2021 ஆம் ஆண்டு வெளியான பெல்ஃபாஸ்ட் திரைப்படம் ஒரு சிறுவனின் பார்வையில் வெளி உலகைக் காணும் நெகிழ்ச்சியான படைப்பு.
கென்னத் பிரானா எழுதி இயக்கிய இத்திரைப்படம் அவரது திரையுலகப் பயணத்தில் முக்கியமான படைப்பு.
1969 ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்தில் உள்நாட்டுக் கலவரங்களின் தொடக்கக் காலத்தில் ஒரு சிறுவனின் குழந்தைப்பருவம் எப்படி உளச்சிக்கல்களுடன் அமைந்தது என்பதை இத்திரைப்படம் மிக நுணுக்கமாக விவரிக்கிறது.
1969 ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்தில் வெடித்த இந்த வன்முறை வரலாற்றில் தி டிரபிள்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
இது அடிப்படையில் வடக்கு அயர்லாந்தில் சிறுபான்மையினராக இருந்த கத்தோலிக்கர்களுக்கும் பெரும்பான்மையாக இருந்த புராட்டஸ்டன்ட்டுகளுக்கும் இடையிலான ஒரு நீண்டகால முரண்பாட்டின் பின்னான எழுச்சி. கத்தோலிக்கர்கள் தங்களை அயர்லாந்து குடியரசுடன் இணைக்க விரும்பினர்.
ஆனால் பிரிட்டிஷ் ஆதரவு கொண்ட புராட்டஸ்டன்ட் குழுக்கள் இங்கிலாந்துடனேயே நீடிக்க விரும்பின.
இந்த மோதல் 1969 ஆகஸ்ட் மாதத்தில் பெல்ஃபாஸ்ட் மற்றும் டெர்ரி போன்ற நகரங்களில் பெரும் கலவரமாக உருவெடுத்தது. வீடுகள் தாக்கி எரிக்கப்பட்டன, மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமைதியை நிலைநாட்ட பிரிட்டிஷ் ராணுவம் தெருக்களில் இறங்கியது.
இப்படிப்பட்ட வன்முறை மற்றும் மதப் பிரிவினைகளுக்கு நடுவே ஒரு குடும்பம் தங்களுக்குள் வைத்திருக்கும் பிரிக்க முடியாத அன்பும் பிணைப்புமே இப்படத்தின் அடிநாதமாக உள்ளது .
ஒரு சிறுவனின் மழலைப் பார்வையிலிருந்து கதையை அணுகுவதன் மூலம் அரசியல் மற்றும் வன்முறையின் கொடூரத்தை விடவும் அவனது குடும்ப உறவுகள், முதல் காதல் மற்றும் தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஆகியவை எவ்வளவு வலிமையானவை என்பதை இயக்குனர் நமக்கு உணர்த்துகிறார்.
சொந்த மண்ணை விட்டுப் பிரிய மனமில்லாத தவிப்பும் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர வேண்டிய கட்டாயமும் இப்படத்தின் உணர்வுப்பூர்வமான மையப்புள்ளியாக அமைகிறது.
இது ஒரு தனிமனிதனின் நினைவலைகளைத் தாண்டி ஒரு சமூகத்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் மேதமை கொண்ட படைப்பாகத் திகழ்கிறது. நவீன சினிமாவின் தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டு ஒரு பழைய காலத்தின் ஆன்மாவை மீட்டெடுக்கும் முயற்சியில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது.
கென்னத் பிரானா தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார். வன்முறை மண்டிய சூழலையும் ஒரு சிறுவனின் மழலை மாறாத உலகத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்த விதம் இயக்குநரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
இப்படத்தின் படமாக்கம் மிகவும் தனித்துவமானது. ஒட்டுமொத்தத் திரைப்படமும் கருப்பு வெள்ளை நிறத்தில் படமாக்கப்பட்டு பின்னர் வண்ணங்களுக்கு மாற்றப்பட்டது.
ஹாரிஸ் சாம்பர்லூகோஸ் செய்த ஒளிப்பதிவு நடிகர்களின் உணர்ச்சிகளைத் திரையில் துல்லியமாகக் கடத்துகிறது. இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் அந்த காலக்கட்டத்தின் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன.
இத்திரைப்படம் 2021 செப்டம்பர் 2 ஆம் தேதி டெல்லுரைடு திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டது.
பின்னர் உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படம் 49 மில்லியன் டாலர் வசூலை ஈட்டி நவீன காலத்தின் அதிக வசூல் செய்த கருப்பு வெள்ளை திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
நடிகர்களின் பங்களிப்பு இப்படத்தின் மிகப்பெரிய பலம். சிறுவனாக நடித்த ஜூட் ஹில் முதல் அனுபவம் வாய்ந்த நடிகர்களான ஜேமி டோர்னன் , கைட்ரியோனா பால்ஃப் வரை அனைவரும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாகத் தாத்தா பாட்டியாக நடித்த சியாரன் ஹிண்ட்ஸ் மற்றும் ஜூடி டென்ச் ஆகியோரின் நடிப்பு உலகத்தரம் வாய்ந்தது.
