2022 ஆண்டு சாரா பாலி இயக்கத்தில் வெளியான வுமன் டாக்கிங் திரைப்படம் உலக சினிமாவில் ஒரு மிக முக்கியமான அதிர்வலைகளை ஏற்படுத்திய படைப்பபு.
இது மரியம் டோவ்ஸ் எழுதிய வுமன் டாக்கிங் நாவலை அடிப்படையாகக் கொண்டது, பொலிவியாவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மென்னோனைட் சமூக மக்களின் குடியிருப்பில் நடந்த உண்மைச் சம்பவங்களின் உத்வேகத்தில் உருவான இத்திரைப்படம் ஒரு கடுமையான உன்னதமான அரசியல் நீதிக்கதையாக திரையில் விரிகிறது.
பெண்களின் மீதான வன்முறை மற்றும் அதற்கு எதிரான அவர்களின் கூட்டு விவாதத்தை மையமாகக் கொண்ட இக்கதை உலகத் தரம் வாய்ந்த மேதமையுடன் கையாளப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதையாகத் தொடங்கினாலும் இது உலகெங்கும் உள்ள ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களின் குரலாகவே ஒலிக்கிறது.
இதன் திரைக்கதை அமைப்பு மிக நுணுக்கமான நெசவு வேலைப்பாடுகளைப் போல அடுக்குகளாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சாரா பாலி ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாக இப்படத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
பாலியல் வன்முறைகளை திரையில் நேரடியாகக் காட்டாமல் அதன் பாதிப்புகளையும் அதன் பின் நிகழும் உரையாடல்களையும் மட்டுமே கொண்டு ஒரு அழுத்தமான படைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.
ஒரு அறையில் நடக்கும் உரையாடல்கள் சலிப்பை ஏற்படுத்தாமல் ஒரு போராட்டத்தின் தீவிரத்தைத் ததும்பச் செய்வதில் அவரின் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.
வன்முறைக்கு எதிரான அஹிம்சைப் போராட்டத்தை ஒரு வலிமையான ஆயுதமாக அவர் இதில் முன்வைக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு லூக் மான்ட்பெலியர், படத்தின் நிறங்கள் மிகவும் மங்கலாக ஏறக்குறைய கருப்பு வெள்ளைக்கு நெருக்கமான ஒரு சாயலில் படமாக்கப்பட்டுள்ளன.
இது அந்தக் குடியிருப்பின் இறுக்கமான சூழலையும் அந்தப் பெண்களின் வாழ்விலுள்ள இருளையும் மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
டொராண்டோவில் உள்ள ஒரு பண்ணை வீடு மற்றும் திறந்தவெளிகளில் இந்தக் குடியிருப்பின் பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் விநியோகம் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் ரிலீசிங் மூலம் செய்யப்பட்டது. முதலில் டெலுரைடு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுப் பின்னர் உலகளவில் வெளியானது.
நடிகர்களின் பங்களிப்பு இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம். பிரான்சிஸ் மெக்டார்மண்ட், ரூனி மாரா, கிளாரி ஃபோய், ஜெஸ்ஸி பக்லி போன்ற சர்வதேசத் தரம் வாய்ந்த நடிகைகள் தங்களின் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் கிளாரி ஃபோய் மற்றும் ஜெஸ்ஸி பக்லி ஆகியோர் வாழ்ந்துள்ளனர்.
பென் விஷா ஒரு மென்மையான ஆசிரியராகவும் பெண்களின் குரலைப் பதிவு செய்யும் ஒரு சாட்சியாகவும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜூடித் ஐவி மற்றும் பிரான்சிஸ் மெக்டார்மண்ட் ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்தின் கனத்தை அதிகப்படுத்தியுள்ளது.
ஒரு குழுவாக இவர்கள் வெளிப்படுத்திய நடிப்புத் திறன் உலக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.
படத்தின் இசை ஹில்தூர் குனாடாட்டிர். இவர் ஏற்கனவே ஜோக்கர் படத்தின் இசைக்காகப் புகழ் பெற்றவர். வுமன் டாக்கிங் படத்திற்கு அவர் வழங்கிய இசை ஒரு அமைதியான புரட்சியின் ஒலியைப் போலவே பின்னணியில் ஒலிக்கிறது.
கிட்டார் இசையின் மெல்லிய நரம்பிசையோடு தொடங்கும் பாடல்கள் அந்தப் பெண்களின் விடுதலைப் பயணத்திற்கு ஒரு ஆன்மீகத் தன்மையை வழங்குகின்றன.
