இரு வாரம் முன்பு என் மகன் பள்ளியில் பள்ளியில் குழந்தைகள் மாஸ்க் அணிவதை சடுதியில் நிறுத்திவிட என் தடுப்பூசி எடுக்காத மகனும் விட்டேர்த்தியாக மாஸ்கை கழற்றி புத்தகப் பையில் வைத்திருந்தான்,யாரும் மாஸ்க் போடலை, நானும் மாஸ்க் போடலை என்றான் , நான் எத்தனை சொன்னாலும் செவிகளில் இதன் தீவிரம் பதியவில்லை, ஒரு முறை மாஸ்க் அணிந்தால் தான் வீட்டுக்கு அழைத்துப் போவேன் என சொல்ல பையில் திறந்து தேடி அணிந்தான், மறுநாள் என்னைப் பார்த்தவுடன் கால்சட்டை பையில் இருந்து மாஸ்கை எடுத்து அணிந்தபடி வந்தான்.
இப்போது பெய்துவரும் கனமழையால் புதுவிதமான ஜுரம் பரவிவருகிறது, ஐந்து நாள் ஜுரம் ஜலதோஷம் நீடிக்கிறது, இருமல் இல்லை, ஆனால் கண்களில் நீர் கோர்த்து கொண்டு வெளியேறுகிறது,உணவு சாப்பிட பிடிக்காது, சிறிதாக எந்த திரவ உணவும் கூட குடித்தால் வாந்தி அல்லது பேதி ஆகிவிடுகிறது, சிறுநீர் கட்டிக் கொள்கிறது, கை கால்கள் வலியால் கை கால்கள் நீட்டி விரைத்துக் கொள்கிறது, என் மகன் வெள்ளி மாலை துவங்கி திங்கள் மாலை வரை இப்படி அவதிப்பட்டான்,செவ்வாய் அதிகாலை காய்ச்சல் சரியானவன் என் மனைவிக்கு காய்ச்சலைத் தந்து விட்டான், இதோ relay race போல என் மனைவி உடம்பு வலி காய்ச்சலால் அவதிப்படுகிறார்.
நேற்று பள்ளி சென்ற மகன் நான் பள்ளி வாசலில் இறக்கி விட்டு கிளம்பி விட யாரோ நிறுத்திய வாகனத்தின் பைக் சைலன்சரில் பின்னங்காலை சுட்டுக் கொண்டான், அத்துடன் தட்க்ஷின் சித்ரா சுற்றுலா போய் வந்துள்ளான்,தோல் வழட்டிக் கொண்டு பார்க்கவே பரிதாபமாக இருந்தது,நான் காயம் பார்த்து கேட்டதும் தான் தயங்கி தயங்கி கம்பி கட்டும் கதையாக சொன்னான், குழந்தைகள் ஆக இருக்கையில் எந்த வலியையும் தாங்கிவிடுவோம், ஆனால் உண்மையில் பெரியவர்களால் கூட தாங்க முடியாது இது போல தீக்கொப்புளங்கள் , நேற்றும் இன்றும் கவனமாக பள்ளியில் மாஸ்க் அணிந்து இருந்துள்ளான்,பட்டால் தான் திருந்துகின்றனர், மீண்டும் சானிடைசர் அவன் பையில் வைத்து அனுப்புகிறேன், பள்ளியில் ஆசிரியர்கள் பணியாளர்கள் யாரும் மாஸ்க் அணிவதில்லை, சானிடைசர் ஆங்காங்கே வைப்பதில்லை, கோவிட் விதிகள் காற்றில் பறந்துவிட்டன, நாம் தான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
அனைவரும் கவனமாக இந்த மழைகாலத்தை எதிர்கொள்ளவே இதை இங்கு எழுதுகிறேன்.