ஒரு மனிதன் தன் கைகளால் செய்யும் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டுமா, அல்லது அதிகார அமைப்பின் கட்டளையைப் பின்பற்றியதால் அந்தப் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா?
சட்டம் அனுமதிக்கும் ஒரு செயல், மனிதநேயத்தின் பார்வையில் தவறாக இருக்கும்போது, தனிமனிதன் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? இத்தகைய ஆழமான அறநெறிக் கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் முகமது ரசூலோஃப் இயக்கிய தேர் இஸ் நோ ஈவில் There Is No Evil 2020.
இந்தத் திரைப்படத்தின் மிக முக்கியமான கலைத்தன்மை, மரண தண்டனை என்ற அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையை வெறுமனே ஒரு விவாதப் பொருளாக அணுகாமல், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பதில் இருக்கிறது.
அரசின் அதிகாரம், ராணுவக் கட்டுப்பாடு, சட்டத்தின் கட்டாயம், தனிமனித மனசாட்சி ஆகியவை ஒன்றோடொன்று மோதும்போது ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் அறநெறிச் சிக்கல்களை இயக்குநர் நுட்பமாக ஆராய்கிறார்.
இங்கே வன்முறை என்பது வெளிப்படையாக நிகழும் ஒரு சம்பவம் மட்டுமல்ல; ஒருவருடைய முடிவுகள், மௌனம், கீழ்ப்படிதல் ஆகியவற்றின் வழியாகவும் அது செயல்படுகிறது.
திரைப்படம் நான்கு தனித்தனி கதைகளைக் கொண்ட தொகுப்பாக அமைந்துள்ளது. அவற்றுக்கிடையே நேரடியான கதைத்தொடர்பு இல்லை என்றாலும், அவை அனைத்தையும் இணைக்கும் அடிப்படையான கேள்வி ஒன்றுதான்: ஒரு தவறான செயலைச் செய்யும்படி அதிகாரம் கட்டளையிடும்போது, அதை மறுக்கும் தார்மீகத் துணிவு மனிதனுக்கு இருக்கிறதா?
இந்தக் கட்டமைப்பு இயக்குநருக்குப் பல்வேறு சமூகச் சூழல்களிலும் வயதுகளிலும் இருக்கும் மனிதர்களின் மனநிலையை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
ஒரே பிரச்சினையை நான்கு கோணங்களில் அணுகுவதால், பார்வையாளருக்கு ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் அனுபவத்தோடு மட்டும் நின்றுவிடாமல், ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் சிந்தித்துப் பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது.
முகமது ரசூலோஃப் தனது கதை சொல்லும் முறையில் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார். தேவையற்ற நாடகத்தன்மை, உணர்ச்சிகளை வலுக்கட்டாயமாகத் தூண்டும் காட்சிகள், நீண்ட அரசியல் உரையாடல்கள் ஆகியவற்றைச் சார்ந்திருக்காமல், இயல்பான மனித உறவுகளின் வழியாகவே தனது கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
குடும்ப வாழ்க்கை, காதல், நட்பு, ராணுவச் சேவை, சமூகப் பொறுப்பு போன்ற அன்றாட விஷயங்கள் படிப்படியாக அறநெறி சார்ந்த விவாதங்களாக விரிவடைகின்றன. இதனால் திரைப்படத்தின் அரசியல் உள்ளடக்கம் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிந்து நிற்கவில்லை.
குறிப்பாக, அதிகார அமைப்புக்குள் இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதையும் திரைப்படம் கவனத்தில் கொள்கிறது. சிலர் தங்களுடைய கடமையைப் பற்றிய கேள்விகளையே எழுப்பாமல் கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள்.
சிலர் மனசாட்சிக்கும் தங்களுடைய எதிர்காலத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளைப் பொருட்படுத்தாமல் தங்களுடைய கொள்கையில் உறுதியாக நிற்கிறார்கள்.
இந்த வெவ்வேறு மனநிலைகளின் வழியாக, ஒரு அதிகார அமைப்பு எவ்வாறு தனிமனிதனின் முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் பொறுப்புணர்வையும் பாதிக்கிறது என்பதை இயக்குநர் ஆராய்கிறார்.
திரைப்படத்தின் ஒளிப்பதிவில் அஷ்கான் அஷ்கானியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. காட்சிகளின் இயல்பான தன்மையைப் பாதுகாக்கும் அணுகுமுறை, கதாபாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்துகிறது.
