Oppenheimer ஓப்பன்ஹைமர் 2023


காமேச்வர: சர்வபூதானாம் தர்மாத்மா வததாம் வர:

Now I am become Death, destroyer of worlds.

இப்போது நான் உலகங்களை அழிக்கும் காலன் ஆகிவிட்டேன்.

அணு ஆயுதப் படைப்பின் பேரழிவை உணர்ந்த தருணத்தில், தனது மனப்போராட்டத்தை  ஓப்பன்ஹைமர் இப்படி வெளிப்படுத்துகிறார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படம் அணு குண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட  வரலாற்றுத் திரில்லர் காவியம். 

கை பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே. ஷெர்வின் எழுதிய அமெரிக்கன் ப்ரோமிதியஸ் என்ற வாழ்க்கை வரலாற்று நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் இரண்டாம் உலகப் போர் காலத்தில் முதல் அணு ஆயுதங்களை உருவாக்க ஓப்பன்ஹைமர் மேற்கொண்ட முயற்சிகளையும் அவரது பிற்கால வாழ்வின் சவால்களையும் விவரிக்கிறது. 

இந்தப் படத்தின் அடிநாதம் ஒரு படைப்பாளி தான் உருவாக்கிய படைப்பின் விளைவுகளால் சிதைந்து போவதையும் அந்தப் படைப்பு உலகையே மாற்றி அமைக்கும் ஒரு சாபமாக உருவெடுப்பதையும் பற்றியதாகும். 
அறிவியல் மற்றும் அறத்தின் மோதல்  இப்படத்தின் முக்கிய சாராம்சமாக உள்ளது. 

ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமர் தனது அறிவாற்றலால் அணுவின் ஆற்றலைக் கண்டறியும் போது அது ஒரு அறிவியல் வெற்றியாகத் தெரிகிறது. ஆனால் அந்த வெற்றி ஜப்பானின் மீது நிகழ்த்தப்பட்ட பேரழிவாக மாறும்போது ஒரு விஞ்ஞானியின் மனசாட்சி எப்படிப் பிளவுபடுகிறது என்பதைக் காட்டுகிறது.

 தான் உலகங்களை அழிக்கும் காலன் ஆகிவிட்டேன் என்று அவர் உணரும் தருணம் அறிவியலுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையிலான தார்மீகப் போராட்டத்தைப் படம் பிடிக்கிறது.

அதிகாரத்திற்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமே இப்படத்தின் மற்றொரு அடிநாதம். விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் ஒரு கருவியை உருவாக்குகிறார்கள் ஆனால் அதைப் பயன்படுத்தும் அதிகாரம் அரசியவாதிகளின் கைகளில் இருக்கிறது. 

ஒரு போரை முடிக்கத் தேவைப்பட்ட கருவி பின்னாளில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்கவும் ஒரு தனிமனிதனின் கௌரவத்தைச் சிதைக்கவும் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை லூயிஸ் ஸ்ட்ராஸ்  கதாபாத்திரம் மூலம் விளக்குகிறது. 

நாடு போற்றும் ஒரு நாயகன் மிக எளிதாக ஒரு துரோகியாகச் சித்திரிக்கப்பட முடியும் என்ற கசப்பான உண்மையையும் இது உரக்கச் சொல்கிறது.

சங்கிலித் தொடர் வினை  இப்படத்தின் மிக முக்கியமான குறியீடு. அணு குண்டு வெடிப்பின் போது தொடங்கும் அந்தச் சங்கிலித் தொடர் வினை அங்கேயே நின்றுவிடவில்லை. 
அது உலக நாடுகளிடையே ஒரு தீராத அணு ஆயுதப் போட்டியைத் தொடங்கி வைத்தது. 

நாம் உலகை அழிப்பதற்கான பொத்தானை அழுத்திவிட்டோம் என்பதை ஐன்ஸ்டீன்  உடனான உரையாடல் மூலம் ஓப்பன்ஹைமர் ஒப்புக்கொள்ளும் போது அது மனித இனத்தின் எதிர்காலம் குறித்த ஒரு மாபெரும் எச்சரிக்கையாக முடிகிறது.

 ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு எப்படி ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வைச் சிதைத்தது என்பதையும் அதே கண்டுபிடிப்பு இந்த உலகை ஒரு நிரந்தரமான அழிவின் விளிம்பில் நிறுத்தியது என்பதையுமே இந்தப் படம் தனது அடிநாதமாகக் கொண்டுள்ளது.