இந்த இசை ஒரு நம்பிக்கையின் கீதமாகப் படம் முழுவதும் பயணிக்கிறது.
விருதுகளில் இத்திரைப்படம் தொண்ணூற்று ஐந்தாவது அகாடமி விருதுகளில் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை வென்றது.
சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரையையும் பெற்றது.
கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகள், ரைட்டர்ஸ் கில்ட் விருதுகள் எனப் பல சர்வதேச விருதுகளை இப்படம் அள்ளிக் குவித்துள்ளது.
அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் மற்றும் நேஷனல் போர்டு ஆஃப் ரிவ்யூ ஆகிய அமைப்புகள் 2022 ஆம் ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக இதனைத் தேர்ந்தெடுத்தன.
இத்திரைப்படம் ஒரு மாபெரும் வசூல் சாதனையைப் படைக்காவிட்டாலும் காலத்தால் அழியாத ஒரு கலைப் படைப்பாகத் திகழ்கிறது.
ஒரு சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கைகளையும் ஆண்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் பெண்கள் ஒன்றிணைந்து எடுக்கும் முடிவு எவ்வளவு வலிமையானது என்பதை இது உலகுக்கு உணர்த்தியது.
வெறுப்பு மற்றும் வன்முறையை விடவும் உரையாடல்கள் மற்றும் விவேகமான முடிவுகள் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை இப்படம் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
இதில் பிரதானமாக வரும் மென்னோனைட் சமூகம் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஒரு கிறிஸ்தவ மதக் குழுவாகும். இவர்கள் அனபாப்டிஸ்ட் மரபைப் பின்பற்றுபவர்கள். அதாவது ஒரு மனிதர் வளர்ந்து தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஞானஸ்நானம் பெறுவதையே இவர்கள் முதன்மையானதாகக் கருதுகிறார்கள்.
இச்சமூகம் அமைதிவாதம் மற்றும் வன்முறையற்ற வாழ்வியலைத் தனது ஆணிவேராகக் கொண்டுள்ளது.
உலகளாவிய போர்கள் அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது இவர்களின் முக்கியக் கொள்கையாகும்.
இவர்கள் நவீன உலகத்தின் ஆடம்பரங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளிலிருந்து விலகி மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.
பல மென்னோனைட் குழுக்கள் மின்சாரம் மற்றும் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து குதிரை வண்டிகளையும் பாரம்பரிய முறைகளையும் பின்பற்றுகின்றனர்.
இவர்கள் பொதுவாகத் தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புறங்களில் தங்களுக்குள்ளேயே ஒரு சமூகமாக வாழ்ந்து விவசாயம் மற்றும் கைவினைத் தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களின் உடைகள் மிகவும் எளிமையானதாகவும் அடக்கமானதாகவும் இருக்கும். பெண்கள் பெரும்பாலும் நீண்ட தலைக்கவசம் மற்றும் சீரான ஆடைகளை அணிகிறார்கள்.
இச்சமூகத்தின் மற்றொரு முக்கியமான பண்பு அவர்களின் கூட்டுறவு மற்றும் பரஸ்பர உதவி ஆகும். ஒருவருக்குத் துன்பம் நேர்ந்தால் அந்தச் சமூகமே திரண்டு வந்து அவருக்கு உதவுவதை அவர்கள் கடமையாகக் கொண்டுள்ளனர்.
இவர்களின் வழிபாடுகள் மிகவும் எளிமையானவை. எந்த ஒரு ஆடம்பரமான சடங்குகளும் இன்றி இறைவனைத் துதிப்பதிலும் விவிலியத்தைப் பின்பற்றுவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
உலகமெங்கும் பரவி இருந்தாலும் லத்தீன் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை இன்றும் காண முடியும்.
இந்தப் படத்தின் அடிநாதம் ஒரு நச்சுச் சூழலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதே உண்மையான ஆன்மீகம் மற்றும் அறம் என்பதாகும். காலம் காலமாகப் புனிதமாகக் கருதப்படும் மதக் கோட்பாடுகள் மற்றும் கலாச்சார விழுமியங்கள் பெண்களின் மௌனத்தையே தர்மம் என்று போதிக்கின்றன.
ஆனால் அந்த மௌனம் அநீதி இழைப்பவர்களுக்குச் சாதகமாக அமையும் போது அதை உடைப்பதே நீதியாகும் என்பதை இந்தப் பெண்கள் உரக்கச் சொல்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த வன்புணர்வுகளை வெறும் தனிப்பட்ட அவமானமாகப் பார்க்காமல் அது ஒரு ஒட்டுமொத்த சமூகச் சீரழிவு என்பதை உணர்கிறார்கள்.
