Chakra | சக்ரா 1981, இதில் ஸ்மிதா பாட்டில் பெயர் அம்மா, மகாராஷ்டிரத்தின் குக்கிராமத்தில் இருந்து பம்பாய் பட்டணத்துக்கு அம்மா,அவள் கணவன் , கைக்குழந்தை பென்வாவும் தஞ்சம் தேடி வருகின்றனர் .
அம்மாவை அந்த ஊர் லேவாதேவிக்காரன் வன்கலவி செய்ய முயற்சிக்க தற்காப்புக்கு வேண்டி கணவன் லேவாதேவிக்காரனை கொன்று விட்டிருக்கிறான்,
மூவரும் இங்கு தாராவி சேரியில் மெல்ல பாலுடன் சர்க்கரை போல ஐக்கியமாகின்றனர், சேரியில் தங்களுக்கு சொந்தமாக குடிசைவீடு கட்டும் ஆசையில் கணவன் பெரிய வீட்டில் திருடித் தப்பியவன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தும் போகிறான், அதன் பின்னர் அம்மாவும் சிறுவன் பென்வாவும் நிர்கதியாகின்றனர்.
சேரியில் பாதுகாப்பின்றி தவிக்கும் கைம்பெண்ணையும் சிறுவனையும் அரவணைத்துப் போற்றுகிறான் சேரிவாசி ட்ரக்ஓட்டுனர் அண்ணா (குல்பூஷன் கர்பாந்தா), ,
அவன் மிகவும் கனிவானவன், பொறுப்பானவன், அவன் இரவுப் பணிக்குப் போகையில் பேச்சுத் துணையாக சேரியின் அம்படக் கள்ளன் நஸீருதீன்ஷாவுடன் அம்மாவுக்கு பழக்கமாகி காதலாகக் கனிகிறது,
லுக்காவின் கள்ளத்தனம், மாமாத்தனம், மெல்லமாறித்தனம், கலகல தவ்லத் பேச்சு, எல்லாம் உள்ளது உள்ளபடியே அம்மாவைக் கவர்கிறது,அவன் மீது அவளுக்கு எந்த புகாருமில்லை.
அவளுக்கு அண்ணாவுக்கு தான் இழைக்கும் துரோகம் பற்றி எல்லாம் சிந்திக்கத் தோன்றவில்லை, லுக்கா நாடாறுமாதம் ,சிறை ஆறுமாதம் என இருப்பவன், அம்மாவின் மகன் பென்வாவின் ஆதர்சம் அவன்,இந்தக் கேடியை பிரதி எடுத்தது போல காட்டுச்செடியாகவே வளர்கிறான் சிறுவன் பென்வா.
இப்படியே நாட்கள் ஓட, மகன் இளைஞனாகிறான்,முள் மரம் போல குணம் கொண்டவனுக்கு காலத்தே வேலி போல சேரியிலேயே அம்லி என்ற பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறாள் அம்மா.
காலம் கடந்த வயதில் அம்மாவுக்கு மசக்கையின் அறிகுறி தென்படுகிறது ,ஊரார் சிரிக்கின்றனர்.
அவளுக்கு வயிற்றில் வளர்வது அண்ணா , லுக்கா இருவரில் யார் குழந்தை ? என்று குழப்பமாகவே இருக்கிறது,
இருந்தும் அவள் சந்தேகத்தின் பலனை தன்னை ஏற்றுப் போற்றும் அண்ணாவுக்கே தந்து தன் வயிற்றுப்பிள்ளைக்கு அப்பாவாக இருக்க உரிமை தருகிறாள்.
இப்போது லுக்கா மீண்டும் சிறை செல்கிறான்,லுக்காவின் வழியில் பென்வா கூலிப்படையில் சேர்கிறான்,திருட்டு,அடிதடி வழக்குகளில் சிக்குகிறான்,வீட்டில் பெண்கள் இருவருக்கும் நரகவேதனையாக உள்ளது.
இவர்களின் தாராவி சேரிப்பகுதியை புனரமைக்க முஸ்தீபுகள் தடக்கிறது, இவர்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு சேரிக்கு போக வேண்டிய நிலை.வேறு சேரி என்பது வேறு தனி உலகம் சேரிவாசிகளுக்கு.
இம்முறை சிறையில் இருந்து சொறி சிரங்கு பால்வினை நோயுடன் வருகிறான் லுக்கா, அவமானத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறான் ,சேரியின் ஒதுக்குப் புறத்தில் தனக்குத் தெரிந்த அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி ஏழை கூலிகளுக்கு விற்று வருகிறான்.
