அகல்விளக்கு (1979) படத்தில் "ஏதோ நினைவுகள்" என்ற காலத்தால் அழியாத தாசேட்டாவின் பாடல் பிடிக்கும், படம் முழுக்க மதுரை நகருக்குள் எடுத்திருந்தனர், இதற்குப் பின் முழுப்படமும் அப்படி யாரும் மதுரைக்குள் எடுக்கவில்லை என நினைக்கிறேன்.
ரவுடிகளால் வெட்டிக்கொல்லப்பட்ட தோழர் லீலாவதி போல ஒரு நேர்மையான தோழர் தனுஷ்கோடியாக விஜயகாந்த், படத்தின் முதல் காட்சியிலேயே திருப்பரங்குன்றத்தில் கல் மண்டபம் ஒன்றின் அருகில் வைத்து ரவுடிகளால் அடித்து துவைத்தும் வெட்டவும் படுகிறார்,அவ்வழியே சென்ற கண்ணாடி போட்ட டாக்டர் ,S. விஜயலட்சுமி இவரை தன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார்,ஷோபா அங்கே நிர்வாகத்துக்கு தெரியாமல் இட்லி பொட்டலம் கொண்டு வந்து விற்கிறார்.அவர்களுக்குள் காதல் அரும்பி மணமுடிக்கின்றனர்.
விஜயகாந்த் தனது நன்னடத்தையால் மக்கள் ஆதரவுடன் சுயேச்சையாக மீன் சின்னத்தில் நின்று மேயராக வெற்றி பெறுகிறார்.இவரது உறவினர்கள் மக்களுக்கு காரியங்கள் சாதிக்க இவர் பெயரைச் சொல்லி சுமார் 3.5 லட்சத்தை ஏமாற்றிவிட்டு இவர் மனைவி ஷோபா மீது பழி போட்டு விடுகின்றனர், ஷோபா வீட்டை விட்டு கணவரால் வெளியேற்றப்படுகிறார்.சில நாட்களில் உண்மை தெரியவர விஜயகாந்த் மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு , வைகை ஆற்றின் நடுவே உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்,இறுதியில் பணத்தை அடித்த உறவினர்களே மனம் திருந்தி மக்கள் பணத்தை கொண்டு வந்து பொதுவில் ஒப்படைக்கின்றனர்.
படத்தில் இசைஞானி இசை மட்டுமே upto the mark உள்ளது , பின்னர் ஷோபா நடிப்பும் வாசுதேவ் ஒளிப்பதிவும் , மீதி எல்லா துறையுமே அப்படி பஜனை பாடியுள்ளனர், மதுரை பாஷையில் சொன்னால் மஞ்சள் குளித்துள்ளனர்,
இந்தப் படத்தின் பிலிம் பெட்டியையும் போஸ்டரையும் மதுரை பொன் லாட்ஜில் ஒரு வினியோகஸ்தர் அலுவலகத்தில் பார்த்துள்ளேன், எனக்குத் தெரிந்து இந்தப்படம் மதுரையைச் சுற்றி அப்போதிருந்த சுமார் 55 தியேட்டர்களில் எதிலும் மறு வெளியீடே போனதில்லை, விஜயகாந்தின் ரைஸ்மில் அடுத்த காம்பவுண்டான சென்ட்ரல் சினிமாவில் கூட இப்படம் போட்டதில்லை , இது முழுக்க மதுரையில் எடுத்த படம் என்று இன்று தான் தெரியும்,
படத்தில் ஏதோ நினைவுகள் தவிரவும் 3 பாடல்கள் உள்ளன, நல்ல ராகத்தில் மெனக்கெட்டு அமைத்தவை கேட்க கேட்க மிகவும் பிடிக்கும்,ஒரு தேர்தல் பிரசார பாடலில் அப்போது பாவலர் சகோதரர்கள் எப்படி மாட்டு வண்டியில் இசைபாடி தேர்தல் பிரசாரம் செய்தனர் என காட்டியிருப்பார்கள்.
படத்தில் ஆரம்ப காட்சிகள் முழுக்க செந்தில் நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் நடக்கிறது, அதில் ஒரு இலக்கிய தரமாக டார்க் ஹ்யூமர் காட்சி வைக்கிறேன் என்று ஒரு நோயாளி பிறந்த நாளன்று தீக்குச்சியால். காது குடைந்தவர் ஏற்கனவே குடைந்து காதுக்குள் மண்டியிருந்த தீக்குச்சி மருந்தில் குச்சி உரசி தீப்பிடித்து காது கருகி இறந்து போகிறாராம்.
ஷோபா அவர்களின் கடைசி படம், இதில் அவர் பெயர் நவநீதம், அவரை ஆரம்பத்தில் சித்திகொடுமையால் மதுரையின் பிரதான குடிசைத் தொழிலான இட்லியை கடனுக்கு விற்க வைத்து அப்படி அலைக்கழிக்கிறார் இயக்குனர், இறுதியில் தான் அவருக்கு விடிவே வந்தது.
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டை மாடியில் படப்பிடிப்பு நடத்தினர் என்று பார்த்தால் இதில் மதுரை மீனாட்சி கோபுரத்தினுள்ளே சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்,பெரிய முக்குருணி விநாயகர் முன்பு தான் விஜயகாந்த் ஷோபா திருமணமே நடக்கிறது.
விஜயகாந்திற்கு இதில் s.n.சுரேந்தரின் இரவல் குரல், சீனியர் ஷோபா பெயர் தான் முதலில் வருகிறது.
PS: விஜயகாந்த் அப்போது நல்ல இயக்குனருக்காக, சினிமாவில் தன் திருப்பத்துக்காக காத்திருந்த சமயம்,அவர் ஒரு களிமண் போல தன்னை ஒப்படைத்திருந்தார், இயக்குனர் R.செல்வராஜ் அவரை mould செய்யத் தவறிவிட்டார்,சினிமாவில் சாதித்த நண்பர்களான இசைஞானி, பாரதிராஜா என பலர் அருகில் இருந்தும் இப்படத்தை விட்டேத்தியாக கோட்டை விட்டார்.
#அகல்விளக்கு,#விஜயகாந்த்,#ஆர்செல்வராஜ்,#ஷோபா