பழிவாங்குதல் அல்லது வன்முறை மூலம் தீர்வு காண்பதை விடவும் அறிவுபூர்வமான விவாதம் மற்றும் தெளிவான முடிவுகள் வழியாகத் தங்கள் வாழ்வை மீட்டெடுப்பதே இந்தப் படத்தின் ஆன்மாவாக இருக்கிறது.
மன்னிப்பு என்பது அநீதியைச் சகித்துக் கொள்வது கிடையாது. மாறாகத் தனது சுயமரியாதையையும் தன் குழந்தைகளின் எதிர்காலத்தையும் காக்க ஒரு இருண்ட நிலத்திலிருந்து வெளியேறுவதே மேலான மன்னிப்பு என்று அவர்கள் ஒரு புதிய விளக்கத்தைத் தருகிறார்கள்.
இந்தப் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட வலியைத் தாண்டித் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வன்முறையற்ற உலகத்தைக் காட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பயணிக்கிறார்கள்.
விடுதலை என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல அது சிந்தனையில் ஏற்படும் மாற்றமாகும். ஒரு பெண் எப்போது தன் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பயத்தைத் துறந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கிறாளோ அப்போதே அவள் விடுதலை அடைந்துவிடுகிறாள்.
அதிகாரம் மற்றும் அடக்குமுறைக்கு எதிராகப் பெண்கள் ஒன்றிணைந்து நின்றால் எவ்வளவு பெரிய கட்டமைப்பும் தகர்ந்து போகும் என்ற நம்பிக்கையே இந்தப் படத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
வன்முறை ஒருபோதும் வன்முறைக்குத் தீர்வாகாது என்பதை உணர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணம் ஒரு அமைதியான புரட்சியின் அடையாளமாகும்.
ஆடை வடிவமைப்பாளர் குயிட்டா ஆல்ஃபிரட் இந்தக் கதைக்காக மென்னோனைட் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கடையிலிருந்து நேரடித் துணிகளையும் பிரார்த்தனைத் தொப்பிகளையும் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்தின் குணாதிசயங்களை வெளிப்படுத்த அந்தத் துணிகளின் நிறங்களும் வடிவங்களும் தனித்தனியாகத் திட்டமிடப்பட்டன. உலகத்தரம் வாய்ந்த நடிகைகள் கடுமையான வெப்பத்தில் நீண்ட கை கொண்ட பாலியஸ்டர் ஆடைகளை அணிந்து நடித்தது பெரும் சவாலாக இருந்தது. ஆயினும் அந்த உடைகள் மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக இருந்ததாகக் கலைஞர்கள் உணர்ந்தனர். இப்படத்தின் பின்னணி இசையை அமைத்த ஹில்தூர் குனாடாட்டிர் டொராண்டோ திரைப்பட விழாவில் கௌரவ விருது பெற்றார்.
இசைக்காகப் பயன்படுத்தப்பட்ட ஸ்பீக் அப் என்ற பகுதி படத்தின் ட்ரைலருக்கு அடிப்படையாக அமைந்தது. தி மான்கீஸ் இசைக்குழுவின் 1967 ஆம் ஆண்டு பாடலான டேட்ரீம் பிலீவர் படத்தில் இடம்பெற்றிருந்தாலும் அதன் அதிகாரப்பூர்வ இசைத் தட்டில் சேர்க்கப்படவில்லை. இந்தப் படம் ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட பிறகு அதன் வசூல் நூற்று அறுபத்தி நான்கு சதவீதம் அதிகரித்தது. ஓரியன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படைப்பு ஒன்று சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்துச் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் பரிந்துரையைப் பெற்றது இதுவே முதல் முறையாகும். சிபிஆர் தளம் இந்தப் படத்தைத் தற்போதுள்ள 2020களின் சிறந்த சுயாதீனத் திரைப்படமாக வரிசைப்படுத்தியுள்ளது.
படத்தின் கதை:-
2010 ஆம ஆண்டில் தனிமைப்படுத்தப்பட்ட மென்னோனைட் காலனியின் அதிகாலைப் பொழுதில் படம் துவங்குகிறது, அது. ஒரு இளம் பெண் தன் படுக்கையில் விழித்தபோது உடல் முழுவதும் ரத்தக் காயங்களும் தழும்புகளும் இருப்பதைக் கண்டு அலறுகிறாள்.
இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல அந்தப் பகுதியில் இருந்த அத்தனை பெண்களின் கதையும் இதுதான்.
