ஆயிரம் பூக்கள் மலரட்டும் (1986) படம் youtube ல் பார்த்தேன் , சுசீலாம்மா குரலில் இந்த டைட்டில் பாடல் மிகவும் பிடிக்கும்,v.s.நரசிம்மன் இசை,
படத்தில் கே.எஸ்.ரவிகுமார் கடைசி காட்சியில் தோன்றி நாயகன் மோகனுக்கு நாயகி சீதா பற்றிய முக்கிய தாக்கல் சொல்லுகிறார்,(சைகையில் தான்).
மோகன் திடீர் மாப்பிள்ளை ராஜ்குமார் சேதுபதிக்கு சற்று முன் தியாகம் செய்த தன் காதலி சீதா கட்டிய கணவனை வெள்ளி விளக்கால் குத்தி கொலை செய்துவெட்டு உடன் தாலியும் அறுத்துவிட்டார், நலுங்கில் பானைக்குள் மோதிரம் எடுக்கும் போட்டியில் தோற்ற கோபத்தில் இப்படி செய்தார் என சபையில் திகைக்க , சீதா கொலையுண்டவரின் பவிஷை அந்த சபையில் பகிர்கிறார், இந்த செய்தியைத் தான் உதவி இயக்குனர் மோகனுக்கு ஓடி வந்து அறிவிக்கிறார், s.ரவி என்ற பெயரில் உதவி இயக்குனருக்கு credit இணைப்பில் பாருங்கள்,
வசூல்ராஜா mbbs ல் கமல்ஹாசனிடம் உன் தலைக்கு சரியாயிடும்பா நானும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தேன் என்றாரே தொப்பி வைத்த ஒரு மருத்துவமனை ஊழியர் , அவர் தான் இப்படத்தை இயக்கிய E.ராம்தாஸ். Bsc.
ராஜ்குமார் சேதுபதி ஊர் ஊராக சென்று வாரம் ஒரு கல்யாணம் செய்து மணப்பெண்ணை ஏமாற்றி கைகழுவி வரதட்சணை பணம் நகைகளை எடுத்துக் கொண்டு தப்புகிறவர், (மன்னர் வாரிசுக்கு போய் கொள்ளை அடித்து பிழைக்கும் கதாபாத்திரம், எத்தனை விந்தை? சிறிதும் ஒட்டவேயில்லை,சினிமா ஆசைக்கு கிடைத்த அவல பரிசு ,காதல் பரிசு படத்திலும் இதே போல வேடம், நாயகி அம்பிகாவை மயக்க மருந்து கலந்து பெண்டாளுவார் )
போன வாரம் தான் குயிலியை மணமுடித்து கொடைக்கானல் green valley அழைத்து வந்து தாலி வரை உருவி கொலை செய்து ஐயாயிரம் அடி பள்ளத்தாக்கில் பிணத்தை தள்ளி விட்டிருக்கிறார் ராஜ்குமார் சேதுபதி,
அப்படி கைசெலவுக்கு இவர் நாயகன் மோகனின் தங்கையை கூட அவர் முன்பே ஏமாற்றி ஸ்தலம் விட்டவர்,
இப்படிப்பட்ட connection கொண்ட notorious வில்லனுக்கு தான் மோகன் ஒருதலையாக விரும்பிய சீதாவை உண்மை தெரியாமல் தியாகம் செய்துள்ளார் பாருங்கள்.
திருமணத்தில் தாலி கட்டியதும் தன்னை முன்பு ஏமாற்றிய ராஜ்குமாரை அடையாளம் கண்டு சட்டையைப் பிடித்து உலுக்குகிறார் மோகனின் தங்கை,
ஆனால் காதலிக்கு தாலி ஏறிவிட்டதால் இனி கல்லானாலும் கணவன் என வாழட்டும் என்ற கோட்பாடில் நம்பிக்கை கொண்ட மோகன், தன் தங்கை ஒரு பைத்தியம் என சபையில் கூறி தங்கையை திரும்ப அழைத்து வருகிறார், வழியில் ஜீப்பில் தங்கை அண்ணன் தன்னை பைத்தியம் என்றதை தாங்காமல் நெஞ்சு வெடித்து இறந்தும் விட்டிருக்கிறார் ,
எனவே, அண்ணன் சடுதியில் ஒற்றை ஆளாக தங்கையை ஒரு வண்டி விறகுகள் வறட்டி பானை மாலை வாங்கி grand ஆக தகனம் செய்கிறார், அங்கே தான் உதவி இயக்குனர் ரவி குமார் வந்து இந்த குத்துவிளக்கு கொலை பற்றிய தாக்கலைச் சொல்கிறார்.
