Breathless ( 1960 ) ஃப்ரெஞ்சு திரைப்படம் இயக்குனர் Jan Luc Godard அவர்களின் முக்கியமான படைப்பு, ஃப்ரெஞ்ச் நியூ வேவ் என்ற புதிய அலையை உலக சினிமாவில் தோற்றுவித்த திரைப்படம் Breathless, படத்தில் இயக்குனர் உபயோகித்த பரீட்சார்த்தமான Jump cut உத்திகள் அபாரமானவை, 1960 ன் ஃப்ரான்ஸின் பாரீஸ் மற்றும் marseille பெருநகரச் சூழலை அதன் நெரிசலை ஒருவர் கால எந்திரத்தில் பயணித்தது போல படம் முழுக்க கிட்டப்பார்வையில் உணரலாம் , இக்கதையை இயக்குனர் தினசரியில் வெளியான ஒரு க்ரைம் பெட்டி செய்தி பார்த்து விஸ்தரித்து டைரிக் குறிப்பாக எழுதியிருக்கிறார், திரைக்கதையை கோடார்டின் நண்பர் இயக்குனர் François Truffaut அவர்கள் எழுதியுள்ளார், அவர் இயக்கிய தி 400 ப்ளோஸ் முன்னோடியான ஃப்ரெஞ்சு நியூவேவ் சினிமா, அதற்கு அற்புதமாக காட்சி வடிவம் தந்துள்ளார்,
படத்தில் மைக்கேல் , பாட்ரீஷியா என்ற இரண்டே கதாபாத்திரங்கள் தான் பிரதானம் , அவர்களின் முகத்துக்கு tight closeup frames அதிகம் வைத்திருக்கிறார் இயக்குனர், மலையாளத்தில் வந்த மாயநதி திரைப்படத்தின் மாத்தன் என்ற கதாபாத்திரம் மைக்கேலின் நீட்சி எனலாம், ஆனால் மைக்கேல் கதாபாத்திரம் தந்த பிரமிப்பை மாத்தன் கதாபாத்திரம் தரவேயில்லை,டொவீனோ தாமஸ் மைக்கேல் கதாபாத்திரத்தில் நடிகர் Jean-Paul Belmondo ஆற்றிய பங்கில் பத்து சதம் கூட தரவில்லை என்பதே உண்மை.
இந்தப்படம் பார்த்தால் தான் தான் நான் சொல்லுவதை உணர முடியும், மாயநதி திரைப்படத்தில் அபர்ணா கதாபாத்திரம் பாட்ரீஷியா கதாபாத்திரத்தின் நீட்சி ஆனால் அபர்ணா கதாபாத்திரத்தை நுண்ணுணர்வுகளுடன் அற்புதமாக வெளிப்படுத்தினார் ஐஸ்வர்ய லட்சுமி.
படத்தின் கதை:
மைக்கேல் இத்தாலியில் இருந்து ஃப்ரான்ஸ் பாரீஸுக்கு குடி பெயர்ந்தவன்,ஒரு இடத்தில் நிலையாக நிற்க முடியாதபடி துரு துருவென எதாவது குசும்புகள் திருட்டுகள் ஆபத்தான திருட்டுகள் சிலசமயம் கொலை என எதையாவது செய்தபடியே இருப்பவன்,
பாரீஸின் பிரதான படகுக் கார் திருடன், பத்து கிலோமீட்டருக்கு ஒரு கன்வர்டிபிள் படகுக் காரை லாவகமாகத் திருடிக் கொண்டு செல்பவன், அவற்றை கள்ளச் சந்தையில் சூட்டோடு சூடாக விற்று விடுபவன், இப்போது போலீஸ் அவனை குற்றச் செயல்களுக்காக ஆபத்தான குற்றவாளியாக அறிவித்து தேடுகிறது,
மைக்கேல் அமெரிக்க நடிகர் Humphrey Bogart ன் ரசிகன்,அவர் போலவே Borsalino தொப்பி அணிந்து கோட் சூட் என மிக நளினமாக உடுத்துகிறான் ,அவர் போலவே உதடுகளைத் தொடுகிறான். போகார்ட் நிறைய படங்களில் கேங்ஸ்டராக நடித்தவர்,அவரை ஒரு கடினமான மற்றும் கடினமான கேங்ஸ்டர் கதாபாத்திரமாக சித்தரித்திருந்தது ஹாலிவுட். மைக்கேல் அடிக்கடி தனது கட்டைவிரலை உதட்டில் வைத்துக்கொண்டு போகார்ட்டின் திரைப்பட சுவரொட்டி முன்பு நின்று நடித்துப் பார்க்கிறான், யாரைப் பார்த்தாலும் பின் தொடர்ந்து போய் பின்னந்தலையில் அடித்து வழிப்பறி செய்கிறான், அவர் உடை, உடைமைகளை கவர்ந்து அணிந்து பாரீஸில் அலைந்து திரிபவன் மைக்கேல், எந்த புதிய காரையும் பார்த்தவுடன் பானெட் திறந்து நோண்டி கிளப்பி திருடிவிடுகிறான்.