இந்தப் படம் ஒரு வெறும் வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாமல் ஒரு மனிதனின் மேதைமை எப்படி உலகிற்கு அச்சுறுத்தலாக மாறியது என்பதையும் அதன் தார்மீக விளைவுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்கிறது. 

நோலன் தனது முந்தைய படங்களைப் போலவே கால வரிசையற்ற முறையில் கதையை நகர்த்தி பார்வையாளர்களை ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்துகிறார்.

இயக்கத்தில் கிறிஸ்டோபர் நோலன் தனது வழக்கமான பிரம்மாண்டத்தையும் தொழில்நுட்ப நேர்த்தியையும் இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கணினி கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு பெரும்பாலான காட்சிகளைப் நேரடியாகப் படமாக்கியது படத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தியது. 

ட்ரினிட்டி அணு குண்டு சோதனை காட்சியை உண்மையான வெடிபொருட்களைக் கொண்டு படமாக்கியது திரைத்துறையில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகிறது.

 படமாக்கத்தில் ஒளிப்பதிவாளர் ஹோய்ட் வான் ஹோய்டெமா ஐமேக்ஸ் கேமராக்களைப் பயன்படுத்தி வண்ணக் காட்சிகளையும் கறுப்பு வெள்ளை காட்சிகளையும் தனித்துவமாகப் படம்பிடித்துள்ளார். 

படத்தின் அகநிலை ரீதியான பார்வையை வண்ணத்திலும் புறநிலை ரீதியான பார்வையை கறுப்பு வெள்ளையிலும் காட்டியது நோலனின் இயக்க மேதமைக்குச் சான்றாகும்.

நடிகர்களின் பங்களிப்பு இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஓப்பன்ஹைமராக நடித்த சிலியன் மெர்பி அந்தப் பாத்திரத்தின் தீவிரத்தையும் குற்ற உணர்ச்சியையும் தனது கண்களாலேயே கடத்தினார்.

 லூயிஸ் ஸ்ட்ராஸ் பாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் தனது அசாத்திய நடிப்பால் ஓப்பன்ஹைமருக்கு எதிரான அதிகாரப் போட்டியைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

 இவர்களுடன் எமிலி பிளண்ட், மேட் டாமன், புளோரன்ஸ் பக் மற்றும் கென்னத் பிரானாக் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் மிக நேர்த்தியாக நடித்திருந்தனர்.

 படத்தின் இசை அமைப்பாளர் லுட்விக் கோரன்சன் அணுக்களின் அதிர்வுகள் மற்றும் ஓப்பன்ஹைமரின் மனப்போராட்டங்களை தனது இசையின் மூலம் ஒரு பதற்றமான சூழலிலேயே வைத்திருந்தார்.

இப்படம் உலக அளவில் சுமார் 975 மில்லியன் டாலர்களை வசூலித்து மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் இது உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டது. 

பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற இப்படம் 96 வது ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட ஏழு முக்கியமான விருதுகளைப் பெற்றது.

கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா விருதுகளையும் வாரிக்குவித்தது. வரலாற்றையும் அறிவியலையும் ஒருங்கே இணைத்து மனித மனதின் சிக்கல்களைப் படம்பிடித்த ஓப்பன்ஹைமர் திரைப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத படைப்பாக நிலைபெற்றுள்ளது.

இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் முதல் நபர் பார்வையில் அதாவது நான் எனும் தொனியில் எழுதியிருந்தார். 
ஒரு வரலாற்றுத் திரைப்படத்தின் திரைக்கதை இத்தகைய வடிவில் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் கதாநாயகன் சிலியன் மெர்பி ஓப்பன்ஹைமரின் தோற்றத்திற்குப் பொருந்துவதற்காகத் தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்தார். 

ஒளிப்பதிவில் ஒரு புதிய முயற்சியாகக் கோடக் நிறுவனம் முதன்முதலாக ஐமேக்ஸ் தரத்திலான கறுப்பு வெள்ளை ஃபிலிம் சுருள்களை இப்படத்திற்காகவே பிரத்யேகமாகத் தயாரித்துக் கொடுத்தது. 