இசைக்கு உயிர் கொடுத்தவர் பெல்ஃபாஸ்ட் நகரைச் சேர்ந்த வான் மோரிசன் . படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களில் எலக்ட்ரிக் கிட்டார் மற்றும் சாக்ஸபோன் இசையுடன் கூடிய இவரது பாடல்கள் படத்தின் ஆன்மாவோடு ஒன்றிப் போகின்றன.
இப்படத்திற்காக அவர் எழுதிய டவுன் டு ஜாய் என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் இறுதி வரை அந்த இசை ஒரு மெல்லிய சோகத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர வழங்குகிறது.
விருதுகளில் பெல்ஃபாஸ்ட் திரைப்படம் உலக அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்தியது.
94 வது அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் உட்பட ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
இதில் சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை இப்படம் வென்றது. மேலும் கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைக்கதை விருதையும் பிரிட்டிஷ் அகாடமி விருதுகளில் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் என்ற விருதையும் தட்டிச் சென்றது.
எண்பத்தேழு வயதில் ஜூடி டென்ச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் பரிந்துரையைப் பெற்று சாதனைப் படைத்தார்.
கென்னத் பிரானா (கென்னத் பிரானா) இத்திரைப்படத்தின் பணிகளை 2020 மார்ச் மாதம் தொடங்கினார். கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இதன் படப்பிடிப்பு லண்டன் மற்றும் பெல்ஃபாஸ்ட் பகுதிகளில் மிகக் குறுகிய காலமான ஏழு வாரங்களில் நடத்தி முடிக்கப்பட்டது.
இத்திரைப்படம் டிஜிட்டல் முறையில் வண்ணப்படமாக எடுக்கப்பட்டு பின்னர் படத்தொகுப்பின்போது கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டது.
ஒளிப்பதிவாளர் ஹாரிஸ் சாம்பர்லூகோஸ் நடிகர்களின் உணர்ச்சிகளை மட்டும் முன்னிறுத்தவே கருப்பு வெள்ளை முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
94 வது அகாடமி விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம் கென்னத் பிரானா ஏழு வெவ்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் பரிந்துரை பெற்ற முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.
நவீன காலத்தில் அதிக வசூல் செய்த கருப்பு வெள்ளை திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற இத்திரைப்படம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தின் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதை:-
ஆகஸ்ட் 1969 இல் பெல்ஃபாஸ்ட் நகரின் அமைதியான தெரு ஒன்றில் கதையின் நாயகனான ஒன்பது வயது சிறுவன் படி (ஜூடி ஹில்) விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென வன்முறை வெடிக்கிறது.
கத்தோலிக்கர்களுக்கு எதிராக ஒரு கும்பல் தாக்குதல் நடத்துகிறது. இதனால் அந்த அமைதியான குடியிருப்பு பகுதி ஒரு போர்க்களமாக சடுதியில் மாறுகிறது.
அங்கு வாழும் மக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தெருவின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து காவல் காக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
படியின் தந்தை பா (ஜேமி டோர்னன்) லண்டனில் தச்சு வேலை செய்பவர். அவர் வார இறுதி நாட்களில் மட்டுமே குடும்பத்தைப் பார்க்க இங்கே பெல்ஃபாஸ்ட் வருவார்.
வீட்டில், படியின் தாய் மா (கய்ட்ரியோனா பால்ஃப்) தனது இரு மகன்களான படி மற்றும் வில் (லூயிஸ் மெக்காஸ்கி) ஆகியோரை இப்படி அமைதியற்ற கடுமையான சூழலில் வளர்க்கப் போராடுகிறார்.
அதே தெருவில் படியின் தாத்தா பாப் (சியாரன் ஹிண்ட்ஸ்) மற்றும் பாட்டி கிரானி (ஜூடி டென்ச்) ஆகியோரும் வசிக்கிறார்கள்.
படியின் உலகம் அவனது பள்ளி, அவனது தாத்தா பாட்டியின் அன்பு மற்றும் அவன் ரகசியமாகக் விரும்பும் கேத்தரின் (ஒலிவ் டென்னன்ட்) என்ற கத்தோலிக்க சிறுமி ஆகியோரைச் சுற்றியே நகர்கிறது.
படியின் தந்தை தனக்கு கடுமையான வரி பாக்கி மற்றும் கடன்கள் இருப்பதால் அவர் தனது குடும்பத்தை லண்டன் அல்லது சிட்னிக்கு நிரந்தரமாக அழைத்துச் செல்ல விரும்புகிறார்.
ஆனால் மாவுக்கு தனது சொந்த ஊரையும் உறவுகளையும் விட்டுச் செல்ல விருப்பமில்லை.
இதற்கிடையில் பில்லி கிளாண்டன் (கோலின் மோர்கன்) என்ற உள்ளூர் ரவுடி படியின் தந்தையைத் தங்களது மதவாதக் குழுவில் சேருமாறு மிரட்டுகிறார்.
படியின் தந்தை எந்த ஒரு வன்முறைக்கும் துணை நிற்க மறுப்பதால் அவருக்கும் பில்லிக்கும் இடையே மோதல் உருவாகிறது.
