தன்மாத்ரா | அணுவிற்கு அணுவாகி | 2005 | மலையாளம்
தந்தைகளின் பெருமை பேசும் மலையாள திரைப்படங்களில் தன்மாத்ராவிற்கு நீங்கா இடமுண்டு, ஒவ்வொரு காட்சியும் உண்மைக்கு வெகு அருகே பயணிப்பதால் நமக்கு காண்பது திரைப்படம், என்றே மறந்துபோய் அடுத்து என்ன நடக்கும்? என வியப்பை தக்க வைக்கும் , அப்படி ஒரு செய்நேர்த்தி உண்டு ப்ளெஸ்ஸியின் ஆழ்ந்த அற்பணிப்பினுடன் கூடிய இயக்கத்தில்,
தன் குருநாதர் மலையாள திரையுலக ஜாம்பவான், இயக்குனர் பி.பத்மராஜனின் சிறுகதையான ஓர்மாவை எடுத்து விரிவாக திரைக்கதை எழுதி அழகுக்கு அழகு சேர்த்துள்ளார் ப்ளெஸ்ஸி.
சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மிக அழகும் அருமையாகவும் காட்சிகளை சட்டகப்படுத்தியுள்ளது, குறிப்பாக திரைக்கதையுடன் ஒட்டி உறவாடும் காட்சியின் தன்மைக்கு தகுந்தது போல மாறும் ஒளியமைப்பு குறிப்பிடவேண்டியதும் ஆகும் ,
திரைப்படத்தில் கதாபாத்திரங்களின் அற்பணிப்பு, அவர்கள் ஒரு குடும்பமாகவே வாழ்ந்துள்ளதை உணரமுடிகிறது. நடிகர் மோகன்லால், என்ன ஒரு நடிப்பு ஆளுமை,
சமகால சினிமாவில் இயல்பான நடிப்பின் அசைக்கமுடியாத வல்லுனர், இவர் , சிரிக்கையில் நாமும் சிரிக்கிறோம், அழுகையில் உணர்ச்சிவசப்படுகையில் நாமும் உணர்ச்சிவசப்படுகிறோம், அப்படி ஒரு ரசவாதம் நடிப்பில் காண்கிறோம்.
இப்படி ஒரு தந்தை கதாபாத்திரம் , அதை எடுத்தாண்ட விதம், அதன் மகத்தான விளைவு , அடடா, நம்மை வியந்துகொண்டே இருக்க வைக்கும். குறிப்பாக படத்தில் மோகன்லால், மீராவின் நேர்மையான திணித்தலில்லாத கூடல் காட்சிகள், வியக்க வைக்கும், படத்தின் பக்கபலமாக தந்தை நெடுமுடிவேணு கதாபாத்திரமும், நண்பன் ஜெகதி ஸ்ரீகுமார் கதாபாத்திரங்களும் இப்படி நமக்கு வாய்க்கவில்லையே என ஏங்கவைக்கும்.
கேரளமக்களின் கல்வி முறையில், மத்திய, மாநில அரசு வேலைகளே இன்றும் பிரதான தேர்வாகும் , ஆகவே அவர்களை இந்திய மாநிலங்களில் அதிகம் ஆட்சியாளர்களாக காணமுடிகிறது.
அப்படி ஐஏஎஸ் ஆகமுடியாமல் தோற்ற ஒரு தாத்தா நெடுமுடிவேணுவும்,ஒரு அப்பா ரமேஷன் நாயரும் [மோகன்லால்] , தன் மகன் மனுவை [அர்ஜுன்லால்] எப்படியும் ஐஏஎஸ் ஆக்கிவிடவேண்டும் எனக் கண்ட கனவு பலித்ததா? என்பதை மிக அருமையாக மனதை நகர்த்தும் நவரசங்களுடன் கலந்து தந்துள்ளனர்.
கேரள சட்டசபையில் செகரெட்ரியாக பணியாற்றும் ரமேஷன் நாயர் [மோகன் லால்] நேர்மையாக பணியாற்றி நல்ல பெயரெடுத்தவர், அழகிய மனையாள் லேகா [மீராவாசுதேவன்], படிப்பில் புலியாக மகன் மனு[அர்ஜுன்லால்], சுட்டியான மகள் மஞ்சு என்று வாடகை வீட்டில் இருந்தாலும் கௌரவமான சிறிய அழகான குடும்பம் இவர்களுடையது,
மிகுந்த சிரமத்துக்கிடையில் தன் அலுவலக நண்பர் ஜோசப் [ஜெகதி ஸ்ரீகுமார்] மூலம் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கிறார் ரமேஷன் நாயர்.
