சென்னையின் தெருக்களில் வாகனத்தில் செல்கையில் எருமைகள் குறுக்கிட்டால் ஹாரன் அடித்து கோபத்தை ரத்த கொதிப்பை கூட்டாதீர்கள்,ஓம் எம தர்ம ராஜனே சரணம் என கும்பிட்டு நகருங்கள், ஏன் என்றால் மாற்றமுடியாத துயரை நமக்கு சாதகமாக மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டு பயனடையலாம்,இதற்கு மனப்பயிற்சி மட்டும் தேவை.
மருதநிலத்துக் கருப்பொருளான எருமையை முன்வைத்துத் தொடர்புடைய செய்திகளைக் கூறி தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் நினைவோட்டங்களைக் கூறும் பாடல்கள் இவை.
"நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனியூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே".91
(இவள் இளையவள். வயலில் முளைக்கும் மூங்கில் போல் இளையவள். பற்றிப் படரும் கொடி போன்றவள். நன்செய்க் கழனி மிக்க ஊரனின் மகள். அவன் ஊரில் முறுக்கிய கொம்புகளை உடைய கருநிற எருமைக்கடா பொய்கையில் பூத்திருக்கும் ஆம்பல் கொடி மயங்கும்படி அழிக்கும்.)
"கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக்
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை நும்மூர் வருதும்
ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே."
92
(ஒளி வீசும் வளையல் அணிந்த மடந்தைப் பருவத்தவளே! உன் தந்தை ஊரில் அணிமையில் புதிதாகக் கன்று போட்டிருக்கும் தாய்-எருமை தன் கன்றுக்கு தன் சுரக்கும் மடியைத் தந்து பாலூட்டும். உன்னை நான் பெற்றால், அப்படிப்பட்ட எருமை வைத்திருக்கும் உன் தந்தை ஊருக்கு உன்னைப் பெண் கேட்டு வருவேன்.)
"எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்
பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லா
செய்த இனைய மன்ற பல்பொழில்
தாதுண வெறுக்கைய ஆகி இவள்
போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே."
93
(இவள் முச்சிக்கொண்டைப் பூவில் தேன் உண்ணும் வண்டுகள் மிகுதியாக மொய்க்கின்றன. மேயும் ஆண் எருமைகள் மாரோடம், ஆம்பல் பூக்களை மேய்ந்து அழித்துவிட்டதால் இவள் தலையில் மொய்க்கின்றன. – தோழி தலைவியின் தாயிடம் தாயிடம் கூறுகிறாள்.)
"மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்
நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே."
94
(அவள் தந்தையின் ஊர், வளமான உடல் படைத்த மள்ளரும் மகளிரும் கூடியாடுவது போல, ஆண்-எருமை பெண்-எருமை அருகில் படுத்திருக்கும் நிழலைக் கொண்டது. வயலில் பூக்கும் தாமரை குளத்தில் பூக்கும் பழனப் பூஞ்சோலை கொண்டது. – அவன் நினைக்கிறான்.)
கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனல்முற் றூரன் பகலும்
படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே.95
(எருமைக்கடா கயிற்றை அறுத்துக்கொண்டு விளைந்திருக்கும் நெல்லை வயிறார மேயும் நீர்வளம் மிக்க ஊரினை உடையவன் அவன். அவன் என்னை நினைக்கவைக்கும் துன்பத்தைத் தருகிறான். – தலைவி தோழியிடம் சொல்கிறாள்.)
"அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆமபலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகளிவள்
பழன் ஊரன் பாயல்இன் துணையே."
96
(அணிநடை போடும் எருமை ஆடித் திளைத்த சேற்றில் நெய்தலும் ஆம்பலும் பூத்திருக்கும் கழனிகள் கொண்ட ஊரன் இவளது தந்தை. இவளோடு படுத்திருப்பதே இனிமை. – தலைவன் நினைக்கிறான்.)
பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை ஊரன் மகளிவள்
பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே.
97
(நெல் சேமிப்புக் கோட்டை மேல் பகன்றைக் கொடி ஏறி வெண்ணிறப் பூக்களைப் பூத்திருக்கும். அதனைத் தன் தாய்-எருமை என்று நோக்கிய எருமைக்கன்று கருநிறத் தாய் வெள்ளையாக இருக்கிறதே என்று அஞ்சுமாம். (இது உள்ளுரைப் பொருள் தரும் இறைச்சி) இப்படிப்பட்ட பொய்கை இருக்கும் தந்தையின் மகள் இவள். இவள் பொய்கைநீரில் பூத்திருக்கும் பூவைக் காட்டிலும் குளுமையாக இருக்கிறாளே. – தலைவன் நினைக்கிறான்.)
"தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர
ஒண்டொடி மடமகள் இவளினும்
நுந்தையும் யாயும் துடியரோ நின்னே.
98
(நீரிலே குளிக்கும் எருமை நீரில் மிதக்கும்படிக் கட்டப்பட்டிருக்கும் அம்பி போல் தோன்றும் ஊரை உடையவனே! இவளை விலக்குகிறாய் [கடியள்]. நீ மிகவும் கொடுமைக்காரன். உன்னுடைய தந்தையும் தாயும் கூட உன் தகாத ஒழுக்கத்தைக் கடியமாட்டார்களோ? – தோழி இவ்வாறு தலைவனிடம் கடிந்துகொள்கிறாள்.)
"பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி யெருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞல் ஊரன் மகளிவள்
நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே."
99
(இவள் ஊரன் மகள். பூ மணக்கும் [கஞல்] ஊரன் அவன். முயிறு கூடு கட்டியிருக்கும் பழனப்பாகையைத் தின்ற கழனி-எருமை வயலில் விளைந்திருக்கும் கதிரையும் தின்று அழிக்கும் ஊரன் அவன். அவன் மகள் என் காம நோய்க்கு மருந்தாகிய தோளை வைத்திருக்கிளாளே! – தலைவன் எண்ணி மகிழ்கிறான். பழனம் = பழந்தோப்பு, கழனி – விளைவயல்.)
"புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை
மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகளிவள்
பாணர் நரம்பினும் இன்கிள வியளே."
100
(புனலில் விளையாடும்போது மகளிர் மணல்மேட்டில் கழற்றி வைத்த அணிகலன்களை அங்கு வந்த எருமை வாயால் கிண்டித் தள்ளிவிட்டு மேயும் ஊரை உடையவன் இவள் தந்தை. இவள் வாயிலிருந்து வரும் சொல் பாணர் மீட்டும் யாழிசையைக் காட்டிலும் இனிக்கிறதே. – தலைவன் சொல்கிறான். நரம்பு = யாழ்)
#எருமை,#போத்து,#மருதநிலம்,#ஐங்குறுநூறு,#எருமைப்பத்து,#தேனுபுரீஸ்வரர்கோயில்,#மாடம்பாக்கம்