இறுதியில் இவர் செய்த தியாகத்திற்கு தன்னால் ஈடு செய்யலாகாது, என்பதால் சிறிய நன்றியாக இவர் தங்கையை நாசம் செய்த ராஜ்குமாரை கொன்று ஜெயிலுக்கு போவதை பெருமையாக நினைக்கிறேன் என்றபடி போலீஸ் ஜீப்பில் ஏறுகிறார் சீதா (மணமகன் தன் அறையில் பேசுவதை சுவரில் காது வைத்து ஓட்டு கேட்டாராம்).
படத்தில் சீதாவின் பெயரும் சீதா தான், படப்பிடிப்பில் சீதா வசனம் பேச நிறைய டேக் வாங்கியிருப்பார் போலும் ,எனவே அவரை முற்பாதியில் ஒரு மணி நேரம் அதிர்ச்சியில் பேசும் திறன் இழந்தவராக சித்தரித்திருந்தார் இயக்குனர்(ஆண்பாவம் ரேவதி touch).
டாக்டரான மோகன் அவருக்கு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பரிசலில் அழைத்துப்போனவர் ஆழமான பகுதியில் பரிசலை பாறையில் ஓரம் கட்டி நிறுத்தி சங்கு சக்கரமாக சுற்ற அவர் தலைசுற்றி மயங்குகிறார், அப்போது சுற்றி ஆடும் பரிசலில் சீதாவுடன் வல்லுறவு வைக்க எத்தனிக்கிறார் மோகன்.
சீதா அது நாள் வரை பேசாதவர் அதிர்ச்சியில் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி என்னை விட்டுடுங்க டாக்டர் என சொல்லி கதறுகிறார், மோகன் இது அதிர்ச்சி வைத்தியம் நீ பேசற பாரு என நினைவூட்டுகிறார்,
வீட்டுக்கு அழைத்து வருகையில் தனக்கு பேச்சு திறன் பறிபோன சம்பவத்தை விளக்குகிறார் சீதா, கல்லூரியில் காதலன் ராஜ்குமார் சேதுபேதி கல்லூரி மாணவர் தலைவர் தேர்தலில் ஜெயிக்க வேண்டி இவர் தீவிர பிரசாரம் செய்ய, சீனியர் சார்லி விபரீத பந்தயம் கட்டுகிறார், நடுராத்திரி தனி ஆளாக பிணவறையில் உள்ள பிணங்களின் நெற்றியில் எலுமிச்சை வைத்து விட்டு வந்தால் நாங்கள் எல்லோரும் ராஜ்குமார் சேதுபேதிக்கு ஓட்டு போடுகிறோம் என்ற நிபந்தனை தான் அது,
சீதாவும் ஒவ்வொரு பிணமாக எலுமிச்சை வைக்க, ஒரு பிணம் (சார்லி ) எழுந்து எனக்கு வைக்கலையே ,இது போங்கு என்கிறது, இவர் வீல் என கத்தியதில் பேச்சுத்திறன் போகிறது என சுவாரஸ்யமாக மோகன் உடன் காரில் செல்கையில் இச்சம்பவத்தை விளக்குகிறார் சீதா,
நமக்கும் , நாயகன் மோகனுக்கும் இதுக்கு பேச்சு வராமலே போயிருக்கலாம் எனத் தோன்றுகிறது, சிரிப்பு காட்சி ட்ராக்களில் எதுவும் நமக்கு சிரிப்பு வருவதில்லை,
காரணம் இரண்டரை மணி நேரம் மைய படம் முழுக்க சிரிப்பாக சிரிக்கிறது.