மகனின் படிப்பைப் பற்றியே சதா சர்வகாலமும் சிந்திக்கிறார் ரமேஷன். மகன் படிக்கையில் கூட அமர்ந்து வினா விடை நடத்தி கூடிப் படிக்கிறார்,ஊக்குவிக்கிறார்.
மொத்தத்தில் வேலை செய்யும் செக்ரடேரியேட், ,மகனின் பள்ளியிலும், அக்கம்பக்கத்து குடித்தனவாசிகளும் ஆச்சரியப்படும், பொறாமைப்படும் ஆளுமையாக திகழ்கிறார் ரமேஷன்.
மகனை சத்தியத்துக்கும் நண்பனாகவே நடத்துகிறார். மனைவியை தோழியாகவே நடத்துகிறார். மனைவியிடம் எதையுமே மறைத்ததில்லை இவர் ,
தன் இளமைக்கால அத்தை மகள் ஷோபாவின் [சீதா ] மேலான காதல் உட்பட எதையும். அதுபோலவே மகனும் தன் பள்ளியில் காதலிக்கும் பெண்ணைப்பற்றி அப்பாவிடம் மட்டும் நம்பிக்கையுடன் பகிர்கிறான். மனு பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் படிப்பில் முன்னுதாரணமாக முதல் மாணவனாகத் திகழ்கிறான்,
ஒரு மனிதனின் வலப்பக்க மூளைதான் கடினமான கணக்குகள்,வாய்பாடுகள் சூத்திரங்களை நினைவு கொள்கிறது, அவற்றை எப்படி விருப்பமான பாடல்கள், சம்பவங்கள், மூலம் நினைவில் ஏற்றுவதன் மூலம் இடப்பக்க மூளையையும் உபயோகிப்பது?என அப்பாவும் மகனும் பள்ளிகளில் சென்று விளக்கும் அந்த காட்சிகள் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன.
நம் வீடுகளில் பல வருடங்களுக்கு முன்பாக, ஹார்லிக்ஸ் பானம் வாங்கியதற்கு ஒரு பூப்போட்ட கண்ணாடி நீர் ஜாடி இலவசமாக வந்திருக்கும் நினைவிருக்கிறதா?.
அதை உணவு மேசையில் மகன் மனு ஒரு காட்சியில் குற்ற உணர்வின் மிகுதியால் கீழே போட்டு உடைத்து விட்டு அழுவான்.
அம்மா லேகா அது இலவசமாக வந்தது தானடா ,போகிறது,எனத் தேற்றுவாள், படத்தின் நிஜத்தன்மை பொருந்திய தள அமைப்புக்கு இக்காட்சி ஒரு உதாரணம்.
[எத்தனையோ படங்களில் நடுத்தர வீட்டை காட்டுகிறேன் என்று நாடகத்தனமாக ஆடம்பரமாக சூழலை அமைத்துவிடுவர். அவர்கள் இதைபார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.]
ஊரில் ஆசிரியையாக இருந்த தன் அத்தை இறந்து விட, ரமேஷன் நாயர் மற்றும் குடும்பம் வாடகைக்கார் அமர்த்தி குடும்பத்துடன் சொந்த கிராமம் சென்று வருகிறார்கள்.
அப்பா நெடுமுடிவேணு அப்படி ஒரு பாசக்காரத் தந்தை, நீ ஏன் இவ்வளவு செலவு செய்துகொண்டு வந்தாய்? அத்தை உனக்கு அவள் மகளை மணமுடிக்காமல் துபாய் வேலைக்காரனுக்கு மணமுடித்தது மறந்துவிட்டதா? என ரமேஷனிடம் கடிந்துகொள்கிறார்.
உடனே ரமேஷன் அவரின் பிரியத்துக்குரிய குட்டிப்பேத்தி மஞ்சு அவரை நோக்கி அதனால் தானே எங்கள் அம்மா உங்களுக்கு மருமகளாய் வரமுடிந்தது என மடக்குவது அருமையான காட்சி, இப்படி வசனங்கள் ஒவ்வொன்றும் அழகு,நாம் பல சமயத்தில் இயல்பாக உபயோகிப்பவையே.
