறது.
அப்போது ரோஸ் தெரியாமல் பில் வைத்திருந்த சில தோல்களை விற்றுவிட, தோல் பற்றாக்குறையால் பின்னல் எப்படி செய்வது என பில் ஆத்திரமடைகிறான்.
அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட பீட்டர், தன்னிடம் இருந்த அந்த நோய்த்தொற்று உள்ள தோலைப் பில்லிடம் கொடுக்கிறான்.
பில்லின் கையில் காயம் இருப்பதை அறிந்தே அவன் இதைச் செய்கிறான். பில் அந்தக் காயத்தோடு, நோய்வாய்ப்பட்ட அந்தத் தோலை வைத்து அழகிய பின்னல் கயிறு பின்னுகிறான்.
மறுநாளே அந்த விஷக் கிருமிகள் பில்லின் ரத்தத்தில் கலந்து அவனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது.
சில நாட்களிலேயே பில் பரிதாபமாக இறந்தும் போகிறான். அவன் எப்படி இறந்தான் என்று யாருக்கும் புரியவில்லை.
ஆனால் பீட்டர் மட்டும் அமைதியாக இருக்கிறான். தன் தாயின் வாழ்க்கையைச் சீரழித்தவனை, எந்த ஆயுதமும் இல்லாமல் தன் அறிவைப் பயன்படுத்தி அவன் கொன்றுவிடுகிறான்.
படத்தின் இறுதியில், பில் பின்னிக் கொடுத்த அந்தக் கயிற்றைக் கையுறையால் பிடித்துத் தன் கட்டிலுக்கு அடியில் மறைத்தும் வைக்கிறான்.
ஜார்ஜும் ரோஸும் இப்போது நிம்மதியாக இருப்பதைப் பார்த்து அவன் மெல்ல அமைதிப் புன்னகை பூக்கையில் படம் நிறைகிறது.
இந்தப் படம் ஒரு மனிதனின் வெளித்தோற்றத்தைக் கண்டு அவனது வலிமையைத் தீர்மானிக்கக் கூடாது என்ற மிக முக்கியமான உண்மையை உரக்கச் சொல்கிறது. படத்தில் வரும் பில் பர்பேங்க் (பெனடிக்ட் கம்பர் பேட்ச்) குதிரை ஓட்டும் முரடனாகவும், மற்றவர்களை அடக்கி ஆள்பவனாகவும் தன்னைத் காட்டிக்கொள்கிறான்.
ஆனால் அவனுக்குள் ஒரு மென்மையான கலை உள்ளமும், தனது ஆசைகளை வெளியில் சொல்ல முடியாத ஒரு ஏக்கமும் ஒளிந்திருக்கிறது.
அதே சமயம், பெண்மைத் தன்மை கொண்டவன் என்று ஏளனம் செய்யப்படும் பீட்டர் (கோடி ஸ்மித்-மெக்ஃபீ) பார்க்கப் பலவீனமாகத் தெரிந்தாலும், அவனது அறிவும் எதையும் சாதிக்கும் துணிச்சலும் பில்லை விடப் பல மடங்கு பெரியதாக இருக்கிறது.
ஒருவன் அமைதியாக இருப்பதாலேயே அவன் கோழை என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் பீட்டரின் கதாபாத்திரம் நிரூபிக்கிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், இந்தப் படம் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை விவரிக்கிறது.
பில் தனது உண்மையான அடையாளத்தை மறைத்துக்கொண்டு, சமூகத்திற்காக ஒரு முரட்டு வேடத்தைப் போட்டுக்கொண்டு வாழ்கிறான்.
இந்தத் தன்முனைப்பும் போலித்தனமும் தான் அவனைச் சுற்றியுள்ளவர்களைத் துன்புறுத்தத் தூண்டுகிறது.
குறிப்பாகத் தனது தம்பியின் மனைவி ரோஸை (கிர்ஸ்டன் டன்ஸ்ட்) அவன் மனரீதியாக வதைப்பது, அவனது சொந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
அன்பு கிடைக்காத ஒருவன், மற்றவர்களின் அன்பைச் சிதைக்க முயல்வது எவ்வளவு கொடுமையானது என்பதைக் காட்டுகிறது.
குடும்பத்தைப் பாதுகாக்க ஒருவன் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பதையும் இப்படம் ஒரு செய்தியாக முன்வைக்கிறது.
பீட்டர் தனது தாயின் கண்ணீரைப் பார்க்கச் சகிக்காமல், சத்தமில்லாமல் ஒரு கொலையைச் செய்கிறான்.
பழிவாங்குவதற்குப் பெரிய ஆயுதங்கள் தேவையில்லை, மனிதனின் பலவீனத்தைத் தெரிந்துகொண்டு செயல்படும் புத்திசாலித்தனமே போதும் என்பதை அவன் செயல் உணர்த்துகிறது.
ஒரு வேட்டையாடும் மிருகத்திடமிருந்து தனது குடும்பத்தைக் காக்க, அந்த மிருகத்தையே தந்திரமாக வீழ்த்தும் ஒரு வேடன் போலப் பீட்டர் செயல்படுகிறான்.
அன்பும் அறிவும் சேரும்போது, அது எவ்வளவு பெரிய அதிகாரத்தையும் வீழ்த்திவிடும் என்பதே இந்தப் படத்தின் சாராம்சம்.