பள்ளியில் படி தனது வகுப்புத் தோழியான கேத்தரின் மீது அன்பு கொள்கிறான். ஆனால் அவர்கள் இருவரது மதமும் வேறாக இருப்பதால் ஒருவிதத் தயக்கம் அவனுக்குள் இருக்கிறது.
இதனைத் தனது தாத்தாவிடம் அவன் விவாதிக்கும்போது தாத்தா அவனுக்கு மிக அழகான வாழ்க்கை பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்.
தேவாலயத்தில் போதகர் (டர்லோ கான்வேரி) வழங்கும் சொற்பொழிவுகள் படியின் மனதில் நல்வழி மற்றும் தீய வழி குறித்த குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.
படியின் அக்கா முறை கொண்ட மொய்ரா (லாரா மெக்டோனல்) என்ற சிறுமி படியைத் தூண்டிவிட்டு ஒரு கடையில் சாக்லேட் திருட வைக்கிறாள்.
பின்னர் அந்தப் பகுதியில் மிகப்பெரிய கலவரம் வெடிக்கும்போது ஒரு கடையைச் சூறையாடவும் அவனை அழைக்கிறாள்.
படி அங்கிருந்து ஒரு சலவை சோப்பு பெட்டியைத் திருடி வருகிறான். இதனை அறிந்த மா அவனைக் கண்டித்து அந்தப் பொருட்களைத் திரும்ப ஒப்படைக்க கலவரம் நடக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்கிறார்.
அங்கு பில்லி கிளாண்டன் தனது குழுவினருடன் மா மற்றும் படியைப் பிணைக்கைதிகளாகப் பிடிக்கிறான். அந்தச் சமயம் அங்கு வரும் படியின் தந்தை மற்றும் ராணுவத்தினர் பில்லியைச் சுற்றி வளைத்துக் கைது செய்கிறார்கள்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பெல்ஃபாஸ்ட் இனி தங்களுக்குப் பாதுகாப்பான இடமல்ல என்பதை மா உணர்கிறார்.
அதே சமயம் படியின் தாத்தா பாப் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இறந்து போகிறார்.
இறுதியில் கனத்த இதயத்துடன் படியின் குடும்பம் பெல்ஃபாஸ்டை விட்டு இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கிறது.
பேருந்தில் ஏறுவதற்கு முன்பு படி தனது தோழி கேத்தரினிடம் விடை பெறுகிறான்.
பேருந்து கிளம்பும்போது தனது மகனையும் பேரன்களையும் பிரிகிற வலிமிகு துயரத்துடன் பாட்டி கிரானி சாலையில் தனியாக நிற்பதுடன் இப்படம் முடிகிறது.
பெல்ஃபாஸ்ட் திரைப்படம் வன்முறையும் அரசியல் குழப்பங்களும் மண்டிய ஒரு சூழலில் மனித நேயமும் குடும்பப் பிணைப்பும் எவ்வாறு ஒருவரைத் தாங்கிப் பிடிக்கிறது என்பதை மிக உருக்கமாகச் சொல்கிறது.
இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நடப்பதாகக் காட்டப்பட்டாலும் அதன் செய்தி உலகளாவியது,எந்த வலிமிகுந்த பால்யகால குடிபெயர்வுடனும் பொருத்திப் பார்க்கலாம்.
ஒரு மனிதன் தனது வேர்களையும் வாழ்ந்த சூழலையும் விட்டுப் பிரிய நேரிடும்போது ஏற்படும் அந்தத் தவிப்பு இதில் மிக ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாகச் சிறுவன் படி தனது தாத்தா பாட்டியிடம் காட்டும் அந்தப் பிணைப்பு கால மாற்றத்திலும் மாறாத அன்பின் சாட்சியாக இருக்கிறது.
மதம் மற்றும் அரசியல் என்ற பெயரில் மனிதர்களுக்கிடையே உருவாக்கப்படும் பிரிவினைகள் அப்பாவி மக்களின் அன்றாட வாழ்வை எவ்வளவு சிதைக்கின்றன என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.
அதே வேளையில் அத்தகைய இக்கட்டான நேரத்திலும் ஒரு தந்தை தனது நேர்மையையும் அமைதியையும் கைவிடாமல் இருப்பதை பா (ஜேமி டோர்னன்) கதாபாத்திரம் மூலம் நாம் காண்கிறோம்.
ஒரு குடும்பம் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் வேர்களும் நினைவுகளும் எப்போதும் அவர்கள் பிறந்த மண்ணிலேயே தங்கியிருக்கும் என்பதை அழகாக பதிவு செய்கிறது படம்.
பெல்ஃபாஸ்டிலேயே தங்கிவிட்டவர்களுக்காகவும் அதை விட்டு வெளியேறியவர்களுக்காகவும் அங்கேயே தங்களை இழந்தவர்களுக்காகவும் இப்படம் சமர்ப்பபணம் என நன்றி கூறி முடிக்கின்றார் இயக்குனர் .
தன்னலமற்ற அன்பு மற்றும் துணிச்சலான இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு போராட்டமே இப்படம் தரும் வாழ்வியல் பாடம்.