The Good boss (2021) என்ற ஸ்பானிஷ் திரைப்படம் பார்த்தேன், no country for old men திரைப்படத்தில் நம் மனம் கவர்ந்த வில்லன் ஆன்டன் சிகுராக தோன்றிய ஹேவியர் பர்டம் இதில் 60 வயது தராசு நிறுவனத்தின் முதலாளியாக அதகளம் செய்துவிட்டார்.
ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் பளான்கோ ஸ்கேல்ஸ் என்ற தராசு நிறுவனம் பலதரப்பட்ட எடைபார்க்கும் எந்திரங்களை தயாரிக்கிறது அதன் நிறுவனர் ப்ளான்கோ, மனைவி அடெலா boutique ஆடையகம் வைத்திருக்கிறார், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை, வார்த்தைக்கு வார்த்தை தொழிலாளிகளே தன் குழந்தைகள் அவர்கள் பிரச்சனை தன் பிரச்சனை என்கிறார் , ஆனால் நிஜத்தில் கடைந்தெடுத்த காரியவாதி, நம் சுப்ரமணியபுரம் சித்தப்பா சமுத்திரகனி கதாபாத்திரத்தின் நினைவு வருகிறது , சத்யஜித்ரே அவர்களின் சீமாபத்தா திரைப்படத்தின் இளம் லட்சிய விற்பனை மேலாளர் சித்தார்தா கதாபாத்திரம் கூட உடன் நினைவுக்கு வருகிறது , ஒரு வார காலத்தில் நிறுவனத்தில் அடுத்தடுத்து எழுந்த தொழிலாளர் பிரச்சனைகளை இவர் தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி முறியடித்து தீர்த்து அந்த வருட சிறந்த தராசு தயாரிப்பாளருக்கான உயரிய சர்வதேச விருதை தன் அலுவலகத்தின் பிரதான சுவற்றில் மாட்டுகிறார் என்பதை அத்தனை சுவைபட எழுதி திரைவடிவம் தந்துள்ளனர்.
தராசு போலவே வாழ்வில் அனைத்தும் balanced ஆக இருக்க வேண்டும், perfection ஆக இருக்க வேண்டும், அதற்காக தேவை எழுகையில் Cunning ஆக செயல்படுகிறார் ப்ளான்கோ, தன் தொழிலாளியின் சொந்த பிரச்சனை தன் நிறுவன உற்பத்தியை பாதிக்கும் என்றால் இறங்கி எந்த அளவுக்கும் சென்று உதவுகிறார், ஆனால் அந்த தொழிலாளிகளிடம் வட்டியும் முதலுமாக இவரிடம் பெற்ற உதவிக்கு ஈடாக ரத்தத்தையே உறிஞ்சி எடுத்துவிடுகிறார் பிளான்கோ, இந்த சிரித்து கருவருக்கும் கதாபாத்திரத்தை பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஹேவியர் பர்டம்.
தன் ப்ரொடக்க்ஷன் மேனேஜரின் மனைவி அவனை EMA கொண்டு நிரந்தரமாக பிரிய நினைக்க அவன் மனம் நொந்து அடுத்த வாரம் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய பெரிய consignment ஐ கவனிக்காமல் விடுகிறான், அந்த சிக்கலை தீர்க்க அவன் மனைவியிடம் தூதுபோய் அறை கூட வாங்குகிறார் ப்ளான்கோ, இருந்தும் அலட்டிக்கொள்வதில்லை, அவனுக்கு தினம் நட்சத்திர விடுதியில் நல்ல ஒயினும், இரவு விருந்தும் தருகிறார் , அப்போதும் அவன் பிரச்சனை தீர்வதில்லை,மனைவி தான் வேண்டும் என்கிறான், அவனுக்கு டிஸ்கோதே கூட்டிப்போய் ஒன்றுக்கு இரண்டாக விலைமாதரை , இது கம்பெனி வகை என கூட்டித்தந்தும் அவன் அந்த பேரழகியை ஏசிவிட்டு வெளியேறி விடுகிறான்,
மற்றொரு தொழிலாளி சமீபத்தில் மணமுறிவால் பணித்திறன் பாதிக்க நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறான், அவனால் வீட்டுகடன் கட்ட முடியவில்லை, அதனால் சாலைக்கு வந்தவன் தன் இரு பிள்ளைகளுடன் தொழிற்சாலை கதவு முன்பாக போராட்டம் நடத்துகிறான், ஆபாசமாக குழாய் ஸ்பீக்கரில் கத்துகிறான், தொழிற்சாலை காவலாளியுடன் நட்பாகி அவனது கழிப்பறையை காலைக்கடன் முடிக்க உபயோகிக்க கேட்கிறான், ப்ளான்கோ அனுமதி மறுக்க நிறுவனத்தின் பெயர்பலகையின் முன்னால் கம்பீரமாக இருந்த தராசு இலச்சினை தட்டில் மலத்தை நிரப்பி வைக்கிறான், இவர் தராசு தட்டு இறங்கியிருப்பதைப் பார்த்து அதில் கை வைக்க இவரது கைகளில் மலம் ஒட்டிக் கொள்கிறது.