ரமேஷன் தனக்கு மனைவியாகாத அத்தை மகள் ஷோபா குடிகாரக் கணவனிடம் அல்லலுற்று படும்பாட்டை பார்த்து வருந்துகிறார். தான் எப்போதும் இப்படி குடியனாகி மனைவியை நோகடிக்கலாகாது என உறுதி கொள்கிறார்,
தன் பிரிய மனைவிக்கு அழகாக கொசுவம் நீவி மடித்து விட்டு நேர்த்தியாக புடவை கட்டி விடுகிறார். நேரம் கிடைக்கையில் சமையலறையில் புகுந்து நளபாகம் செய்து அசத்துகிறார்.
தன் தந்தை நெடிமுடி வேணுவுக்கு எண்ணெய் தேய்த்து கால் விரலுக்கு நெட்டும் எடுத்து விடுகிறார். இதைக் கண்ணுறும் ஷோபாவுக்கு உள்ளூர தனக்கு இது போல ஆப்த கணவன் கிடைக்கவில்லையே என அதிக வருத்தமிருக்கிறது,
ஊருக்கு இவர்கள் கிளம்புகையில், ரமேஷன் திருவனந்தபுரத்தில் வாடகை கார்களுக்கு நல்ல தேவை இருப்பதாகவும், நண்பன் ஜோசப் மூலம் தான் விரைவில் ஒரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும் அப்பாவிடம் அனுமதிக்கு வேண்டி சொல்கிறார், மேலும் கிராம பூர்வீக வீட்டுக்கு எதிரேயே கார் வந்து நிற்கும் படி பாதையும் அமைக்க சொல்லிகிறார், அப்பாவோ,?அதற்காக பாடுபட்டு பயிர் செய்து உருவாக்கிய பாக்கு தேக்கு தென்னை மரங்களை என்னால் வெட்ட முடியாது,நான் நூறு படிகளானாலும் ஏறி இறங்கிக் கொள்கிறேன் என்ற பதில் நம்மை யோசிக்க வைக்கும்.
உனக்குத்தான் உன் நண்பன் ஜோசப் இருக்கிறானே, அவனையே கேட்டு எல்லாம் செய்வாயே?இன்று என்ன புதிதாக என்னைக் கேட்கிறாய்?, எனப் பொய்யாய் கோபிக்க, ரமேஷன்,சரி உன் பாக்கு,தேக்கு மரத்தை கட்டி அழு, நான் அடுத்த முறை காரை வெளியிலேயே நிறுத்திக்கொண்டு இந்த நூறு படிகளை ஏறிவருகிறேன், என கோபமாக சொல்லிவிட்டு காரில் புறப்படுகிறார்,
மனைவி லேகா ஏன்? இப்படி ஒவ்வொரு முறையும்,அப்பாவிடம் கோபித்து ஊருக்கு புறப்படுகிறீகள் எனக்கேட்கிறார், அது அப்படித்தான்,அப்பா அப்போதுதான் என் பிரிவுக்கு வருந்தமாட்டார், இன்று முழுக்க என்னை திட்டி தீர்த்துக் கொண்டே கழிப்பார், பிரிவு மறந்து போகும், என ஆறுதல் சொல்லும் காட்சி அற்புதமான ஒன்று.
ரமேஷன் நாயர் தன் வாழ்வில் மனைவியை மிகவும் ரசிப்பதற்கும் , மதிப்பதற்கும் தான் 10ஆம் வகுப்பில் மனனம் செய்து பாட்டுப்போட்டியில் பாடிய பாரதியாரின் காற்று வெளியிடைக்கண்ணம்மா என்னும் பாடலே முக்கிய காரணம்., என்று மகனின் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் மிக அழகாக எல்லோருக்கும் அதை பாடியும் காட்டுகிறார்,மிக
அழகிய காட்சி அது.
படத்தில் காற்றுவெளியிடை கண்ணம்மா என்று துவங்கும் பாடல் பரப்ப்ரம்ம ரூபா என்னும் மாண்டேஜ் பாடலாய் கர்நாடக இசையில் அழகாக பிரவாகமெடுக்கிறது,
நம் தமிழர்கள் எத்தனைபேர் பாரதியார் பாடல்களை மனனம் செய்திருப்போம், அல்லது புரிந்து பாடியிருப்போம். இன்னொரு காட்சியில் திருக்குறளை மேற்கோள் காட்டி நிகழ்த்த முடியாதது ஒன்றுமில்லை என்பதும் அழகிய கவிதை.
இப்படி நன்றாக போய்கொண்டிருந்த குடும்ப வாழ்வில் பேரிடி ஒன்று விழுகிறது, எப்படி தெரியுமா?அல்சிமெய்ர் என்னும் கொடிய நினைவு பிழறல் நோய் வடிவில் வருகிறது.