அன்றாடச் செயல்பாடுகளையும் மனிதர்களுக்கிடையிலான உரையாடல்களையும் அவற்றின் இயல்பான வேகத்தில் படம்பிடிப்பதன் மூலம், பார்வையாளரை அந்தச் சூழலுக்குள் அழைத்துச் செல்கிறது. காட்சியமைப்பில் தேவையற்ற அலங்காரங்கள் இல்லாதது படத்தின் மையக் கருத்துக்கு வலுசேர்க்கிறது.
இசையமைப்பாளர் அமீர் மொலூக்பூரின் இசையும் காட்சிகளின் உணர்ச்சித் தன்மையை மிகைப்படுத்தாமல், திரைப்படத்தின் ஒட்டுமொத்த மனநிலையோடு இணைந்து செயல்படுகிறது.
நான்கு பகுதிகளைக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு பகுதியும் தனக்கென ஒரு தனித்துவமான உணர்ச்சித் தன்மையைக் கொண்டிருக்கிறது. அவற்றின் வழியாக வெளிப்படும் கருத்துகள் ஒன்றுக்கொன்று துணையாக அமைந்தாலும், ஒவ்வொரு கதையும் தனித்துவமான அறநெறிச் சிக்கலை முன்வைக்கிறது.
இந்த அணுகுமுறை திரைப்படத்தை ஒரு வழக்கமான அரசியல் பிரச்சாரப் படமாக மாறாமல் பாதுகாக்கிறது. பார்வையாளர்களுக்கு ஒரு முடிவை வலியுறுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் தங்களுடைய மனசாட்சியின் அடிப்படையில் பதில்களைத் தேட வேண்டிய நிலையை உருவாக்குகிறது.
இந்தப் படைப்பின் பின்னணியில் இருக்கும் இயக்குநரின் சொந்த அனுபவங்களும் அதன் அழுத்தத்தை அதிகரிக்கின்றன. ஒவ்வொரு கதையும் தனது அனுபவங்களின் அடிப்படையில் உருவானது என்று ரசூலோஃப் குறிப்பிட்டிருப்பது, திரைப்படத்தின் அரசியல் மற்றும் மனிதநேய அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான பரிமாணத்தை அளிக்கிறது.
ஈரானில் ரகசியமாகப் படமாக்கப்பட்டு, அந்நாட்டில் திரையிடத் தடை செய்யப்பட்ட இந்தப் படைப்பு, திரைப்பட உருவாக்கம் என்பதையும் ஒரு கலை வெளிப்பாடாக மட்டுமல்லாமல், கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டமாகவும் மாற்றுகிறது.
படத்தின் சர்வதேச வெளியீட்டின்போதும் இயக்குநர் ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருந்தார் என்பது இந்தப் படைப்பின் பின்னணியை மேலும் வேதனையுடன் உணரச் செய்கிறது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற 70வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் உயரிய விருதான கோல்டன் பியர் விருதை வென்றது இந்தப் படத்தின் சர்வதேச முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது. பின்னர் சிட்னி திரைப்பட விழாவின் சிட்னி திரைப்படப் பரிசையும் பெற்றது.
இதன் தலைப்பே திரைப்படத்தின் மையச் சிந்தனையுடன் ஒரு முரண்பாடான கேள்வியை எழுப்புகிறது. தீமை என்பது தனியாக வாழும் ஓர் அரக்கனின் இயல்பா? அல்லது சாதாரண மனிதர்கள் தங்களுடைய செயல்களுக்கான பொறுப்பைத் துறந்து, அதிகாரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும்போது உருவாகும் ஒன்றா? இந்தக் கேள்வியை நான்கு கதைகளின் வழியாக விரிவுபடுத்தும் ரசூலோஃப், மனித மனசாட்சியின் முக்கியத்துவத்தை மிக ஆழமாகப் பதிவு செய்கிறார்.
அரசியல் எல்லைகளையும் மொழித் தடைகளையும் கடந்து, உலகின் எந்தச் சமூகத்திலும் பொருந்தக்கூடிய மனிதநேயப் பிரச்சினையைப் பேசுவதுதான் இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம்.
ஒரு மனிதன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான் என்பதற்காக அவனுடைய செயலுக்கான பொறுப்பு மறைந்துவிடுமா என்ற கேள்வி, படம் முடிந்த பிறகும் பார்வையாளரின் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், வெறுமனே ஒரு திரைப்பட அனுபவமாக முடிந்துவிடாமல், மனிதனின் மனசாட்சி, சுதந்திரம், பொறுப்பு ஆகியவற்றைப் பற்றிய நீண்ட சிந்தனையைத் தூண்டும் வலுவான உலகத் திரைப்படமாக இது திகழ்கிறது.
================================
படத்தின் கதை:-
ஈரானில் ஹெஷ்மத் (எஹ்சான் மிர்ஹொசைனி) என்ற நடுத்தர வயது மனிதன் தனது வழக்கமான அன்றாட வாழ்க்கையை வாழ்பவன். ஒரு நாள் அவன் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, அக்கம் பக்கத்தினர் ஒரு பூனையைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.
அவர்களுடன் சேர்ந்து அந்தப் பூனையை மீட்க உதவுகிறான். அதன் பிறகு தனது மனைவி ரசியேவையும் மகளையும் அழைத்துக்கொண்டு வருவதற்காகச் செல்கிறான்.
மனைவி வேலை செய்யும் இடத்திலிருந்தும், மகள் படிக்கும் பள்ளியிலிருந்தும் இருவரையும் அழைத்துக்கொண்டு வருகிறான். பின்னர் அவர்களைத் தனது மாமியாரைப் பார்க்க அழைத்துச் செல்கிறான்.
மாமியாரைப் பார்த்துவிட்டு குடும்பத்துடன் வீட்டுக்குத் திரும்பும் ஹெஷ்மத், அடுத்த நாள் அவர்கள் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருக்கும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறான்.
அந்தத் திருமணத்திற்குச் செல்வதற்கு முன்பாகத் தனது மனைவி அழகாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக, அவளுடைய தலைமுடியில் வண்ணச் சாயம் பூசி அழகுபடுத்த உதவுகிறான். குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் பழகும் அவனுடைய வாழ்க்கை வழக்கம்போலத் தொடர்கிறது.
மறுநாள் அதிகாலையிலேயே ஹெஷ்மத் தூக்கத்திலிருந்து எழுந்து வேலைக்குப் புறப்படுகிறான். ஆனால், அவன் வேலைக்குச் செல்லும் ஆர்வமின்றி, ஒருவிதத் தயக்கத்துடனும் மனச்சுமையுடனும் வாகனத்தை ஓட்டிச் செல்கிறான்.
அவன் செல்லும் இடம் சாதாரண அலுவலகமோ தொழிற்சாலையோ அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்கிலிடப்படும் இடம். அங்கு சென்றதும், தூக்கிலிடுவதற்கான ஏற்பாட்டில் அவன் தனது பங்கைச் செய்கிறான்.
மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் பல கைதிகள் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு பொத்தானை அவன் அழுத்துகிறான். இதுவரை ஒரு சாதாரண குடும்ப மனிதனாகப் பார்த்த ஹெஷ்மத்தின் இன்னொரு வாழ்க்கை தூக்கு தூக்கி இப்போது வெளிப்படுகிறது.
அடுத்ததாக, பௌயா (காவே அஹங்கர்) என்ற இளம் ராணுவ வீரனின் கதை தொடங்குகிறது. அவன் கட்டாய ராணுவச் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு கைதியை கொல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அந்தக் கட்டளையை நிறைவேற்ற அவன் விரும்பவில்லை. எனவே, அந்தப் பணியிலிருந்து தன்னை விடுவித்து வேறு ஒரு பிரிவுக்கு மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறான்.
இதற்காக அவனுக்குக் கிடைத்திருக்கும் குறுகிய நேரத்திற்குள் தனது சகோதரனின் உதவியை நாடுகிறான். சகோதரனுக்குத் தெரிந்தவர்களின் தொடர்புகளைப் பயன்படுத்தி வேறு பிரிவுக்கு மாறுவதற்கான வழி கிடைக்குமா என்று முயற்சி செய்கிறான். ஆனால், அவனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைவதற்குள் இந்த முயற்சி வெற்றிபெறுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், அவனுடன் தங்கியிருக்கும் மற்ற ராணுவ வீரர்களுடன் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறான். ராணுவத்தில் பணியாற்றும்போது மேலதிகாரிகள் பிறப்பிக்கும் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டுமா, அல்லது அவை தவறானவை என்று தோன்றினால் அவற்றை மறுக்க வேண்டுமா என்ற அறநெறிப் பிரச்சினை குறித்து அவர்களுக்குள் விவாதம் நடைபெறுகிறது.
பௌயா தனது நிலைமையை விளக்குகிறான். கட்டாய ராணுவச் சேவையை முடிக்காமல் அவனால் கடவுச்சீட்டு பெற முடியாது.
கடவுச்சீட்டு இல்லாமல் சட்டப்படி நாட்டை விட்டு வெளியேறவும் முடியாது. அவனுடைய காதலியான தஹ்மினேவுடன் (தர்யா மொக்பெலி) வெளிநாட்டுக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பது அவனுடைய திட்டம். ஆனால், அதற்குத் தேவையான ராணுவச் சேவையை முடிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருக்கிறது.
இப்போது அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கைதியைக் கொல்லும் பணியை மறுத்தால், அவனுடைய எதிர்காலத் திட்டமே பாதிக்கப்படக்கூடும்.
அவனுடன் இருக்கும் ஒருவன், வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் முதலில் கொடுக்கப்பட்ட பணியை முடித்தாக வேண்டும் என்று கூறுகிறான்.
அதாவது, தனக்குப் பிடிக்காத ஒரு கட்டளையாக இருந்தாலும் அதை நிறைவேற்றினால்தான் ராணுவச் சேவையை முடித்து நாட்டை விட்டு வெளியேற முடியும் என்று அவனுக்கு அறிவுறுத்துகிறான்.
மற்றொருவன் இதற்கு மாறான கருத்தை முன்வைக்கிறான். இப்போது ராணுவ அமைப்புக்குள் இருந்து கட்டளைகளைப் பின்பற்றுவதைவிட, அதே அமைப்பில் தொடர்ந்து பணியாற்றி எதிர்காலத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட நிலைக்கு வர வேண்டும் என்றும், அப்போது நாட்டின் சட்டங்களையும் நடைமுறைகளையும் மாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறான்.
இந்த விவாதங்களுக்கு நடுவில், பௌயாவின் காதலி தஹ்மினே தொலைபேசியில் அவனுடன் பேசுகிறாள். அவனுடைய தயக்கத்தை அறிந்திருந்தாலும், ஒப்படைக்கப்பட்ட பணியைச் செய்து முடிக்கும்படி அவனை வலியுறுத்துகிறாள்.
இதனால் பௌயாவின் மனக்குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. ஒருபுறம் தனது மனசாட்சி, மறுபுறம் காதல் வாழ்க்கையும் வெளிநாட்டுக்குச் செல்லும் எதிர்காலத் திட்டமும் என இரண்டுக்கும் இடையில் அவன் சிக்கிக்கொள்கிறான்.
அப்போது மற்றொரு ராணுவ வீரன் பௌயாவுக்குப் பதிலாக அந்தக் கைதியைக் கொல்ல முன்வருகிறான். ஆனால், அதற்குப் பதிலாக ஐந்து கோடி தோமான்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறான்.
அவனுடைய சகோதரி உடல்நலமின்றி இருப்பதால், அவளுடைய சிகிச்சை மற்றும் தேவைகளுக்காக அந்தப் பணம் அவனுக்குத் தேவைப்படுகிறது. எனவே, பணம் கிடைத்தால் பௌயாவுக்குப் பதிலாகத் தண்டனையை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகக் கூறுகிறான்.
ஆனால், அவர்களுடன் இருக்கும் இன்னொரு வீரன் இந்த ஏற்பாட்டை ஏற்க மறுக்கிறான். பௌயாவுக்குப் பதிலாக வேறொருவன் அந்தக் கைதியைக் கொன்றாலும், அந்தக் கைதியின் மரணத்தைத் தடுக்க முடியாது என்பதுதான் அவனுடைய வாதம்.
மேலும், பணம் கொடுத்து வேறொருவரை அந்தச் செயலைச் செய்ய வைத்தாலும், அந்தக் கொலைக்கான பொறுப்பிலிருந்து பௌயா தப்பிவிட முடியாது என்றும் கூறுகிறான். இந்த குறுக்குவழி ஒப்பந்தத்தில் பௌயா ஈடுபட்டால், அதைப் பற்றிய தகவலை அதிகாரிகளிடம் தெரிவிப்பேன் என்றும் எச்சரிக்கிறான்.
இதற்கிடையில், பௌயாவுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் முடிவடைகிறது. இனிமேலும் வேறு பிரிவுக்கு மாறுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது என்பதை உணர்கிறான்.
கைதியைத் தூக்கிலிடும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணியில் அவனுடன் மற்றொரு ராணுவ வீரனும் செல்கிறான். அந்த நேரத்தில், பௌயா திடீரென அந்த வீரரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொள்கிறான். அங்கிருந்த பல ராணுவ வீரர்களையும் தடுத்து நிறுத்தி, அவர்கள் தன்னைப் பிடிக்க முடியாதபடி தப்பித்துச் செல்கிறான்.
தான் நிறைவேற்ற மறுத்த கட்டளையைத் தவிர்த்து வெளியேறிய பௌயா, பின்னர் தஹ்மினேவைச் சந்திக்கிறான். இருவரும் அங்கிருந்து வாகனத்தில் புறப்படுகிறார்கள். தன்னிடம் இருந்த துப்பாக்கியை இனி தேவையில்லை என்பதுபோல் தூக்கி எறிந்துவிட்டு, தஹ்மினேவுடன் மகிழ்ச்சியாகச் செல்கிறான்.
அடுத்ததாக, தனது ராணுவச் சேவை முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் ஜாவத் (முகமது வலிசாதேகன்) என்ற இளைஞனின் கதை தொடங்குகிறது.
அவன் தனது காதலியான நானாவை (மஹ்தாப் சர்வதி) திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அதற்கான முடிவை எடுத்து, நானாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவளிடம் தனது காதலைத் திருமணமாக மாற்றுவதற்கான விருப்பத்தை தெரிவிக்கத் திட்டமிடுகிறான்.
இந்த நோக்கத்துடன் நானாவின் வீட்டுக்கு வரும் ஜாவத்துக்கு அங்கு ஒரு துயரச் செய்தி காத்திருக்கிறது. நானாவின் குடும்ப நண்பரும் அரசியல் செயல்பாட்டாளருமான கெய்வான் சமீபத்தில் இறந்துவிட்டதை அறிகிறான். கெய்வானின் அரசியல் கொள்கைகளையும் கருத்துகளையும் ஜாவத் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவரைப் பற்றிய நல்ல எண்ணமும் அவனுக்கு இல்லை. ஆனால், கெய்வானின் மரணச் செய்தியைக் கேட்டதும் அவன் கவலைப்படுவது அவரது அரசியல் செயல்பாடுகளைப் பற்றி அல்ல.
நானாவுக்கும் கெய்வானுக்கும் இதற்கு முன்பு காதல் தொடர்போ வேறு நெருக்கமான உறவோ இருந்ததா என்பதுதான் அவனுடைய கவலையாக இருக்கிறது.
இதனால், நானாவுக்கும் கெய்வானுக்கும் இடையிலான உறவைப் பற்றி அவன் சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்புகிறான். அதே நேரத்தில், நானாவின் தாயுடன் ராணுவத்தில் வழங்கப்படும் கட்டளைகள் குறித்த அறநெறிப் பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கிறான்.
சில ராணுவக் கட்டளைகள் மனிதநேயத்திற்கு எதிரானவையாக இருந்தால், அவற்றைப் பின்பற்ற மறுப்பது சரியா என்பதே அவர்களுடைய உரையாடலின் அடிப்படையாக இருக்கிறது.
இந்தச் சூழலில், ஜாவத் கெய்வானின் புகைப்படத்தைப் பார்க்கிறான். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அவனுக்குப் பேரதிர்ச்சி ஏற்படுகிறது.
ஏனென்றால், கெய்வானைத் தூக்கிலிட்டுக் கொன்றவன் வேறு யாருமல்ல; ஜாவத்தான். நானாவின் பிறந்தநாளில் அவளைப் பார்க்கச் சில நாட்கள் விடுமுறை கிடைப்பதற்காக, ராணுவத்தில் தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் பணியை அவன் செய்திருந்தான்.
அந்தச் செயலால் கொல்லப்பட்டவர்தான் கெய்வான் என்பதை இப்போது உணர்கிறான்.
தான் செய்த செயலின் உண்மையான விளைவையும், இறந்துபோனவர் நானாவின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதையும் அறிந்ததும் ஜாவத் முற்றிலும் உடைந்து போகிறான்.
நானாவிடம் உண்மையை மறைக்காமல் ஒப்புக்கொள்கிறான். தான் கெய்வானைத் தூக்கிலிட்டுக் கொன்றதை அவளிடம் தெரிவிக்கிறான்.
இந்த உண்மையைக் கேட்ட நானா கடுமையான அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாகிறாள்.
ஜாவத்தை ஒரு கல்லால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு அவளுக்குள் ஆத்திரம் ஏற்படுகிறது. ஆனால், இறுதியில் அவள் அவனைத் தாக்குவதில்லை. அதற்குப் பதிலாக, நடந்த உண்மையைத் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று ஜாவத்திடம் கேட்டுக்கொள்கிறாள்.
பின்னர் நானாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துகிறார்கள். அப்போது நானாவின் தந்தை, இறந்துபோன கெய்வானை நினைவுகூர்ந்து அவரைப் பற்றிப் பேசுகிறார்.
குடும்பத்தினர் அவரை நினைத்து வருந்துகிறார்கள். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைவரும் நானாவுக்காகப் பாடுகிறார்கள். ஆனால், கெய்வானின் மரணத்தையும் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையையும் அறிந்திருக்கும் நானாவால் அந்தக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாகக் கலந்துகொள்ள முடியவில்லை.
குடும்பத்தினர் பாடிக்கொண்டிருக்கும்போது அவள் அழுகிறாள்.
மறுநாள் ஜாவத் மீண்டும் நானாவைச் சந்திக்கிறான். அவள்மீது தனக்கிருக்கும் காதலை உறுதிப்படுத்துகிறான்.
நடந்ததை மறந்துவிடும்படியும், தங்களுடைய உறவைத் தொடர வேண்டும் என்றும் அவளிடம் கேட்கிறான். ஆனால், கெய்வானைக் கொன்றவன் என்ற உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜாவத்தின் காதலை அவள் நிராகரிக்கிறாள். இருவருடைய உறவும் அத்துடன் முடிவுக்கு வருகிறது.
ஈரான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தர்யா (பரான் ரசூலோஃப்) என்ற இளம்பெண்ணின் கதை தொடங்குகிறது. அவள் தனது அத்தை ஜமானையும் (ஜிலா ஷாஹி), மாமா பஹ்ராமையும் (முகமது சித்திகிமெஹர்) பார்ப்பதற்காக அவர்களுடைய கிராமப்புற வீட்டுக்குச் செல்கிறாள்.
அங்கு தங்கியிருக்கும் காலத்தில், பஹ்ராம் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அவள் அறியவில்லை. உண்மையில், அவர் குணப்படுத்த முடியாத இறுதிக்கட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
தர்யாவின் தந்தையான மன்சூர், மருத்துவத் துறையில் அதிக வருமானம் கிடைக்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்து முன்னேறியிருக்கிறார்.
ஆனால், பஹ்ராம் அவரைப் போல மருத்துவத் துறையில் அதிக வருமானம் கிடைக்கும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதைப் பற்றி தர்யாவுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்படுகிறது.
ஏன் பஹ்ராம் தனது தந்தையைப் போல அதிக வருமானம் கிடைக்கும் மருத்துவத் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவரிடம் பலமுறை கேட்கிறாள். ஆனால், பஹ்ராம் அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறார்.
ஒரு கட்டத்தில், வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு நரியைக் கொல்லலாமா என்ற விவாதம் பஹ்ராமுக்கும் தர்யாவுக்கும் இடையே ஏற்படுகிறது.
கோழிகளைக் கொல்ல வரும் நரியைத் தடுக்க அதைக் கொல்வது சரியா என்பதே இந்த விவாதத்தின் மையம். தர்யா அதற்கு உடன்படுவதில்லை.
நரியைக் கொல்வதைவிட வேறு வழியில் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டும் என்றும், அதைக் கொல்வதைத் தவிர்ப்பேன் என்றும் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறாள்.
இதற்கிடையில், ஜமான் தர்யாவிடம் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிவிக்க முடிவு செய்கிறாள். நீண்ட காலமாகத் தனது மனதுக்குள் வைத்திருந்த உண்மையை அவளிடம் சொல்லத் துணிகிறாள்.
தர்யாவின் உண்மையான தந்தை மன்சூர் அல்ல; பஹ்ராம்தான் என்பதே அந்த உண்மை. இத்தனை காலமும் தர்யாவிடம் இதைச் சொல்லாமல் இருந்த பஹ்ராம், இப்போது அவளிடம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியிருந்தார்.
ஆனால், அந்த உண்மையைச் சொல்லத் தேவையான மனத்துணிவை அவர் நீண்ட காலமாகத் திரட்டிக்கொண்டிருந்தார்.
தான் பஹ்ராமின் மகள் என்ற உண்மையை அறிந்த தர்யா அதிர்ச்சியடைகிறாள்.
இதனால் குடும்ப உறவுகள் பற்றிய அவளுடைய புரிதல் முற்றிலும் மாறுகிறது. அவள் அங்கிருந்து புறப்படுவதற்காகத் தனது பொருட்களைப் பெட்டியில் அடுக்கத் தொடங்குகிறாள். அப்போது பஹ்ராமுக்கும் தர்யாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது.
அந்த வாக்குவாதத்தின்போது, பஹ்ராமின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளும் வெளிவருகின்றன. அவர் ஒருகாலத்தில் ராணுவத்தில் பணியாற்றியவர்.
அப்போது அவருக்கும் ஒரு கைதியைக் கொல்லும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த மனிதனைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளையை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அந்தக் கட்டளையை நிறைவேற்றாமல் தப்பித்துச் சென்றதால், அவர் தனது குடும்பத்தையே பிரித்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிகாரிகளிடமிருந்து தப்பித்த பிறகு, தனது குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுடன் தொடர்ந்து வாழ முடியாது என்பதை உணர்ந்தார். தனது குடும்பத்தினர் ஆபத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்தச் சூழ்நிலையில், தர்யாவைத் தனது நண்பரான மன்சூரிடம் ஒப்படைத்து வளர்க்கச் செய்தார். இதனால் தர்யா மன்சூரின் மகளாக வளர்ந்தாள். இத்தனை காலமும் அவளுக்குத் தெரியாமல் இருந்த அவளுடைய உண்மையான தந்தை பற்றிய ரகசியம் இப்போதுதான் வெளிப்படுகிறது.
பஹ்ராம் தனது கடந்தகால முடிவைப் பற்றி தர்யாவிடம் தெளிவுபடுத்துகிறார். அப்போது தனது மனைவி தர்யாவைக் கருவுற்றிருந்தார் என்பது தனக்குத் தெரிந்திருந்தாலும், ஒரு கைதியைக் கொல்லும் கட்டளையை மட்டும் தான் ஏற்றிருக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறார்.
தனது குடும்பத்திலிருந்து பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டாலும், ஒரு மனிதனைக் கொல்லும் செயலில் ஈடுபடுவதற்கு அவர் தயாராக இல்லை என்பதே அவருடைய நிலைப்பாடு.
இதற்கிடையில், பஹ்ராமின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கிறது. தர்யாவை விமான நிலையத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுவதற்காக பஹ்ராமும் ஜமானும் அவளை வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.
பயணத்தின்போது பஹ்ராமுக்கு கடுமையான இருமல் ஏற்படுகிறது. இருமல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து, அவர் மிகவும் சிரமப்படுகிறார். இதனால் ஜமான் வாகனத்தை நிறுத்தி அவருக்கு உதவ முயற்சி செய்கிறாள்.
அப்போது தர்யா வாகனத்திற்கு அருகிலுள்ள புதர்ப் பகுதியில் ஒரு நரியைப் பார்க்கிறாள். கோழிகளைக் காப்பாற்றுவதற்காக நரியைக் கொல்லலாமா என்று முன்பு பஹ்ராமுடன் விவாதித்த அதே தர்யா, இப்போது அந்த நரியை அமைதியாகக் கவனிக்கிறாள்.
பஹ்ராமின் உடல்நிலை காரணமாக ஏற்பட்ட இடைநிறுத்தத்திற்குப் பிறகு, அவர்கள் மீண்டும் வாகனத்தில் ஏறுகிறார்கள். அதன்பின் விமான நிலையத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது.
இவ்வாறு நான்கு தனித்தனி மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதை நிறைவடைகிறது.
#கீதப்ப்ரியன்ஈரானியசினிமா
#கீதப்ப்ரியன்கோல்டன்பியர்