"அமெரிக்கன் ஃபிக்ஷன்" 2023 ஆம் ஆண்டு வெளியான சிறந்த அமெரிக்க நகைச்சுவை , வாழ்வியல் நாடகத் திரைப்படம்.
பெர்சிவல் எவரெட் எழுதிய எரேசர் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு கறுப்பின நாவலாசிரியர் தனது அறிவுசார்ந்த படைப்புகள் புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் விரக்தியில் கறுப்பினத்தவர் பற்றிய பொதுவான பிம்பங்களை நையாண்டி செய்து ஒரு போலி நாவலை எழுதுகிறார். ஆனால் சமூகம் அதனை ஒரு தீவிர இலக்கியமாகத் தவறாகப் புரிந்து கொண்டு கொண்டாடுவதை இப்படம் மிக நேர்த்தியாகவும் கிண்டலாகவும் சித்தரிக்கிறது.
அமெரிக்கக் கலாச்சாரத்தில் சிறுபான்மையினரின் கலை மற்றும் இலக்கியம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட வார்ப்புக்குள் அடைக்கப்படுகிறது என்பதை இது உலகிற்குத் பறைசாற்றுகிறது.
வெறும் வணிக லாபத்திற்காக ஒரு இனத்தின் துயரங்கள் எவ்வாறு சந்தைப்படுத்தப்படுகின்றன எனும் கசப்பான உண்மையை இப்படம் உலகளாவிய ரசிகர்களுக்கு அறிவுப்பூர்வமாக உணர்த்துகிறது.
இது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கான படம் என்பதைத் தாண்டி கலையின் நேர்மை குறித்த உலகளாவிய விவாதத்தைத் தொடங்கி வைத்தது.
இப்படைப்பு சமகாலப் போலித்தனத்தின் முகத்திரையைக் கிழிப்பதாக அமைகிறது. கறுப்பின எழுத்தாளர்கள் வன்முறை மற்றும் வறுமையைப் பற்றி எழுதினால் மட்டுமே அது கறுப்பின இலக்கியம் என்று முத்திரை குத்தும் போக்கை இப்படம் கடுமையாகச் சாடுகிறது.
அறிவுஜீவித்தனமான விமர்சனங்களை முன்வைக்கும் அதே வேளையில் ஒரு குடும்பத்தின் உறவுச் சிக்கல்களையும் உணர்வுப்பூர்வமாக அணுகியிருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பாகும்.
நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் மிகச் சரியான விகிதத்தில் கலந்து ஒரு சமூக அவலத்தை இது மேதமையுடன் விமர்சிக்கிறது.
இயக்குநர் கார்டு ஜெபர்சன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது முதல் தடம் பதித்துள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு முதிர்ச்சியான இயக்கத்தை அவர் வழங்கியுள்ளார்.
மூலக்கதையின் ஆன்மா சிதையாமல் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப அதைத் திரையில் வடித்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது. குறிப்பாகக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்திலும் நையாண்டித் தருணங்களைக் கையாளும் விதத்திலும் ஒரு தேர்ந்த இயக்குநராக அவர் மிளிர்கிறார்.
கிறிஸ்டினா டன்லப் ஒளிப்பதிவு படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு மிக எதார்த்தமாக அமைந்துள்ளது. பாஸ்டன் நகரின் நிலப்பரப்பையும் கடற்கரை வீட்டின் அமைதியையும் அவர் மிக அழகாகப் படம்பிடித்துள்ளார்.
மிகக் குறைந்த நாட்களில் வெறும் 26 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தேவையற்ற அலங்காரங்கள் இன்றி கதையின் ஆழத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் காட்சிகள் மிக இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.
இப்படம் 2023 செப்டம்பர் 8 ஆம் தேதி டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டது.
அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதை வென்று பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் 2023 டிசம்பர் 15 அன்று அமெரிக்காவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியாகிப் பிறகு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
சுமார் 10 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை ஈட்டியது.
நடிப்பில் ஜெப்ரி ரைட் ,மாங்க் எனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
ஒரு பேராசிரியராகவும் எழுத்தாளராகவும் அவர் காட்டும் உடல்மொழியும் குரல் மாற்றமும் அற்புதம். அவருக்கு இணையாக ஸ்டெர்லிங் கே பிரவுன் தனது துடிப்பான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார்.