ரமேஷன் முக்கியமான ஒரு ஃபைலை வீட்டுக்குக் கொண்டு வந்தவர்,அதை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் கொண்டு போய் வைக்கிறார்.
விடியலில் மனைவியுடன் உடலுறவு கொள்கையில், சுவற்றில் பல்லியைப்பார்த்துவிட்டு கவனம் சிதறியவர்,அப்படியே பாதியில் எழுந்து ஒரு குச்சியால் சிறுவன் போல பல்லியைத் தட்டுகிறார். மனைவி லேகா கணவனின் புதிய நடவடிக்கை கண்டு நொறுங்கிப்போகிறாள்.காலையில் பல்துலக்குகையில் மகனின் டூத்ப்ரஷில் பல்விளக்குகிறார் ரமேஷன்.
இப்படியே சமகால நினைவுகள் சுத்தமாக வடிந்தவர் போலாகிறார் ரமேஷன். நினைவுகள் வருகின்றன, போகின்றன, எல்லாவற்றுக்கும் உச்சமாக ஸ்கூட்டரில் சாவியை டிக்கியில் டிஃபன் பாக்ஸ் வைக்க திறந்து பூட்டியவர், அதை எடுக்காமலே ஸ்கூட்டரை உதைத்து அது ஸ்டார்ட் ஆகவில்லை,என அலுவலகத்துக்கு தள்ளிக்கொண்டு வருகிறார்.
மகன் அந்த தவறை எடுத்துச்சொன்னதும் கூட நம்பவில்லை, சாதிக்கிறார். அன்று மகனை பள்ளியில் விட வந்தவர், பள்ளி கடந்து போனது கூடத் தெரியாமல் சாலையில் நெடுந்தூரம் தாண்டி வந்துவிடுகிறார்.
மகன் எதிர்த்துப் பேசாமல் இறங்கிக்கொள்கிறான், தனக்கு அலுவலகம் விட்டுவிட்டது என நினைத்துக்கொண்டு காய்கறிக்கடையில் கீரையும், தக்காளியும்,காய்கறிகளும் வாங்கியவர், தன் ஸ்கூட்டரை அங்கேயே மறந்து விட்டு ஆட்டோ பிடிக்கிறார்,
சேருமிடம் சொல்லத் தெரியாமல் வழியில் தான் பணிபுரியும் செகரெட்ரியேட் கட்டிடம் பார்த்து இறங்குகிறார். ஆட்டோகாரர் என்னை இன்று காலை முதல் நிறைய சுற்றவைத்துவிட்டீர்கள், எனச்சொல்லி ரூ 200 கேட்கையில் திகைக்கிறார் ரமேஷன்.
ஆஃபீஸுக்குள் நுழைந்ததும் நண்பர் ஜோசப் எதிர்கொள்ள, குறுகுறுக்கிறார், சிறியதாக சுயநினைவுக்கு வந்தவர் காய்கறியை எங்கே வைக்க?,என்று கேட்க அதை ஜோசப்,இது என்ன புதிய பதிவு,என்று வாங்கிச்செல்கிறார் ,
இவர் அவரின் பின்னேயே அலுவலகத்திற்குள் நுழைந்தவர், பெண் ஊழியர்களுக்கு எதிரேயே தன் சட்டையைக் கழற்றி தன் அலமாரியில் மாட்டுகிறார்.
பெண் ஊழியர்கள் இது என்ன ரசாபாசம் என்று அலற அங்கு கூச்சல் குழப்பமாகிறது, நண்பர் ஜோசப் பயந்தபடி ரமேஷன் குடித்திருக்கிறாரா? ஆனால் வாடை வரவில்லையே, ஓட்கா, ஜின் எதானுமா? கஞ்சாவா? என்று பயந்து ரமேஷனை கழிவறைக்குள் கூட்டிச்சென்று முகம் கழுவ அனுப்புகிறார்,
உள்ளே வந்த ரமேஷன், மேலே ஷவர் இல்லாதது கண்டு திகைத்து பக்கெட் நீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்கிறார்,
அங்கே அலுவலகத்தின் வெளியே ரமேஷனின் ஸ்கூட்டரை இவரிடம் திரும்ப கொடுக்க எடுத்து வந்த காய்கறிக்காரர் ஜோசப்பிடம் சாவியை கொடுக்கிறார்,
ரமேஷன் அங்கே ஆவேசமாய் வெளியேறியவர். காய்கறிக்காரனை பிடித்து திருடன் என்று அடிக்கிறார். ஸ்கூட்டரை அவன் திருடிவிட்டான் எனப் பிதற்றுகிறார். ஜோசப் இது விபரீதமாகிறதே என்று சந்தேகித்தவர் தாமதிக்காமல் ரமேஷனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர் வீட்டுக்கும் தகவல் அளிக்கிறார்.
