க்ளோயி ஜாவோ இயக்கத்தில் 2025-ஆம் ஆண்டு வெளியான 'ஹாம்நெட்' (Hamnet), மேகி ஓ'ஃபாரல் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அவரது மனைவி ஆக்னஸ் ஹாத்வே ஆகியோரின் குடும்ப வாழ்க்கையையும், அவர்களது 11 வயது மகன் ஹாம்நெட்டின் மறைவு அவர்களை எவ்வாறு பாதித்தது என்பதையும் இத்திரைப்படம் மிக உருக்கமாகச் சித்தரிக்கிறது.
ஜெஸ்ஸி பக்லி மற்றும் பால் மெஸ்கல் ஆக்னஸ் மற்றும் வில்லியமாக முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெறும் ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமில்லாமல், மரணம் மற்றும் இழப்பிலிருந்து கலை எவ்வாறு பிறக்கிறது என்பதை விளக்கும் ஒரு உன்னத படைப்பாக உலக சினிமா மேதைகளால் கொண்டாடப்படுகிறது.
இயக்குநர் க்ளோயி ஜாவோ, மேகி ஓ'ஃபாரலுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். ஆக்னஸின் தனித்துவமான குணாதிசயங்களையும், இயற்கையுடனான அவளது பிணைப்பையும் காட்சிப்படுத்துவதில் ஜாவோவின் முத்திரை பளிச்சிடுகிறது.
லூகாஸ் ஜால் ஒளிப்பதிவு, 16-ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறது. குறிப்பாக, லண்டனின் தெருக்களும், ஸ்ட்ராட்போர்டின் பசுமையான காடுகளும் படத்தின் உணர்ச்சிப்பூர்வமான சூழலுக்குப் பெரும் வலுசேர்க்கின்றன.
படப்பிடிப்பு வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஹெியர்ஃபோர்ட்ஷையர் பகுதிகளில் நடைபெற்றது. புகழ்பெற்ற குளோப் தியேட்டரின் ஒரு பிரம்மாண்டமான பிரதி இதற்காக உருவாக்கப்பட்டு, அதில் நாடகக் காட்சிகள் படமாக்கப்பட்டது
இப்படத்தின் கலை நுணுக்கத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
ஜெஸ்ஸி பக்லியின் நடிப்பு உலக அளவில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு தாயின் பேரன்பையும், மகனை இழந்த ஒரு பெண்ணின் ஆழமான துயரத்தையும் அவர் வெளிப்படுத்திய விதம் வியக்கத்தக்கது. பால் மெஸ்கல், ஒரு கலைஞனாகவும் தந்தையாகவும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் அகப்போராட்டங்களை மிக நேர்த்தியாகப் பிரதிபலித்துள்ளார். இவர்களுடன் எமிலி வாட்சன், ஜோ ஆல்வின் போன்றோரின் பங்களிப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. மேக்ஸ் ரிக்டரின் இசை, படத்தின் ஒவ்வொரு கனமான தருணத்தையும் பார்வையாளர்களின் இதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது.
குறிப்பாக, "On the Nature of Daylight" என்ற அவரது இசைத் தொகுப்பு இப்படத்தில் பயன்படுத்தப்பட்டு உணர்ச்சிகளை மேலோங்கச் செய்கிறது.
இத்திரைப்படம் 2025 ஆகஸ்ட் மாதம் டெல்லுரைடு திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டது. தொடர்ந்து டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மிக உயரிய 'பீப்பிள்ஸ் சாய்ஸ்' விருதை வென்றது.
உலகளவில் சுமார் 88 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம், விமர்சகர்களிடம் 'யுனிவர்சல் அக்ளைம்' எனப்படும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. 83-வது கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகை ஆகிய விருதுகளை வென்றதுடன், 98-வது அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை உட்பட எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
அமெரிக்க திரைப்பட நிறுவனம் 2025-ஆம் ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக இதனைத் தேர்ந்தெடுத்தது. இழப்பின் வழியே கலையைத் தேடும் ஒரு உன்னத பயணமாக 'ஹாம்நெட்' உலகத் திரைப்பட வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் அனைத்தும் அதன் உணர்ச்சிகரமான ஆழத்தையும், நடிகர்களின் அபாரமான பங்களிப்பையும் ஒருசேரக் கொண்டாடுகின்றன. இதயத்தை நொறுக்குவதும் அதனை ஆற்றி தேற்றுவதுமான ஒரு அதிசயத்தை இப்படம் நிகழ்த்துவதாகப் பாராட்டப்படுகிறது.