ட்ரேசி எல்லிஸ் ரோஸ் மற்றும் லெஸ்லி உக்காம்ஸ் ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு முழுமையான நியாயம் செய்துள்ளனர்.
ஒவ்வொரு நடிகரும் மிக எதார்த்தமான நடிப்பை வழங்கி படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.
இப்படத்தின் இசை லாரா கார்ப்மேன்,அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கதையின் ஓட்டத்திற்குத் தடையாக இல்லாத உணர்ச்சிகளை ஆழமாகப் பதிய வைக்கும் பின்னணி இசையை அவர் வழங்கியுள்ளார்.
ஜாஸ் இசையின் சாயல் கொண்ட மென்மையான இசைக்கோர்ப்புகள் படத்தின் சூழலுக்குப் பெரும் பலமாக அமைந்தன.
விருதுகள் வரிசையில் இப்படம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. 96 ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
அதில் கார்டு ஜெபர்சன் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
மேலும் அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்களில் ஒன்றாக இதனைத் தேர்வு செய்தது. இவை தவிர பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் இப்படம் பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
அமெரிக்கன் ஃபிக்ஷன் திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவது ஒரு கலைஞனின் தனித்துவத்திற்கும் சந்தை எதிர்பார்க்கும் போலி அடையாளத்திற்கும் இடையே நடக்கும் அறப்போர் ஆகும்.
சமூகம் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த படைப்பாளியை எப்போதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே பார்க்க விரும்புகிறது என்பதை இந்தப் படம் ஆணித்தரமாகச் சொல்கிறது.
கறுப்பின எழுத்தாளர் என்றால் அவர் வறுமை, அடிமைத்தனம் அல்லது குற்ற பின்னணியைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்கிற பொதுப்புத்தியை இது கடுமையாகச் சாடுகிறது.
உண்மையான இலக்கியம் ஒரு மனிதனின் ஆன்மாவிலிருந்து வர வேண்டும். ஆனால் இன்றைய வணிக உலகம் ஒரு கலைஞனின் வலியை வெறும் நுகர்வுப் பொருளாக மாற்றி வேடிக்கை பார்க்கிறது.
மாங்க் எலிசன் எனும் அறிவுஜீவி தனது மேதமையால் அங்கீகரிக்கப்படாமல் தனது கோபத்தால் உருவான ஒரு தரமற்ற படைப்பால் உலகப்புகழ் பெறுவது தற்காலக் கலை உலகின் மிகப்பெரிய முரண்நகையாகும்.
தன் அடையாளத்தை இழக்காமல் வாழ நினைக்கும் ஒரு மனிதன் பிழைப்புக்காகவும் குடும்பச் சூழலுக்காகவும் தான் வெறுக்கும் அதே போலித்தனத்தைச் செய்யத் துணியும் போது ஏற்படும் மன உளைச்சலே இப்படத்தின் மையப்புள்ளி.
இறுதியில் உலகம் ஒரு மனிதனை அவனாகப் பார்க்காமல் தனக்கு வசதியான ஒரு பிம்பமாகவே பார்க்கிறது எனும் கசப்பான உண்மையை இப்படம் உரக்கச் சொல்கிறது.
போலித்தனமே வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில் நேர்மையான கலைஞன் ஒரு அந்நியனாகவே மிஞ்சுகிறான் என்பதே இப்படத்தின் ஆழமான அடிநாதமாகும்.
இயக்குநர் கார்டு ஜெபர்சன் எரேசர் நாவலைப் படிக்க நேர்ந்தபோது அதன் கதைக்களம் தனது சொந்த வாழ்க்கையோடு ஒத்துப்போவதைக் கண்டு வியந்தார்.
அந்த நாவலைத் திரைப்படமாக்க உரிமம் பெற அவர் முற்பட்டபோது அதன் ஆசிரியர் பெர்சிவல் எவரெட் ஒரு நிபந்தனை விதித்தார். ஜெபர்சனே திரைக்கதை எழுதி இயக்க வேண்டும் என்பதே அது.
அதுவரை தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை எழுதி வந்த ஜெபர்சனுக்கு இதுவே முதல் முழுநீளத் திரைப்படம்.
நடிகர் ஜெப்ரி ரைட் இந்தக் கதாபாத்திரத்திற்காகத் தனது வழக்கமான ஆக்ரோஷமான நடிப்பைக் குறைத்து மிகவும் அடக்கமான ஒரு பேராசிரியராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.