அங்குள்ள ஆண்கள் ஆடு மாடுகளுக்குப் பயன்படுத்தும் ஒரு வீரியமான மயக்க மருந்தை ரகசியமாகத் தெளித்து அந்தப் பெண்களைத் தொடர்ந்து வன்புணர்வு செய்து வந்த கொடூரம் அம்பலமாகிறது.
அந்தப் புனிதமான குடியிருப்பின் சுவர்களுக்குள் இத்தனை காலம் சாத்தானின் வேட்டை நடந்ததை அறிந்து அந்தப் பெண்கள் நிலைகுலைந்து போகிறார்கள்.
குற்றம் செய்த ஆண்கள் சிலரை காவல்துறை கைது செய்து இழுத்துச் செல்கிறது. அவர்களுக்குப் பிணை எடுப்பதற்காக அந்த ஊரின் மற்ற ஆண்கள் அனைவரும் நகரம் நோக்கிப் பயணிக்கிறார்கள்.
ஆண்கள் இல்லாத அந்த இரண்டு நாட்கள் அந்தப் பெண்களுக்குக் கிடைத்த ஒரு அரிய விடுதலைக் காலம்.
தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவர்கள் ஒரு வாக்கெடுப்பு நடத்துகிறார்கள்.
எதையும் செய்யாமல் பொறுத்துக் கொள்வதா அங்கேயே தங்கிப் போராடுவதா அல்லது அந்த நரகத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதா என்பதே அந்தத் தேர்வு. போராடுவது மற்றும் வெளியேறுவது ஆகிய இரண்டு முடிவுகளும் சமமான வாக்குகளைப் பெற இறுதியான ஒரு முடிவை எடுக்க ஒரு வைக்கோல் பட்டறையில் பதினொரு பெண்கள் ரகசியமாகக் கூடுகிறார்கள்.
இதில் ஸ்கார்ஃபேஸ் ஜான்ஸ் (பிரான்சிஸ் மெக்டார்மண்ட்) என்பவள் மாற்றத்தை விரும்பாமல் தன் மகள் அண்ணா (கிரா குலோயன்) மற்றும் பேத்தி ஹெலினா (ஷைலா பிரவுன்) ஆகியோருடன் கூட்டத்தை விட்டு வெளியேறுகிறாள்.
அந்தப் பெண்களுக்கு எழுத்து அறிவு கிடையாது. அவர்களின் குரல்களை உலகிற்குப் பதிவு செய்ய அகஸ்டஸ் (பென் விஷா) என்ற பள்ளி ஆசிரியர் மட்டும் அங்கு சாட்சியாக அமர்ந்து அனைத்தையும் காகிதத்தில் வடிக்கிறார்.
அகஸ்டஸ் முன்பு அந்தச் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தற்போது சிறுவர்களுக்குப் பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் சலோம் (கிளாரி ஃபோய்) எரிமலையாக வெடிக்கிறாள். தன் நான்கு வயதுப் பிஞ்சு மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு அவள் கண்கள் சிவக்கின்றன.
சிகிச்சைக்காக மகளை அழைத்துச் சென்றுவிட்டு திரும்பிய வேகத்தில் துரோகம் செய்த ஆண்களைக் கொன்று தீர்க்க வேண்டும் என்று அவள் துடிக்கிறாள்.
மெஜால் (மிச்செல் மெக்லியோட்) அவளுக்கு ஆதரவாக நிற்கிறாள்.
ஆனால் வன்புணர்வால் தன் வயிற்றில் ஒரு கருவைச் சுமந்து கொண்டிருக்கும் ஓனா (ரூனி மாரா) வன்முறையைத் தவிர்த்து ஒரு புதிய உலகத்தைப் படைக்க வேண்டும் என்று நிதானமாகப் பேசுகிறாள்.
மரிச் (ஜெஸ்ஸி பக்லி) என்பவளோ தன் கணவனின் அடியையும் மிதியையும் தாங்கிக்கொண்டு மன்னிப்பு ஒன்றே இறைவனின் வழி என்று சொல்லி விம்மி அழுகிறாள்.
விவாதம் நீளும்போது அகதா (ஜூடித் ஐவி) மற்றும் கிரேட்டா (ஷீலா மெக்கார்த்தி) ஆகிய முதியவர்கள் தங்கள் அனுபவத்தால் அவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.
தாங்கள் அங்கேயே தங்கினால் தங்கள் பிள்ளைகளும் இதே நரகத்தில்தான் வளர வேண்டும் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.