ஷேக்ஸ்பியரின் உலகப்புகழ் பெற்ற படைப்பிற்குப் பின்னால் இருந்த உத்வேகத்தை, மிக வலிமையான உணர்ச்சிகளுடன் இப்படம் கற்பனை செய்திருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு தாய் தனது பிள்ளையைப் பெற்றெடுப்பதில் கொள்ளும் பேரானந்தத்தையும், அதே பிள்ளை இறக்கும்போது அடையும் சொல்லொண்ணாத் துயரத்தையும் ஒரு காட்டுயிரைப் போன்ற இயல்பான உணர்ச்சிகளுடன் வெளிப்படுத்தப்பட்ட விதம் வியப்பிற்குரியது.
சில விமர்சனங்கள் இப்படத்தை "மிகவும் கொடூரமான உணர்ச்சிப் பிழம்பு" என்றும் விவரிக்கின்றன,அந்த அளவிற்கு இது பார்ப்பவர்களின் மனதை உலுக்கி எடுக்கிறது. கலை என்பது ஒரு மனிதனின் நிஜ வாழ்க்கையிலிருந்து எவ்வாறு பிறக்கிறது என்பதைப் பற்றி இப்படம் பேசும் விதம் மற்ற படங்களிலிருந்து இதனைத் தனித்து காட்டுகிறது.
படத்தின் ஒரு பகுதியில், வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது மகனை வாழ்விற்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட ஒரு புள்ளியில் தேடும் காட்சிகள் ஆன்மீக ரீதியான ஒரு தேடலாகவே பார்க்கப்படுகின்றன.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட விளக்கங்களிலேயே, இது மிகவும் பொருத்தமான மற்றும் கண்ணியமான அஞ்சலி என்று புகழாரங்கள் சூட்டப்பட்டுள்ளன.
பெரும்பாலான விமர்சனங்கள் இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளின் செழுமையைக் கொண்டாடினாலும், ஒரு சில மாற்றுக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.
இது விருதுகளைக் குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு மிகையான உணர்ச்சிகளைக் கொண்ட திரைப்படம் என்றும், இதில் சில கால முரண்பாடுகள் இருப்பதாகவும் ஒரு சில விமர்சனங்கள் சுட்டிக்காட்டின.
இருப்பினும், படத்தின் இறுதிப்பகுதி கண்களைக் குளமாக்கும் ஒரு காவியமாக இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக 2025-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படைப்பு இதுவே என்பதும் பொதுவான கருத்தாக உள்ளது.
படத்தின் கதை:-
இங்கிலாந்தின் ஸ்ட்ராட்போர்டு பகுதியில் "ஹாம்நெட்" மற்றும் "ஹேம்லட்" ஆகிய இரண்டு பெயர்களும் ஒரே பெயராகவே கருதப்பட்டன என்ற வரலாற்றுத் தகவலுடன் இக்கதை தொடங்குகிறது.
ஆக்னஸ் ஹாத்வே என்ற அழகிய இளம்பெண் ஒரு மர்மமான குகைக்கு அருகில் காட்டில் பருந்துகளைப் பழக்கிக் கொண்டும், மூலிகைகளைச் சேகரித்துக் கொண்டும் இருக்கிறாள்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் தன் குடும்பக் கடனை அடைப்பதற்காக அவ்வூரில் ஒரு ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆக்னஸைக் கண்டதும் காதல் வர தன் மாணவர்களை விட்டுவிட்டு அவளிடம் செல்கிறார்,
இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் உண்டாகிறது. ஆக்னஸ் ஒரு காட்டு சூனியக்காரியின் மகள் என்றும், அவளுக்கு மூலிகை ரகசியங்கள் தெரியும் என்றும் பரவும் வதந்திகளை வில்லியமின் தாய் மேரி அவனிடம் கூறுகிறார்.
