சத்யம் (1976) திரைப்படத்தில் இசையமைப்பாளர் KV மகாதேவன் இசையில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி, எஸ்பிபி , சுசீலாம்மா பாடிய பாடல் " அழகாம் கொடி சிறிது அதைவிட உன் இடை சிறிது" கமல்ஹாசன் ,ஜெயசித்ரா ஜோடிகளைப் பாருங்கள், மஞ்சுளா கூட கமலுக்கு இதில் ஒரு ஜோடி, சிவாஜி கணேசன் தேவிகா ஜோடிகளை வண்ணத் திரைப்படத்தில் பார்ப்பது அத்தனை அழகு,அபூர்வம் , கர்ணன் திரைப்படம் புராண படம் என்பதால் அதை கணக்கில் கொள்ளவில்லை , படத்தின் ஒளிப்பதிவு K.S.பிரசாத், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்துக்கு தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்.
1976 ஆம் ஆண்டில் கூட நடிகர் திலகம் தன் உடலை நன்றாக பாதுகாத்து வந்துள்ளார், அதன் பின் படங்கள் குறைந்ததும் மகன் பிரபு தலையெடுத்ததும் ஏற்பட்ட நடிப்பு வாழ்க்கை பின்னடைவு அவருக்கு உடம்பு பெருக்கத்தை தந்திருக்கிறது, 1975 வெளியான பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் சுமார் பத்து வயது மூத்தவரான எம்ஜியார் முகத்தில் அத்தனை முதுமை தட்டுப்பட்டது, ஆனால் சிவாஜி முகத்தில் முதுமைக் களையே இல்லை பாருங்கள்.
சிவாஜி இதில் ஊர் தலைவர் ஆதலால் அவர் செங்கோல் உடன் தான் ஊரில் நடக்கிறார், பஞ்சாயத்து காட்சிகள் இரவில் மரத்தடியில் பெம்ரோமேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் அத்தனை அழகாக உள்ளது.
தேவிகாவும் சிவாஜியும் மொட்டை மாடியில் நிலவொளியில் தான் உறங்குகின்றனர், மறுநாளுக்கு தேவையான விளக்கு திரியை மனைப்பலகையில் வைத்து தயாரிக்கிறார் தேவிகா, பனை ஓலை விசிறி கொண்டு முதுகு சொறிகிறார்.
சிவாஜி பணக்கார ஜமீனின் ஒரே வாரிசான மஞ்சுளாவுக்கு தந்த சத்தியப்படி கமல்ஹாசனை அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் , ஆனால் தம்பி இசைவதில்லை, ஊர் நன்மையும் அதில் அடங்கி உள்ளது, ஜமீன் ஊரின் நூற்றுக்கும் மேற்பட்ட குடியானவர்களுக்கு தானம் தந்த நிலங்களை ஜமீன் வாரிசு மஞ்சுளா திரும்ப கேட்கக்கூடாது, குடியானவர்கள் வாங்கிய கடன்களை முழுதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பொதுநலம் உண்டு, தன் தாயின் படத்தின் முன் குமுறுகிறார், தன் அரசியல் ஆதர்சமான நேரு,காந்தி,காமராஜர் படங்கள் முன் குமுறுகிறார், தன் முறைப்பெண் அதாவது அண்ணியின் தங்கையான ஜெயசித்ராவும் இவரும் அப்படி உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர்.
அக்காள் கணவரின் வாக்கை காக்க வேண்டி ஜெயசித்ரா தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டு பூவும் பொட்டும் சூட்டி அம்மன் கோயிலில் நிரந்தரமாக தங்கி விடுகிறார்.தன் சுயம் தாலி கட்டிய மணக்கோலத்தில் மாப்பிள்ளை தோழியாக வந்து மணமகன் கமல்ஹாசனை அலங்கரிக்கிறார்.
கமல்ஹாசன் அப்படி சிறுவன் போல மூக்கு உறிஞ்சி அழுகிறார் பாருங்கள், இப்படியாக தன் உடன் கல்லூரியில் படித்த மஞ்சுளாவை பிடிக்காமல் மணமுடிக்கிறார் கமல்ஹாசன், ஆனால் மஞ்சுளாவை மனைவியாக கருதுவதில்லை, ஒரு ஊழியராகவே கருதுகிறார், தேவைக்கு சிரிக்கிறார்.மரக்கட்டை போல உடன் வாழ்கிறார்.
கடைசியில் ஜெயசித்ரா கமல்ஹாசனும் மஞ்சுளாவும் வாழ்வில் இணைபிரியாமல் வாழ நிபந்தனை விதித்து வைராக்கியமாக அம்மன் சந்நிதியில் தன் உயிரை நீத்து விடுகிறார், அவரை இறுதிச் சடங்கு செய்ய சிவாஜி இரு கைகளில் தன் வீட்டுக்கு இரு கைகளில் ஏந்தி தூக்கிச் செல்வதுடன் சத்யம் நிறைகிறது.
இப்படத்தில் வரும் மற்றொரு அழகிய பாடலான கல்யாண கோயிலில் தெய்வீக கலசம் மிகவும் அற்புதமான பாடல்,எஸ்பிபி,சுசீலாம்மா பாடியது, கவிஞர் கண்ணதாசன் வரிகள் , இது அன்றைய 80 களின் நாட்களில் இலங்கை வானொலியில் அப்படி கேட்டுள்ளேன்,மனதில் ரீங்காரமிடும் பாடல்.
இப்படத்தில் படையப்பா தேவர் மகன் படத்துக்கு எல்லாம் முன்னோடியாக படத்தில் முழுக்க நாடக நடிகர்கள் பலநூறுபேர் நடித்துள்ளனர், இவர்கள் அத்தனை பேரும் சத்யம் திரைப்படத்தின் மூல வடிவமான விதி என்ற நாடகத்தில் நடித்தவர்கள், அவர்களை அத்தனை அழகாக நாடகம் எழுதிய வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்குகையில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.