அன்றும் ஒரு படகுக் காரைத் திருடியவன், தேசிய நெடுஞ்சாலையில் தொலைதூரம் பயணித்து அம்மாவைப் பார்த்துவர போகிறான், தனக்குத் தானே நம்முடன் பேசுவது போல நிறைய பேசுகிறான், glove box ல் பிஸ்டல் இருக்க சும்மா இல்லாமல் அந்தரத்தில் இரண்டு சுற்று சுட்டுப் பார்க்கிறான் , அவனை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஒரு போலீஸ்காரரை சுட்டுக் கொல்கிறான் மைக்கேல்.
போலீசாரிடமிருந்து தப்பியோடிய மைக்கேல் பாரிஸின் தெருக்களில் நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் தினசரி விற்கும் ஒரு மாணவி மற்றும் ஆர்வமுள்ள பத்திரிகையாளரான பாட்ரிசியாவை விரும்புகிறான். முரண்பாடான மனநிலையைக் கொண்ட பேட்ரிஷியா தன்னை அறியாமல் பின்விளைவுகளை பொருட்படுத்தாமல் மைக்கேலை தனது குடியிருப்பில் தஞ்சம் தந்து மறைத்து வைக்கிறாள், அவன் ஒரு தொந்தரவு என்றாலும் அவன் உறவை முறித்து விடுவதில்லை, விரும்பவுமில்லை வெறுக்கவுமில்லை என்பது போல தன் அறையில் அனுமதித்திருக்கிறாள்,
இருபது வயது பேட்ரிஷியா அமெரிக்க பிரஜை, பாரீஸ் பல்கலையில் ஜர்னலிஸம் படிக்கிறாள், பகுதி நேரத்தில் தினசரி விற்கிறாள், மைக்கேலுக்கு அமெரிக்க blonde பெண்கள் என்றால் அலாதி விருப்பம், பாட்ரீஷியாவை தன் பக்கம் நிரந்தரமாக கவர்ந்திழுக்க முயற்சிக்கிறான், தன்னுடன் ரோமிற்கு வந்துவிடு என்கிறான்,அவள் இதற்கு உறுதியாக பதில் சொல்லுவதில்லை, இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் செல்வதற்கு பெரும்பணம் தரவேண்டிய கார் தரகன் ஒருவனை பாட்ரீஷியா தங்கி உள்ள விடுதி அறை தொலைபேசியில் இருந்து அழைத்தபடி இருக்கிறான் மைக்கேல், அடுக்கடுக்காக புகைபிடித்தபடியே இருக்கிறான். பாட்ரீஷியாவை கூடலுக்கு அழைக்க அவள் அன்று இவனை தொடவிடுவதில்லை,தொடந்து ஊர்ந்த மைக்கேலின் கைகளை தட்டித் தட்டி விடுகிறாள் , தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறாள் , அந்த கரு ஒருவேளை இவனுடையதாக இருக்கலாம் என்கிறாள் , கருவுற்றதற்கு வருந்துவதுமில்லை, மகிழ்வதுமில்லை பாட்ரீஷியா,
பாட்ரீஷியா ஒரு blonde, மிகவும் ரசனை மிகுந்தவள், சுத்தம் பேணுபவள், நளினமாக உடுத்துபவள், இசை ரசனை, கலை ரசனை கொண்டவள், தனது நேரத்தை போற்றி அணு அணுவாக ரசித்து வாழ்கிறவள், அவள் william Faulkner பற்றி அவனிடம் பேச அவனுக்கு அவரை தெரிவதில்லை, mozart இசையை LP ல் பொருத்தி ஒலிக்கச் செய்ய அதை ரசிப்பதில்லை, பழம்பெரும் ஓவியர் Renoir வரைந்த ஓவியத்தின் அருகே தன் கன்னம் வைத்து நான் அழகா இந்த ஓவியத்தில் உள்ள பெண் அழகா என கேட்கிறாள் பாட்ரீஷியா, அவனுக்கு ஓவியத்தின் அருமை தெரியவில்லை, கூடலுக்கு இழுத்தும் அழைத்தும் குழைகிறான் மைக்கேல்.