மாங்க் எனும் பாத்திரம் தனது கோபத்தை வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளேயே புழுங்குவதை அவர் தனது கண்களின் மூலமே கடத்தினார்.
படப்பிடிப்பின் போது பெரும்பாலான காட்சிகளில் நடிகர்கள் தாங்களாகவே சில வசனங்களைச் சேர்க்க இயக்குநர் அனுமதி அளித்தார்.
இது படத்தின் எதார்த்தத் தன்மையை அதிகரித்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு பாஸ்டன் நகரின் கடற்கரைப் பகுதிகளில் நடைபெற்றது.
அங்கு நிலவிய கடும் குளிரால் படக்குழுவினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாகக் கடற்கரையில் எடுக்கப்பட்ட சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நடிகர்கள் நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நடித்தனர்.
படத்தின் எடிட்டிங் பணிகளின் போது தேவையற்ற கிளைக் கதைகள் பல நீக்கப்பட்டு மாங்க் மற்றும் அவரது குடும்ப உறவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
திரைப்படத்தின் இறுதியில் வரும் அந்தத் திருமண வரவேற்பு காட்சி நிஜமான ஒரு பழைய கட்டிடத்தில் படமாக்கப்பட்டது.
அந்தக் கட்டிடத்தின் பழமை மாறாமல் இருக்க அங்கு ஒளிப்பதிவு உபகரணங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கை கையாளப்பட்டது. படத்தின் இசைக்கோர்ப்பில் கறுப்பினத்தவரின் பாரம்பரிய இசைக்கருவிகள் சிலவற்றை நவீன பாணியில் லாரா கார்ப்மேன் பயன்படுத்தினார்.
இந்தத் திரைப்படம் மிகக் குறைந்த திரையரங்குகளில் முதலில் வெளியிடப்பட்டு மெதுவாக மக்களிடையே பரவியது. ஆஸ்கார் பரிந்துரைகளுக்குப் பிறகு இதன் வசூல் அறுபது சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.
ஒரு சிறிய பட்ஜெட் படம் தனது கதைத் திறத்தால் மட்டுமே உலகளாவிய கவனத்தைப் பெற முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
ஒரு கலைஞன் தான் சார்ந்த துறை வணிக சந்தையோடு நடத்தும் போராட்டத்தை இவ்வளவு எதார்த்தமாக இதற்கு முன் எந்த ஹாலிவுட் படமும் பதிவு செய்ததில்லை.
படத்தின் கதை:-
செலினியஸ் மாங்க் எலிசன் (ஜெப்ரி ரைட்) லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஒரு புகழ்பெற்ற கறுப்பின எழுத்தாளரும் பேராசிரியருமாவார்.
இவருடைய நாவல்கள் அறிவுஜீவிகளால் பாராட்டப்பட்டாலும் வணிகரீதியாகத் தோல்வியடைகின்றன.
இவருடைய புதிய படைப்பை வெளியீட்டாளர்கள் நிராகரிக்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அந்த நாவல் போதுமான அளவு கறுப்பினத்தவருக்கான அடையாளத்தோடு இல்லை என்பதே.
வகுப்பறையில் இன ரீதியான விவாதங்களின் போது மாணவர்களிடம் காட்டும் முரட்டுத்தனமான போக்கினால் மாங்க் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார்.
அவரது மேலதிகாரிகள் அவரைப் பாஸ்டன் நகரில் நடக்கும் இலக்கிய கருத்தரங்கிற்குச் செல்ல அறிவுறுத்துகின்றனர்.
பாஸ்டன் சென்ற மாங்க் அங்கு சின்டாரா கோல்டன் (இசா ரே) எனும் கருப்பின எழுத்தாளரின் நேர்காணலுக்குக் கூடும் பெருங்கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
சின்டாராவின் வீஸ் லைவ்ஸ் இன் டா கெட்டோ எனும் புத்தகம் கறுப்பினத்தவர் பற்றிய பொதுவான அவலநிலைகளையும் கிளைஷே எனப்படும் தேய்வழக்குகளையும் மூலதனமாக்கிப் பெரும் வெற்றி பெற்றிருந்தது.
அதே சமயம் மாங்க் பங்கேற்ற அமர்வில் மிகக் குறைந்த அளவிலான வாசகர்களே இருந்தனர்.