வில்லியமின் நெற்றியில் ஏற்பட்ட ஒரு காயத்தை ஆக்னஸ் தனது மூலிகை அறிவால் குணப்படுத்துகிறாள்.
வில்லியம் காட்டில் ஆக்னஸைச் சந்திக்கையில், அவள் அவரிடம் ஒரு கதை கேட்கிறாள். அவர் ஆர்க்கியஸ் மற்றும் யூரிடைஸ் புராணக் கதையைக் கூறி அவளை மகிழ்விக்கிறார்.
ஆக்னஸ் வில்லியமின் உள்ளங்கையைப் பார்த்து, அவருக்கு ஒரு வெற்றிகரமான எதிர்காலம் அமையும் என்றும், அவளது மரணப்படுக்கையில் இரண்டு குழந்தைகள் இருப்பார்கள் என்றும் கணிக்கிறாள்.
அவர்கள் இருவரும் காட்டில் ஒன்று சேர, ஆக்னஸ் கருவுறுகிறாள். இதனால் அவளது குடும்பம் அவளைப் புறக்கணிக்கிறது, அவள் ஷேக்ஸ்பியர் குடும்பத்துடன் குடியேறுகிறாள். இருவரும் அவசரமாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
ஆக்னஸ் அக்காட்டிற்குள் சூசன்னா என்ற மகளைப் பெற்றெடுக்கிறாள்.
வில்லியம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்ய மறுப்பதால் அவரது தந்தை ஜான் அவரை அடிக்கிறார், அதற்கு வில்லியம் பதிலடி கொடுக்கிறார். வில்லியமின் எழுத்தார்வத்தையும் ஆதங்கத்தையும் கண்ட ஆக்னஸ், அவரை லண்டனுக்கு அனுப்பி நாடகத் துறையில் ஈடுபடச் செய்யுமாறு தன் சகோதரன் பர்த்தலோமியூவிடம் உதவுமாறு பரிந்துரைக்கிறாள்.
வில்லியம் லண்டன் செல்ல, ஆக்னஸும் சூசன்னாவும் ஸ்ட்ராட்போர்டிலேயே தங்குகிறார்கள். சிறிது காலம் கழித்து, மீண்டும் கர்ப்பமாக இருக்கும் ஆக்னஸ் பிரசவத்திற்காக வெளியே செல்ல முயல்கிறாள், ஆனால் வில்லியமின் குடும்பத்தினர் அவளை வீட்டிற்குள்ளேயே தடுத்து வைக்கின்றனர்.
அங்கு அவள் ஹாம்நெட் மற்றும் ஜூடித் என்ற இரட்டையர்களைப் பெற்றெடுக்கிறாள். ஜூடித் பிறந்தபோது அசைவற்று இருக்கிறாள். தனது தாயின் மரணப்படுக்கையில் தன்னை அனுமதிக்காததை நினைவுகூர்ந்து, மூடநம்பிக்கைகளையும் மீறி குழந்தையைத் தன்னிடம் தருமாறு ஆக்னஸ் பிடிவாதமாகக் கேட்கிறாள்.
அவள் கைகளில் ஏந்தியதும் ஜூடித் உயிர் பெறுகிறாள்.
பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, புகழ்பெற்ற வில்லியம் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்கிறார். குழந்தைகள் மிகவும் நெருக்கமாக வளர்கிறார்கள்.
இரட்டையர்கள் இருவரும் தாங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், ஒருவருக்கொருவர் ஆடைகளை மாற்றிக்கொண்டு குடும்பத்தினரை ஏமாற்றி விளையாடுகிறார்கள்.
ஹாம்நெட் தன் தந்தையின் நாடகக் குழுவில் சேர விரும்புவதையும், அவன் வாழ்வில் செழிப்பான் என்றும் ஆக்னஸ் கணிக்கிறாள்.
ஆக்னஸின் வளர்ப்புப் பருந்து இறந்துவிட, அதை அடக்கம் செய்கிறார்கள். பருந்தின் ஆத்மா அவர்களைத் தன் இதயத்தில் சுமந்து செல்லும் என்று ஆக்னஸ் குழந்தைகளிடம் கூறி, அதனிடம் ஒரு வரம் கேட்கச் சொல்கிறாள்.
