"புன்னப்பர வயலார்" மலையாள வரலாற்று சினிமா, 1968 ஆம் ஆண்டு வெளியானது, இது மலையாள இயக்குனர் குஞ்சாக்கோ இயக்கி தயாரித்த திரைப்படம்.
இப்படத்தில் பிரேம் நசீர், ஷீலா, அடூர் பாசி மற்றும் பி.ஜே. ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு கே. ராகவன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை பிரம்மாண்டமாகவோ ஆவணப்படமாகவோ இயக்காமல் எளிமையாக புன்னப்பர , வயலார் போராட்டத்தில் இறந்த ஆயிரம் சகாக்களில் ஒரு சகாவான பிரபாகரனின் கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்,படத்தில் அருமையான பாடல்கள் உண்டு, தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கும் கொடுங்கோல் நிலப்பிரபுவின் ஒடுக்குமுறைகளை முறியடிக்க தொழிற்சங்க செயற்பாட்டாளரான பிரபாகரனும் அவரது ஆதரவாளர்களும் ஒன்று திரண்டு கிளர்ச்சி செய்யப் புறப்பட்டு , அரச பயங்கரவாதம் மற்றும் போலீஸ் அராஜகத்தால் கொத்துக் கொத்தாக சுட்டுக் கொல்லப்பட்டு செத்து மடியும் கதை இது,
ஆனால் இது நிஜம் என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும் , எனவே என்னை தேடிப்படிக்க வைத்தது, படித்தவற்றை தொகுத்து எழுதியிருக்கிறேன்.
உலகெங்கிலும் கம்யூனிசம் தழைத்து வேரூன்ற பல லட்சம் தோழர்கள் தம் இன்னுயிரைத் தந்துள்ளனர்,
அப்படி கேரளத்தில் கம்யூனிசம் வேர்விட்டு நின்றதற்கு அடிகோலிய வரலாற்று நிகழ்வு இது.
புன்னப்பர-வயலார் போராட்ட (Punnapra-Vayalar uprising) நிகழ்வை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் ,
அக்டோபர் 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் திருவிதாங்கூர் மன்னராட்சியில் திவானாக இருந்தவர் சர் C.P. இராமசாமி ஐயர்,
கேரளத்தில் C.P என்று இன்றும் இவரை நினைவு கூறுகின்றனர் , இந்த திவான் பதவி பிரதமர் பதவிக்கு ஒப்பானது,
சென்னை ஆழ்வார்பேட்டை
C.P. ராமசாமி சாலை இவரின் பெயரால் தான் வழங்கப்படுகிறது, அவர் வாழ்ந்த " the grove " என்ற Grecian பாணி பங்களா இன்றும் அந்த சாலையில் உள்ளது,அவர் மனைவி சீதம்மாள் பெயரை C.P.ராமசாமி சாலைக்கு ஒட்டி உள்ள சாலைக்கு சூட்டியிருக்கின்றனர், அவர் வாழ்ந்த Grove வளாகத்தில் the grove என்ற புகழ்பெற்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
புன்னப்பர-வயலார் போராட்டம் அரசுக்கு எதிராக எழுந்த பொதுவுடமையாளர்களின் மிக முக்கியமான போராட்டமாகும்.
ஏழை சாமான்ய மக்கள் கூலிகள் அன்று எந்த வேலை செய்தாலும் சமஸ்தான அரசுக்கு வரி செலுத்த வேண்டும், உதாரணமாக, விவசாய கூலிகளுக்கு கிடைத்ததில் பாதி நில உரிமையாளரின் கைகளுக்குச் சென்றுவிடும். மீனவர்களின் மீது விதித்த இரு வரிகளில், தேவாலயம் செல்பவர்கள் மீது விதித்த வரி பள்ளிகரம் என்றும் வல்லம் வைத்து பிழைப்பவர்கள் கட்டும் வரி வல்லாகாரம் என்றும் அழைக்கப்பட்டது, இந்த வரிகளைச் செலுத்திய பிறகு அவர்களுக்கு எதுவும் மிச்சமிருக்காது, இது போல பல பல வரிகள், உழைப்பவனுக்கு உணவு உடை இருப்பிடம் என சொந்தமில்லை என்ற நிலையில் தான் கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புன்னப்பர , அம்பலப்புழ, முஹம்மா , கஞ்சிக்குழி மற்றும் வயலார் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 50000 கயிறு திரிக்கும் ஆலைத் தொழிலாளிகள், மீனவர்கள் , விவசாய கூலிகள், கட்டிட தொழிலாளிகள் என போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு எதிராக போராடியபடியே முன்னேறினர், மூங்கில் கழிகள், சவுக்கு கட்டை,சுத்தி ,அரிவாள் இவற்றுடன் போராடியவர்கள் மீது ராணுவம் எந்திர துப்பாக்கி கொண்டு சுட்டதில் இரண்டு ஊர்களிலும் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டனர், இன்று இந்த இரண்டு நினைவுச் சின்னங்கள் இருக்கும் சதுக்கத்தின் கீழே அன்று குளமாக இருந்தது, அதில் இறந்த தோழர்களின் சவங்களை தள்ளிக் குவித்து மண் கொண்டு நிரப்பி மேடாக்கி இந்த சதுக்கம் உருவாக்கி அதில் இந்த நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளனர்.
