A.K.லோஹிததாஸ் அவர்கள் இயக்கத்தில் காருண்யம் ( 1997 ) முக்கியமான படம்,எனக்கு மனதுக்கு நெருக்கமான படம்,கர்வம் கொண்டு நடக்கும் பாறை மனிதர்களையும் கனிய வைத்துவிடும் வல்லமை படைத்த எழுத்துக்காரர் லோஹி என்றால் மிகையில்லை.
மத்திய 90களின் உலகமயமாக்கல் கேரளத்தில் அப்படி ஒன்றும் வேலைவாய்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை,வேலை தேடி நொடித்துப் போனவர்களின் கதைகளை சிரிப்பாக,சிலேடையாக ,சீரியஸாக
மலையாள சினிமாவின் பலபல படங்களில் தரமாக அலசினர் ,இப்படம் வேலை தேடும் படலம்  மையக்கருவாக கொண்டு இறங்கிய சினிமாக்களில் தனித்துவமானது 
இதில் கோபிமாஷ் என்ற பள்ளி தலைமை ஆசிரியராக முரளி, என்ன ஒரு அப்பா இவர்.?கடல் அளவு பாசத்தை துளியும் வெளிக்காட்டாமல் அமிலம் போல வார்த்தைகளைத் துப்பி முப்பது வயது வேலையில்லாத பட்டதாரி மகனை விழாமல் தாங்கும் அப்பா, அவனின் நெடுநாள் காதலுக்கு பங்கம் வருகையில்  அவன் இடிவிழுந்தது போல நிலைகுலைந்திருக்க,அவனிடம் வந்து " இவ்வளவு தானானா நீ? " கூட்டிவாடா அவளை என அனுப்பி அவனுக்குத் திருமணம் செய்து வைத்து  அவன் மனைவிக்கும் வீட்டில் வைத்து சோறு போடும் அப்பா கதாபாத்திரம்.
ஒரு வேலை தேடிக் கொண்டு தந்தையின்  சுமையைத் தன்  தோளில் வாங்கமாட்டோமா? என மருகும் மகன் சதீஷனாக ஜெயராம், அவனின் பெரிய வீட்டுப் பெண் காதலி இந்துவாக திவ்யா உன்னி,இவர்கள் இருவருக்கும் படத்தில் அப்படி ஒரு சேர்ச்சை.
சதீஷனின் அம்மா திடீரென இறந்துவிட அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத கணவர் கோபி மாஷ் மாடிக்குப் போய் பூட்டிக் கொண்டவர்,அவள் வீம்பாக படுத்திருக்கிறாளா?!!! என்னிடம் சொல்லாமல் போய்விட்டாளா? நானும் வீம்பாக அவளைப் பார்க்க மாட்டேன் என இறுதிக் காரியத்தில் பங்கெடுக்கவே மாட்டார்.
அந்த மான்டேஜ் பாடல் எப்படி எடுத்திருக்கின்றனர் பாருங்கள்?மனைவியை இழந்தவன் அரைமனிதன், அவனின் அரற்றல்களை அந்த silhouettes காட்சிகளில் எப்படி கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு, அரை மனிதனுக்கு புற முதுகு ஷாட் ஒன்று உண்டு பாருங்கள்.
பாடல் இங்கே:https://youtu.be/v2phgBKocPQ
கோபிமாஷின் நிழல் போல அவரது பள்ளியில் AHM நண்பர் சுகுமாரனாக நெடுமுடிவேணு, லோஹி அவர்கள் தன் கதாபாத்திரங்களை ரத்தமும் சதையுமாக புனைந்து உயிர் தருவார்,நண்பர்கள் கதாபாத்திரத்திற்கு சற்று அதிகம் மெனக்கெடுவார், இதில் இந்த நண்பர்கள் நம் கண்ணிலேயே நிற்பார்கள்.
இப்படத்தில் பல உணர்ச்சிப் போராட்டமான திருப்பங்கள் வரும் அதில் பழுதடைந்த நீர் இறைக்கும் கமலையின் கயிற்றை அப்பா மரணித்தால் தனக்கு  கிடைக்கக்கூடிய அரசு வேலையை   உத்தேசித்து மாற்றாமல் விடும் மகன், அதை அறிந்து துயருரும் தாய் மனக்குமுறலில் விழுவார்.
படத்தின் க்ளைமேக்ஸ் எல்லாம் நம்மை உருக்கி எடுத்து விடும் வகை,கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இந்தப்படம் பார்த்துவிட்டு தான் வெற்றிமாறன் நடிகர் முரளியை தன் பொல்லாதவன் படத்தில் தனுஷின் அப்பாவாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்.
படத்தின் பாடல்கள்  கைதப்பரம் தாமோதரன் நம்பூதிரி ,இசை ஜான்ஸன் மாஸ்டர்.
#காருண்யம்,#முரளி,#லோஹிததாஸ்
 
   
   
   
   
   
   
   
   
   
   
  
 
 
 
 
 
