தமிழ் சினிமாவின் பெயரெடுத்த கதைவசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் (91) காலமானார், அவருக்கு அஞ்சலி, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சினிமாவில் எழுத்துநடை பாணியில் அமைந்த வசனங்களை சுருக்கமான வீர்யமுள்ள இயல்பான பேச்சுநடைத் தமிழில் மடைமாற்றிய முக்கியமான வசனகர்த்தா, குடத்தில் இட்ட விளக்கு போன்ற திறமிகு படைப்பாளி, தமிழ் சினிமாவில் சமகால பரிணாம வளர்ச்சி திரைப்படங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வெளியான ஆயிரம் படங்களின் வசனங்களில் சாதித்த நிறைகுடம் ஆரூர் தாஸ் அவர்கள்.
எங்கள் பக்கத்து வீட்டில் எந்நேரமும் ஒலித்தபடி இருக்கும் விதி திரைப்படத்தின் கதைவசன ஆடியோ , குறிப்பாக அந்த வழக்காடு மன்ற வசனங்கள் சிறுவனான என்னை இந்த திறமிகு தமிழ் சினிமா படைப்பாளியின் வசனங்களை எங்கே கேட்டாலும் அடையாளம் காண வைத்தது.
கர்த்தவ்யம் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் வடிவமான வைஜயந்தி ஐபிஎஸ் போன்ற படங்களின் வசனங்கள் கேட்கையில் , நாம் பார்த்துக் கொண்டிருப்பது தெலுங்கு டப்பிங் படம் என்பதையே மறக்கடித்து உணர்வு ரீதியாக அத்திரைப்படத்துடன் ஒன்ற வைத்தன.
ஆயிரம் படங்கள் எழுதினாலும் கூட அன்று தமிழ்சினிமாவின் போஸ்டரில் இவர் பெயர் இடம் பெற்றதில்லை ,
LP record உறையில் , audio cassette உறையில் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பாடகர்கள் பெயர் பாடலாசிரியர் பெயர் தவிர யார் பெயரும் இடம்பெறாது.
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது என்பது போல இவர் எழுதிய திரைப்படங்களுக்கு வசனம் கேசட் என்று தனியே வெளியாகி சக்கை போடு போடும், ஆனால் கூட அந்த கேசட் உறையிலும் இவரது பெயர் இடம் பெறாது என்பது கொடுமை, தமிழ் சினிமாவில் பிறர் திறமையை உறிஞ்சி பெயரெடுப்பவர்களுடைய கோர நாக்கின் மனசித்திரத்தை நமக்கு கடத்திவிடும்.
தமிழ் சினிமாவில் ஒரு படைப்பில் முக்கிய பங்கு வகித்த படைப்பாளிக்கு credit தராத பாராமுகம் கொடியது, நெடுங்கால பாரம்பரியம் கொண்டது, இன்று அந்த நிலை மாறி வருகிறது, முதல் படம் பணிபுரியும் படைப்பாளியின் பெயர் கூட போஸ்டரில் இடம் பெறுகிறது, ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு இந்த நிலை இல்லை ,அது இருந்திருந்தால் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் தகுதியான உரிய புகழை இன்னமும் கூடுதலாக அடைந்திருப்பார் என்பது திண்ணம்.