1946 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி புன்னப்பராவில் முதலாளிகளுக்கும் அரசின் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தில் கிளர்ந்தெழுந்த
200 பேர் திவான் C.P. இராமசாமி ஐயர் ஆணைப்படி பிரிட்டிஷ் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஆனால் அப்போதும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை, நீருபூத்த நெருப்பாக மீண்டும் வெடித்தது , மீண்டும் அக்டோபர் 27 அன்று வயலாரில் 150க்கும் மேற்பட்ட தோழர்கள் திவான் ஆணைப்படி மீண்டும் சுட்டுக் கொல்லப்பட்டனர், அரசின் பேரேடு கணக்கு 400 என்றாலும், காணாப்பிணங்களின் எண்ணிக்கை 600 ஆகும்.
இந்த களபலிகளுக்கு பழிவாங்க
திவான் C.P.ராமசாமி ஐயரை கொல்ல K. C. S. மணி என்கிற சுப்ரமணிய ஐயர் புறப்படுகிறார், அவர் 23 வயது இளைஞர், துப்பாக்கி வாங்கும் அளவு பணமும் உதவியுமில்லாததால் கூரிய பிச்சுவா கத்தியை வாங்கியவர் பல நாட்கள் தம் சகாக்களுடன் C.P ஐ பின் தொடர்ந்து சென்று கொல்லத் திட்டமிடுகிறார், சிக்கினால் ஆயுள் தண்டனை நிச்சயம், (திருவாங்கூரில் தூக்கு தண்டனையை C.P.ராமசாமி ஐயர் ஒழித்திருக்கிறார்) இவர் பிராமணர் ஆதலால் பிச்சுவா கத்தி பிடிக்க கை வசப்படுவதில்லை, இருந்தும் முயற்சி எடுக்கிறார், ஜூலை 25, 1947 சுவாதித்திருநாள் இசைக்கல்லூரி இசை அரங்கத்தில் செம்பை வைத்யநாத பாகவதர் பாடிய கச்சேரி முடியும் வரை கேட்டு விட்டு இரவு 1-00 மணிக்கு C.P.ராமசாமி ஐயர் வெளியேறுகையில் K. C. S. மணியும் அவரை தொடர்ந்தவர் இடுப்பில் இருந்து பிச்சுவா கத்தியை உருவ, அது வெளியே வரவில்லை, எனவே வேட்டியை கழற்றி கடாசுகிறார், காக்கி கால்சராயில் சொருகிய கசாப்பு கத்தி
கைக்கு வர , சரியாக மின் விளக்கும் அங்கே அணைந்து விடுகிறது, தன்னால் முடிந்த வரை கத்தி கொண்டு கொத்தி வெட்டியுள்ளார் , அதில் C.P.ராமசாமி ஐயரின் தாடை, விரல்கள் ,தோள் ,கழுத்து என வெட்டுக்காயம் விழுந்துள்ளது, அதன் பின்னர் இருளில் தோழர் K. C. S. Mani தவழ்ந்து போய் தப்பி பல மாதங்கள் தலைமறைவாகியிருக்கிறார், இன்றும் சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியின் எதிரே இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கான பிச்சுவா கத்தி பொறித்த நினைவுச்சின்னத்தை ஒருவர் பார்க்கலாம் (இணைப்பு படம் ),
திருவாங்கூர் சமஸ்தானம் ஹைதராபாத் போலவே தனியாகவே இயங்க எடுத்த மன்னரின் முடிவை ஆதரித்தவர் C.P.ராமசாமி ஐயர், மருத்துவமனையில் சுமார் ஒரு மாதம் சிகிச்சையில் இருக்கையில் அவரது மனம் , சார்புநிலை கனிந்து மாறிவிடுகிறது, திருவாங்கூர் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைவதே உசிதம் என்று மன்னருக்கு கடிதம் எழுதிவிட்டு சென்னைக்கு நிரந்தரமாக திரும்பி விடுகிறார் C.P.ராமசாமி ஐயர்,
அவர் 26 செப்டம்பர் 1966 ஆம் ஆண்டு லண்டனில் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசுகையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார், 1966 ஆம் ஆண்டு வரை அவர் சென்னை ஆழ்வார்பேட்டை the grove பங்களாவில் தான் வசித்து வந்துள்ளார்.