குடும்ப ரீதியாக மாங்க் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்.
அவரது தாய் ஆக்னஸ் (லெஸ்லி உக்காம்ஸ்) அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரி லிசா (ட்ரேசி எல்லிஸ் ரோஸ்) ஒரு மருத்துவர்.
மாங்க் அவருடன் மது அருந்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக லிசா மாரடைப்பால் மரணமடைகிறார்.
லிசாவின் இறுதிச் சடங்கிற்கு இவர்களது சகோதரர் கிளிஃப் (ஸ்டெர்லிங் கே பிரவுன்) வருகிறார். கிளிஃப் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை நிபுணர்.
சமீபத்தில் விவாகரத்து பெற்ற அவர் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்தவர்.
போதைப்பொருள் மற்றும் தற்காலிக உறவுகளில் அவர் மூழ்கியிருக்கிறார்.
இதற்கிடையில் மாங்க் தனது தாயின் வீட்டின் அருகே வசிக்கும் வழக்கறிஞர் கோரலைன் (எரிகா அலெக்சாண்டர்) என்பவருடன் காதலில் விழுகிறார்.
தனது தாயின் மருத்துவச் செலவுகளுக்காகப் பணம் தேவைப்படும் சூழலிலும் சின்டாராவின் வெற்றியால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் மாங்க் ஒரு முடிவெடுக்கிறார்.
மை பபாலஜி (My Pufology) எனும் நாவலை ஸ்டாக் ஆர் லீ என்ற புனைபெயரில் எழுதுகிறார்.
கறுப்பின எழுத்தாளர்களிடமிருந்து உலகம் எதிர்பார்க்கும் வன்முறை போதைப்பொருள் மற்றும் பொறுப்பற்ற தந்தை போன்ற மோசமான பிம்பங்களை நையாண்டி செய்யும் விதமாக அந்த நாவலை உருவாக்குகிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு பதிப்பகம் அந்த நாவலுக்கு 7.50 லட்சம் டாலர் முன்பணம் வழங்க முன்வருகிறது.
தனது முகவர் ஆர்தர் (ஜான் ஓர்டிஸ்) ஆலோசனையின்படி சிறையிலிருந்து தப்பித்த குற்றவாளி போல நடித்து அந்த ஒப்பந்தத்தை மாங்க் ஏற்கிறார்.
திரைப்படத் தயாரிப்பாளர் வைலி (ஆடம் பிராடி) இந்த நாவலைப் படமாக்க விருப்பம் தெரிவிக்கிறார்.
பதிப்பக அதிகாரிகளின் போலித்தனமான அணுகுமுறையைச் சீண்ட நினைக்கும் மாங்க் தனது நாவலின் பெயரை ஃபக் என்று மாற்றச் சொல்கிறார்.
அவர்கள் அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் மாங்க் ஒரு இலக்கிய விருதுக்கான நடுவர் குழுவில் இடம்பெறுகிறார்.
அங்கு சின்டாராவும் ஒரு நடுவராக இருக்கிறார். சின்டாராவின் எழுத்துக்கள் வெறும் துயரத்தை விற்கும் வணிகம் என்று மாங்க் வாதிடுகிறார்.
ஆனால் தான் சந்தையின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்வதாக சின்டாரா தக்க பதில் கூறுகிறார்.
ஃபக் நாவல் வெளியாகிப் பெரும் வெற்றி பெறுகிறது. ஆனால் மாங்க் தனது அடையாளத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார்.
எஃப் பி ஐ அதிகாரிகள் ஸ்டாக் ஆர் லீயைத் தேடுகிறார்கள். இறுதியில் அந்த இலக்கிய விருதும் மாங்கின் போலி நாவலுக்கே கிடைக்கிறது.
மேடையில் மாங்க் உண்மையைச் சொல்ல முற்படும்போது திரை கருப்பாகிறது.
உண்மையில் இவை அனைத்தும் மாங்க் எழுதிய ஒரு திரைக்கதை என்பது நமக்குத் தெரியவருகிறது.
தயாரிப்பாளர் வைலிக்கு இந்த கதையின் முடிவு பிடிக்காததால் மாங்க் பல மாற்று முடிவுகளைச் சொல்கிறார்.
இறுதியில் மாங்க் மேடையில் கொல்லப்படுவது போன்ற முடிவைத் தயாரிப்பாளர் ரசிக்கிறார்.