வில்லியம் லண்டனுக்குத் திரும்பும்போது, அங்கு பிளேக் நோய் பரவியிருப்பதைக் காண்கிறார். ஸ்ட்ராட்போர்டில் மகள் ஜூடித் பிளேக் நோயால் பாதிக்கப்படுகிறாள்.
மகன் ஹாம்நெட் அவளைத் தேற்ற பருந்தின் கதையைக் கூறி, அவளுக்குப் பதிலாகத் தான் சாக விரும்புவதாகக் கூறி அவள் அருகிலேயே படுத்து மரணத்தை ஏமாற்ற முயல்கிறான்.
மகள் ஜூடித் குணமடைகிறாள், ஆனால் மகன் ஹாம்நெட் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறான்.
அவன் இறக்கும் தருவாயில், ஒரு மேடையில் நின்று தனது தாயை அழைப்பது போலவும், ஆக்னஸின் பருந்து அங்கு தோன்றுவது போலவும் கற்பனை செய்கிறான்.
வில்லியம் வீட்டிற்கு விரைந்து வந்து, ஹாம்நெட்டின் உடலைக் கண்டு நிலைகுலைகிறார். மகனின் மரணம் அவர்கள் திருமண உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்துகிறது.
வில்லியம் ஸ்ட்ராட்போர்டிலேயே மிகப்பெரிய வீட்டினை வாங்கிவிட்டு மீண்டும் லண்டன் செல்கிறார்.
ஆக்னஸ் அவனது கையைப் பிடித்து ஆருடம் பார்த்தவள், இப்போது தனக்கு அவனது எதிர்காலம் பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறுகிறாள்.
லண்டனில் வில்லியம் 'ஹேம்லட்' நாடகத்தை குழுவினருக்கு பயிற்சியளிக்கிறார், ஆனால் நடிகர்களின் நடிப்பு அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. விரக்தியில் தேம்ஸ் நதிக்கரையில் நின்று "To be, or not to be" என்ற வசனத்தைப் பேசுகிறார்.
ஆக்னஸின் மாற்றாந்தாய் ஜோன், அவளிடம் 'ஹேம்லட்' நாடகத்தின் விளம்பரத்தைக் காட்டி, வில்லியமைத் திருமணம் செய்ததற்காக அவளை ஏசுகிறாள்.
ஆனால் ஆக்னஸ் அவளை எதிர்க்கிறாள். ஆக்னஸும் பர்த்தலோமியூவும் லண்டனுக்குப் பயணம் செய்கிறார்கள்.
வில்லியம் வீட்டில் இல்லாததால், அவர்கள் குளோப் தியேட்டரில் நடக்கும் 'ஹேம்லட்' நாடகத்தைப் பார்க்கச் செல்கிறார்கள்.
ஆரம்பத்தில் தன் மகனின் பெயர் அவமதிக்கப்படுவதாக ஆக்னஸ் கோபமடைந்தாலும், வில்லியம் மேடையில் ஹேம்லட்டின் தந்தையின் ஆவியாகத் தோன்றுவதைக் கண்டதும், அந்த நாடகம் தன் மகனுக்காக வில்லியம் செய்த அஞ்சலி என்பதை உணர்ந்து கண்ணீர் விடுகிறாள்.
மேடைக்கு பின்னால் ஆக்னஸைக் கவனித்த வில்லியம், நாடகத்தைக் கேட்டுக்கொண்டே அழுகிறார். நாடகம் முன்னேறும்போது அதில் வரும் வாள்வீச்சு காட்சிகள், ஹாம்நெட்டின் கனவை நிறைவேற்றுவது போல் அமைகின்றன.
ஹேம்லட் இறக்கும் காட்சியில், ஆக்னஸ் அவர்கள் முதன்முதலில் சந்தித்தபோது வில்லியமின் கையைப் பிடித்தது போலவே, மேடையில் இருக்கும் நடிகரின் கையை நோக்கித் தன் கையை நீட்டுகிறாள்.