பெரிதாக வருமானமில்லை, பென்வா அவனுக்கு தொழிலில் உதவியாக இருக்கிறான்.
ஒருநாள் மருந்துக்கடையில் பணமின்றி கடனாக தன் நோய்க்கு மருந்துகள் கேட்க கடைக்காரன் விரட்டுகிறான்,அப்போது தான் அவனுக்கு தன் மேல் சேரிவாசிகளுக்கு சுத்தமாக பயம் போனது தெரிகிறது. கடையை உடைத்து மருந்தை திருடியவன், ஊரார் துரத்த அம்மாவின் ஒண்டுக்குடிசைக்கு வந்து தஞ்சம் அடைகிறான்.
இங்கு போலீஸ் வந்து லுக்கா பென்வா இருவரையும் அடித்து தரதரவென இழுத்துப் போகிறது, இந்த அடிதடியில் தடுக்கப்போன அம்மாவுக்கும் பலத்த அடிபட்டு கருகலைகிறது.
சோதனைக்கு மேல் சோதனையாக தாராவி சேரி புனர்நிர்மான குழுவில் இருந்து புல்டோசர்கள் வருகின்றன, இவர்கள் பகுதியில் இருந்த அத்தனை குடிசைகளும் இடிக்கப்படுகின்றன,
இப்போது அம்மாவும்,அம்லியும் வேறு சேரிக்கு அடைக்கலம் புகச்
செல்வது போல படம் முடிகிறது, சக்கரம் போல இவர்கள் திரும்ப திரும்ப அடைக்கலம் நாடிப் போவது தொடர்கிறது.
படத்தின் இயக்குனர் ரபீந்த்ர தர்மராஜ் இயக்குனர் சத்யஜித் ரேவை மானசீக குருவாக கொண்டவர்,அவர் இயக்கிய முதலும் கடைசியுமான படம் இது, இப்படத்திற்கு ஸ்மிதா பாட்டிலுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது, இப்படம் பல உலகசினிமா திரையிடல்களில் கலந்து கொண்டு பெருமைமிகு Golden Leopard விருதையும் வென்றது,தவிர மூன்று ஃபில்ம்ஃபேர் விருதுகளையும் வென்றது.
மிகவும் சிக்கலான ஒரு polygamy குடும்பஸ்திரி கதாபாத்திரம் அம்மா, அதை சர்வ சாதாரணமாக நிஜத்தன்மையுடன் நிகழ்த்திக் காட்டினார் ஸ்மிதா பாட்டில் .இது போல பாசாங்கின்றி இக்கதாபாத்திரம் செய்ய இங்கு யாரும் இலர்.
ராஜபார்வை படம் ஒளிப்பதிவு செய்த பருன் முகர்ஜி ஒளிப்பதிவு செய்த படம்,படத்தில் கதையோட்டத்துடன் வரும் இனிய பாடல்கள் உண்டு.
இந்தப் படம் பல வருடங்களுக்கு முன்பு பார்த்தது, இன்று Shemaroo வெளியிட்ட DVD ல் மட்டும் வாங்கிப் பார்க்க முடியும்,ரத்தமும் சதையுமான படம்.
தன் 22 வயதில் ஸ்மிதா பாட்டீல் தேசிய விருது பெற்றவர் , பூமிகாவுக்காக (1977) சிறந்த நடிகைக்கான தேசியவிருதை வென்றார்,இரண்டாம் தேசிய விருதை சக்ரா (1981) படத்திற்காக வென்றார்.
ஜெய்த் ரே ஜெய்த் (1977), சக்ரா (1981) மற்றும் உம்பர்தா (1982) ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், மிர்ச் மசாலா (1985) படத்திற்காக BFJA சிறந்த நடிகைக்கான விருதையும் அடுத்தடுத்து வென்றார்.
PS:படத்தில் அம்மா மற்றும் அண்ணா கலவி கொள்வது , ஆயுத எழுத்து படத்தில் சேரியில் வரும் ஜோடிகளான மீராஜாஸ்மீன், மாதவனை நினைவூட்டுகிறது.
Chakra | 1981 |Art house | Rabindra Dharmaraj |Smita Patil | Naseeruddin Shah |Kharbushan karbanda|National Award for Smita patil | Golden Leopard Award|Barun Mukherji| Dharavi|