மைக்கேல் பெரும்பாலும் அழுக்குருண்டை,தயவு தாட்சண்யமின்றி பெண்தோழிகளின் கைப்பையில் இருந்து கூட பணம் திருடுபவன், இசை ரசனை,கலை ரசனை என எதுவும் இல்லாதவன், படிப்பறிவும் அற்றவன், ஆனால் தான் பெரிய ஆள் எப்ற தன்னம்பிக்கை நிரம்பக் கொண்டவன்.
இவர்கள் கார் தரகனிடம் பணம் பெறுவதற்கு வெளியே செல்கையில் , பாட்ரீஷியா தான் பகுதி நேரமாக செய்யும் பத்திரிக்கையாளர் பணிக்கு வேண்டி Parvulesco என்ற ஒரு முக்கிய ஃப்ரெஞ்சு நவீன இலக்கிய ஆளுமையை orly விமான நிலையம் வரை சென்று பேட்டி எடுக்கப் போகின்றனர், விமானநிலைய gate பகுதியில் வைத்து படமாக்கப்பட்ட அந்த அழகிய பேட்டி திடீரென நாம் பார்ப்பது ஆவணப்படமோ எனத் தோன்றும்.
பேட்டி குறிப்புகளை பத்திரிக்கை அலுவலகத்தில் தர வந்த பாட்ரீஷியாவை தனியே சுற்றி வளைத்த போலீஸ் அதிகாரி தினசரி செய்தியை காட்டியவர், போலீஸை கொன்றவனுக்கு உதவாதே, உன்னுடைய குடியுரிமை விசா தொடர்பாக பிரச்சனைகள் எழும் என எச்சரித்து தன் தொலைபேசி எண்ணை சீட்டில் எழுதித் தருகிறார்.
இவள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டதை மைக்கேலிடம் சொல்கிறாள், இவர்கள் போலீஸாரை சுற்றலில் விட வேண்டி அடுக்கு மாடி கார் நிறுத்தம் ஒன்றில் நுழைந்தவர்கள் இவர்கள் ஓட்டிய காரை அங்கே நிறுத்திவிட்டு நொடிப்பொழுதில் அங்கிருந்த படகு விலை உயர்ந்த படகு காரை கிளப்பிக் கொண்டு வெளியேறுகின்றனர், வெளியேறுகையில் மைக்கேல் சிப்பந்தியிடம் பாட்ரீஷியா ஆங்கிலத்தில் குட்நைட் சொல் ஐயம் கொண்டு எதுவும் கேள்வி கேட்காமல் தடுப்பறணை திறப்பான் என்கிறான் என்கிறான், அதே போல சிப்பந்தி மகிழ்ந்து தடுப்பறணை திறந்தும் விடுகிறான்,இப்படியாக அவனுடன் சென்று கார் திருடுகிறாள், அவன் தொலைபேசியில் பேச முயன.று கொண்டிருந்த கார் தரகனைப் பார்க்க நேரில் உடன் செல்கிறாள், அங்கு திறந்தவெளி உணவகத்தில் முத்தமிட்டபடி இருந்த சீமான் சீமாட்டியை மைக்கேலின் திருட்டு கார் தரகு நண்பன் ஃப்ளாஷ் இட்டு புகைப்படங்கள் எடுக்கிறான், எதற்கு அவர்களை இவன் படம் பிடிக்கிறான் என இவள் கேட்க, நாளை அந்த படங்களை பிரதிகள் எடுத்து ப்ளாக் மெயில் செய்து பெரும் பணம் கேட்பான் என்கிறான் மைக்கேல், அவனிடம் இவர்கள் நாளை ரோம் செல்ல இருப்பதால் உடனே பணம் கொண்டு வந்து விடுதி அறையில் கொண்டு தரச் சொல்கிறான் மைக்கேல்.