படத்தின் மிக முக்கியமான காட்சியாகக் கருதப்படும் அணு குண்டு சோதனை காட்சியைப் படமாக்க பெட்ரோல், புரோப்பேன், அலுமினியத் தூள் மற்றும் மெக்னீசியம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

 எவ்விதமான கணினி கிராபிக்ஸ் காட்சிகளும் இன்றி அணு வெடிப்பின் பிரம்மாண்டம் இவ்வாறே திரையில் கொண்டு வரப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்புத் திட்டமிடப்பட்ட காலத்தை விட மிக விரைவாக  வெறும் 57 நாட்களில் முடிக்கப்பட்டது. ஓப்பன்ஹைமரின் காதலி ஜீன் டாட்லாக் இறந்து கிடக்கும் காட்சியில் அவரது நிர்வாண உடலை மறைக்க இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டும் கணினி மூலம் உருவாக்கப்பட்ட கறுப்பு ஆடை பயன்படுத்தப்பட்டது. 

படத்தின் இறுதியில் ஐன்ஸ்டீன் மற்றும் ஓப்பன்ஹைமர் சந்திக்கும் அந்த முக்கியமான காட்சி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் படமாக்கப்பட்டது.

 இப்படத்தில் ஓப்பன்ஹைமரின் தம்பியாக டைலன் அர்னால்ட் நடித்திருந்தார். படத்தில் இடம்பெறும் அதிபர் ட்ரூமன் கதாபாத்திரத்தில்  கேரி ஓல்ட்மேன்   நடித்தார்.

 வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் ஆன தன் நீண்ட கால உறவை முறித்துக்கொண்டு யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக நோலன் இயக்கிய முதல் படமாக இது அமைந்தது.

இப்படத்தின் உருவாக்கம் ஒரு சிறிய புத்தகத்தில் தொடங்கியது. நடிகர் ராபர்ட் பாட்டின்சன் ஓப்பன்ஹைமரின் உரைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை இயக்குநர் நோலனுக்கு பரிசளித்தார். அந்த உரைகளில் தனது கண்டுபிடிப்பின் விளைவுகளை எண்ணி ஓப்பன்ஹைமர் மனதளவில் போராடிய விதம் படித்ததும் நோலனை இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியது. 

திரைக்கதையை மிக ரகசியமாகப் பாதுகாத்த நோலன் அதனை பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு நிறத் தாள்களில் கறுப்பு நிற எழுத்துக்களில்  அச்சிட்டிருந்தார். 

நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இந்தப் படத்தில் லூயிஸ் ஸ்ட்ராஸ் கதாபாத்திரத்திற்காகத் தனது தலையை மொட்டையடித்து வயதான தோற்றத்தில் நடித்தார். 

மேட் டாமன் தனது மனைவியிடம் நடிப்பிலிருந்து நீண்ட விடுப்பு எடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் நோலன் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் மட்டும் அந்த இடைவேளையை முறித்துக் கொள்வேன் என்ற நிபந்தனையுடன் இப்படத்தில் இணைந்தார்.

தொழில்நுட்ப ரீதியாக இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பிரத்யேக கேமரா லென்ஸ்கள் அபாரமானவை. 
மிகச்சிறிய அணுக்களின் அசைவுகள் மற்றும் மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் படம்பிடிக்கப் பனவிஷன் நிறுவனம் ஒரு விசேஷமான லென்ஸைத் தயாரித்தது. இதன் மூலம் அணு இயற்பியலின் நுணுக்கங்களை நேரடிப் படமாக்கலாகத் திரையில் காட்ட முடிந்தது. 

 ட்ரினிட்டி சோதனை காட்சியில் பயன்படுத்தப்பட்ட எஃகு கோபுரம் மற்றும் வெடிகுண்டு கருவி ஆகியவை 1945 ஆம் ஆண்டு இருந்த அதே அளவுகளில் மிகத் துல்லியமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டன.

படத்தில் வரும் சில வரலாற்றுப் பிழைகள் மற்றும் திருத்தங்கள் குறித்தும் பல தரவுகள் படிக்க கிடைகின்றன. ஓப்பன்ஹைமர் தனது ஆசிரியரின் ஆப்பிளில் விஷம் கலந்ததாகக் கூறப்படும் காட்சி அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு விவாதத்திற்குரிய பகுதியாகும். 

நிஜ வாழ்க்கையில் அவர் அப்படிச் செய்தாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதே போல படத்தில் 1945 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 50 நட்சத்திரங்கள் கொண்ட அமெரிக்கக் கொடி காட்டப்பட்டது ஒரு சிறிய வரலாற்றுப் பிழையாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
 அக்காலத்தில் அமெரிக்கக் கொடியில் 48 நட்சத்திரங்கள் மட்டுமே இருந்தன.

