பம்மல் வாசிகளுக்கு இந்த பல்லாவரம் கண்டோன்மெண்ட் நகராட்சியின் எல்லைக்கல் மிகுந்த பரீட்சயமாக இருக்கும்,அத்தனை நெரிசல் மிகுந்த பம்மல் நல்லத்தம்பி சாலை துவக்கத்தில் வெறும் பதினாறடி அகல சாலை முனையில் இந்த எல்லைக்கல் அடைத்தபடி நூறாண்டாக அப்படியே இருக்கிறது,
மக்கள் பெருக்கம் மிகுந்து விட்ட இன்றும் கூட இதை மூன்று அடி கூட இடப்புறம் தள்ளி வைக்க முடியாதபடி பல்லாவரம் கண்டோன்மெண்ட் நகராட்சி பிடிவாதமாக இருக்கிறது,இந்த எல்லைக் கல்லை யாரும் மோதி உடைக்க கூடாது என பெருத்த கருங்கல் பின்னால் வைத்து முட்டு தந்ததைப் பாருங்கள், இது வழியே ஒரு லாரி போனால் அல்லது வந்தால் இந்த எல்லைக் கல் இருப்பதால் இருசக்கர வாகனம் அருகில் போவதே கடினம், bottle neck போல, எதிரே வரும் வாகனங்கள் நின்று வழிவிட வேண்டும், யாருக்காவது வழிவிட பொறுமை இன்றி போனால் அங்கே மிகப்பெரிய வாகன நெரிசல் உண்டாகிவிடும்,
அச்சமயத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சை கோரும் நோயாளியை ஏற்றி வந்தால் அதன் கதி எல்லாம் பரிதாபம் தான், பம்மல் நல்லதம்பி சாலை , பம்மல் மெயின் ரோடு என பிரதான சாலைகளில் வாகன நெரிசலுக்கு பஞ்சமில்லை, நிலவின் பள்ளம் போல குண்டும் குழியுமான சாலைகள், தெருவில் திரியும் மாடுகள், தெரு நாய்கள் என நடப்பவருக்கும் சைக்கிள் ஓட்டிகளுக்கும் மரியாதை இல்லாத சூழலாகும்,இங்கே 2 BHK அடுக்ககம் 47 லட்சம் ரூபாய் வருகிறது, விமான இரைச்சல் தூக்கத்தை கெடுத்துவிடும்,இரவில் சாலையின் இரு புறமும் உள்ள ஏகப்பட்ட துரித உணவு கடைகளில் காரப்பொடி வீசி உணவை தயாரிக்கையில் உங்கள் கண்ணில் எரிவு விழும், பம்மலில் அடுக்ககம் வாங்கும் முன்னர் நன்கு பலமுறை யோசியுங்கள்.