அந்தத் திரைக்கதையின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து மாங்க் தனது சகோதரர் கிளிஃப் உடன் வெளியேறுவதோடு படம் நிறைகிறது.
இனம் அடையாளம் மற்றும் வணிகத்திற்காகக் கலை சிதைக்கப்படுவதை இத்திரைப்படம் மிக நுணுக்கமாக விவரிக்கிறது.
இத்திரைப்படம் கலைக்கும் வணிகத்திற்கும் இடையிலான தீராத முரண்பாட்டையும் ஒரு கலைஞன் தனது அடையாளத்தைத் தக்கவைக்கப் போராடும் துயரத்தையும் ஒருங்கே முன்வைக்கிறது.
சமூகம் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த படைப்பாளிகளிடம் இருந்து எப்போதும் வறுமை வன்முறை மற்றும் துன்பியல் கதைகளையே எதிர்பார்க்கிறது என்பதை இந்தப் படம் மிகக் கடுமையான நையாண்டியுடன் சாடுகிறது.
கறுப்பினத்தவர் என்றாலே ஒரு குறிப்பிட்ட வார்ப்புக்குள் அடைக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் பதிப்பகங்கள் மற்றும் வாசகர்களின் பொதுப்புத்தியை இது தோலுரித்துக் காட்டுகிறது.
மாங்க் எலிசன் எனும் அறிவுஜீவி தனது ஆழமான படைப்புகள் நிராகரிக்கப்படுவதைக் கண்டு ஆத்திரமடைந்து ஒரு போலித்தனமான படைப்பை உருவாக்கும்போது உலகம் அதைக் கொண்டாடுவது கலையின் வீழ்ச்சியையும் சந்தையின் போலித்தமையையும் சுட்டிக்காட்டுகிறது.
இத்திரைப்படம் துயரத்தை நுகர்வுப் பொருளாக மாற்றுவதை (Trauma Porn) வன்மையாக விமர்சிக்கிறது. சின்டாரா கோல்டன் போன்ற எழுத்தாளர்கள் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கதைகளை உருவாக்குவதையும் அதையே உண்மை என நம்பும் பொதுமக்களின் தேவையையும் படம் கேள்விக்குள்ளாக்குகிறது.
பன்முகத்தன்மை எனும் பெயரில் நிறுவனங்கள் காட்டும் போலி முற்போக்குத்தனம் உண்மையில் ஒரு கலைஞனின் தனித்துவத்தை எப்படிக் கொல்கிறது என்பதை மாங்க் எலிசனின் பாத்திரப்படைப்பு உணர்த்துகிறது.
தன் தாயின் மருத்துவச் செலவுக்காகவும் குடும்பச் சூழலுக்காகவும் தான் வெறுக்கும் ஒரு போலி அடையாளத்தை மாங்க் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவது ஒரு கலைஞன் சந்தையிடம் தன் ஆன்மாவை அடகு வைப்பதன் குறியீடாக அமைகிறது.
ஒரு கலைஞன் எதை உண்மையானது என்று நினைக்கிறானோ அதைவிட எதை உலகம் உண்மையானது என்று நம்புகிறதோ அதுவே வெற்றியைத் தீர்மானிக்கிறது.
மாங்க் தனது வாழ்வின் வலியைத் திரைக்கதையாக மாற்றும்போது கூட வணிக வெற்றிக்காக அதிலும் ஒரு வன்முறை கலந்த முடிவைத் தயாரிப்பாளர் எதிர்பார்ப்பது ஒருபோதும் மாறாத சந்தை விதியைக் காட்டுகிறது.
ஒரு மனிதனின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்க மறுக்கும் சமூகம் அவனிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை மட்டுமே கோருவதும் அதற்காக அவன் தனது நிஜ அடையாளத்தை மறைத்து வாழ வேண்டியிருப்பதும் தான் இந்தப் படம் சொல்லும் கசப்பான செய்தியாகும்.
ஒரு கலைஞன் தன்னைத்தானே கேலி செய்து கொள்ளும்போதும் சமூகத்திடம் தன் குரூர அந்தரங்க கீழ்மைகளை கடைவிரிக்கையில் மட்டுமே உலகம் அவனைத் திரும்பிப் பார்க்கிறது எனும் எதார்த்தத்தை இந்தப் படம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது.