இது ஓவியர் ராஜா ரவிவர்மா அவர்கள் 1894 ஆம் ஆண்டு வரைந்த அசோகவன சீதை ஓவியம்.
இதில் சீதையின் நினைவுகளை மிகவும் ஆத்மார்த்தமாக சித்தரித்துள்ளார் ரவிவர்மா அவர்கள், அசோக வனத்தில் ஷிம்ஷபா மரத்தடியில் ராமன் நினைவுகளை ஒவ்வொன்றாக அசை போடுகிற சீதையின் இந்த முகம் அற்புதமானது, தொட்டடுத்து அமர்ந்திருப்பது திரிசடை, விபீடனன் மகள், சீதை துயர் விரைவில் மாறும் என நல்ல வாக்கு சொல்கிறவள், ராட்சசாதிபதி ராவணன் விரைவில் வீழ்வான், கட்டையில் போவான் போல சீதை மனம் குளிர தான் அன்று கண்ட கனவுகளில் ராவணன் தோல்வியுரும் காட்சிகளை சுவையாக எடுத்தியம்பி சீதையை உயிர்ப்புடன் வைத்தவள் திரிசடை.
கம்ப ராமாயத்தில் வரும் சுந்தரகாண்டத்தில் 3 ஆம் படலத்தில் இந்த ஓவியத்தின் உட்பொருள் உரைநடையாக வருகிறது.
அதில் 3.4 இராமனைப் பற்றிய பழைய நினைவுகள்
அதில் 3.5 திரிசடை தவிர பிற காவல் அரக்கியர் துயில் கொள்ளுதல்
இந்த கம்ப ராமாயண எளிய தமிழில் அமைந்த உரைநடை படிக்க மிகவும் சுவையானது,சுவாரஸ்யமானது.
சீதையின் நினைவுகள்
“ஆட்சி இல்லை” என்றபோது நிலை கலந்காத அவனது பேராண்மை அவளுக்குப் பெருமிதம் தந்தது.
“மெய்த்திருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்திருத்துறந் ‘து’ ஏகென்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்தசெந் தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.”
“வில்லை முறித்து வீரம் விளைவித்துத் தன்னை மணந்து கொண்ட வெற்றியை” நினைவில் கொண்டு வந்து நிறுத்தினாள்.
அந்நியரிடமும் அன்பு காட்டி, உறவு கொண்டாடிய உயர்வை எண்ணிப்பார்த்தாள்; ஏழைமை வேடுவன்” என்றும் பாராது, அவனோடு தோழமை கொண்ட உயர் நட்பை நினைத்து மகிழ்ந்தாள்; நட்புக் கொள்ளும் இராமனது ஒப்புயர் வற்ற மனநிலை, அவள் மனக்கண் முன் வந்தது.
நகைச்சுவை நிரம்பிய நிகழ்ச்சி ஒன்று அவளைப் பார்த்துச் சிரித்தது; அந்தணன் ஒருவன், பேராசைக் காரன்; வீடு பற்றி எரியும்போது அடுப்புக்கு நெருப்புக் கேட்பது போல நாடிழந்து காடு நோக்கிச் சென்றபோது இராமனிடம் அவன்தானம் கேட்ட நிகழ்ச்சி ஏற்படுத்திய சிரிப்பை நினைவுபடுத்திக் கொண்டாள்.
மழுப்படை ஏந்தி வந்த பரசுராமனைக் கோதண்ட ராமனாக இருந்து அடக்கி ஆணவம் நீக்கியதை நினைத்துப் பார்த்தாள்.
சயந்தன் காக்கை வடிவம்கொண்டு அவர்கள் இடையே புகுந்து அற்ப ஆசையால் அவள் மார்பைக் குத்தி மகிழ்ந்தபோது தருப்பைப்புல் ஒன்று கொண்டே அவனை விரட்ட அவன் கண்ஒன்றனைக் குருடு ஆக்கியது; அச் சோகச் செய்கை அவள்கண் முன்நின்றது.
கரம்பற்றி வானிடை எடுத்துச் சென்ற கிராதகனை வாள்கொண்டு வெட்டிய வீரச் செய்கையை எண்ணிப் பார்த்தாள்.
பெருமைமிக்க இராமன் செயல்கள் அவளுக்கு ஊக்கம் தந்தன. இடர்சிறிதும் நேராமல் காத்த வீரன், தன்னை மீட்கவராதது அவளுக்கு வியப்பாய் இருந்தது; அதற்குக் காரணம் யாதாய் இருக்கும்?
“இலக்குவன் கிழித்த கோட்டை அழித்து விட்டேன்; அதற்காக என்னைத் தன் மனத்தில் அழித்து விட்டானா?”
“கொண்டு சென்ற அரக்கன் உண்டு முடித்திருப்பான் என்று அயர்ந்து ஒய்ந்து விட்டானா?”
“பாதுகையை ஏந்திச் சென்ற பரதன், விரதத்தைக் காக்க முடியாமல் வரதனிடம், வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட்டானா?”
“இரக்கமற்ற இராவணன் இலங்கை நகரில் என்னைச் சிறை வைத்திருப்பான் என்பதை அறியாமல் திகைத்திருப்பானா?”
இத்தகைய வினாக்கள் வினாடிக்கு வினாடி மாறி மாறி அவள் மனத்தில் எழுந்தன.
“அழுத கண்ணோடு அவனையே நினைந்து காத்துக் கொண்டு இருக்கிறாள்” என்ற செய்தியை யார் அவனுக்குச் சொல்லப் போகிறார்கள் என்ற ஏக்கம் அவளை வாட்டியது.
திரிசடையின் ஆறுதல் மொழிகள்
உறக்கம் இழந்த நிலையில் அவளுக்கு உதவியாய்த் திரிசடை என்பவள் பேச்சுத் துணையாய் இருந்தாள்; அவள் விபீடணன் மகள்; தன் இடக்கண்ணும் புருவமும் துடிப்பதை அத் தூய சீதை வீடணன் மகளிடம் எடுத்து உரைத்தாள்.
‘அது நன்மைக்கு அறிகுறி’ என்று நாலும் தெரிந்தவள் போல் அந் நங்கை சீதைக்கு விளக்கி உரைத்தாள்; அரை உறக்கத்தில் நிறைவு பெறாத தான் கண்ட கனவினையும் திரிசடை சீதைக்கு உரைத்தாள்.
பேயும் கழுதையும் இழுத்துச் சென்ற தேரில் இரத்த ஆடையனாய் இராவணன் தென்திசை நோக்கி இறுதி யாத்திரை செய்வதைக் கனவில் அவள் கண்டாள்.
அரிமா இரண்டு, புலிகளோடு வந்து யானைகளை அடித்துக் கொன்ற கனவும் கருத்துள்ளதாய் இருந்தது. இராமனும் இலக்குவனும் அனுமனோடு வந்து இலங்கை வேந்தனை வெல்லும் நிகழ்ச்சி, இதில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. காட்டில் சிறைப் பட்டிருந்த தோகை மயில், விடுதலை பெற்று, விண்ணில் பறந்து சென்றது என்றும் கூறினாள். சோகத்தில் அகப்பட்டிருந்த சீதைக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்பதை அது தெரிவித்தது.
நம்பிக்கை ஊட்டும் திரிசடை கனவுகள், அவள் விரும்பிக் கேட்பவையாய் அமைந்தன.
திருமகள், திருவிளக்கு ஒன்றனை ஏந்தி இராவணன் மனையிலிருந்து வெளிப்பட்டு விபீடணன் கோயிலில் அடி எடுத்து வைத்தாள்.
ஆட்சி மாறும் இராவணன் வீழ்ச்சியை இக் கனவு உணர்த்தியது.
அக் கனவுகளைத் தொடர்ந்து விருப்புற்றுக் கேட்டு மறுபடியும் திரிசடையைக் கண்ணுறங்க வேண்டினாள் சீதை.