விவாதத்தின் ஊடாக ஓனா மீது அகஸ்டஸ் காதல் கொண்டிருப்பதும் தெரியவருகிறது.
ஆனால் ஓனா ஒரு பெண்ணாகத் தனது சுதந்திரத்தை இழக்க விரும்பாததால் திருமணத்தை மறுக்கிறாள்.
இதற்கிடையில் மரிச்சின் கொடுமைக்கார கணவன் கிளாஸ் (எலி ஹாம்) பணத்திற்காகத் திரும்பப் போகிறான் என்ற செய்தி வர பெண்களின் முடிவு உறுதியாகிறது.
அவர்கள் வெளியேறுவதற்கான காரணங்களை அகஸ்டஸ் பதிவு செய்கிறார்.
குழந்தைகளின் பாதுகாப்பு தங்களின் தூய்மையான நம்பிக்கை மற்றும் சுதந்திரமான சிந்தனை ஆகியவையே அவர்களின் இலக்கு.
பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை மட்டும் தங்களுடன் அழைத்துச் செல்லவும் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தீர்மானிக்கிறார்கள்.
விடியற்காலையில் அவர்கள் கிளம்பத் தயாராகும் போது மெல்வின் (ஆகஸ்ட் வின்டர்) என்ற நபர் சலோமின் மகன் ஆரோன் (நதானியேல் மெக்பார்லண்ட்) பயத்தில் ஒளிந்திருப்பதைச் சொல்கிறார்.
ஆரோனை விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாத சலோம் அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றுகிறாள்.
அகஸ்டஸ் தன் காதலை ஓனாவிடம் சொல்லி ஒரு வரைபடத்தைக் கொடுக்கிறார்.
பெண்கள் அனைவரும் வண்டிகளில் ஏறித் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
ஜான்ஸ் மற்றும் அகஸ்டஸ் பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பெண்கள் ஒரு புதிய விடியலை நோக்கிப் பயணிக்கிறார்கள்.
ஓனாவிற்குப் பிறக்கும் ஒரு ஆண் குழந்தை பழைய கொடுமைகள் ஏதுமற்ற ஒரு சுதந்திரமான உலகில் தன் வாழ்க்கையைத் தொடங்கும் என்பதை ஆட்ஜே (கேட் ஹாலெட்) தனது குரல் மூலம் உறுதிப்படுத்துகையில் படம் நிறைகிறது.
இந்தப் படம் உலகிற்குச் சொல்லும் செய்தி மிகவும் ஆழமானது , வலிமையானது. ஒரு சமூகமாக நாம் எதைப் புனிதமாகக் கருதுகிறோம் என்பதையும், அந்தப் புனிதத்தின் பெயரால் நடக்கும் அநீதிகளையும் இந்தப் படம் தோலுரித்துக் காட்டுகிறது.
பெண்கள் வெறும் உடல்கள் அல்ல, அவர்களுக்கென்று சுயமான சிந்தனையும் ஆன்மாவும் உண்டு என்பதை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது.
காலம் காலமாக மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னிப்பதே உயர்ந்த குணம் என்றும் போதிக்கப்படுகிறது.
ஆனால், அநீதி இழைக்கப்படும்போது அந்த மௌனத்தைக் கலைப்பதும், அநீதிக்குத் துணை போகும் இடத்தை விட்டு வெளியேறுவதும் தான் உண்மையான ஆன்மீகம் என்பதை இந்தப் பெண்கள் நிரூபிக்கிறார்கள்.
மன்னிப்பு என்பது அநீதியை ஏற்றுக்கொள்வது அல்ல. உண்மையான மன்னிப்பு என்பது ஒரு நச்சுச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, அடுத்த தலைமுறைக்கு ஒரு ஆரோக்கியமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதே ஆகும்.
இந்தப் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட வலியை விட, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு வன்முறையற்ற, பெண்களை மதிக்கும் புதிய பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எடுக்கும் முடிவு, ஒரு சமூக மாற்றத்திற்கான விதையாக இருக்கிறது.
சுதந்திரம் என்பது வெறும் இடமாற்றம் அல்ல, அது சிந்தனையில் ஏற்படும் மாற்றம். எப்போது ஒரு பெண் தன் உரிமைகளுக்காகவும் தன் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் பயத்தைத் துறந்து முடிவெடுக்கிறாளோ, அப்போதே அவள் விடுதலை அடைந்துவிடுகிறாள்.
இந்தப் படம் அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பெண்கள் ஒன்றிணைந்து நின்றால், எவ்வளவு பெரிய கோட்டையும் தகரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.