தோழர் K.C.S.மணி செப்டம்பர் 20, 1987 அன்று கடைசி காலத்தில் அரசும் கட்சியும் முற்றிலும் கைவிட்ட நிலையில் தனது 65வது வயதில் திருவனந்தபுரம் புலையனார்கோட்டையில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனையில் இறந்தார்,தன் கடைசிக்காலத்தில் தன் கொலைமுயற்சிக்கு பெரிதும் வருந்தியுள்ளார், அம்பலப்புழை உன்னி கண்ணன் கோயிலுக்கு அடிக்கடி போய் பாவ மன்னிப்பு வேண்டி அங்கபிரதட்சனம் செய்துள்ளார்,அடிக்கடி சபரிமலை சென்றும் பாவமன்னிப்பு
கேட்டுள்ளார் தோழர் K.C.S.மணி.
13 ஏப்ரல் 1919 நடந்த ஜாலியன் வாலாபாக் போராட்டத்தை நினைவுகூரும் நாம் அதற்கு
27 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்த முக்கியமான "புன்னப்பார வயலார்" படுகொலைகளை பற்றி பேசுவதில்லை, இதைப் பற்றிய வரலாற்றுப் பாடங்கள் நம் பள்ளிக் கல்வியில் இல்லை என்பதும் துயரம்.
ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தில் 397 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்,
1200 பேர் படுகாயமடைந்தனர்,உடல் உறுப்புகளை நிரந்தமாக இழந்தனர்.
இந்த புன்னப்பார வயலார் போராட்டத்தில் 1000 பேர் இறந்திருக்கின்றனர், அந்த ஒரு வார காலம் கேரளத்தில் முழு ஊரடங்கு, வெளியே வந்த மக்கள் சுடப்பட்டுள்ளனர், சுடப்பட்ட படுகொலை நிகழ்வு எந்த பத்திரிக்கையும் வெளிவரவில்லை,கம்யூனிச தோழர்கள் களபலிகள் என்பதால் மேற்கத்திய பத்திரிக்கைகள் கூட பாராமுகம் கொண்டன,உள்ளூரில் வெளிவந்த பத்திரிக்கைகள் இந்த உயிர்பலியைப் பற்றி எழுதாமல் கள்ள மௌனம் காத்தன,
இந்த படம் பாருங்கள், இந்த வரலாற்று துயர நிகழ்வு பற்றி
Manhunt: Seashore Saga of the Punnapra-Vayalar Uprising என்ற ஆங்கில semi fiction புதினம் (இணைப்பு படம்) உள்ளது ,அதையும் படியுங்கள்.
PS:நடிகர் கமல்ஹாசன் முன்னாள் திருவாங்கூர் திவான் C.P. ராமசாமி ஐயர் கதாபாத்திரத்தில் நடித்தால் அது ஹேராம் போலவே தரமான வரலாற்று சினிமாவாக வரும், இருவருக்கும் உருவ ஒற்றுமை அந்த கோலிக்குண்டு கண்கள் எல்லாம் அபாரமான casting ஆக மாறும் , இப்போது நடிகர் கமல்ஹாசனின் வயதும் திவான் C.P. ராமசாமி ஐயர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும், ஃபஹத் ஃபாஸில் தோழர் K.C.S. மணி கதாபாத்திரம் செய்ய பொருத்தமாக இருக்கும், இது ஆயிரம் உயிர்பலிகள் எந்திர துப்பாக்கிக்கு பலியான கதை என்பதால் புராதான எந்திர துப்பாக்கிகள் கொண்டு தத்ரூபமாக இந்த வரலாற்றை ஆவணப்படுத்தி கேஜிஃப் ,விக்ரம் போலவே வெற்றி காணலாம்.