மழை இல்லாத போது நன்றாக நடைபயிற்சி செய்யலாம், இப்போது குளிர் ஆகையால் நடைபயிற்சி புதிதாக துவக்க ஏற்ற தருணம்,காதை மூடிக் கொண்டு நடக்க பனி இறங்காது,
நேற்றும் இன்றும் மகளை கேகே நகரில் weekend class விட்டு காத்திருக்கையில் ஒரு மணிநேரம் சிவன் பார்க்கில் நடந்தேன், மழையால் ஒரு வாரம் நடைபயிற்சி செய்யாவிட்டால் சோம்பல் குடிகொண்டு மூன்று வாரம் நம்மை நடைபயிற்சி செய்ய விடாமல் முடக்கிவிடுவது கண்கூடு,
ஊருக்குப் போகும் ட்ராஃபிக் வெள்ளி , சனிக்கிழமைகளில் அத்தனை கொடியதாக இருக்கும் கேகே நகரில் இருந்து தாம்பரம் நோக்கி ஊர்ந்து போவது அத்தனை அவஸ்தையானது,
முன்பு ரயிலில் அரசு பேருந்தில் ஆம்னி பேருந்தில் போனவர்கள், இப்போது அதிக அளவில் suv , sedan, சிறிய hatchback கார்களில் புதுப் படம் பார்த்தபடி போவதை நிறைய பார்க்கலாம், சாலையில் முழுக்க அடைத்தபடி வாகனங்கள் செல்லும்,எங்கு நோக்கிலும் சிகப்பு விளக்கு, ப்ரேக் பிடித்தால் பளீச் என எரியும்,
பைக் நிறைய கட்டைப் பைகள் , மனைவி குழந்தைகளுடன் குடும்பத்தலைவர்கள் பாவமாக இந்த கொடிய ட்ராஃபிக்கில் பயணிப்பதையும் சாதாரணமாகப் பார்க்கலாம்,
இந்த கொடிய ட்ராஃபிக்கில் வண்டி ஓட்டிப்போய் நாளை விடியல் ஊர் சேர்ந்து நாளை ராத்திரியே கிளம்பி திங்கள் கிழமை வேலைக்கு தாமதமாக வருவதில் என்ன ஒரு kick எனத் தெரியவில்லை,
இன்று ஒரு பல்சரில் முன்னால் டேங்கில் எட்டு வயது மகள், பின்னால் சுடிதாரில் பத்து வயது மகள், அதன் பின்னால் சுடிதாரில் மனைவி, இரண்டு கட்டைப் பை நிறைய துணிமணிகள் லாவகமாக பக்கவாட்டில் மாட்டியிருக்க , மனைவி முதுகில் back pack பேக் என அத்தனை கொடிய இரவுப்பயணத்தை அனுபவித்தபடி ஒரு குடும்பம் என் முன்னால் ஊர்ந்து சென்றபடி சென்றது பாவமாக இருந்தது.
பழவந்தாங்கல் ட்ரைடண்ட் சிக்னல் தாண்டியதும் இந்தியன் ஆயில் பங்க் , அதைத் தாண்டியதும் ஒரு ஆவின் பார்லர் இருந்ததை நல்ல வேளையாக நிரந்தரமாக மூடிவிட்டனர்,ஏதோ மூளை உள்ள அதிகாரி செய்த அந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது, காரணம் அந்த 3 லேன்களில் ஒரு லேனை அடைத்தபடி இந்த ஊருக்கு செல்லும் பயணியர் கூட்டம் டீ,காபி,மசாலா பால் என வாங்கி குடித்து இளைப்பாறியபடியே இருப்பர், நிறுத்திய வாகனங்களை இண்டிகேட்டர் இடாமல் , கண்ணாடி பார்க்காமல் நடு லேனுக்கு எடுத்து வந்து கலப்பார்கள்,
இதே போலவே காணாதது கண்டது போல சாலையின் எதிர்ப்புறம் விமானம் தரையிறங்குவதை, ஏறுவதை , சாலையில் ஒரு லேனில் கார் ஆட்டோ, வாகனம் என அடைத்து நிறுத்தி வேலிப்படலின் மீது குழந்தைகளை ஏற்றிக் காட்டுவார்கள், எனக்கு அது மிகுந்த ஆச்சர்யமூட்டும், இன்னுமா விமானம் வேடிக்கை பார்க்க புளிசாதம் கட்டிக் கொண்டு வருகிறார்கள் என்று,
அந்த இடம் தாண்டினால் நிற்காமல் இந்த கூத்தைப் பாருங்கள் , வேகமான சாலையில் எதையாவது வேகம் குறைத்தோ அல்லது வாகனத்தை நிறுத்தியோ வேடிக்கை பார்ப்பதை Rubbernecking என்பார்கள்,இதனால் அந்த இடத்துக்குப் பெயரே plane spotting என google map ல் நிறுவி விட்டனர், துபாயில் ஷேக் ஸாயேத் சாலையில் எட்டு, எட்டு லேன்களில் ஏதாவது விபத்து நடப்பது வாடிக்கை, அதை வேடிக்கை பார்த்து rubbernecking செய்பவர்கள் ரேடாரில் சிக்குவது கண்கூடு, அவர்களின் கணக்கில் 1000 AED (22000₹) அபராதம் அன்றே கூடும்,நான் துபாயில் இருந்த போதும் சரி இங்கேயும் சரி ஒருபோதும் rubbernecking செய்ததில்லை, அது 5 கிமீக்கு அப்பாலும் கூட ட்ராஃபிக்கில் எதிரொலிக்கும் என்பதால் அதை செய்ததில்லை.