 ஓப்பன்ஹைமரின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்ட அந்த விசாரணை அறை மிகச் சிறியதாகவும் வசதிகள் அற்றதாகவும் காட்டப்பட்டது. இது ஒரு மாபெரும் விஞ்ஞானியை எவ்வளவு இழிவாக அரசு நடத்தியது என்பதை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

 இப்படத்தின் பெரும் பகுதி வசூலை ஐமேக்ஸ் திரையரங்குகள் ஈட்டிக் கொடுத்தன. இது பெரிய திரை அனுபவத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு மீண்டும் நிரூபித்தது.

திரைக்கதை உருவாக்கத்தில் நோலன் ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டார். அவர் ஹாவர்ட் ஹியூஸ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுத முன்பே முயற்சித்த அனுபவத்தை இதில் பயன்படுத்திக்கொண்டார்.

 ஸ்டிங் பாடிய பாடலில் வரும் ஒரு வரிதான் அவருக்கு அணு ஆயுதத்தின் அழிவு குறித்த அச்சத்தையே விதைத்தது.  இப்படம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு யுனிவர்சல் நிறுவனத்திற்கு நோலன் விதித்த நிபந்தனைகளால் உருவானது. 

 படம் வெளியான பிறகு மூன்று வாரங்களுக்கு அந்த நிறுவனம் வேறு எந்தப் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற கடுமையான ஒப்பந்தம் கூட இதில் இருந்தது.

 அதிபர் ட்ரூமன் அலுவலகமான ஓவல் ஆபீஸ் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்ட இடம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இதனால் வீப் எனும் தொலைக்காட்சித் தொடருக்காக உருவாக்கப்பட்ட பழைய செட் ஒன்றை மிக விரைவாகத் திருத்தி அமைத்துப் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

 அதேபோல லாஸ் அலமோஸ் நகரம் தற்போது நவீனமடைந்துவிட்டதால் அந்த பழைய தோற்றத்தைக் கொண்டுவர கோஸ்ட் ராஞ்ச் எனும் பகுதியில் ஒரு புதிய நகரத்தையே இதற்கென உருவாக்கினார்கள்.

தொழில்நுட்ப ரீதியாக அணுக்களின் அசைவுகளைக் காட்ட மேக்ரோ ஃபோட்டோகிராபி எனும் முறையைப் பயன்படுத்தினார்கள். இதற்காகவே ஒரு பிரத்யேக லென்ஸ் உருவாக்கப்பட்டது. ட்ரினிட்டி சோதனையின் போது ஏற்படும் அந்தப் பிரம்மாண்ட நெருப்புப் பிழம்பைப் படமாக்க பெட்ரோல் மற்றும் அலுமினியப் பொடியுடன் மெக்னீசியத்தையும் கலந்து பயன்படுத்தினார்கள்.
 இதுவே அந்தத் தீப்பிழம்பிற்கு ஒருவித பிரகாசமான வெள்ளை நிறத்தைத் தந்தது.

நடிகர் எட்வர்ட் டெல்லர் கதாபாத்திரத்தில் நடித்த பென்னி சஃப்டியைப் பரிந்துரைத்தது புகழ்பெற்ற இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் ஆவார். 

படத்தில் வரும் ஓப்பன்ஹைமரின் தந்தை மற்றும் தாய் குறித்த காட்சிகள் அதிகம் இடம் பெறாததற்குக் காரணம் கதை முழுக்க முழுக்க ஓப்பன்ஹைமரின் அக உணர்வுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகும். 

படத்தின் நீளம் சரியாக மூன்று மணி நேரம் , 180 நிமிடங்கள் . இது ஐமேக்ஸ் ரீல்களில் ஏற்றக்கூடிய அதிகபட்ச கால அளவு என்பதால் அந்தத் தொழில்நுட்ப வரம்பிற்குள்ளேயே படத்தை முடித்தார்கள்.

இப்படத்தில் வரும் ஐன்ஸ்டீன் கதாபாத்திரம் ஒரு வழிகாட்டியாக மட்டுமல்லாமல் ஓப்பன்ஹைமரின் எதிர்காலத்தைச் சொல்லும் ஒரு கண்ணாடி போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது.

 ஜப்பானில் இப்படம் வெளியாக எட்டு மாதங்கள் தாமதமானது. அங்குள்ள மக்கள் இக்கதையைத் தங்கள் தேசத்தின் வலியோடு ஒப்பிட்டுப் பார்த்ததே இதற்குக் காரணமாகும்.

இப்படத்தின் விசுவல் எஃபெக்ட்ஸ் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றியிருந்தாலும், அதில் 134 பேரின் பெயர்கள் திரையில் காட்டப்படவில்லை என்ற தகவல் ஒரு கசப்பான உண்மையாக உள்ளது.