இரவு விடுதி அறையில் அவனுடன் விரும்பி உறவு கொள்கிறாள் பாட்ரீஷியா,அவன் அரை உறக்கத்தில் இருக்க, இவள் காபி குடிக்கச் செல்கிறேன் உனக்கு எதாவது வேண்டுமா? எனக் கேட்க , பால் புட்டியும், தினசரியும் வாங்கிவர சொல்கிறான் மைக்கேல் ,
வெளியே காபி ஷாப் வந்தவள் மேஜையில் வைத்த காபியை கூட பருகாமல் அந்த துண்டுச் சீட்டில் இருந்த எண்ணில் அழைத்து இவர்கள் தங்கி உள்ள விடுதி விலாசம் தந்து உடனே வரச் சொல்கிறாள், அறைக்குத் திரும்பியவள் அவனிடம் பால் புட்டியையும் தினசரியையும் தந்தவள், இவனுடன் ரோம் வரவில்லை என்கிறாள், இவனை போலீஸில் காட்டிக் கொடுத்ததை அவனிடமே சொல்கிறாள்,இனி மீத சிறையில் இருந்து விட்டு வருவது பற்றி யோசி என்கிறாள்,
மைக்கேல் பாட்ரீஷியா முகத்தைப் பார்க்க பார்க்க வாந்தி வருகிறது என்று சொல்லிவிட்டு, ஆடையணிந்தபடி போலீஸாரிடம் தானே சென்று சரணடையலாம் என்று சாலைக்கு வருகிறான்.
அங்கு சரியாக திருட்டுக் கார் வாங்கும் தரகன் சிறிய தோல் பையில் பணத்தை திணித்து அடைத்தபடி வந்தவன் இவனிடம் தர, பையை இவன் வாங்கியதுமே தன் திட்டப்படி தப்பித்தால் என்ன என்று மைக்கேலுக்கு தோன்ற, ஓடுகிறான், போலீஸ் கார் சரியாக அங்கே வர, இரு போலீஸார் இறங்குகின்றனர், ஒரு போலீஸ் அவனை தண்டுவடத்தில் சுடு என்று அறிவுருத்த, அதே போலவே சுடுகிறார், மைக்கேல் தண்டு வடத்தில் குண்டு காயத்துடன் முடிந்த வரை வேகமாக ஓடி நிலைகுலைந்து சாலையில் மல்லாக்க விழுகிறான், பாட்ரீஷியாவும் போலீஸாரும் மைக்கேலை சூழ, அவன் போலீஸாரிடம் அவள் முகத்தைப் பார்த்தால் வாந்தி வருவது போல உள்ளது என்றபடி கடைசி மூச்சை விட,பாட்ரீஷியா போலீஸாரிடம் அவன் என்ன சொன்னான் என கேட்க அவர்கள் உன் முகத்தைப் பார்த்தால் அவனுக்கு வாந்தி வருகிறது என்றான் என்று சொல்வதுடன் Breathless படம் நிறைகிறது.
Breathless திரைப்படத்தின் வெற்றி ஒரு பிழை என்று இயக்குனர் கோடார்ட் கூறிவந்துள்ளார். முன்பு ஃபார்முலா திரைப்படங்கள் வழமையான திரை உத்திகளைக் கொண்டிருந்தன, அதை மாற்றமுடியாத தெய்வ வழிபாட்டு முறைபோல ஸ்டுடியோக்கள் இயக்குனர்கள் பின்பற்றி வந்தனர், காப்புரிமையைப் போல மீறவே விட்டதில்லை, அதனால்தான் Breathless என்ற படைப்பின் மூலம் அந்த காப்புரிமையை சிதைத்தேன், அப்படி வழமையான வழிபாட்டில் குண்டு வீசியதற்காக நான் வருந்தவில்லை என்றார் கோடார்ட்,
மன்னர் பதினைந்தாம் லூயி வெர்சாய்ஸ் அரண்மனைக்குள் புகுந்த குகை மனிதர்கள் போலத்தான் நாங்கள் காட்டுத்தனமாக புகுந்தோம் என்றும் சொன்னார் கோடார்ட்.
Breathless 1992 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் sight and sound திரை விமர்சகர்களின் வாக்கெடுப்பில் இதுவரை வெளியான சிறந்த படங்களில் 22வது இடத்தைப் பிடித்தது.
2002 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில், Breathless 15வது இடத்தைப் பிடித்தது, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு,
2012 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில், Breathless 15வது இடத்தைப் பிடித்தது,
அதே 2012 ஆம் ஆண்டு நடந்த தலைசிறந்த இயக்குநர்கள் வாக்கெடுப்பில் Breathless 11வது சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
2018 ஆம் ஆண்டில், 43 நாடுகளைச் சேர்ந்த 209 திரைப்பட விமர்சகர்கள் வாக்களித்தபடி, பிபிசியின் 100 சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படங்களின் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளது Breathless திரைப்படம், இத்தனை சிறப்புகள் நிறைந்த திரைப்படத்தை சினிமா ஆர்வலர்கள் சினிமா மாணவர்கள் காணத்தவறாதீர்கள்.
Breathless திரைப்படம் prime video ottல் காணக் கிடைக்கிறது.