இப்படி ஒரே வாரத்தில் ஐந்து ஊழியர்களால் வாட்டியெடுக்கப்படுகிறார் ப்ளான்கோ.
நிறுவனத்தில் பயிற்சிக்கு வந்த உயரமான அழகிய intern இளம்பெண்களில் பேரழகிகளை தேர்வு செய்து flirt செய்து lift தந்து இவர் சுகித்துவிட்டு கைகழுவும் வழக்கம் கொண்டவர், இதற்கென்றே intern களுக்கு தனி நவீன staff quarters கூட கட்டி வைத்திருக்கிறார்.
அன்று தான் ஒரு அழகிய intern ஐ ஒயின் விருந்து தந்து அவள் வெடித்து அழ பிரியாவிடை தந்து அனுப்புகிறார், நினைவுப் பரிசாக வைர கோட் பின் வாங்கி மேற்சட்டையில் வலிக்காமல் குத்தி அனுப்பி வைக்கிறார், அவள் இவர் காதில் ஐ லவ் யூ என கிசுகிசுத்து வீறிட்டு அழுது பிரிகிறாள், அடுத்த ஒரு மணி நேரத்தில் புதிய intern லிலியானா உள்ளே வருகிறாள், இவள் குடும்ப நண்பர்களின் மகள், சிறு குழந்தையாக இருக்கையில் இவர் இவளை தூக்கி சுமந்திருக்கிறார், இவர் ஃபீடிங் பாட்டிலில் பால் புகட்டியிருக்கிறார், ஆனால் இப்போது லிலியானா குதிரை போல வளர்ந்ததால் அடையாளம் தெரிவதில்லை, அவள் பல வருடம் கழித்து தன் பற்றிய முழு உண்மையை சொல்லாமல் இந்த நிறுவனத்தில் சேர்ந்தவளை வழக்கம் போலவே பின் தொடர்ந்து லிஃப்ட் தந்து , டிஸ்கொத்தே அழைத்துப் போய், மது வாங்கித் தந்து,தன் மனைவி பாரீஸில் இருந்து தருவித்து விற்கும் lingerie பரிசு தந்து சுகித்தும் விடுகிறார் ப்ளான்கோ ,
அன்று இரவு ப்ளான்கோ மனைவி புதிதாய் சேர்ந்த intern லிலியானா குடும்ப நண்பர்களான தம்பதியரின் மகள், ஆனால் அவர்கள் அதற்காக எந்த சலுகையும் மகளுக்கு தர வேண்டாம் என்றதால் இதை முன்பே சொல்லவில்லை என்கிறாள்,
தனக்கு மகள் இருந்தால் லிலியானா வயது தான் இருக்கும் ,தான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டோம் என்பது இவருக்கு நன்கு புரிகிறது, ஆனால் லிலியானாவுக்கு தந்தை வயது உள்ள ப்ளான்கோ மீது அத்தனை ஈர்ப்பு காதலாக மாறிக்கொண்டிருக்கிறது, அந்த முதல் நாள் இரவு சுகிப்பை தீவிரமாக எடுத்துக் கொண்டுவிடுகிறாள் லிலியானா,
கிழப்புருடர் ப்ளான்கோவுக்காக தன் boyfriend ஐ பிரியவும் விழைகிறாள், ப்ளான்கோ ஒரு ஈவு இரக்கமக்க heart breaker, அவர் எப்படி இந்த தலைமேல் தொங்கும் Promiscuous என்ற கத்தியில் இருந்து விடுபட்டு ஆசுவாசமடைந்தார் எப்படி மற்ற தொழிலாளர் பிரச்சனைகளை லாவகமாக தீர்க்கிறார் என்பதை மிகுந்த சுவாரஸ்யமாக அவல நகைச்சுவையுடன் பேசுகிறது இப்படம்.
இந்த திரைப்படம் 36வது கோயா விருதுகளுக்கு 20 பரிந்துரைகளைப் பெற்றது, அதில் 6 கோயா விருதுகளை சிறந்த படம், இயக்குனர், நடிகர், அசல் திரைக்கதை, ஸ்கோர் மற்றும் எடிட்டிங் பிரிவிற்காக வென்றது.
Prime video ல் படம் உண்டு