 படத்தின் படப்பிடிப்பு 85 நாட்கள் திட்டமிடப்பட்ட நிலையில், பட்ஜெட் சிக்கல்களைத் தவிர்க்கவும் படப்பிடிப்புத் தளங்களை வரலாற்று ரீதியாகத் துல்லியமாக வடிவமைக்கவும் அதன் கால அளவை 57 நாட்களாக நோலன் அதிரடியாகக் குறைத்தார்.

 ஓப்பன்ஹைமரின் பாதுகாப்பு அனுமதி விசாரணை அறை, சி.எஃப் பிரவுன் எனும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் கைவிடப்பட்ட பழைய அலுவலகத்தில் படமாக்கப்பட்டது.

 ஓப்பன்ஹைமரின் மகளாக நடித்த புளோரா நோலன், இயக்குநர் நோலனின் சொந்த மகளாவார். ஒரு காட்சியில் அவர் அணுவெடிப்பினால் சிதைவது போன்ற ஒரு காட்சியைத் தனது மகளை வைத்தே நோலன் படமாக்கினார்.

ட்ரினிட்டி சோதனையின் போது டொனால்ட் ஹார்னிக் என்பவர் வெடிப்பை நிறுத்தக்கூடிய கில் ஸ்விட்ச் மீது தனது கையை வைத்திருந்த நிகழ்வு உண்மைக்கு நெருக்கமானது.

 ஆனால் அதிபர் ட்ரூமன் ஓப்பன்ஹைமரை அழுதுவடியும் குழந்தை என்று அந்தச் சந்திப்பின் போது அழைக்கவில்லை.
 ஓராண்டுக்குப் பிறகு டீன் அட்சன் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் இத்திரைப்படம் வெளியானபோது பகவத் கீதை தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக ஒரு நெருக்கமான காட்சியில் இந்த வசனம் பயன்படுத்தப்பட்டதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. 

எனினும் அந்தச் சமயத்தில் ஓப்பன்ஹைமரின் மனநிலை ஒரு படைப்பாளியின் தீவிர சிந்தனையோடு இருந்ததாகச் சில அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். 

மேலும் ஜப்பான் வெளியீட்டின் போது அங்குள்ள திரையரங்குகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டன. ஹிரோஷிமாவின் முன்னாள் மேயர் இத்திரைப்படம் அணு ஆயுதங்களின் பயங்கரத்தை முழுமையாகக் காட்டவில்லை எனத் தனது அதிருப்தியையும் தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் வசூல் சாதனை வரிசையில் இது ஜாக்கர் மற்றும் டெட்பூல் படங்களுக்குப் பிறகு மூன்றாவது பெரிய ஆர் ரேட்டட் திரைப்படமாக உருவெடுத்தது. 
அத்துடன் ஆஸ்கார் வரலாற்றில் 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு சிறந்த படத்திற்கான விருதை வென்ற மிக நீளமான படம் இதுவாகும்.

இப்படத்தின் பின்னணி இசை சுமார் இரண்டரை மணி நேரம் அதாவது படத்தின் மொத்த நீளத்தில் 83 சதவீதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்படி லுட்விக் கோரன்சன் வடிவமைத்துள்ளார்.

 இப்படத்தில் ஐன்ஸ்டீன் மற்றும் ஓப்பன்ஹைமர் உரையாடும் காட்சி சிட்டிசன் கேன் படத்தில் வரும் ரோஸ்பட் எனும் மர்மமான முடிச்சோடு விமர்சகர்களால் வியந்து ஒப்பிடப்படுகிறது. 

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இப்படத்தின் முதல் பிரதியை 70 மிமீ திரையிடலில் பார்த்தபோது நோலன் அவர் அருகில் அமர்ந்து ஸ்பீல்பெர்க்கின் முகபாவனைகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டேயிருந்தார்.

இயக்குநர் சாம் மென்டிஸ் தான் இந்தப் புத்தகத்தைத் திரையாக்க முதலில் ஆர்வம் காட்டினார். ஒருகட்டத்தில் ஆலிவர் ஸ்டோன் இப்படத்தை இயக்க மறுத்தபோது இதன் சாராம்சம் என்னவென்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். 