ரமேஷனின் அப்பாவும் செய்தியறிந்து பதறியபடி மருத்துவமனை வந்து சேர்கிறார்.லேகா அங்கே உறைந்திருக்கிறாள், மனு மாடல் எக்ஸாம்கள் மறுநாள் துவங்க, நான் போகமாட்டேன்,என்று அப்பாவின் தலைமாட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறான்.
ஒவ்வொரு அணுவிலும்,அசைவிலும் அப்பாவையே அவன் உணர்கிறான். இப்போது படிப்பைவிட அப்பாவின் உடல்நலனே அவனுக்கு பிரதானம் என்கிறான். அம்மா லேகா இதுகேட்டு நொறுங்கிப்போகிறாள்.சுற்றம் உற்றம் எல்லாம் ரமேஷனின் இந்த திடீர் நினைவுதப்புதல் பற்றியே
நடு வீட்டில் இடி விழுந்தது போல ஆயிற்று விதியின் விளையாட்டில்.
புத்திசாலியான ரமேஷன் எதனால் இந்நோய்க்கு ஆட்பட்டார்?
ரமேஷன் அல்செய்மெய்ர் நோயிலிருந்து விடுபட்டாரா?
ரமேஷனின் செகரெட்ரி வேலை என்ன ஆனது?
ரமேஷன் விரும்பியபடியே டபுள்பெட்ரூம் ஃப்ளாட்டும்,செகண்ட் ஹாண்ட் காரும் வாங்கினாரா?
மகன் மனு ஐஏஎஸ் ஆஃபீஸர் ஆனானா?
எத்தனை எத்தனை கேள்விகள்
இவற்றை நெகிழ்ச்சியான சம்பவங்களின் கோர்வையுடன் திரையில் பாருங்கள், இன்றைய தமிழ்படங்கள் அப்பாவை டேய் அப்பா, அவன், இவன், ஓத்தா, என்றெல்லாம் சொல்லுவதை ஊக்குவிப்பது போல காட்சியமைப்பதை நியாயப்படுத்திவருகின்றன.அரிதிலும் அரிதாகவே தவமாய் தவமிருந்து, தன்மாத்ரா போல திரைப்படங்கள் வெளியாகின்றன.
இன்றைய இயக்குனர்கள் இது போல திரைப்படங்களைப் பார்க்கவேண்டும், இப்படியும் தந்தை மகன் உறவை பின்ன முடியும் என யோசிக்கவேண்டும். அதனால் சமூகத்தில் ஆரோக்யமான மாற்றம் நிச்சயம் வரக்கூடும்.
இப்படத்தில் நடித்த மீரா வாசுதேவன் இதற்காகவே 15கிலோ எடைகூடினாராம், படத்தில் இவர்களின் நிஜமாய் பொருந்தி வந்த அன்னியோன்யம் கண்டு ஸ்தம்பித்து விடுவோம், அப்படி ஓர் யதார்த்தம். ஒவ்வொரு காட்சியுமே பார்த்துப் பார்த்து செதுக்கியது நன்றாக தெரிகிறது, படத்தின் இசையும் பாடல்களும் பிண்ணணி இசையும் மிக அருமை,
ஒரு மருத்துவமனைகாட்சியில் இசைபுயலின் warriors of heaven and earth போன்ற இசைக்கோர்வையை அப்படியே எடுத்து மோஹன் சித்தாரா பயன்படுத்தியிருப்பார். மனதை உருக்கிவிடும்., மேலே நிலாக்காயல் , காற்று வெளியிடைக் கண்ணமா பாடல்களும் கேட்க மிகவும் இனிமை.
சமகாலத்தில் ஒருபடம் ஒருவருக்குள் ஊடுருவிச் சென்று சிரிக்க, நெகிழ, அழ வைத்திருக்குமானல் அது இதுதான். நல்ல படங்களை பார்த்து சிலாகித்து, மோகித்து அதை டைரியில் எழுதி வைப்பது போலவே இதையும் இங்கே எழுதுகிறேன்.
வியூகம் மே 2021 இதழில் வெளியான சினிமா கட்டுரை
#P_பத்மராஜன்,#ப்ளெஸ்ஸி,#மோகன்லால்,#தந்தையர்_தினம்,#Fathers_day