தாய்மதம் விடுவோர் இப்படி நெடுங்காலம் தம் குடும்பம் வழிபட்ட கடவுளர் படங்களை கோயில் குளத்தில் விட்டுவிடுகின்றனர்,இதே படங்கள் கோயில் படக் கடையில் ,ஃப்ரேம் படக் கடையில் இருந்தால் அதன் மதிப்பு தனி, ஆகி வந்த பிறர் வழிபட்ட படங்களை பொதுவில் யாரும் சீண்ட மாட்டார்கள், அது குப்பைக்குத் தான் போகும்.
பிடித்த கடவுளரை பிடித்த மதத்திற்கு மாறி வழிபடுவது அவரவர் உரிமை, வல்லடியும் பெருங்காற்றும் பெருந்துயரும் வராத குடும்பம் உண்டா? மந்திரம் கால் மதி முக்கால் என்ற தாரக மந்திரத்தை ஒருவர் பின்பற்றினால் போதும்,கஷ்டமே வராது, உழைப்பு தான் அந்த மதி முக்கால், ஆசியும் அதிர்ஷ்டமும் தான் அந்த கால்.
இப்படி கடவுளரை புறக்கணிப்பதால் தெய்வ நிந்தனை செய்வதால் எல்லாம் சரியாகிடுமா? ஆகாது, ஒருவொருவனும் அவனவன் விதியை சுமந்து அலைகிறான், எத்தனை போற்றினாலும் இறைவன் புகழ் இம்மி உயராது, எத்தனை தூற்றினாலும் இறைவன் புகழ் குறையாது (எல்லா இறைவனும் ஒன்றே, எல்லா இறையுருவுக்கும் இது பொருந்தும் ).
முக்கால் கிணறு தோண்டியவர்களுக்கு தேவை இன்னும் கால் கிணறு தோண்ட நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே.
எந்த கோயிலுக்கு போனாலும் இப்படி நிறைய சாமிபடங்கள் சிலைகள் என வைத்துவிட்டுப் போகின்றனர், கோயில் நந்தவனத்துக்குள் ஒரு துளசி கன்று , ஒரு வில்வகன்று, ஒரு மாங்கன்று என எதுவும் வாங்கி நட மாட்டார்கள், ஆனால் வீட்டில் வேண்டாதவற்றை அங்கே கொண்டு வந்து வைத்து விட்டு போகின்றனர்.
புது வீடு குடி போகிறவர்களும் கூட இது போல பழைய ஆகி வந்த கடவுளர் படங்களை பொது இடங்களில் கொண்டு வந்து வைக்கின்றனர், புதிதாக படங்கள் வாங்குவார்களாம், இது எல்லாம் என்ன மனநிலை என்றே புரியவில்லை.