இப்படத்தில் அணு விஞ்ஞானி லியோ ஸிலார்ட் ஜப்பானுக்கு எதிராக அணு குண்டைப் பயன்படுத்தக் கூடாது என்று மனு அளிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.  ஆப்பிரிக்க அமெரிக்க விஞ்ஞானி ஜே. எர்னஸ்ட் வில்கின்ஸ் ஜூனியர் மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய வரலாற்று உண்மையும் இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டின் போது நடிகர் ஜேம்ஸ் வுட்ஸ் தனது அரசியல் கருத்துக்கள் படத்தின் விளம்பரத்தைப் பாதிக்கலாம் என்பதால் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

 நியூயார்க் ஹோட்டல் காட்சிகள் உண்மையில் அல்புகெர்க்கியில் உள்ள பழைய தபால் அலுவலகக் கட்டிடத்தில் படமாக்கப்பட்டன. அதேபோல் வாஷிங்டன் டிசி காட்சிகள் சாண்டா ஃபேவில் உள்ள அரசு கட்டிடங்களில் எடுக்கப்பட்டன.

சமூகத் தாக்கமாக இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அணு ஆயுதச் சோதனைகளால் பாதிக்கப்பட்ட நவாஜோ நேஷன் போன்ற பழங்குடியின மக்களுக்கு இழப்பீடு வழங்கும் கதிர்வீச்சு வெளிப்பாடு இழப்பீட்டுச் சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. 

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் அணுக்கரு இயற்பியலாளர் கிப் தோர்ன் ஆலோசகராகப் பணியாற்றினார். 
சிலியன் மெர்பி தனது பாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள கிப் தோர்னிடம்   உரையாடி, கடினமான அறிவியல் கருத்துகளை ஓப்பன்ஹைமர் எப்படி எளிமையாக மாணவர்களுக்கு விளக்குவார் என்பதையும் கற்றுக்கொண்டார். 

 படப்பிடிப்பின் போது நியூ மெக்சிகோ பாலைவனத்தில் வீசிய கடும் காற்று மற்றும் மணல் புயலுக்கு இடையே 100 அடி உயர எஃகு கோபுரத்தில் மெர்பி ஏறி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

ஜேம்ஸ் வுட்ஸ் மற்றும் ஜே. டேவிட் வார்கோ ஆகியோர் இப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக இருந்தனர். வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் நோலன் முறித்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் அவர்கள் அனைத்துப் படங்களையும் ஒரே நேரத்தில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியிட எடுத்த முடிவாகும். 
இதனைத் தியேட்டர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று நோலன் கடுமையாக விமர்சித்தார்.

 இப்படத்தின் எடிட்டர் ஜெனிஃபர் லேம்  படத்தின் வேகத்தை ஒரு திரில்லர் படத்திற்கு இணையாக மாற்றினார். படத்தில் பயன்படுத்தப்பட்ட சிறிய அளவிலான அணுக்கரு மாதிரிகள் பிக்சர்ஸ் என்று அழைக்கப்படாமல் பிக் ஏச்சர்ஸ் என்று அழைக்கப்பட்டன. 
ஏனெனில் அவை மிக பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டிருந்தன.

 ஓப்பன்ஹைமர் கருந்துளைகள் குறித்து எழுதிய ஆய்வறிக்கை அவர் எதிர்பார்த்ததை விட மிக முக்கியமானது என்பதைப் பின்னாளில்தான் உலகம் உணர்ந்தது. படத்தில் லூயிஸ் ஸ்ட்ராஸ் தோல்வியடையக் காரணமாக இருந்த டேவிட் எல் ஹில் எனும் விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்த ராமி மாலெக் அந்தத் தருணத்தில் ஓப்பன்ஹைமருக்கு ஆதரவாகச் சாட்சியம் அளித்தது ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்தது.

 இப்படத்தின் 70 மிமீ பிரிண்ட் சுருள்கள் சுமார் 11 மைல் நீளம் கொண்டவை , 272 கிலோ எடை கொண்டவையாகும்.

இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அமெரிக்காவில் யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுச் சட்டங்களை விரிவுபடுத்தக் கோரி புதிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை:-

ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமர் (சிலியன் மெர்பி) எனும் இயற்பியல் அறிஞர் 1920களில் ஐரோப்பாவில் கல்வி பயின்றவர் மீண்டும் அமெரிக்கா திரும்புகிறார்.

 கலிபோர்னியா பல்கலைக்கழகமான பெர்க்லியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கும் அவர் அங்கு சக பேராசிரியரான ஹாக்கோன் செவாலியர் (ஜெபர்சன் ஹால்) மற்றும் கம்யூனிஸ்ட் கொள்கையுடைய மாணவி ஜீன் டாட்லாக் (புளோரன்ஸ் பக்) ஆகியோருடன் நட்பு கொள்கிறார். 