அவளைத் தொடர்ந்து மற்ற ரசிகர்களும் கைகளை நீட்டுகிறார்கள். ஹாம்நெட் இறக்கும் போது கண்ட அதே மேடை தரிசனம் இப்போது ஆக்னஸின் கண்களுக்குத் தெரிகிறது. ஹாம்நெட் சோகத்திலிருந்து புன்னகைக்கு மாறி மெல்ல மறைகிறான். ஹாம்நெட்டின் இறப்பிற்குப் பிறகு முதல்முறையாக ஆக்னஸ் புன்னகைத்து சிரிக்கும் தருணத்தில் படம் நிறைகிறது.
வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஹேம்லட்' நாடகம் உலகப் புகழ் பெற்ற ஒரு துயரச் சம்பவக் காவியமாகும். டென்மார்க் நாட்டு இளவரசனான ஹேம்லட், தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன் சித்தப்பா கிளாடியஸ் அரியணை ஏறுவதையும், தன் தாயை மணந்து கொள்வதையும் கண்டு மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்.
ஒரு நள்ளிரவில் தனது தந்தையின் ஆவி ஹேம்லட் முன் தோன்றி, தான் இயற்கையாக இறக்கவில்லை என்றும், கிளாடியஸால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாகவும் கூறி, அதற்குப் பழிவாங்கச் சொல்கிறது. இந்தச் செய்தி ஹேம்லட்டின் மனதை நிலைகுலையச் செய்கிறது.
பழிவாங்கத் துடிக்கும் அதே வேளையில், ஆவி சொன்னது உண்மைதானா அல்லது அது ஒரு பிசாசா என்ற சந்தேகம் அவருக்குள் எழுகிறது.
இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கவும், தன் எதிரிகளைக் கண்காணிக்கவும் ஹேம்லட் பைத்தியம் பிடித்தவர் போல நடிக்கத் தொடங்குகிறார்.
உண்மையை அறிய அவர் ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார். அதன்படி, ஒரு நாடகக் குழுவை அழைத்து, தன் தந்தை எப்படிக் கொல்லப்பட்டாரோ அதே போன்ற ஒரு காட்சியை மேடையில் அரங்கேற்றுகிறார். அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கிளாடியஸ், தனது குற்ற உணர்ச்சியால் பதற்றமடைந்து அங்கிருந்து வெளியேறுகிறார்.
இதன் மூலம் தன் சித்தப்பாதான் கொலையாளி என்பதை ஹேம்லட் உறுதி செய்கிறார். இருப்பினும், அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பதில் அவருக்குள் பெரும் மனப்போராட்டம் நிலவுகிறது.
நாடகத்தின் மிக முக்கியமான பகுதி ஹேம்லட்டின் தன்னுரைகள் ஆகும்.
குறிப்பாக, "வாழ்வா அல்லது சாவா?" (To be, or not to be) என்று தொடங்கும் அவரது உரையாடல், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தார்மீகக் குழப்பத்தையும், மரணம் குறித்த அச்சத்தையும் அழகாக விவரிக்கிறது.
இந்த நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் - காதலி ஓபிலியா, நண்பன் ஹொரேஷியோ என அனைவரும் - வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறார்கள்.
கதையின் இறுதியில் ஒரு வாள்வீச்சுப் போட்டியில் சூழ்ச்சி காரணமாக ஹேம்லட், கிளாடியஸ், ராணி என அனைவரும் இறக்கிறார்கள். இது ஒரு மாபெரும் சோக முடிவாக அமைகிறது.
இலக்கிய ரீதியாகப் பார்க்கும்போது, ஷேக்ஸ்பியர் தனது மகன் ஹாம்நெட்டின் இறப்பிற்குப் பிறகு இந்த நாடகத்தை எழுதினார்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பை ஆழமாகப் பேசும் இந்த நாடகம், உண்மையில் ஷேக்ஸ்பியர் தனது மகனுக்குக் கலையின் வாயிலாகச் செய்த அஞ்சலியாகவே கருதப்படுகிறது.
மனித மனதின் ஆழமான உணர்ச்சிகள், சந்தேகம், பழிவாங்குதல் மற்றும் தத்துவப் பார்வைகளை உள்ளடக்கியதால், இது இன்றும் உலக அரங்குகளில் ஒரு தலைசிறந்த படைப்பாகப் இளங்கலை முதுகலை ஆங்கில இலக்கியங்களில் பாடமாக உள்ளது, இலக்கிய ஆர்வலர்களால் போற்றப்படுகிறது.