ராபர்ட் மற்றும் ஜீன் இடையே காதல் மலர்கிறது. பின்னாளில் ஒரு சமூக நிகழ்வில் கிட்டி புயூனிங் (எமிலி பிளண்ட்) என்பவரைச் சந்தித்த பிறகு ஜீன் உடனான இந்த உறவு முடிவுக்கு வருகிறது.

 கிட்டி ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் ராபர்ட் மூலம் கருவுற்றதால் விவாகரத்துப் பெற்று ராபர்ட்டை மணக்கிறார்.

1939ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்பியலாளர்கள் அணுவைப் பிளப்பதில் வெற்றி பெறுகிறார்கள். 
இது ஒரு அணு ஆயுதமாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக எர்னஸ்ட் லாரன்ஸ் (ஜோஷ் ஹார்ட்நெட்) மற்றும் ஓப்பன்ஹைமர் கருதுகின்றனர். 

அதே சமயம் ஜெர்மனி போலந்து மீது படையெடுப்பதன் மூலம் இரண்டாம் உலகப்போர் தொடங்குகிறது. 
கம்யூனிஸ்ட் அமைப்புகளுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டு போர் முயற்சியில் ஈடுபடுமாறு  ஓப்பன்ஹைமரை எச்சரிக்கிறார் நலம் விரும்பி லாரன்ஸ்.

இதனைத் தொடர்ந்து மன்ஹாட்டன் திட்டத்தின் இயக்குநரான கர்னல் லெஸ்லி குரோவ்ஸ் (மேட் டாமன்) ஓப்பன்ஹைமரைச் சந்தித்து அணு குண்டு தயாரிப்புத் திட்டத்திற்குத் தலைமை தாங்குமாறு கேட்கிறார். 

ஓப்பன்ஹைமரின் பரிந்துரைப்படி நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் அலமோஸில் புதிய ஆய்வகம் கட்டப்படுகிறது. 
அங்கு எட்வர்ட் டெல்லர் (பென்னி சஃப்டி), ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் (ஜாக் குவைத்), ஹான்ஸ் பெதே (குஸ்டாஃப் ஸ்கார்ஸ்கார்ட்) உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ரகசியமாக வேலை செய்கிறார்கள்.

திட்டத்தின் தொடக்கத்தில் எட்வர்ட் காண்டன் (ஓல்லி ஹாஸ்கிவி) போன்றோர் ராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடுகளால் வெளியேறுகிறார்கள்.

 இடையில் ஓப்பன்ஹைமர் தனது பழைய காதலி ஜீனைச் சந்தித்துத் திரும்புகிறார். சில மாதங்களுக்குப் பிறகு ஜீன் தனது குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

1945 ஜூலையில் ட்ரினிட்டி என்ற பெயரில் முதல் அணு குண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. 
இதற்காக ஓப்பன்ஹைமர் தனது தம்பி ஃபிராங்க் ஓப்பன்ஹைமர் (டைலன் அர்னால்ட்) என்பவரையும் சேர்த்துக் கொள்கிறார்.

 சோதனை வெற்றி பெற்றதும் அமெரிக்க அதிபர் ட்ரூமன் (கேரி ஓல்ட்மேன்) ஜப்பானின் மீது இரண்டு அணு குண்டுகளை வீச உத்தரவிடுகிறார். 

போர் முடிந்ததும் ஓப்பன்ஹைமர் அணு குண்டின் தந்தை என்று புகழப்படுகிறார். 
ஆனால் தான் உருவாக்கிய ஆயுதத்தின் அழிவைக் கண்டு அஞ்சும் அவர் இனிமேல் அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். 

இது அரசியல்வாதிகளுக்கு அவர் மீது கோபத்தை உண்டாக்குகிறது.
குறிப்பாக லூயிஸ் ஸ்ட்ராஸ் (ராபர்ட் டவுனி ஜூனியர்)  ஓப்பன்ஹைமர் மீது தனிப்பட்ட ரீதியாக  பகைமை கொள்கிறார்.

 ஐன்ஸ்டீன் (டாம் கான்டி) உடனான உரையாடலின் போது ஓப்பன்ஹைமர் தன்னை அவமதித்ததாக ஸ்ட்ராஸ் வஞ்சத்துடன் கருவுகிறார். 

இதன் விளைவாக 1954இல் ஓப்பன்ஹைமரின் கடந்த கால தொடர்புகளைக் காரணம் காட்டி அவரது பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. 

இந்த விசாரணையில் ரோஜர் ராப் (ஜேசன் கிளார்க்), வில்லியம் போர்டன் (டேவிட் டஸ்ட்மால்ச்சியன்), கென்னத் நிக்கோல்ஸ் (டேன் டிஹான்) ஆகியோர் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

 ஓப்பன்ஹைமரின் தரப்பில் லாயிட் கேரிசன் (மேகன் பிளேயர்) வாதிடுகிறார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு லூயிஸ் ஸ்ட்ராஸ் அமைச்சராகப் பதவியேற்க முயலும்போது ஓப்பன்ஹைமருக்கு அவர் செய்த துரோகங்கள் டேவிட் எல். ஹில் (ராமி மாலெக்) சாட்சியத்தால் வெளிவருகின்றன. 

இதனால் ஸ்ட்ராஸின் பதவி பறிபோகிறது. இறுதியில் 1963இல் அதிபர் எல்.பி.ஜே (ஹாப் லாரன்ஸ்) மூலம் ஓப்பன்ஹைமருக்கு விருது வழங்கி கௌரவம் அளிக்கப்படுகிறது. 

படத்தின் இறுதியில் ஐன்ஸ்டீன் மற்றும் ஓப்பன்ஹைமர் பேசிக்கொள்வது காட்டப்படுகிறது. 
அதில்  அணு ஆயுதம் ஒரு சங்கிலித் தொடர் வினையாக மாறி உலகையே அழித்துவிடுமோ என்ற அச்சத்தை ஓப்பன்ஹைமர் வெளிப்படுத்துகையில் படம் நிறைகிறது.

இந்தப் படம் உலகுக்கு உரக்கச் சொல்லும் செய்தி யாதெனில் , அறிவியல் வளர்ச்சி  ஒரு வரமாக இருந்தாலும் அது தவறான கைகளில் அல்லது கட்டுப்பாடற்ற அதிகாரத்திடம் சிக்கினால் அது ஒட்டுமொத்த மனித இனத்தையே அழிக்கும் சாபமாக மாறிவிடும் என்பதே.

 ராபர்ட் ஓப்பன்ஹைமர் எனும் ஒரு மேதை தனது அறிவாற்றலால் உலகையே மாற்றக்கூடிய ஒரு சக்தியைக் கண்டறிகிறார். ஆனால் அந்தச் சக்தி ஒரு அரசியல் கருவியாக மாறும்போது அதன் மீதான கட்டுப்பாடு அந்த விஞ்ஞானியிடமே இல்லாமல் போவதை  இப்படம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவர அணு குண்டு ஒரு தீர்வாகப் பார்க்கப்பட்டாலும் அது ஒரு சங்கிலித் தொடர் வினையைப் போல எதிர்காலத்தில் உலகத்தையே அழிக்கும் அச்சுறுத்தலைத் தொடங்கி வைத்தது என்பதை ஓப்பன்ஹைமர் மற்றும் ஐன்ஸ்டீன்  இடையிலான உரையாடல் நமக்கு உணர்த்துகிறது.

 விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறார்கள் ஆனால் அந்தப் படைப்பின் விளைவுகளுக்கும் அதன் பயன்பாட்டிற்கும் அவர்களே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதை இது உரக்கச் சொல்கிறது.

 இந்தப் படம் ஒரு மனிதன் நாட்டுக்காகத் தனது உழைப்பை முழுமையாகக் கொடுத்தாலும் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அவர் எப்படித் தூற்றப்படலாம் என்பதையும் லூயிஸ் ஸ்ட்ராஸ்  போன்ற கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துகிறது.

 அறிவியலுக்கும் அரசியலுக்கும் இடையே நடக்கும் இந்த மோதலில் இறுதியில் பாதிக்கப்படுவது மனிதாபிமானமும் உண்மையும் தான் என்பது படத்தின் மையக்கருத்தாக உள்ளது.

 நாம் எதை உருவாக்கினாலும் அதன் விளைவுகளைக் கையாளும் பக்குவம் இந்த உலகுக்கு இருக்கிறதா என்ற ஒரு ஆழமான கேள்வியை ஓப்பன்ஹைமர் நம் முன்னே வைக்கிறார். 

அணு ஆயுதப் பெருக்கம்  உலகிற்கு அமைதியைத் தருவதற்குப் பதில் ஒரு நிரந்தரமான பயத்தையே பரிசாகத் தந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை இந்தப் படம் ஒரு எச்சரிக்கையாகப் பதிவு செய்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (220) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)